இஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், ஒடுக்குப்படும் மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வருபவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ். கீற்று இணையதளத்திற்காக, இந்தியாவில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினரது பிரச்சினைகள், மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடுகள், ஈழப்பிரச்சினை உள்ளிட்ட செய்திகள் தொடர்பாக நடத்திய நேர்காணலிலிருந்து...

கீற்று: உங்களுடைய தொடக்க கால வாழ்க்கை, பின்புலம் ஆகியன பற்றிச் சொல்லுங்களேன்.

பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. முதலாவது வகுப்பு வரை அங்கேதான் படித்தேன். என்னுடைய அப்பாவுக்குச் சென்னை கொத்தவால்சாவடியில் வெல்லம், புளி மொத்த வியாபாரம் இருந்தது. அதன் காரணமாக சென்னை வந்தோம். கொத்தவால் சாவடி ‘செயின்ட் தாமஸ்’ பள்ளியில் மூன்றாவதுவகுப்பு வரையும், பின் அரண்மனைக்காரத் தெருவில் உள்ள ‘செயின்ட் மேரீஸ்’ ஆங்கிலோ இந்திய உயர்நிலைப்பள்ளியில் 11ஆவது வகுப்பு வரையும் படித்தேன். புதுமுக வகுப்பையும் வணிகவியல் இளங்கலையையும் புதுக்கல்லூரியில் முடித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைத் துறையில் சேர்ந்து வணிக மேலாண் முதுவர் (எம்.பி.ஏ) பட்டம் பெற்றேன்.  வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் நிறுமச் செயலாண்மைத் துறை உதவிப் பேராசிரியராக 1985இல் சேர்ந்தேன். ஆனால் குடும்பம் சென்னையில் இருந்தது. குடும்பத்தைப் பார்க்கவும் அமைப்புச் சார்ந்த பணிகளுக்காகவும் வார விடுமுறைநாட்களில் சென்னை வந்துவிடுவேன்.

கீற்று: அரசியலில் ஈடுபாடு வந்தது எப்படி?

இளமைக்காலத்தில் இருந்தே சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டு. கல்லூரிப் பருவத்தில் இந்திய மாணவர் இஸ்லாமியர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி அதன் தமிழகத் தலைவராகச் செயல்பட்டேன்; பின் அவ்வமைப்பின் அனைத்திந்திய அறிவுரைக்குழுவின் ஒன்பது பேரில் ஒருவராகவும் இருந்தேன்.

       இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம் என்பது முப்பது வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஓர் அமைப்பு. இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் சமூக அக்கறையுள்ளவர்களாகவும் உருவாக்கக் கூடிய பணியில் அவ்வமைப்பு ஈடுபட்டு வந்தது. அதில் முப்பது வயது வரை தான் இருக்க முடியும் என்பதால் 1989இல் அவ்வமைப்பில் ஓய்வு பெற்று வேறு சமூகத் தளங்களில் பணியாற்றத் தொடங்கினோம். எண்பதாம் ஆண்டுகளை என்பது இந்திய முஸ்லீம்களின் வரலாற்றில் மிகவும் மோசமான காலம் என்று சொல்லலாம். 1980களின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக இஸ்லாத்தைத் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கிறார்கள். தலித் சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்பது புதுமையான நிகழ்வு இல்லை. வாழையடி வாழையாகக் காலம் காலமாகவே நடக்கின்ற ஒன்றுதான் அது! இன்னும் சொல்லப்போனால் கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரை விவேகானந்தர் நடைப்பயணம் பற்றி எழுதும் போது, ‘பட்டால் பாவம்! தொட்டால் தீட்டு’ என்னும் தீண்டாமையை எதிர்த்துத் தமிழகத்திலும் கேரளத்திலும் வஞ்சிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது பற்றி அப்போதே எழுதியிருக்கிறார். ஆனால் மீனாட்சிபுர நிகழ்வு இந்திய அளவில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்தியன் எக்சுபிரசு நாளிதழின் திருநெல்வேலிச் செய்தியாளர் சுப்பிரமணியம் இந்நிகழ்வைப் பற்றிப் பெரிய செய்திக்கட்டுரை எழுதினார். அது இந்தியா முழுவதும் தலைப்புச் செய்தியானது. ‘A whole village embraces Islam’ என்பது அவர் கொடுத்த தலைப்பு.

