குன்றக்குடி அடிகளார் கேள்வி

ஆகஸ்டு 5 முதல் 8 வரை ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழ் அர்ச்சகர்களுக்கு நான்கு நாட்கள் “தமிழில் வழிபாடு” குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 133 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாநாட்டிற்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை வகித்தார். சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் வாழ்த் துரை வழங்கினார். பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகளார், சிதம்பரமட ஆதீன கர்த்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

“கரூரில் - கோயிலில் தமிழில் குடமுழுக்கு வேண்டி ஒரு புரட்சித் தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்ட தீபத்தின் தொடர்ச்சி தான் இந்த மாநாடு! தமிழை ஏற்காத கூட்டம் 7 ஆம் நூற்றாண்டிலிருந்தே காலங் காலமாக இருந்து வருகிறது. தொன்மை நிறைந்த அந்தச் சமுதாயத்தை மாற்றியாக வேண்டும்.

வாழ்க்கையை மறுதலிக்கச் சொன்னது புறநெறிகள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டு என்றது நம் சமய உலகம். இது தான் இரண்டு நெறிக்கும் உள்ள வேறுபாடு. ஜி.யு.போப்புக்கு திருவாசகத்தின் பெருமை தெரிந்திருக்கிறது. ஆனால் சிதம்பரம் நடராசருக்குத் தெரியாமல் போய் விடுமா?

1874-ல் மதுரை மீனாட்சி யம்மன் கோயிலில் மூக்க நாடார் தலைமையில் கடவுளை வழிபடுவதற்காகச் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் கோயில் ஊழியரால் ஒருவர் கொலை செய்யப்பட்ட வரலாற்றை மறந்து விட முடியாது. தமிழனுக்கு சமாதானம் விதித்த தடையை சட்டம் தான் நீக்கியது.

1964-ல் தமிழில் அர்ச்சனை கோரியவர்களுக்கு எதிர்ப்பு எழுந்தபோது, அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவச்சலம் அதில் தலையிட்டு சமாதானம் செய்து, தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. கேட்க வேண்டியவர்கள் கேட்காததால் தான் தமிழ் அர்ச்சனைக்கு எதிர்ப்பு இருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்ய நாமே தயாராக வேண்டும். காலங் காலமாக இருந்து வரும் மொழி, அந்த மொழிக்கு உரியவர்கள் கோயிலுக்குள் வேண்டாம் என்பது புரியாத புதிராக உள்ளது.

உனக்குப் படிப்பு வராது, ஆடுமாடு மேய்க்கவும், தச்சு வேலை, செருப்பு தைக்கும் வேலைகளுக்கும் தான் நீ லாயக்கு, கல்வி எங்களுக்கு மட்டும்தான் என்று சிலர் குருகுலவாசம் நடத்தி - இன்று அனைவருக்கும் கல்வி என்று சுதந்திரத்திற்குப் பின்பு சமமாக அமர்ந்துள்ளதை யாரும் மறந்து விட முடியாது. அதுபோலத் தான் அவர்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் மந்திரமும்.

தமிழர் காலங்காலமாக துரோகிகளால் தொலைந்து போனோம். இடைவிடாது பயணம் செல்வோம். இனி கோயில்களில் தமிழ் அர்ச்சனை ஒலிக்கட்டும். கேட்க வேண்டிய நீங்கள் - கேட்கவேண்டிய நேரத்தில் கேட்க மறந்து விடாதீர்கள்! - இவ்வாறு பேசினார்.

அரசு நிகழ்ச்சிகளில் வேத-மத சடங்குகளா?

பொள்ளாச்சி வட்டம் - ஆச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ‘அனைவருக்கும் கல்வி’ வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக் கட்டிடம் ஒன்று கடந்த செப்.16 ஆம் தேதி திறக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மு.வெ.சாமிநாதன் இதில் பங்கேற்பதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் - காலை 7 மணி முதல் கணபதி ஹோமம், கஜபூஜை, கோமாதா பூஜை மற்றும் அசுவமேத யாகம் என்ற வேதகாலத்து பார்ப்பன சடங்குகளும் நடக்கும் என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டு, அதன்படியே அனைத்து சடங்குகளும் வேத பார்ப்பனர்களைக் கொண்டு நடத்தப்பட்டிருக்கிறது.

‘கஜ பூஜை’ நடத்துவதற்காக யானைகளையே கொண்டு வந்திருக்கிறார்கள். அரசு விழாக்களில் இத்தகைய பார்ப்பன பூஜைகள் நடப்பது சரி தானா? இதுதான் மதச்சார்பின்மைக்கு அடையாளமா? ஏற்கனவே மேட்டூர் அணையில் ஓராண்டு காலம் நீர் நிரம்பியிருந்ததற்காக, இதே போல், புரோகிதர்களை வைத்து, பொதுப் பணித் துறை பூசை செய்திருக்கிறது. அரசு நிகழ்ச்சிகளில் இத்தகைய பார்ப்பன இந்து மத சடங்குகள் தொடருவதை தமிழக அரசு, தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சியில் நடப்பது போல், தி.மு.க. ஆட்சியிலும் நடப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.

அய்.அய்.டி.க்கு அர்ஜூன் சிங் அதிர்ச்சி வைத்தியம்

பார்ப்பனக் கோட்டையாகக் கிடக்கும் அய்.அய்.டி. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. பல்ராம் தூது என்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒரு மாணவர், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். காரக்பூரில் உள்ள அய்.அய்.டி.யில் அவர் சேர வேண்டும். ஆனால் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு, மாணவருக்கு கிடைக்கவில்லை. அஞ்சலில் அனுப்பப் பட்ட தகவல், அந்த மாணவருக்கு வந்து சேரவில்லை.

எனவே பார்ப்பன அய்.அய்.டி. நிர்வாகம், அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது. மத்திய மனித வளத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் பார்வைக்கு இது வந்தவுடன், அவர் இதில் தலையிட்டார். மாணவர் மீது எந்தத் தவறும் இல்லாத நிலையில் தண்டிக்கலாமா என்று தட்டிக் கேட்டு, மாணவரை அனுமதிக்குமாறு கேட்டு இயக்குநரை வலியுறுத்தினார். நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கான சேர்க்கையில் அய்.அய்.டி. நிறுவனம், பரிவுடன் செயல்பட வேண்டும்.

அவர்களை ஒதுக்கித் தள்ளுவதற்குக் காரணம் தேடக் கூடாது என்று கூறிய அமைச்சர், இனி, நுழைவுத் தேர்வு முடிவுகளையும், நேர்முகத் தேர்வுக்கான கடிதத்தையும், மாணவர் களுக்கு மட்டுமே அனுப்பாமல், மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட நீதிபதி மற்றும் துணை ஆணை யருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் வழியாக மாணவர்களுக்குத் தகவல் கிடைக்கும் என்று அறிவுறுத்தியுள்ளார். அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகம், அதிர்ந்து போய் நிற்கிறது.

Pin It