பகுத்தறிவு என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கலைஞர் கொடுத்த விளக்கத்தில் இருந்தே இந்த கட்டுரையை தொடங்கலாம் என்று கருதுகிறேன். “எல்லாவற்றையும் பகுத்தறியத்தான் பகுத்தறிவு. கடவுள் உண்டா இல்லையா என்று ஆராயக் கூட பகுத்தறிவு தேவைப்படுகிறது. சிந்திக்கிற, பகுத்தறிகிற ஆற்றலைப் பெற்றதால்தான் மனிதன் மற்ற உயிரினங்களை விட மேலானவனாக மனிதன் கருதப்படுகிறான். அப்படிப்பட்ட அந்த ஆற்றலை எதிர்கால சமுதாயம் வாழ்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.” 1.1.81 அன்று சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டை தொடங்கி வைத்து கலைஞர் குறிப்பிட்டவை இவை.

எழுத்தாளர், பத்திரிகையாளர், வசனகர்த்தா, அரசியலாளர், கவிஞர், பாடலாசிரியர் என கலைஞருக்கு பன்முக அடையாளங்கள் இருந்தாலும், தன்னை அவர் எவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டார் என்பதில் இருந்துதான் கலைஞரின் வரலாற்றை அணுக வேண்டும். “5 முறை முதல்வராக இருந்தேன், 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தேன், திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறேன்” என்றெல்லாம் தன்னைப் பற்றிய அடையாளத்திற்காக கலைஞர் ஒருநாளும் குறிப்பிட்டதில்லை. கலைஞர் யார் என்று கேட்பவர்களுக்கு, அவர் கொடுத்த பதில், “நான் ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன்” என்பதுதான்.

அந்த ‘சுயமரியாதைக்காரன்’ என்ற உணர்வு பகுத்தறிவு சிந்தனையில் இருந்து உதிப்பது. கலைஞர் தன்னை ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டதை மட்டுமே பகுத்தறிவு என்று சுருக்கிவிட முடியாது. அது ஒரு சிறிய பகுதிதான். ஆனால் அந்த சிறுபகுதிக்கும் மிக நீண்ட வரலாறு இருக்கிறது. கலைஞரின் பள்ளிப் பருவத்தில் இருந்து அதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. “யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” என்பதுதான் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை. அப்படி, பெரியாரை அடையும் (ஈரோடு செல்வதற்கு) முன்னரே, பெரியார் கூறிய பகுத்தாயும் சிந்தனை கலைஞருக்கு இருந்திருக்கிறது.

karunanidhi 354வாரியாருக்கு கிடுக்குப்பிடி

பள்ளிக் காலத்தில் திருவாரூருக்குச் சென்ற கிருபானந்த வாரியாரின் உரையைக் கேட்க கலைஞர் சென்றிருக்கிறார். கிருபானந்த வாரியார் செல்லும் இடங்களிலும் அவர் பேசும் அறிவியலுக்கு புறம்பான, மூடநம்பிக்கை கருத்துக்களை திராவிடர் கழகத்தினர் நேருக்கு நேர் எதிர்க்கேள்விகளை எழுப்பி திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்த காலம் அது. பெரியார் தொண்டர்களின் அந்த துணிச்சல் பள்ளிச் சிறுவனான கலைஞரையும் விட்டுவைக்கவில்லை. கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது, உயிருள்ள பறவை, மிருகங்களை மனிதன் உண்பதற்கு கடவுள் படைக்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியானால் சிங்கத்திற்கு கடவுள் படைத்த உணவு என்ன என்று கலைஞர் உடனே கேட்டிருக்கிறார். ஆனால் கிருபானந்த வாரியார் கலைஞருக்கு பதில் சொல்லாமல் அடுத்ததைப் பேசினார். “அப்படியானால் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே அதை மட்டும் சாப்பிடலாமா என்று நீங்கள் கேட்கலாம். காய்கறிகளைப் பறித்த பின்பும் அவற்றின் வளர்ச்சி தடைபடுவதில்லை, எனவே சாப்பிடலாம்” என்று கூறியிருக்கிறார். கலைஞருக்கு மீண்டும் சந்தேகம் வந்து விட்டது. “கீரைத்தண்டை வேரோடு சாப்பிடுகிறோமே! அது எப்படி?” எனக் கேட்டிருக்கிறார் கலைஞர். கிருபானந்த வாரியார் அப்போது மட்டுமல்ல, எப்போதுமே அதற்குப் பதிலே சொல்லவில்லை.