இப்படியாக இது இந்திய அளவில் சிக்கலாக மாறி அதுவரை தமிழகத்திற்கு வராத வாஜ்பாய், அத்வானி ஆகியோரெல்லாம் ‘மதம் மாறியவர்களைத் திரும்ப இந்துமதத்திற்கு அழைக்கப் போகிறோம்’ என்று கூறிப் படையெடுத்து வந்தார்கள். அப்போது தென்னாப்பிரிக்கா வெள்ளைச் சிறுபான்மையினரால் ஆளப்பட்ட நாடாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நிறவெறி (Apateid) அங்குத் தலைவிரித்து ஆடியது. அப்போது ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் இனவெறிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். ‘காமன்வெல்த் நாடுகள் சேர்ந்து இனவெறிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம்’ என்று மாநாட்டின் இறுதியில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இந்திராகாந்தி கூறினார். ‘தென்னாப்பிரிக்காவில் இனவெறி பற்றிப் பேசுகிறீர்கள். உங்கள் நாட்டில் உள்ள இனவெறி பற்றி என்ன சொல்கிறீர்கள்? (‘You are talking about apateid in South Africa. What is about apartheid in your own country?’) என அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்டார். ‘என் நாட்டில் இனவெறி என்பதே கிடையாது. (‘There is no apartheid in my country’) என்று இந்திரா விடை கூறினார். ‘மீனாட்சிபுரம் பற்றி என்ன சொல்கிறீர்கள்? (‘What do you want to say about Meenatchipuram?’) என்று விடாமல் அச்செய்தியாளர் கேட்டார்.

தீண்டத்தகாத மக்கள், வஞ்சிக்கப்பட்ட மக்கள் ஆகியோர் இப்படியொரு தீர்வை நோக்கில் போனால் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும் எனக் கற்பனை செய்துகொண்டு, 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாளன்று பூட்டப்பட்ட பாபர் மசூதியின் பூட்டை உடைப்பதற்கு இரத யாத்திரம் நடத்துவோம் என்று விசுவ இந்து பரிசத் அறிவிக்கிறது. இது நடந்தது 1984இல். நேபாளத்தில் சீதை பிறந்ததாகச் சொல்லப்படும் சனக்பூரில் இருந்து அயோத்தி நோக்கி இரதயாத்திரை என விசுவ இந்து பரிசத்து அறிவித்தது. அதுவரைக்கும் பாபர் மசூதி என்றால் என்ன என்பது பற்றி முசிலீம் மக்களுக்கே தெரியாது.

