இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது - சேலம் மாநாடு
இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு.
வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது.
முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாநாட்டின் துவக்கத்தில் பள்ளத்தூர் நாவலரசன் மற்றும் மேட்டூர் டி.கே. ஆர். குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பிறப்பினில் பேதம் இல்லை என்பதே
வள்ளுவன் சொன்ன நெறியாகும்
பிறப்பினை வைத்தே ஜாதியை வகுத்தது
பகவத் கீதையின் மொழியாகும்
எல்லோரும் இந்து என்று சொல்லியே
ஏய்ப்பது பார்ப்பன சூழ்ச்சி வலை
அதை எதிர்த்தே வென்று அறுப்பது தானே
எங்கள் பெரியார் கொள்கை அலை
வேத மரபினை மறுப்போம்
வெகு மக்கள் உரிமையை மீட்போம்
சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில்
வேத மரபினை மறுப்போம்
என பள்ளத்தூர் நாவலரசனின் வெண்கலக்குரல் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தவர்களிடையே இம்மாநாட்டின் நோக்கத்தையும் தேவையையும் பறை சாற்றுவதாக இருந்தது. தோழர்கள் மேட்டூர் கோவிந்தராஜ், இசைமதி, முத்துக்குமார் பாடிய ஜாதி ஒழிப்பு - பெண்ணுரிமைப் பாடல்கள் பார்வை யாளர்களுக்கு எழுச்சியூட்டின.
மாநாட்டின் முதலாவது கருத்தரங்க அமர்வு கபிலர், திருமூலர் அரங்கில் தொடங்கியது. பொதுச் செயலாளர், விடுதலை இராசேந்திரன் நெறியாளராக செயல்பட்டார். சேலம் மாநகர தலைவர், மாநாட்டின் வெற்றிக்கு அயராது உழைத்த த. பரமேசு வரவேற்புரை ஆற்றினார். கழகச் செயல் வீரர்கள் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் க. சக்திவேல், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கு. சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார்.
வேத மரபுகள் மறுப்பு ‘வேத புராண காலத்தில்’ என்கிற தலைப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி. இராம. இளங்கோவன் உரையாற்றினார். அவர் தமது உரையில், “பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டது நான்கு வேதங்கள் ஆகும். அதில் யசுர் வேதம் வேள்விகளை செய்தல் முறையை பற்றியும், ரிக்வேதம் பாடல்கள் மூலம் துதித்தலையும், சாம வேதம் பாவ நிவாரணங்கள் பற்றியும், அதர்வண வேதம் சபிக்கும் மந்திரங்களையும் கூறுகின்றது. இந்திரனை பற்றி மூவாயிரம் பாடல்களும், அக்னியை பற்றி இரண்டாயிரம் பாடல்களும் எழுதப்பட்டன. அன்றைய தொல்குடி மக்களுக்கும், உழைக்கின்ற நம் மக்களுக்கும் எந்த நன்மையும் இப்பாடல்களால் கிடைக்கவில்லை. மாறாக ஆரிய பார்ப்பனர்களின் சுகபோக வாழ்க்கைக்கும், உழைக்காமல் உண்பதற் கும், திராவிட தொல்குடி மக்களை அடிமைப் படுத்துவதற்குமே பயன்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த தொல்குடிகளான திராவிட மக்களின் கடவுள், மத, சடங்குகள் இல்லாதவராகவே வாழ்ந்தனர். ரிக் வேதத்தில் 4617-வில் திராவிட மக்களின் கடவுள், மத, சடங்கு நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்ததை குறிப்பிட்டு அம்மக்களை பூண்டோடு அழித்து சாம்பலாக்க வேண்டும் என கூறுகிறது. வேத காலத்திலேயே வேத மரபுகளை மறுத்த நான்கு முக்கிய கோட்பாடுகள் இருந்தன. காணாதர் உருவாக்கிய வைசேசிகம், கௌதமரின் நியாய கோட்பாடு, கபிலரின் சாங்கியம், சிரண்ய காம்பனின் யோக மரபு என இருந்தது. இந்தமரபுகள் உலகம் அனுக்களால் உண்டானது என்றும் பகுத்தறி வோடு சிந்திக்க வேண்டும் என்ற தத்துவங்களை சொல்லி பார்ப்பன வேத மரபிற்கு எதிரான அறிவியல் கருத்துக்களை பரப்பியது. ஆனால் பார்ப்பனியம் - அத்தனை சிந்தனைகளையும் ஒடுக்கியது” என்று குறிப்பிட்டார்.
