அன்று விதை; இன்று விருட்சம்!

1998 ஆம் ஆண்டு லத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஒரு மாற்றத்திற்கான விதை விதைக்கப்பட்டது. ஹியூகோ சாவேஸ் என்ற அந்த மனிதர் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார். அவர் ஒரு சர்வாதிகாரி என்று அமெரிக்காவிடமிருந்து சான்றிதழைப் பெற்றார். அமெரிக்காவால் சர்வாதிகாரி என்று ஒருவர் அழைக்கப்பட்டாலே அவர் பெரும்பாலான மக்களின் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்துபவர் என்று முடிவு செய்துவிட வேண்டியதுதான். அந்த விதை வளர்ந்து விருட்சமாக உருவெடுத்து நிற்கிறது. லத்தீன் அமெரிக்காவின் கிட்டத்தட்ட கொலம்பியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இடதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைவர்களைக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் வெப்பமான மூச்சுக்காற்று தங்களை பஸ்பமாக்கி விடும் என்று அச்சப்பட்டுக் கொண்டிருந்த நாடுகள் கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன. இதன் துவக்கப்புள்ளியை இட்ட வெனிசுலாவில் கிடைத்த பலன்களைப் பலப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்பணியின் ஒருபகுதியாக, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சாவேசின் ஆதரவைப்பெற்ற வெனிசுலா ஒன்றுபட்ட சோசலிஸ்ட் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 165 தொகுதிகளில் 98 தொகுதிகளை சோசலிஸ்ட் கட்சி கைப்பற்றியுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியாகப் போட்டியிட்டு 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. செப்.26 அன்று இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

துவங்கியது மாற்றம்

1998 ஆம் ஆண்டு தனது பயணத்தைத் துவக்கிய சாவேசுக்கு பாதை ஒன்றும் சுகமானதாக இருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் புதிய, புதிய சவால்கள் அவருக்கு முன் எழுந்து நின்றன. ஒருமுறை கலகம் நடந்து அவரை ராணுவத்தின் ஒரு பகுதியினர் சிறைப்பிடித்தனர். அமெரிக்கா நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு வலம் வரத்துவங்கியது. மக்களின் எழுச்சி அமெரிக்கக் கழுகை விரட்டியது. கலகக்காரர்கள் தெறித்து ஓடினார்கள். பின்னர் புலிகளாய் மாறிப் பதுங்கிப் பாய்ந்தனர். பொது வாக்கெடுப்பு நடத்தி சாவேசைக் காலி செய்வோம் என்றார்கள். மீண்டும், மீண்டும் மக்கள் சாவேசுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். அப்போதிருந்து இவர்கள் பாதிப் புலிகளாயினர். அதாவது பதுங்கினார்கள், பாயவில்லை.

இந்தப் பன்னிரெண்டாண்டுகளில் ஏராளமான பணிகளை சாவேஸ் தலைமையிலான அரசு செய்துள்ளது. நாட்டின் இயற்கை வளம், சேவைத்துறை, பிரதான தொழில்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப் பட்டுள்ளன. இடதுசாரி அரசு என்றாலே கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமே... அந்தப் பெயரைக் காப்பாற்றும் வகையில் வெனிசுலா விலும் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் என்ற நிலைமை உருவானது. 1998 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வெறும் எட்டு விழுக்காடு மக்கள்தான் நாட்டின் குடிமகன்களாக வலம் வந்தனர். சாவேஸ் வந்தபிறகுதான் அனைவருக்குமான அரசு வந்தது. இதைத்தான் சர்வாதிகார அரசு என்று முத்திரை குத்த ரப்பர் ஸ்டாம்புடன் அமெரிக்கா அலைகிறது.

அமைப்பு அவசியம்

மக்களுக்கு நல்லது செய்வது ஒன்றும் ஜேம்ஸ்பாண்டு வேலையல்ல என்பதை நன்றாகவே உணர்ந்த சாவேஸ், ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க முனைந்தார். அந்த முயற்சியில்தான் வெனிசுலா ஒன்றுபட்ட சோசலிஸ்ட் கட்சி(பி.எஸ்.யு.வி) உருவானது. வெனிசுலா விடுதலை வீரர் சைமன் பொலிவாரால் உத்வேகம் பெற்ற சாவேஸ், தனது புரட்சிகரப் பாதைக்கு பொலிவாரியப் புரட்சி என்று பெயரிட்டார். அந்தப் பொலிவாரியப் புரட்சியை சோசலிஸ்ட் கட்சி எடுத்துச் செல்லும் என்றும் அறிவித்தார். 2000 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது எதிர்க்கட்சிகள் நிறைய இடங்களில் வெற்றி பெற்றன. அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து தேர்தல் நடந்தபோது, தோல்வி பயத்தால் தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தன.

