2005 சூலை மாதம் பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்திய நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் - ஒப்புதல் பெறாமல் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் பலதடவை விவாதிக்கப்பட்டது. ஹைடு சட்டத்தின் மூலம் இந்தியாவுக்குப் பல நிபந்தனைகளை விதித்த பிறகே 2008இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

“அணுசக்தி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு மறுத்துவந்த நிலை நீங்கி விட்டது. இந்தியா அணுக்கழிவை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா நிலையாக ஒப்புதல் வழங்கியுள்ளது” என்று பிரதமர் மன்மோகன்சிங் வெற்றிப் பெருமிதத்துடன் சொன்னார். ஆனால் 2010 சூன் மாதம் நடைபெற்ற ஜி8 நாடுகள் கூட்டத்தில், “இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (சூஞகூ) கையொப்பம் இடாதவரையில், செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என்பதற்கான தடை நீடிக்கும்” என்று அறிவிக்கப்பட்டது. இது அராஜகமானது என்று இந்திய அயலுறவுத்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க நிறுவனங்கள், அணு உலைகளை, இயந்திரங்களை, எரிபொருளை வழங்கவேண்டுமானால், இந்தியா, அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தது. 1984 திசம்பரில் போபால் நகரில் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததால் பல ஆயிரம் பேர் மாண்டனர். எனவே, நியுயார்க்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இது போன்ற நிலை அமெரிக்க நிறுவனங்களுக்கு நேராமல் இருக்க வேண்டுமென்பதே இந்த நிபந்தனையின் உள்நோக்கமாகும்.

எனவே, 15.3.2010 அன்று அணு விபத்து இழப்பீட்டுச் சட்ட முன்வரைவை நாடாளு மன்றத்தில் நடுவணரசு முன்மொழிய முயன்றது. கடும் எதிர்ப்பு காரணமாக அது முடியாமல் போயிற்று. வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின் இறுதியில் 7.5.2010 அன்று இச்சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் மீண்டும் வைக்கப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு இது அனுப்பப்பட்டது.

1962ஆம் ஆண்டின் அணுசக்தித் திட்டத்தின்படி, அணுசக்தித் துறையில் தனியார் துறை ஈடுபடமுடியாது. எனவே, அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக அணுமின் உற்பத்தியில் ஈடுபடமுடியாது. ஆகவே, இந்திய அணுமின் உற்பத்திக்கழகம் மட்டுமே அணுமின் நிலையங்களை இயக்க முடியும்.

இந்திய அணுமின்கழகம் அயல்நாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம், அயல் நாட்டு நிறுவனங்கள் அணு உலைகளை, பிற கருவிகளை வழங்குவது, நிறுவுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும். இதற்கான தொழில்நுட்பங்களையும், எரிபொருள்களையும் அயல்நாட்டு நிறுவனங்களே வழங்கும். அணுமின் நிலையங்களை அணுமின் கழகமே நடத்தும்.

சட்ட முன்வரைவில், அணுக்கசிவு - கதிர்வீச்சு, அணு விபத்து நடந்தால் அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகை உரு. 2385 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதில் உரு. 500 கோடியை அணுமின் நிலையத்தை நடத்தும் நிறுவனம் அளிக்க வேண்டும். மீதி 1,885 கோடியை நடுவணரசு வழங்கும். அயல்நாட்டு நிறுவனம் வழங்கிய அணு உலையின் வடிவமைப்பு, தயாரிப்பு, நிறுவியமை மற்றும் துணைக்கருவிகள், தொழில் நுட்பம் ஆகியவற்றின் குறைபாடுகள் காரணமாக அணுவிபத்து நடந்திருந்தால், அணுமின் நிலையத்தை நடத்தும் நிறுவனம் அயல்நாட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோரலாம். இது இச்சட்டத்தில் பிரிவு 17(b) எனக் கூறப்படுகிறது. இழப்பீடு கோருவதற்கான உரிமை இருதரப்பினரும் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இது விதி 17(ய) எனப்படுகிறது.

விபத்து நடந்த 10 ஆண்டுகளுக்குள் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும். அணுபவித்து இழப்பீட்டு ஆணையம், விபத்து நடந்த 15 நாள்களுக்குள் அமைக்கப்படும். மூன்று மாத காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று சட்ட வரைவில் கூறப்பட்டுள்ளது. குறைபாடுடைய அணு உலைகளை, எந்திரங்களை, தொழில் நுட்பத்தை வழங்கிய அயல்நாட்டு நிறுவனத்தை அணு விபத்துக்குப் பொறுப்பு ஏற்கச் செய்யாமல், அணு நிலையத்தை நடத்தும் நிறுவனம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்பது அநீதி அல்லவா?

