திருமணமான புதுத் தம்பதிகள் - இனிமேல், ஆசீர்வாதம் வாங்குவதற்கு திருப்பதிக்கு நேரடியாக வர வேண்டாம்; திருமணப் பத்திரிகையை தபாலில் அனுப்பினாலே போதும்; அதில் மஞ்சள், குங்குமம் வைத்து, வேதம் ஓதி, பகவான் ஆசிர்வாதத்தையும் தபால் உறைக் குள்ளேயே போட்டு அஞ்சலில் அனுப்பி வைப்பார்களாம். திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

கடவுள்கள் எல்லாம் காலத்துக் கேற்பவே மாறி விட்டார்கள். அஞ்சல கங்கள், ஸ்வைப் எந்திரங்கள், ‘சிசி டிவி’ காமிராக்கள் என்று நவீன வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

“ஆசீர்வாதத்தைத் தபாலில் அனுப்பு வதற்கு பதிலாக ஆண்டவனே நேரடியாக புறப்பட்டு வந்து பக்தர்களை சந்திக்க லாமே” என்று ஒருவர் கேட்டார்; நியாயமான கேள்விதான்.

உண்மையிலேயே கடவுளின் உணர்ச்சி களை பக்தர்களோ, அர்ச்சகர்களோ மதிப்பதாகத் தெரியவில்லை. “பகவானே இப்படி ஒரே இடத்தில் அசையாமல் இருப்பதை தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டால், கடவுள் என்ன கூறுவார்?

“போதுமடா சாமி; இனியும், இந்த கர்ப்பகிரக இருட்டறையில் முடங்கிக் கிடக்கத் தயாராக இல்லை. எவ்வளவு காலம்தான் இந்த சட்டை போடாத உம்மணாமூஞ்சி களையும், அவர்களது தவளை சத்தங்களை யும் கேட்டுக் கொண்டே இருப்பது? போதும் போதும்; நாங்கள் வெளியே கிளம்புகிறோம். பக்தர்களை நேரடியாகவே சந்திக்கப் போகிறோம். தேவைப்பட்டால் ‘வாட்ஸ் அப்’, ‘யூ டியூப்’களையும் பயன்படுத்தத் தயாராகி விட்டோம்” என்று குமுறத் தான் செய்வார்கள்.

“என்ன சாமி, அஞ்சல் எல்லாம் அனுப்ப வேண்டாம்; ஆசிர்வதிக்க நானே கிளம்பப் போகிறேன் என்று கடவுள் கிளம்பி விட்டால் என்ன செய்வீர்கள்?” என்று, அர்ச்சகரிடம் ஒரு நண்பர் கேட்டார். அவ்வளவுதான். நெருப்பில் விழுந்த புழுபோல் குதிக்கத் தொடங்கிவிட்டார்.

“என்ன கிண்டலா? அதெப்படி கடவுள் பேசுவார்? இந்த கர்ப்பகிரகத்தை விட்டு ஒரு அடி எடுத்து வைக்கக்கூட எந்தக் கடவுளுக் கும் உரிமை கிடையாது. எங்கள் மந்திர சக்தியை நிறுத்திவிட்டால் கடவுளுக்கே சக்தி கிடையாது. கடவுளுக்கு சக்தி வந்து விட்டது; கடவுள் பேசுகிறார்; கடவுள் ஊர் சுற்றக் கிளம்பி விட்டார்; பக்தர்களை நேரடியாக சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் பேசுவது தெய்வ நிந்தனை. அதுவும் கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று கூறுவது எவ்வளவு பெரிய தெய்வக் குற்றம் தெரியுமா? இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. இந்தக் கோயிலை விட்டு கடவுளை வெளியே அனுப்பி விட்டால், பிறகு நாங்கள் பேன் குத்திக் கொண்டா உட்கார்ந்திருக்க முடியும்? இப்படி எல்லாம் பக்தர்களை புண்படுத்தாதீர்கள்” என்று புலம்பி தீர்த்து விட்டார்.

“சாமி, பதட்டப்படாதீங்க. நீங்கள் அனுமதிக்க மறுத்து விட்டால் என்ன? நான் ஏழுமலையானுக்கு நேரே கடிதம் எழுதி ‘பகவானே வெளியே வந்து விடு’ என்று அஞ்சலில் அனுப்பி விடுகிறேன்” என்றார் நண்பர். ஏழுமலையான் கடுதாசிகளை எல்லாம் படிப்பானா? என்று நக்கலடித்தார் அர்ச்சகர்.

ஆசீர்வாதத்துக்கு கடிதத்தைப் பயன் படுத்தும் ஏழுமலையான், ஏன் கடிதத்தைப் படிக்க மாட்டானோ என்று திருப்பிக் கேட்டார் நண்பர். அர்ச்சகர் ‘கப்சிப்’.

Pin It