தற்போது நடைபெற்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எம்.யு.டி. என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி போட்டியிட்டன. ஆனாலும் சோசலிஸ்ட் கட்சியைத் தோற்கடிக்க முடியவில்லை. 2000 ஆம் ஆண்டில் அவர்களுக்குக் கிடைத்த இடங்களை விட தற்போது குறைவாகவே கிடைத்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியும் தனக்குக் கிடைத்த இடங்களோடு திருப்தி அடைந்துவிடவில்லை. 110 இடங்களை இலக்காக நிர்ணயித்த அக்கட்சி 98 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற போதிய வலு இல்லை என்பதே தற்போதைய நிலை. பல முக்கியமான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு 2012 ஆம் ஆண்டு நடக்கப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் சாவேசை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் திட்டம்.

தலைவர்கள் உற்சாகம்

வெனிசுலாத் தேர்தல் முடிவுகளைக் கண்டு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தான் பொறுப்பேற்ற பிறகு நடைமுறைக்கு வந்த பொலிவாரிய மற்றும் ஜனநாயக சோசலிசம் வலுப்படும் என்று சாவேஸ் குறிப்பிடுகிறார். மூக்குடைபட்ட அமெரிக்காவின் கண்கள் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீதே பதிந்துள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்கத் தேர்தல்களில் பாதிப்பேர் கூட வாக்களிக்க வருவதில்லை. ஆனால் அந்த நாடு ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசுகிறது என்று காஸ்ட்ரோ எச்சரிக்கிறார்.

கவலையில் அமெரிக்கா

கடந்த 12 ஆண்டுகளில் ஒரேயரு முறைதான் சாவேசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 159 திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை வைத்து பொது வாக்கெடுப்பு 2007 ஆம் ஆண்டில் நடந்தது. என்ன திருத்தங்கள் என்பது கூட மக்களுக்குப் போய்ச்சேராததால் எதிர்க்கட்சிகள் நடத்திய பொய்ப்பிரச்சாரம் எடுபட்டது. திருத்தங்களுக்கு ஆதரவாக 49 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். 51 விழுக்காடு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது மட்டும்தான் சாவேசுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிகழ்வாகும். மற்றபடி, ஏறுமுகத்தில் இருக்கும் சாவேசை ஒன்றும் செய்ய முடியாமல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறது அமெரிக்கா. ஒரு காஸ்ட்ரோவால் ஒரு சாவேஸ்.. ஒரு சாவேசால் பல கோரியாக்கள்.. மொரேல்சுகள்.. என்று லத்தீன் அமெரிக்காவில் வருங்கால சந்ததியருக்கான வீர சாகசக் கதைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. உடும்புப்பிடியாக இருந்த அமெரிக்காவின் பிடி தளர்ந்துள்ளது. இப்போதைக்கு கொலம்பியா மட்டும் இந்தப் பகுதியில் ஏகாதிபத்தியத்திற்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறது.

இடதுசாரிக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வெனிசுலா மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்பதுதான் தீர்ப்பிற்குள்ள அர்த்தம். இதன் தாக்கம் உள்நாட்டோடு நின்றுவிடாமல் ஏற்கெனவே வெனிசுலாவின் அனுபவத்தைக்கண்டு பல நாடுகள் இடது புறம் செல்லத் துவங்கின. மற்ற நாடுகள் வேண்டுமானால் காத்திருக்கலாம். பிரேசிலில் ஜனாதிபதித் தேர்தல் இந்த மாதம் நடக்கப்போகிறது. யார் என்பதை விட எதை முன்னிறுத்துகிறவருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வெனிசுலா தேர்தல்கள் உதவும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. உடனடியாக அக்கம் பக்க நாடுகளில் வெனிசுலா வளர்ச்சிப் போக்குகளின் தாக்கம் இருந்தாலும் உலகம் முழுவதிலும் அது நீண்டகாலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

Pin It