மருத்துவர் தாயப்பன்
பவுத்த, சமண நெறிகளில் வேத மரபு மறுப்பு என்கிற தலைப்பில் மருத்துவர் அ. தாயப்பன் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
“வேதங்கள் அனைத்தும் வர்ணாசிரம தர்மத்தை தான் சொன்னது. வர்னாசிரம தர்மம் தான் ஜாதியை தோற்றுவித்தது. ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் ஜாதிகளுக்கு அடித்தளமாக இருக்கும் வேதங்கள் ஒழிக்கப்பட வேண்டும். பார்ப்பன வேதங்களுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலை பவுத்தம் செய்தது. ஆனால், அந்த பவுத்தத்தையும் பார்ப்பன இந்து மதம் உட்செறித்துக் கொண்டது.
புரட்சியாளர் அம்பேத்கர், ‘நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் மூலம் பவுத்தத்தை உட்செறித்த பார்ப்பன இந்து மதத்தின் அடிவயிற்றை கிழித்தெறிந்து மீண்டும் பவுத்தத்தை தழைக்கச் செய்தார். அம்பேத்காரின் முயற்சிக்கு பெரியார் தனது ஆதரவை அளித்து தோளோடு தோளாக நின்றார். எனவே, பெரியார் அம்பேத்கர் துணை யோடு அவர்கள் காட்டிய வழியில் பார்ப்பன வேத இந்து மதத்தையும், பார்ப்பன வேத மரபுகளையும் நாம் வேரறுக்க வேண்டும்” எனக் கூறினார்.
முனைவர் சி. இளங்கோ
சித்தர்களின் பாடல்களில் வேத மரபுகள் மறுப்பு என்கிற தலைப்பில் முனைவர். சி. இளங்கோ உரையாற்றினார். அவர் தனது உரையில், “பார்ப்பன வேத மதமான இந்து மதம் சித்தர்களையும், அவர்களின் வேத மரபு மறுப்பு பாடல்களையும் திட்டமிட்டு அழித்து சித்தர்களையும் அவர்களின் தத்துவங்களையும் இருட்டடிப்பும் செய்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் தான் சித்தர்களில் பாடல்கள் அச்சிடப்பட்டன. சித்தர்களின் ஞானகோவை என புத்தகங்களாகவும் வந்தன. ‘சாதிப் பிணியில் தீயை மூட்ட வேண்டும்’ என சொன்னவர் பாம்பாட்டி சித்தர். திருமூலர் தனது பாடல்களில் பார்ப்பன வேத மரபுகளை அதன் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டினார். முதலில் பல்லவர் காலத்தில் தான் பார்ப்பனியம் கொடிகட்டி பறந்தது. பார்ப்பன வேதபாட சாலைகளை பல்லவ மன்னர்கள் ஒழுங்குபடுத்தி கொடுத்தனர். பார்ப்பன வேத மரபை பயிற்றுவிக்க பிரம்மதேயமாக ஆயிரக்கணக்கான வேலி நிலங்கள் கொடுக்கப்பட்டன.
தமிழ் வளர்ச்சிக்கு ஒரு வேலி நிலம் கூட அளிக்கப்படவில்லை. இவையெல்லாம் சித்தர்கள் பாடல்களாக எழுதி வைத்துள்ளனர். பார்ப்பன மேலாண்மையை மட்டும் தூக்கி பிடிக்கும் பார்ப்பன வேத மரபுகள் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
பூங்குழலி
வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேதமரபு மறுப்பு என்கிற தலைப்பில் பூங்குழலி உரையாற்றினார். சைவ சமயத்திலிருந்து விலகி நின்றவர் வள்ளலார். வள்ளலார் உருவ வழிபாட்டை, புரோகித சடங்குகளை மறுத்ததோடு, காவிக்கு பதிலாக வெள்ளுடை தரித்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1935ஆம் ஆண்டிலே வள்ளலாரின் 6ஆம் திருமுறைகளை தொகுத்து ‘குடிஅரசு’ பதிப்பகம் சார்பில் நூலாக வெளியிட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
நிறைவாக இளம்பிள்ளை சி. தங்கதுரை நன்றி கூறினார்.