1984 டிசம்பரில் போபால் நச்சு வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2004ஆம் ஆண்டுதான் இழப்பீடு வழங்கப்பட்டது. அயல்நாட்டு நிறுவனத்தைப் பொறுப்பாக்கினால் இச்சிக்கல் நீண்டகாலம் இழுத்தடிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் அணு நிலையத்தை நடத்தும் நிறுவனம் இழப்பீடு வழங்குமாறு இச்சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நடுவண் அரசு விளக்கமளிக்கிறது. மேலும், இழப்பீட்டுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்தால்தான், அணு நிலையத்தை நடத்தும் நிறுவனம் இதற்கான காப்பீடு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் என்று அரசு கூறுகிறது.

இச்சட்டத்தில் அணு மின்நிலையத்தை நடத்தும் நிறுவனம் வேறு, அரசு வேறு என்று கருதும்படியாகச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இந்திய அணுமின் கழகம்தான் அணுமின் நிலையங்களை நடத்துகிறது. மொத்த இழப்பீட்டுத் தொகையான ரூ. 2385 கோடியில், அணு நிலையம் நடத்தும் நிறுவனம் ரூ. 500 கோடியும், நடுவண் அரசு ரூ. 1885 கோடியும் வழங்கும் என்று கூறுவது வேண்டுமென்றே மக்களைக் குழப்புவதல்லவா? இரண்டும் அரசின் பணம் - மக்களின் வரிப்பணம் தானே! அணு நிலையம் நடத்தும் நிறுவனம் என்று போட்டிருப்பதன் உள்நோக்கம் வருங்காலத்தில் தனியாரை இதில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.

இந்திய நாட்டின், மக்களின் நலனைவிட, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின், பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் நலனுக்கு முன்னுரிமை தந்து செயல்படுவதையே பிரதமர் மன்மோகன்சிங் 2004 முதல் தன் உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டுள்ளார். 8-3-2010 அன்று அணு விபத்து இழப்பீட்டுச் சட்ட முன் வரைவு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோது, சுற்றுச்சூழல் அமைச்சகமும், நிதி அமைச்சகமும் கடுமையாக எதிர்த்தன. அணு உலை வழங்கிய நிறுவனத்தை இழப்பீடு தருமாறு செய்யாமல், அரசுப் பணத்தை வாரி வழங்குவது எந்த வகைப் பொருளாதாரம்? என்று நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீட்டின் பேரில், இந்த எதிர்ப்புகள் புறந்தள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாகவே, அயல்நாட்டு அணுசக்தி முதலாளிகள் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக நடுவண் அரசு இந்தியாவில் இடங்களைத் தேர்வு செய்து தயாராக வைத்துள்ளது.

அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களான ஜெனரல் எலக்ட்ரிகல் ஆறு அணு உலைகளை அமைக்க ஆந்திரத்தில் கோவாடாவிலும் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனம் ஆறு அணு உலைகளை அமைக்க குசராத் மாநிலத்தில் மத்திவிரிடியிலும் நிலம் கையப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெனரல் எலக்ட்ரிக்கலும், வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனமும் உலகில் அணுசக்தி துறையில் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. இதேபோன்று பிரான்சின் அரேவா ஆறு உலைகளை அமைக்க மகாராட்டிரத்தில் ஜெய்தபூரிலும், இரஷ்யாவின் ஆட்டம் ஸ்டோரி எக்ஸ்போர்ட்  நிறுவனம், ஆறு உலைகளை அமைக்க தமிழ்நாட்டில் கூடங்குளத்திலும், இதே நிறுவனம் நான்கு உலைகளை அமைக்க மேற்கு வங்காளத்தில் ஹிராப்பூரிலும் நிலங்கள் கையகப்படுத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்டுள்ள அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய அணுமின் கழகத்திற்கும் இன்னும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. ஆனால், அந்நிறுவனங்கள் அணு உலைகளை அமைப்பதற்கான நிலங்கள் தயாராக உள்ளன.