       வேண்டுமென்றால் அந்த உள்ளூர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடி இருக்கலாமே ஒழிய வேறு யாருக்குமே தெரியாத சூழல்தான்! அதே 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் இந்திரா தம்முடைய மெய்க்காவலர்களால் கொல்லப்பட்டதால் இந்த யாத்திரை தடுத்து நிறுத்தப்படுகிறது. இதன் பிறகுதான் தமிழ்நாட்டில் மிக மோசமான பரப்புரைகள் (பிரச்சாரங்கள்) நடந்தன. இது பெரியார் பிறந்த மண் என்பது மட்டுமில்லாமல் உறவுமுறை சொல்லிப் பேசி மாமா, மச்சான், சாச்சா என்று பேசி இணைப்பாக இருக்கக்கூடிய அளவில் மத நல்லிணக்கம் இருக்கும் பகுதியாகத் தமிழ்நாடு இருந்தது. இராம. கோபாலன், திருக்கோவிலூர் சுந்தரம், எசு. வி. சிறீதரன் ஆகிய இந்து முன்னணி ஆட்கள் பல ஊர்களில் மேடை போட்டு, முஸ்லீம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக நேசித்துக் கூடிய நபிகள் நாயகத்தைப் பற்றி, அவருடைய குடும்பத்தைப் பற்றி எல்லாம் மிக அருவருக்கத்தக்க வகையில் மேடையில் பேசினார்கள். ‘காம நெறியில் மிஞ்சியவர் நபிகள் நாயகத்தின் மனைவி கதீசாவா? கன்னிமேரியா? மணியம்மையா?’ என்னும் தலைப்பில் பட்டிமண்டபம் நடத்துவதாக புதுப்பேட்டைப் பகுதியிலேயே சுவரொட்டி ஒட்டக்கூடிய அளவுக்கு நிகழ்வுகள் நடந்தன.

       அப்போது ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக இதையெல்லாம் ஆதரித்தார் என்றுதான் நான் குற்றம் சாட்டுவேன். அவருடைய அமைச்சரவையில் இருந்து இன்றைக்கு எம்.ஜி.ஆர். கழகத்தலைவராக இருக்கும் இராம.வீரப்பனும் அதற்கு இசைவாகச் செயல்பட்டார். இப்படியாகப் பரப்புரைகள் நடக்கும்போது அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத இளைஞர்கள் சிலர் எதிர்ப் பரப்புரையில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பரப்புரைகள் எல்லாம் வெறும் பரப்புரைகளாக மட்டும் இல்லாமல் இவர்கள் வெட்ட, அவர்கள் வெட்ட, இங்கேயும் கொலை, அங்கேயும் கொலை என்று அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மிகப்பெரிய அமளி ஏற்படும் சூழல் வந்தது.

இந்திரா இறந்ததால் இரத யாத்திரையைத் தள்ளிப் போட்டவர்கள் இந்திய அளவில் மீண்டும் செயல்படத் தொடங்குகிறார்கள். இதன் எதிரொலியாக 1986ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் நாள் பாபர் மசூதியின் பூட்டை உடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை நன்றாகக் கவனிக்க வேண்டும். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு திசம்பர் 22ஆம் நாள் வரை தொடர்ச்சியாக முஸ்லீம்கள் வழிபாடு நடத்தக் கூடிய ஒரு தொழுகை இடமாக இருக்கிறது. வருவாய்த் துறை ஆவணங்களின்படி அது உத்தரப்பிரதேச சுன்ன சமாத்து வக்பு வாரியத்துக்குச் சொந்தமான ஒரு பள்ளிவாசல் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திசம்பர் 22ஆம் நாள் முஸ்லீம்கள் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்ற பிறகு நள்ளிரவில் சிலர் புகுந்து இராமன், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோரின் சிலைகளைப் பள்ளிவாசலின் தொழுகைத் தலைவர் (இமாம்) மக்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய மேடையில் வைத்து விட்டு ‘இராமபெருமான் தம்முடைய ஜென்ம பூமியில் அவதாரம் எடுத்துவிட்டார்’ என்று சொன்னார்கள். அப்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

இந்தச் சிலைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அன்றைய தலைமை அமைச்சர் ஜவகர்லால்நேரு உத்தரவிடுகிறார். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. கே. நையர், ‘சிலைகளை அப்புறப்படுத்தினால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்’ என்கிறார். இத்தனைக்கும் அயோத்தியின் காங்கிரசுக் கட்சித் தலைவர் அகசாய பிரம்மச்சாரி ‘இந்தச் சிலைகளை அப்புறப்படுத்தி இடத்தை முஸ்லீம்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று ஒரு தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியருடைய உத்தரவுக்கு ஏற்ப மசூதி பூட்டப்படுகிறது; பூட்டிய நிலையில் உள்ளே இருக்கக்கூடிய சிலைகளைப் பூஜிப்பதற்கு இரண்டு பூசாரிகள் உள்ளே செல்லலாம் என்பதும் முஸ்லீம்கள் அருகில் செல்லக்கூடாது என்பதும் நீதிமன்றத்தின் உத்தரவு.