சுளிர் பதில்கள்

கலைஞரின் பேராற்றல் என்பது நொடிப்பொழுதில் அவர் வைக்கும் சுளீர் பதில்கள் தான். பத்திரிகையாளர் சந்திப்பு முதல் மேடைப் பேச்சுக்கள் வரை பல இடங்களில் ஓரிரு வார்த்தைகளில், அவருடைய பாணியில் மூடத்தனங்களின் மீது ஓங்கி ஒரு சம்மட்டி அடியை கொடுத்து விடுவார். வள்ளுவர் வேடம் தரித்த சிறுவன், அணிந்திருந்த பூநூலை பிடித்து இழுத்து ஒரு நமட்டுச் சிரிப்பை கலைஞர் சிரிக்கும் படம் இப்போதும் மிகப் பிரபலமானது. புத்தனையே விழுங்கிச் செரித்த கூட்டத்திடம் இருந்து வள்ளுவருக்குப் பூநூலை மாட்டிவிட முடியாது காத்தவர் கலைஞர் அல்லவோ!

ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கலைஞர் கேட்ட வார்த்தைகள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு கொள்கை எதிரிகளின் தூக்கம் தொலைக்கும் என்று யாரால்தான் கணக்கிட முடியும்? அதுபோல கலைஞர் வைத்த சூடு ஒன்றல்ல, இரண்டல்ல. தீபாவளிக்கு கூட வாழ்த்துச் சொல்லிராத கலைஞரை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைக்க நேரில் வருமாறு ஒருமுறை அழைத்தார் ராமகோபாலன். “உங்கள் ஆண்டவன் நேரில் வந்தால், இந்த ‘ஆண்ட’வனும் (ஆட்சியாளன்) நேரில் வருகிறேன்” என்று அவருக்கே உரிய பாணியில் பதில் கொடுத்து அனுப்பி விட்டார்

ஆண்டவனுக்கே அரசு பாதுகாப்பு

சட்டப் பேரவையிலும் தன்னுடைய பகுத்தறிவு சிந்தனைகளை எல்லோரும் ரசிக்கும் வகையிலும், ஆழ்ந்து யோசிக்கும் வகையிலும் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார் கலைஞர். 1997-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், மதுரை மீனாட்சி கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியெழுப்பினார். ஆண்டவன் கொடுக்க முடியாத பாதுகாப்பையா ஆட்சியாளர்கள் கொடுத்துவிடப் போகிறீர்கள் என அவர் கேட்க, “ஆண்டவனுக்கே தமிழ்நாடு காவல்துறைதானே பாதுகாப்பு கொடுக்க வேண்டியுள்ளது? எவ்வளவு சிலைகள் களவாடப்படுகின்றன? பொன், ஆபரணங்கள் களவு போயுள்ளன? காவல்துறைதானே கண்டுபிடித்துள்ளது?” என எதிர்க்கேள்வி எழுப்பினார். கடவுள் என்பது வெறும் கற்சிலைதான் என்று இதைவிட வெளிப்படையாக எப்படிச் சொல்லிவிட முடியும்?

இதுபோன்ற பல தருவாயில் நேரடியாக கடவுள்களை கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் கலைஞர். “ஆண்டவனாக இருந்தால் லாபம்தான். மக்கள் எந்தக் குறையை சொன்னாலும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம். திருவரங்கத்திலே போய், ஆண்டவனிடத்திலே ஆயிரக்கணக்கான மக்கள் முறையிடுகிறார்களே, அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார் என்று யாராவது கேட்டிருக்கிறார்களா?” என்ற கலைஞரின் கேள்விக்கு பதில் சொல்ல இன்று வரை யாரும் வரவில்லை.

கடவுளைப் பற்றிய சந்தேகம் ஏன் வருகிறது என்பதற்கும் கலைஞர் ஒரு அற்புதமான கேள்வி எழுப்பியிருக்கிறார். “கடத்தலில் ஒரு பகுதியை காணிக்கை செலுத்திவிட்டு, பழனிக்கு காவடி எடுப்பவனும் திருடியபோது சிக்கிக் கொள்ளாததற்காக திருப்பதி உண்டியலில் பணம் போடுகிறனும் பக்தர்களாக வேஷம் போடும் நாட்டில் கடவுளைப் பற்றிய சந்தேகம் வருவது இயற்கைதானே?” என்று பாமரர்களையும் பகுத்தறிவாளர்களாக்க சிந்திக்கத் தூண்டிய கலைஞரின் சிந்தனைகள் ஏராளம் இருக்கின்றன.