சந்தையில் தடையற்ற போட்டியைக் கொள்கையாகக் கொண்டுள்ள நடுவண் அரசு, பல ஆயிரம் கோடி உருபா முதலீடு உடைய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) கோரவில்லை. மாறாக நேரடியாக நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குகிறது. அமெரிக்க அரசும் இந்திய அரசும் நேரடியாகப் பேசி, எந்த நிறுவனத்துக்கு எந்த ஒப்பந்தம் அளிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. ஜெனரல் எலக்ட்ரிக்கல், வெஸ்டிங் ஹவுஸ் ஆகியவை தனியார் நிறுவனங்கள். அமெரிக்க முதலாளிகளின் நலன்களைப் பேணுவதற்காகவே, அமெரிக்க அரசு, உலக அரங்கில் அரசியல், பொருளாதாரம், இராணுவம், உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தான் பெற்றுள்ள ஆதிக்கத்தைப் பயன்படுத்துகிறது. 2005 சூலையில் செய்துகொண்ட இராணுவ ஒப்பந்த அடிப்படையில், இந்திய அரசு பல ஆயிரம் கோடி உருபா மதிப்புள்ள ஆயுதங்களை, ஒப்பந்தப்புள்ளி கோராமல், அமெரிக்காவிடம் வாங்கி வருகிறது. ஆயுதங்கள் தயாரிப்பு அமெரிக்காவில் முழுவதும் தனியார் துறையிடமே உள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனம் ஒன்று கூட இல்லை. நம்நாட்டு மக்களின் வரிப்பணம் அமெரிக்க முதலாளிகள் கொழுப்பதற்காக இவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது.

 

இந்தியாவில் பெருகி வரும் மின் தேவையை நிறைவு செய்வதற்காகவே அணுமின் உற்பத்திக்கு முதன்மை தர வேண்டியுள்ளது. மேலும், அனல்மின் உற்பத்தியால் சுற்றுச் சூழல் மாசடைவதால் இதை மேலும், விரிவுபடுத்தாமல், தீங்கற்ற அணுமின் உற்பத்தியை ஊக்குவிக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கிறது என்று கூறி அமெரிக்க - இந்திய அணு ஒப்பந்தத்தை மன்மோகன்சிங் நியாயப்படுத்தி வருகிறார்.

நடுவண் அரசில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைக்குத் தனிப்பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர் பிருதிவிராஜ் சவாண், “அடுத்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவை 70,000 மெகா வாட்டாக இருக்கும். தற்போது இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு மின் இணைப்பு வசதி இல்லை. அணுமின் உற்பத்தி 4500 மெகாவாட்டாக இருக்கிறது. எனவே, 40,000 மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உற்பத்தி மூலம் தயாரிக்கக் கூடிய அளவுக்கு திட்டமிடப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.

அணுமின் உற்பத்தியைப் பெருக்குவதன்மூலம் எந்தவொரு நாட்டின் மின் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது. உலகில் பிரான்சு நாட்டில் மட்டும் மின் தேவையில் 75ரூ அணுமின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வேறு எந்தவொரு நாட்டிலும் 20-30ரூ க்குமேல் அணுமின் உற்பத்தியின் அளவு இல்லை. கடந்த 15 ஆண்டுகளில் உலகில் புதிய அணுமின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை. ஏனெனில், அணுமின் நிலையம் அமைப்பது பெரும் முதலீடு தேவைப்படுகிறது. நீண்டகாலம் ஆவது, ஆபத்து நிறைந்தது என்பதாலாகும்.

இந்தியாவில் அமெரிக்க, இரஷ்ய, பிரான்சு நாட்டு நிறுவனங்கள் அமைக்க உள்ள அணுமின் நிலையங்களில் உற்பத்தியைத் தொடங்க இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேலாகும். கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை அமைக்கும் பணி 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், இன்னும் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இவ்வாறு நீண்டகாலமாவதால், திட்டமிட்டதைவிட அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. அணு விபத்துக்கு எந்தப் பொறுப்பும் ஏற்க வேண்டியதில்லை என்பதால், அதிக விலையில், தரம் குறைந்த அணு உலைகளை, துணைக்கருவிகளை அமெரிக்க முதலாளிகள் அளிப்பார்கள். இவர்களுக்குக் கொட்டியழும் பணத்தைக் கொண்டு, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத காற்றாலை, சூரியசக்தி மூலமான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம்.