‘நிமிர்வோம்’ வெளியீடு
தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிய மாத இதழான ‘நிமிர்வோம்’ மாத இதழ் வெளியீடு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ‘தலித் முரசு’ இதழ் ஆசிரியர் புனித பாண்டியன் ‘நிமிர்வோம்’ மாத இதழை வெளியிட கழகத் தோழர் திருப்பூர் சங்கீதா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
இளம்பிள்ளை சி.தங்கதுரை நன்றியுரையுடன் மாநாட்டின் முதலாம் கருந்தரங்கு அமர்வு நிறைவடைந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு திருச்சி விரட்டு வீதிநாடகக் குழுவினரின் வீதி நாடகம் சிறப்புடன் நடைபெற்றது.
கலை, இலக்கியங்களில் வேத மரபு
மாநாட்டின் இரண்டாவது அமர்வாக, கலை இலக்கியங்களில் வேத மரபு என்கிற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது.
சேலம் மாநகர செயலாளர் ஜே.பிரபு வரவேற்புரையாற்றினார். சேலம் மாநகர அமைப்பாளர் மோ.பாலு, சிந்தாமணியூர் கோ. பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘கலை, இலக்கியங்களில் வேத மரபு’ என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் நெறிப் படுத்தினார். அவர் தனது உரையில்,
“ஆரியர்களுக்கு கடவுளைவிட புரோகிதமும், வேள்விகளும் தான் முக்கியமாக கருதினார்கள். வேதங்களை எழுதாக் கிளவி என்றும், அதை சூத்திரர்கள் படிக்க மற்றும் கேட்கக் கூடாது என்பதற்காக கேளாக் கிளவி என்றும் சொன்னார்கள். ஆரியர்களின் தர்ம நூலான ‘சத்பதா பிராமணம்’ என்ற நூலில் பார்ப்பனர்கள் ரிஷி மரபில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் கடவுளுக்கு எல்லாம் மேலான கடவுள்கள் என்றும், அனைத்து கடவுள்களும் அவர்களுக்குள் அடக்கம் என்றும் சொல்லி இருக்கிறது. கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர். மந்திரம் எங்களுக்கு கட்டுப்பட்டது என்றனர். இத்தகைய வேத மரபுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ‘கலை, இலக்கியங்களில் வேத மரபு மறுப்பு’, ‘கலைவாணரின் பாத்திரங்களில்’ என்ற தலைப் பில் எழுத்தாளர் வே.மதிமாறன், ‘பாரதிதாசன் பாடல்களில் என்கிற தலைப்பில் பேராசிரியர் மணி கோ. பன்னீர் செல்வம், ‘விந்தனின் படைப்புகளில்’ என்ற தலைப்பில் முனைவர் வி.ஜனார்தனன் (இவர் விந்தனின் மகன்), ‘எம்.ஆர்.ராதாவின் நடிப்பில்’ என்கிற தலைப்பில் பேராசிரியர் சரோன் (இவர் நடிகவேள் குறித்து ஆவணப்படம் தயாரித்து வருகிறார்), ‘நவீன தமிழ்ப் படைப்புகளில்’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தர வள்ளி ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர்.
முடிவில் மு.பெ. சரவணன் நன்றி கூறினார்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக திறந்தவெளி மாநாடு சேலம் போஸ் மைதானத்தில் அமைக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் நினைவு மேடையில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநாட்டுக்கு முழு பொறுப்பேற்று உழைத்த இரா. டேவிட் தலைமையில் தொடங்கியது. மைதானம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தொடக்கத்தில் திருச்சி விரட்டு குழுவினரின் பறைமுழக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரை யும் வரவேற்று, மாநாட்டு அரங்கப்பணி உள்ளிட்ட பணிகளை பொறுப்பேற்று கடுமையாக உழைத்த சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஏற்காடு அ.பெருமாள் வரவேற்புரையாற்றினார். கழகச் செயல் வீரர்கள் சேலம் மாவட்ட அமைப்பாளர் டைகர். பாலன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்
சி. கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கத்திலேயே மாநாட்டின் ஒற்றைத் தீர்மானத்தை மாநாட்டு தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி, வேத மரபில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதை விரிவாக விளக்கினார். வடலூர் தலைமை சுத்த சன்மார்க்க சங்க மாநில தலைவர் படப்பை இரா. பால கிருட்டிணன், கழகப் பொருளாளர். திருப்பூர் துரைசாமி, கழக அமைப்பு செயலாளர் ஈரோடு ரத்தினசாமி உரையாற்றினார்.