இந்நிலையில் வழக்கு கீழ்நீதிமன்றத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் போய் அலகாபாத்து உயர்நீதிமன்றத்தின் இலக்னோ பிரிவுக்குப் போகிறது. அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் உமேஸ்சந்திர பாண்டே என்னும் வழக்கறிஞர் முனிசிபு நீதிமன்றத்திற்குப் போய், தான் ஒரு இராம பக்தன் என்றும் வழிபாடு நடத்தத் தனக்கு ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும்போது தீர்ப்பு வழங்க முடியாது என்று முனிசீபு நீதிமன்றம் புறம் தள்ளிவிடுகிறது. அதன் பிறகு அவர் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுகிறார். இராசீவ் காந்தியின் முழு ஆசியுடன்தான் இவை நடக்கின்றன. ஏனெனில் அதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் ஷாபானு வழக்கில் கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிராக முஸ்லீம்கள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பைத் தெரிவித்தபோது அதைச் சரிசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படுகிறது.

முஸ்லீம்களை நிறைவு செய்ய அதைச் செய்த பிறகு ‘சங் பரிவார்’ அமைப்புகளை நிறைவு செய்ய வேண்டி இது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நேரத்தில் மாவட்ட நீதிபதி கொஞ்சநேரம் தான் விசாரிக்கிறார். எதிர்த் தரப்பு விசாரணைக்காக வருகிறார்கள். அவர்களுடைய வாதத்தைக் கேட்பதற்குக் கூட மறுத்துவிட்டு பள்ளிவாசல் பூட்டை உடைத்து, பக்தர்கள் உள்ளே செல்லலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிடுகிறார். இலக்னோ தூர்தர்சனில் இருந்து அதைப் படம் எடுத்து இந்தியா முழுவதும் காட்டுகிறார்கள். அது அரசியலுக்காகச் செய்யப்பட்ட ஒரு வேலை.

இப்படிப்பட்ட சூழலில்தான் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கிய அத்வானியின் இரத யாத்திரை பிகாருக்கு வரும்போது பிகாரின் அன்றைய முதல்வர் இலாலு பிரசாத்து அதைத் தடுத்து நிறுத்துகிறார். 1989இல் பாகல்பூரில் நடைபெற்ற மிகப்பெரிய படுகொலைகள் ஆகியன இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் கொதிப்படைய வைத்த சூழ்நிலைகளாக அமைந்தன. மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதற்காக வி.பி.சிங் அவர்களின் சமூகநீதி அரசு கவிழ்க்கப்பட்ட நிகழ்வு முதலியன இந்தக் காலத்தில் தான் நடக்கிறது. இதனுடைய உச்சக் கட்டமாக 1992இல் பாபர் மசூதி இடிக்கப்படக் கூடிய சூழலைப் பார்க்கிறோம். இதைத் தொடர்ந்து 1992 திசம்பர், 1993 சனவரி ஆகிய காலங்களில் மும்பையில் கலவரங்கள் நடக்கின்றன. இது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஸ்ரீகிருஷ்னா தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அந்த விசாரணை ஆணையம், பால் தாக்கரே ஓர் இராணுவத் தளபதி போல இக்கலவரங்களுக்குத் தலைமையேற்று நடத்தினார் என்று சொன்ன பிறகும் கூட எந்த வித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படாத நிலை.