1979இல் அமெரிக்காவில் ‘திரி மைல் அய்லண்டு’ என்ற இடத்தில் அணு விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவரும் சாகவில்லை. ஆனால், அந்த அணு உலையை சுத்தம் செய்வதற்கு 14 ஆண்டுகளாயிற்று. நூறு கோடி டாலர் செலவிடப்பட்டது. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்திடமிருந்து அந்த ஆலையை வாங்கிய அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான டவ் கெமிக்கல் போபால் ஆலையின் நச்சுக் கழிவுகளை அகற்ற மறுக்கிறது. இந்த நச்சுக்கழிவால் 26 ஆண்டுகளாக அங்கு வாழும் மக்கள் பல துன்பங்களுக்குள்ளாகி வருகின்றனர். இந்த நச்சுக் கழிவுகளை நடுவண் அரசும் மாநில அரசும் கூட்டாகச் சேர்ந்து அகற்றுவது என்றும், இதற்கான செலவை டவ் கெமிக்கல் நிறுவனத்திடம் பெறுவது என்றும் இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண பூச்சிமருந்து உற்பத்தி ஆலையின் கழிவை அகற்றுவதற்கே முடியாத நிலை இருக்கும்போது, அணுமின் நிலையத்தின் கசிவு, விபத்துகளால் நேரக்கூடிய ஆபத்துகளுக்கு அணு உலைகளை வழங்கிய முதலாளிகளைப் பொறுப்பு ஏற்க செய்யாமல் தப்பிக்க விடுவது கொலையினும் கொடிய குற்றமல்லவா?

அரசு நீர்மின் உற்பத்தியில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவு ரூ. 1-25. அனல் மின்சாரம் ஒரு யூனிட் தயாரிக்க கிட்டத்தட்ட ரூ. 3 ஆகிறது. தமிழ்நாடு அரசு மின் பற்றாக்குறையை ஈடுசெய்ய தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 5க்குமேல் கொடுத்து வாங்குகிறது. எனவே, அணுமின் உற்பத்தியில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 10க்கு மேல் உற்பத்தி செலவாகும். அயல்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு செலவு இதைவிட அதிகமாக இருக்கும். மின்வசதி இல்லாத 40 கோடி மக்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 10, ரூ. 15 என்று விலை கொடுத்து வாங்க முடியுமா? அமைச்சர் பிருதிவிராஜ் சவாண் கூறுகின்ற 40,000 மெகாவாட் அணுமின்சாரத்தை ஏழை எளிய, நடுத்தர மக்களால் வாங்கமுடியுமா? இவர்களுக்கு அணுமின்சாரத்தை வழங்க வேண்டுமனால் அரசு பல ஆயிரம் கோடி உருபாய் மானியம் அளிக்கவேண்டும். ஒருபுறம் அரசு மின்சார வாரியங்களை தனியார் மயாமாக்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் மின் உற்பத்தி வேகமாக வளர்ந்து வருகிறது. அதிக விலைக்கு முதலாளிகள் தனியாரிடம் மின்சாரத்தை வாங்குகின்றனர். இந்தச் செலவை அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் மீது ஏற்றி விடுகின்றனர். 40,000 மெகாவாட் அணுமின் உற்பத்தி செய்யப்படும் என்பதே ஒரு மாயை - ஏமாற்று! அப்படியே உற்பத்தி செய்வதாக வைத்துக்கொண்டாலும்,. வெகு மக்களுக்கு இதை வழங்கிட மானியமாக அரசு பெருந்தொகையைச் செலவிட வேண்டும். அயல்நாட்டு அணுசக்தி முதலாளிகள் கொள்ளை இலாபம் பெறுவதற்காக இவ்வாறு அரசு திட்டமிடுவது மக்களை வஞ்சிப்பதாகும்.

முப்பது ஆண்டுகளாக குறைந்த அளவு யுரேனியத்தையும் பெருமளவில் இந்தியாவில் கிடைக்கும். தோரியத்தையும் கொண்டு அணுமின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் உருபா செலவிடப்பட்டுள்ளது. தற்சார்பு கொண்ட இத்திட்டத்தை கை கழுவிவிட்டு, அயல்நாட்டு அணுஉலைகளை, எரிபொருள்களை மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய அணுமின் உற்பத்தி முறையை ஏற்படுத்துவது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகும்.

1984இல் போபால் நச்சு வாயு விபத்துக்குப் பின், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இழப்பீடு கோரும் உரிமை முழுவதையும் நடுவண் அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் 1985இல் சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டம் பாதிக்கப்பட்டவர்கள், அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் உரிமையைப் பறித்தது. இதைப்போலவே அணு இழப்பீட்டுச் சட்டத்திலும் பாதிக்கப்படுவோர் அயல் நாட்டு நிறுவனங்கள் மீது அவற்றின் தாய்நாடுகளில் வழக்கு தொடுக்க முடியாது என்கிற விதி சேர்க்கப்பட்டுள்ளது. நடுவண் அரசு அமைக்கும் இழப்பீட்டு ஆணையத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை போதாது என்று கருதும் நிலையில்தான் இந்தியாவில் நீதிமன்றத்தை அணுக முடியும். பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு சட்டம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அணு விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ. 60,000 கோடி. இந்தியாவிலோ இது ரூ. 2385 கோடியாக உள்ளது.