தொடர்ந்து ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில்,
“வேத மரபை வீழ்த்துவதற்கு பவுத்தம் தான் வலிமையான ஆயுதம். பவுத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு வாழ்க்கைப் பண்பாடு. இந்த மாநாட்டில் பவுத்தத்திற்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை” என்று குறிப்பிட்டதோடு,
“இன்றைக்கும் அனைத்திலும் கோலோச்சும் இந்துத்துவத்தை எதிர்த்து பெரியார், அம்பேத்கர் நடத்திய போரை மீண்டும் நாம் தொடர்ந்து நடத்த வேண்டியது மிகவும் அவசியமானது” என்றார்.
தாலி நீக்கிய பெண்கள்
பெரியார் இயக்க மாநாட்டு மேடைகளில் முத்தாய்ப்பாக நடக்கும் பெண்களின் அடிமை சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக கழக மேடைகளில் இணையரின் தாலியை கணவர் அகற்றுவார். ஆனால், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இம் மாநாட்டில் சிறப்பு அம்சமாக கணவர் கட்டிய அடிமைத் தாலியை பெண் தோழர்களே அகற்றி கணவர் கையில் கொடுத்தனர். இந்த பண்பாட்டுப் புரட்சியைக் கூடியிருந்த கூட்டத்தினர் பலத்தக் கரவொலி செய்து வரவேற்றனர்.
திருச்செங்கோடு தனலெட்சுமி - வைரவேல், திருச்செங்கோடு பிரியா - மணி, சங்ககிரி கனகா - தீலீப் குமார், திருப்பூர் சங்கீதா - தனபால் கோவை ராஜாமணி - கிருஷ்ணன் ஆகிய இணையர்கள் மேடையில் பெண் அடிமை சின்னமாக இருக்கக் கூடிய தங்கள் தாலியை தாங்களே அகற்றி தங்கள் கணவர் கையிலேயே கொடுத்தனர்.
கழக ஏட்டுக்கு சந்தா
‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்காக முதல் கட்டமாக திரட்டப்பட்ட சந்தா தொகைகளை, சூலூர் பன்னீர்செல்வம், ஈரோடு வேணுகோபால் ஆகியோர் கழக தலைவர் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் ஒப்படைத்தனர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பிரச்சாரத் திற்காக புதிதாக வாங்கப்பட்ட வாகனத்தின் சாவியை அறிவியல் மன்ற அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். தலைமைக்
கழகச் செயல்பாட்டிற்காக புதிய ஆட்டோ வாங்குவதற்கான நிதியை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பலத்த கரவொலிக் கிடையில் வழங்கினார்.
மாநாட்டிற்காக மிக சிறப்பாக சுவரெழுத்து பணிகளில் ஈடுபட்ட விழுப்புரம் அய்யனார், ராமர், ஆத்தூர் மகேந்திரன், காவேரிப்பட்டினம் பிரபு ஆகியோரை பாராட்டி கழகத் தலைவர் இயக்க நாள்காட்டிகளை பரிசளித்தார்.
மாநாட்டிற்காக களப்பணியாற்றிய நாற்பதுக்கும் மேற்பட்ட தோழர்களுக்கு கழக நாள்காட்டியை வழங்கி கழகத் தலைவர் சிறப்பித்தார். மாநாட்டிற்காக பத்து நாள்களாக கடைவீதி வசூலை முன்னின்று நடத்திய குழுவின் தலைவர் சூலூர் பன்னீர்செல்வம், கழகத் தோழியர்கள் திருப்பூர் சங்கீதா, திருப்பூர் பார்வதி, திருப்பூர் முத்துலெட்சுமி, இராசிபுரம் சுமதி, மேட்டூர் பகவதி, இளம்பிள்ளை திவ்யா உள்ளிட்ட கழகத் தோழர்களுக்கு நாள்காட்டிகளை பரிசளித்து கழகத் தலைவர் பாராட்டினார்.
இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேத மரபு மறுப்பு மாநாட்டு நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். அவர் தனது உரையில்,
“வேத மரபுகளை நாம் யாரும் படித்ததில்லை. பள்ளியில் நாம் திருக்குறளை படித்து இருக்கிறோம். வாழ்கையில் நாம் திருக்குறளை நடைமுறைபடுத்தி யதில்லை. ஆனால் எவர் ஒருவருக்கும் தெரியாத மனுதர்மத்தை, மனு சாத்திரத்தை வேதத்தை நம் மூளையில் ஏற்றியிருகிறார்கள். சூழ்ச்சிக்காரர்களின் பலிக்கு ஆளாகி வாழ்க்கையில் நாம் கடைபிடித்து கொண்டிருக்கிறோம். வேதத்தை ஒரு பெரிய தோற்றமாக நம்மிடையே உண்டாக்கி வைத்திருக் கிறார்கள். வேதத்தில் உலகத்தில் உள்ள அரிய செய்திகளை சொல்லியிருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் எதைப் பற்றி பேசினாலும் அது வேதத்தில் இருக்கிறது என்பார்கள். வேத கணிதம் என்று சொல்வார்கள்.