40 ஆண்டுகளுக்கு முன்பு கண் சிகிச்சைக்காக கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், “கடவுளை நம்பாததால்தான் இவ்வளவு சோதனை, இனியாவது கடவுளை நம்புங்கள்” என்று கூறியிருக்கிறார் செவிலியர். “உங்கள் அன்புக்கு நன்றி. சிகிச்சைக்கு வந்திருக்கிற இங்குள்ள மற்றவர்களும் என்னைப் போலத்தானே?” என கலைஞர் கேட்க, அங்கிருந்த அனைவருமே சிரித்திருக்கிறார்கள்.

வெறுமனே சிரிக்க வைப்பவையாக மட்டுமே கலைஞரின் பகுத்தறிவு சிந்தனைகள் இருந்ததில்லை. சமூக எதார்த்தங்களில் ஜாதியம், பெண்ணடிமைத்தனம் எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும் தனது பேச்சின் வழியே, எழுத்தின் வழியே செயல்பாட்டின் வழியே கலைஞர் வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார். “மீனாட்சிபுரம் மதமாற்றத்திற்கு திமுகவும், திகவும் செய்த அழிவு வேலைகள்தான் காரணம்” என்றும், “தமிழ்நாட்டு மக்கள் ஒருவிதமான அசிங்க நாத்திகத்துக்கு பலியானதன் விளைவுதான் மீனாட்சிபுரம் மதமாற்றம்” என்றும் ‘சண்டே’ ஆங்கில இதழில் ‘சோ’ பல அவதூறுகளை அள்ளி வீசி கட்டுரையாக்கி இருந்தார். “ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) பார்ப்பனிய எதிர்ப்பை விதைத்தது, ஜஸ்டிஸ் கட்சி பிரிட்டிசாருக்கு புகழ் பாடியது, சினிமாவை நாத்திகப் பரப்புரைக்கு தி.மு.க பயன்படுத்திக் கொண்டது, இந்து மதக் கடவுள்கள் மீது பெரியார் ஆபாச அர்ச்சனை பொழிந்து விட்டார்” என்றெல்லாம் அடுக்கடுக்கான விமர்சனங்களை அந்த கட்டுரையில் ‘சோ’ வைத்திருந்தார்.

சோ-வின் இந்த அவதூறு கருத்துக்களுக்கு கலைஞரே நேரடியாகப் பதில் கொடுத்தார். அந்த பதிலடியானது ‘யாரால் யாரால் யாரால்?’ என்ற தலைப்பில் 1981-ஆம் ஆண்டில் நூலாகவே வந்திருக்கிறது. “தும்பும் தூசியும் ஒட்டடையும் நிறைந்துள்ள வீட்டில், அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு இல்லத்தைத் தூய்மையாக வைத்திட முயல்வது அழிவு வேலை என்று ‘சோ’வின் அகராதியில் அச்சாகியிருக்கிறது போலும்” என சாடினார் கலைஞர். திராவிடர் இயக்கம் செய்து கொண்டிருப்பது சீர்திருத்த வேலை என பதிலளித்தார். “சாதிக்கரையானும் புராண ஆபாசப் புற்றுக்களும் சந்தன தாம்பூலம் பால் பழம் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டியவைகள் என்று நண்பர் சோ வாதிடுகிறாரா?” என்றும் கேள்வி எழுப்பினார் கலைஞர். “மீனாட்சிபுரம் மதமாற்றத்துக்கு திராவிடர் இயக்கம் காரணம் என்றால், அம்பேத்கர் பவுத்தம் தழுவியதற்கும் நாங்கள்தான் காரணமா? திமுகவும், திகவும் தோன்றுவதற்கு முன்பே வரலாறு நெடுக மதமாற்றம் நடந்திருக்கிறதே! அதற்கெல்லாம் நாங்கள்தான் காரணமா? இந்துமத ஆதிக்கக்காரர்கள் தங்கள், தவறை மறைக்கவும் பன்னெடுங்காலமாகச் சாத்திர சம்பிரதாயங்கள் பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களைப் பொட்டுப் பூச்சிகளாய் புன்மைத் தேரைகளாய் நடத்திய கோரம் தாங்க முடியாமல்தான் இத்தகைய மத மாற்றங்கள் ஏற்பட்டன” என்றும் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல ‘சோ’-வுக்கு பதிலடி கொடுத்தார்.

(கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நீர்வளத்துறை வெளியிட்டுள்ள மலரில் “பகுத்தறிவு சீர்த்திருத்தச் செம்மல்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை) 

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It