இந்நிலையில்தான் இவை போன்ற சமூகச் சிக்கல்களுக்கு என்ன தீர்வு, ஒரு சிறுபான்மைச் சமூகம் என்ன அடிப்படையில் எப்படி அணுக வேண்டும் என்னும் சிந்தனையின் பக்கம் நாங்கள் சென்றோம். அதன் காரணமாகத் தான் 1995இல் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்னும் பேரமைப்பை உருவாக்கினோம். அப்படி உருவாக்கும்போது அன்றைய பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்த குணங்குடி அனீபா அவர்கள் தலைவராகவும் நான் துணைத் தலைவராகவும் இருந்தோம். எங்களுடைய மிக முதன்மையான நோக்கம் சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அந்த அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து சட்டத்தின் அடிப்படையில் அதைக் களைவதற்கான வடிகாலை அமைக்க வேண்டும்; சனநாயக அடிப்படையில் மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டும் என்பதுதான்.

இதில் ஒரு செய்தி என்னவென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட மறு ஆண்டு 1993 திசம்பர் 6ஆம் நாள் கோயமுத்தூரில் சில முஸ்லீம் சகோதரர்கள் இடிப்பை எதிர்த்துக் கருப்புக் கொடி கட்டுகிறார்கள். இப்படிக் கருப்புக்கொடி கட்டியவர்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடா என்னும் கொடிய சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார். இராசீவ் படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பயன்படுத்துவதற்காகத் தடா சட்டத்தை முதன்முதலில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்கள். அந்தக் கொடிய சட்டத்தைக் கருப்புக்கொடி கட்டியவர்கள், பேருந்துகள் மீது கல்வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள் ஆகியோர் மீதும் பாய்ச்சினார்கள். அப்போது த.மு.மு.க இல்லை. இந்தத் தடாவில் சிறைப்பட்டவர்களை வெளியே கொண்டுவருவதற்காக நானும் சில நண்பர்களும் சேர்ந்து சில பணிகளைச் செய்துகொண்டிருந்தோம். அந்நண்பர்களுள் ஒருவரான பாக்கரையும் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் நாள் ஜெயலலிதா அரசு தடா சட்டத்தில் சிறையில் அடைக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான் 1995இல் த.மு.மு.க என்னும் அமைப்பைத் தொடங்கினோம். தொடங்கிய பின் தடாவுக்கு எதிரான பேரணி நடத்தினோம். ஒரு கண்டனச் சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட குலைநடுங்கிப் போயிருந்த ஒரு சமூகச் சூழலில் தடாவை எதிர்த்து சென்னைத் துறைமுக நுழைவாயிலில் உள்ள அம்பேத்கர் சிலையில் தொடங்கி கோட்டை நோக்கிப் பேரணி நடத்தினோம்.      இது போன்ற பணியைச் செய்வதற்கு ஒரு வெற்றிடம் அப்போது இருந்தது; மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சாரைசாரையாக மக்கள் அப்போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். அந்நேரத்தில் நாகூரில் காவல்துறை அத்துமீறல் நடைபெற்றது. ஒரு கலவரம், அதைத் தொடர்ந்து நாகூர் தர்காவுக்கு வந்தவர்கள் எல்லாரும் அவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் கூடச் சிறையில் அடைக்கப்படும் சூழல் ஏற்பட்டது. நாகூர் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த இந்திரஜித் மிக மோசமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார். அதற்கெல்லாம் சேர்த்துத்தான் இந்தப் பேரணியே நடத்தினோம். அதற்குப் பிறகு மக்களிடம் இதற்குக் கிடைத்த ஆதரவை வைத்துக் கொண்டுதான் த.மு.மு.க.வைத் தமிழகம் முழுவதும் கட்டியமைக்கக் கூடிய பணியைத் தொடர்ந்து செய்தோம்.