வேதங்கள் என்பது மக்களுக்கு எதிரானது. பார்ப்பன மேலாண்மையை நிலைநிறுத்திடவே வேதங்கள் படைக்கப்பட்டன.
பார்ப்பனர்களை வெறும் மனிதர்களாக மட்டும் நினைக்கக் கூடாது. மாறாக அவர்கள் ஒரு தத்துவமாக நினைக்கப்படவேண்டும் என்பதைத் தான் வேதங்கள் நிலைநிறுத்துகின்றன. அந்த தத்துவம் நம்மை படிப்படியாக பிரிக்கிறது. மேல்கீழாக வைக்கிறது. இழிவுப்படுத்துகின்றன. இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள் இழிவானவர் களாக, உரிமை அற்றவர்களாக, அடிமைகளாக, தாசர்களாக கேவலப்படுத்தப்படுகிறார்கள். சரி பாதியாக இருக்கின்ற பெண்களை அவமதிக்கிறது.
பார்ப்பனர்களில் திருமணங்கள் வைதீக முறைப்படி நடக்கின்றது. நமது திருமணங்கள் புராணத்தின் அடிப்படையில் நடக்கிறது. நமக்கு வைதீக திருமண முறை இல்லை. இந்துக்களே ஒன்று சேருங்கள் எனக் கூறுபவரிடம் நாம் இத்தகைய பாகுபாடு திருமண முறைகள் பற்றி கேள்வி கேட்க வேண்டும்.
இந்து மதம் என்பது அந்நிய நாட்டு மதம். இன்றைக்கு பெரும்பான்மை மக்களில் மதமாக நம்மிடையே பார்ப்பனர்கள் திணித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் தோன்றிய அனைத்து சிந்தனை மரபுகளுமே, வேதத்தை வேத மரபுகளை எதிர்த்து தோன்றி யவைதான். சமணமாக இருந்தாலும், பவுத்தமாக இருந்தாலும், பின்னால் தோன்றிய சீக்கிய மதமாக இருந்தாலும் வேத மரபுகளை பிரிவினைகளை, ஜாதிய அடுக்குமுறைகளை தகர்த் தெறிய தோன்றியவை தான்.
அது கபிர்தாசராக, வடநாட்டு துக்ககாராமாக இருந்தாலும் இங்கிருந்த சித்தர் களோ, வள்ளலாரோ, திருமூலரோ, கபிலராக இருந்தாலும் இவர்கள் எல்லோரும் வேத மரபிற்கு எதிராகவே இருந்தனர். எல்லாவற்றையும் விட தமிழகத்தில் திருக்குறள் என்பது முற்று முதலாக வேதத்திற்கு எதிராகவே எழுதப் பட்டது.
பெருந்தமிழனாக இராஜராஜ சோழனை, இன்றைக்கு நவீன தமிழ் தேசிய வாதிகள் முன்னிறுத்து கிறார்கள். இராஜராஜசோழன் தமிழுக்கு ஒரு நன்மை கூட செய்ய வில்லை. மாறாக பார்ப்பனர்களுக்கு வேதத்திற்கும், வைதீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தான் என்பதே உண்மையாகும்.
எனவே ஆரியர்கள் பண்பாட்டு படையெடுப்பு மூலமே நம்மை அடிமைப்படுத்தினர்” என்று குறிப்பிட்டார். மாநாட்டின் முடிவில் கழகச் செயல் வீரர் ஆத்தூர் ந. மகேந்திரன் நன்றி கூறினார்.
பெரியார் இயக்கங்கள் இதுவரை நடத்திய மாநாடுகளில் திராவிடர் விடுதலைக் கழகம், சேலத்தில் நடத்திய வேத மரபு மறுப்பு மாநாடு கழகத் தோழர்களின் கடும் உழைப்பால் மிகப் பெரிய வெற்றி மாநாடாக நடந்து கழக வரலாற்றில் தனி முத்திரையை பதித்தது.
செய்தி : மன்னை காளிதாசு
படங்கள்: கொளத்தூர் விஜி, கபிலன் ஸ்டுடியோ