2010 நவம்பர் மாதம் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருகிறார். அவர் இந்தியாவில் காலடி வைத்தும், அவருடைய மலர்ப் பாதங்களில், அணு விபத்து இழப்பீட்டு சட்டத்தைக் காணிக்கையாக வைத்து வரவேற்க வேண்டுமென்று துடிக்கிறார் மன்மோகன்சிங். இரண்டு மாதங்களாக காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் சுட்டதில் இதுவரை 70 பேர் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 25 அகவைக்குட்பட்ட இளைஞர்கள். காஷ்மீர், சிக்கலுக்கு தீர்வுகாண எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசாத நடுவண் அரசு பா.ச.க. தலைவர்களுடன் பலமுறைக் கூடிப் பேசி, நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை இறுதி செய்தது.

அணு உலைகள் நடத்துவதை தனியார் பொறுப்பில் ஒப்படைக்கக்கூடாது. அணுமின் நிலையத்தை நடத்துபவர்அளிக்கும் இழப்பீட்டுத் தொகை உரு. 500 கோடி என்பதிலிருந்து 1500 கோடியாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் அணு இழப்பீட்டுச் சட்டத்திற்கு ஒப்புதலளிக்க முன் வந்ததாக பா.ச.க. கூறுகிறது. இழப்பீடு கோரும் காலம் பத்தாண்டுகள் என்பதிலிருந்து இருபதாண்டுகளாக இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராமி ரெட்டி தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை 18.8.2010 அன்று நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்பட்டது. அதன்பின் நடுவணரசு புதியதாக ஒரு மாற்றத்தைச் செய்துள்ளது. அணுவிபத்து நடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் -வேண்டுமென்றே குறைபாடுடைய ஒரு அணு உலையை, எந்திரங்களை, தொழில் நுட்பத்தை வழங்கியிருப்பதாக உறுதி செய்யப்பட்டாலன்றி, அணு நிலையத்தை நடத்துபவர், இவற்றை வழங்கிய அயல்நாட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கேட்கமுடியாது.

இந்தச் சொல்லை நீக்கியோ, வேறொரு சொல்லைச் சேர்த்தோ இச்சட்டம் இம் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுவிடும். ஏனெனில் பா.ச.க. எதிர்ப்பதுபோல் பாசாங்குசெய்துகொண்டே இதை ஆதரிக்க முடிவுசெய்துவிட்டது. அயல்நாட்டு - உள்நாட்டு முதலாளிய எசமானர்கள் இவ்வாறுதான் நடக்க வேண்டுமென்று பா.ச.க.வுக்குக் கட்டளையிட்டு விட்டார்கள்.

எந்த வடிவத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அமெரிக்க முதலாளிகளுக்குக் கொள்ளை இலாபம் தருவதாகவும், அணுவிபத்துக்கு எந்தவிதப் பொறுப்பும் ஏற்கவேண்டிய தேவை இல்லாததாகவும் இருக்கும் என்பது உறுதி.

வெகுமக்களின் நலனுக்காகவே அணு உற்பத்தி செய்யப்படுகிறது என்று நடுவணரசு கூறுவது உண்மையானால் அயல்நாட்டு நிறுவனங்கள் அணு உலைகளை அமைப்பதற்கான நிலத்தை அவைகளே வாங்கிக்கொள்ள வேண்டும். அணு உலைகளை நிறுவி அவற்றை நடத்தும் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் இவை செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். இவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசின் மானிய உதவி இல்லாமல் சந்தையில் விற்றுக்கொள்ள வேண்டும். அணு விபத்து ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் இவை ஏற்க வேண்டும். இவற்றின் மீது அந்தந்த நாட்டில் வழக்குத் தொடுக்கும் உரிமை இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளை நடுவணரசு விதிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை விதிக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியான இந்திய அரசு ஒருபோதும் முன்வராது. அமெரிக்க அரசும் முதலாளிகளும் இதை ஏற்கமாட்டார்கள்.

இந்திய நாட்டை அமெரிக்காவிடமும், பன்னாட்டு முதலாளிகளிடமும் அடகுவைக்கும் இந்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்துப்போராடுவது ஒன்றே தீர்வாகும்.

பின்குறிப்பு: அணு இழப்பீட்டுச்சட்டம் 25.8.2010 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. உள்நோக்கத்துடன் (Intent) என்ற சொல் நீக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அமெரிக்க அரசின் விருப்பத்திற்கு ஏற்பவும், அயல்நாட்டு முதலாளிகள் எந்தப் பொறுப்பும் ஏற்காமல் கொள்ளை இலாபம் அடிக்ககும் தன்மையிலும் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

Pin It