வெறுமனே உரிமைகளுக்கான போராட்டத் தளமாக மட்டும் இல்லாமல் எங்களுடைய பணிகளை விரிவுபடுத்தினோம். இப்போது தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் இரத்த தான முகாம்கள் நடத்துகிறார்கள். ஆனால் ஒரு மக்கள் திரள் அமைப்பாக இரத்த தான முகாம்களைத் தேவைகளுக்கு ஏற்பவோ குடியரசு நாள், விடுதலைத் திருநாள் ஆகியவற்றின்போதோ நாங்கள் தாம் முதன்முதலில் தமிழகத்தில் நடத்தினோம். இப்போதும் கூடத் தமிழகத்தில் மிக அதிகமாக இரத்தத்தான முகாம்கள் நடத்தக் கூடிய ஒரு அமைப்பாகத் த. மு.மு.க இருக்கிறது. எங்களுடைய தொண்டர்கள் கொடுக்கும் இரத்தம் பெரும்பகுதியாக முஸ்லீம் அல்லாத சமூக மக்களுக்குத்தான் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. இதே போல விபத்துகள் ஏற்படுகிறபோது உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்று உதவி செய்யும் பணியையும் த.மு.மு.க வில் எங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதால்தான் 2004ஆம் ஆண்டு திசம்பர் கடைசி வாரம் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழகக் கடற்கரையோரம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியபோது பட்டினப்பாக்கத்தில் தொடங்கிக் குளச்சல் வரை முதலில் களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்கின்ற பணியையும் த.மு.மு.க தொண்டர்கள் செய்தார்கள்.

       இப்போது எண்பத்தைந்து விரைவுச் சிகிச்சை ஊர்திகள் த.மு.மு.க சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைத்துச் சமூகத்தினருக்கும் இயங்கக்கூடிய நிலை இருக்கிறது. இவ்வாறு பலவற்றைச் செய்து வருகிறோம். இதனுடைய அடுத்தகட்டமாக 2007இல் மனிதநேய மக்கள் கட்சி என்னும் ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கினோம். அரசியல் என்பது ஒரு தொழிலாக இன்று இருக்கிறது. அரசியல் என்பது சேவைக்கான ஒரு வழித்தடம் தான்! ஆனால் அது தொழிலாக மாறியிருக்கக் கூடிய சூழலில் ‘அரசியல் என்பது ஒரு சேவைதான்! மக்கள் சேவையே நமது முதன்மை!’ என்னும் அடிப்படையில் தகுந்த கொள்கைத் திட்டங்களை வகுத்து மனிதநேய மக்கள் கட்சியும் இயங்கி வருகிறது.

கீற்று: தமிழகத்தின் மதச்சார்பற்ற அரசியலில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். பெரியார் காலம் தொட்டு திராவிட இயக்கங்களோடு நெருக்கமான உறவு இஸ்லாமிய இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் இருந்திருக்கிறது. திராவிட இயக்கப் பாரம்பரியம் பலவீனப்பட்டு இருக்கும் இன்றைய சூழலில் இஸ்லாமியர்களின் நலன்களை முன்னெடுத்து வலுவான இயக்கமாக வளர்ந்திருக்கும் தமுமுக இந்த கடந்த காலத்தை எப்படிப் பார்க்கிறது?

தமிழகத்தில் திராவிடர் கழகம் முதலியன மூலமாக பெரியார் அவர்கள் தம்முடைய பணிகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் திராவிடக் கழகத்திற்கு முஸ்லீம்கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பது இயல்பான உண்மை. அதற்குப் பிறகு, திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா தி. மு.க. வை உருவாக்கியபிறகும் கூட தி. மு. க. விற்குப் பல்வேறு தளங்களில் உதவியவர்கள், அனைத்து வகை சக்திகளையும் அளித்தவர்கள் முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

கீற்று: அப்போது பொதுவுடைமைக் கட்சியும் இருந்தது. அப்படியிருக்கும்போது திராவிட இயக்கத்துடன் இஸ்லாமியர்கள் தங்களை அதிகமாகப் பிணைத்துக் கொண்டதன் காரணம் என்ன?

திராவிடக் கட்சிகள் பேசிய மொழி, வகுத்துக் கொண்ட கொள்கை, அவர்களுடைய செயல்திட்டம் ஆகியனவெல்லாம் இயல்பாகவே முஸ்லீம் சமூகத்தால் புரிந்துகொள்ளக்கூடிய, தங்களை அவற்றுடன் அடையாளப்படுத்திக்கொள்ளக் கூடிய நிலையில் இருந்தது. பொதுவுடைமைக் கட்சியை இந்தியாவில் தொடங்கும்போது அதில் ஏராளமான முஸ்லீம் முன்னோடித் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காளத்தில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இடதுசாரித் தோழர்கள் பயன்படுத்தக்கூடிய சொல்லாடல்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள் ஆகியவற்றை விட - அவற்றோடு தங்களை அடையாளப்படுத்துவதைவிட - திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள் – முஸ்லீம்களுக்கு அணுக்கமாக இருந்தன. அதனால் அவர்களது போராட்டங்களில் முஸ்லீம்கள் அதிகளவில் கலந்துகொண்டனர். 1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முஸ்லீம் மாணவர்கள் பலர் முழுக்க முழுக்கத் தங்கள் ஈடுபாட்டைக் காட்டியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1967வரை காங்கிரசுக் கட்சியின் ஆட்சித் தமிழகத்தில் இருந்தபோது மிக முதன்மையான நிகழ்வு – இதை எல்லாம் மறந்து விடுகிறார்கள் என்பதற்காகப் பதிவு செய்கிறேன், ஆத்திகரான இராசகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சியும் நாத்திகரான அண்ணாத்துரையின் தி.மு. கழகமும் இரு துருவங்களாக இருக்கக்கூடிய சூழலில் இந்த இரு துருவங்களையும் இணைக்கக் கூடிய வினையூக்கியாகச் செயல்பட்டவர் காயிதே மில்லத்து முகம்மது இசுமாயில் சாகிபு. இரண்டு பேரையும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து அக்கூட்டணியின் காரணமாக 1967இல் இங்கே ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரசு ஆட்சியை இழந்தது. அன்று இழந்த ஆட்சியை இன்று வரை காங்கிரசு பிடிக்க முடியாத அளவு ஒரு மாற்றம் ஏற்பட்டதென்றால் அது உறுதியாக காயிதே மில்லத்து முகம்மது இசுமாயில் சாகிபுடைய முயற்சிதான்!

கீற்று: அந்தச் சமயத்தில் பெரியார், தி.மு.க. உடன் சேர்த்து முஸ்லீம் லீக்கையும் கண்டிக்கிறார் அல்லவா?

       தி.க., தி.மு.க., ஆகியவற்றின் பிரிவால் அவர் கண்டித்திருக்கலாம். ஆனால் காயிதே மில்லத்துடன் பெரியாருக்கு நல்ல உறவு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் காயிதே மில்லத்து அவர்கள் மறைந்த போது ‘தம்பி! என்னைவிட்டு முன்னாடியே போய்விட்டாயா?’ என்று உருக்கமாகவே பெரியார் பேசிய பதிவுகள் கூட இருக்கின்றன.

முஸ்லீம் லீக் என்பது மிகப்பெரிய நன்மை. ஆனால் அவர்களே சமூக அடிப்படையில் மிகப்பெரிய தவற்றைச் செய்திருக்கிறார்கள். தங்களுடைய தனி அடையாளத்தை - அதாவது கட்சி என்னும் அடிப்படையில் - கட்சியின் இரண்டாம் மட்டத் தொண்டர்கள், மூன்றாம் மட்டத் தொண்டர்கள் ஆகியோரை இழக்கக்கூடிய அளவுக்கு அவர்களுடைய உறவுகள் திமுகவுடன் அமைகின்றன. இதன் காரணமாக முஸ்லீம் லீகைச் சேர்ந்த பலர் திமுகவிலும் உறுப்பினர்களாகின்றனர். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் காயிதே மில்லத்திற்குப் பிறகு அப்துல் சமது சாயிபு அவர்கள் முஸ்லீம் லீகின் தலைவராக இருந்தபோது - திமுகவுடனான உறவைப் பிரித்து அவர் வெளியே வரும் நேரத்தில் - தலைவர்கள் தாம் வந்தார்களே தவிர தொண்டர்கள் எல்லாம் திமுகவில் தங்கிவிட்டார்கள். சான்றாக நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த முபாரக்கு சென்ற சட்டப்பேரவையில் திமுகவின் கொறடாவாக இருந்தார். தொடக்கத்தில் அவர் முஸ்லீம் லீகின் இளைஞரணித் தலைவராக இருந்தவர். இப்படித் தனி அடையாளத்தை இழக்கும் அளவுக்கும் திமுகவின் சிறுபான்மை அணி என்னும் அளவுக்கும் கட்சியே முடங்கிப் போகும் ஒரு சூழல் இருந்தது. அது மட்டுமில்லாமல் சமூகத்திற்குத் தேவையான உருப்படியான கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறவும் தவறிவிட்டார்கள்.

2007இல் வந்த சிறுபான்மை முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை -  அண்ணாவிடம் 1967இலேயே கேட்டிருந்தால் தந்திருப்பார்; 1969இல் கருணாநிதியிடம் கேட்டிருந்தால் கிடைத்திருக்கும். அதைச் செய்யவில்லை. நீண்ட நோக்கு இல்லாமல் தேர்தல் வரும்போது அவர்கள் கொடுக்கும் இடங்களில் போட்டியிடுவது என்ற அளவில்தான் இந்த உறவு இருந்தது. இது ஒரு காலத்தில் எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் முஸ்லீம் லீக் தனிச் சின்னத்தில் ஏணி அல்லது தராசுச் சின்னத்தில் போட்டியிட்ட நிலை மாறி எந்தப் பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ அந்தக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடக்கூடிய நிலை வந்துவிட்டது. அப்படிப் போட்டியிட்டால் கூட, தேர்தலுக்குப் பிறகு இவர்கள் தனிக்கட்சி என்று சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ அடையாளம் காட்டப்படும் நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்த விதியைத் திருத்திய பிறகு இவர்கள் அந்தக் கட்சி உறுப்பினராகச் சேர்ந்தால்தான் அச்சின்னத்தில் போட்டியிட முடியும் என்னும் நிலை ஏற்பட்டது.

இன்றைக்கு முஸ்லீம் லீகிற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாமே தவிர அவர்கள் இருவரும் திமுகவின் உறுப்பினர்கள். வேலூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லீம் லீக் உறுப்பினர் என்று சொல்லிக்கொண்டாலும் கூட அவர் திமுக உறுப்பினர் என்னும் நிலைதான் இருக்கிறது. சட்டமன்றத்திலும் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்; நாடாளுமன்றத்திலும் இருக்கிறார்கள். ஆனால் இந்தச் சமூகச் சிக்கல்களை எல்லாம் அவர்கள் உரிய முறையில் எடுத்துக் கூறத் தவறிவிட்டார்கள்; சமூக மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளி பெரிய அளவில் ஏற்பட்டு விட்டது. ‘இது போலப் போராட்டம் நடத்தி சிறைப்படுவது முதலியவற்றை நாங்கள் நடத்தியதே இல்லை. இந்தச் சமூகத்தில் போராடும் மனப்பான்மையை நீங்கள் தாம் உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று அப்துல் சமது சாயிபு அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் என்னிடம் நேரடியாகவே சொன்னார். இப்படிச் சொல்லக்கூடிய அளவில் தான் முஸ்லீம் லீகின் நிலை இருந்தது.

       அதனால்தான் த.மு.மு.க வைத் தொண்ணூற்று ஐந்தில் தொடங்கியபோது அதற்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது. அதனால் சிறுபான்மை மக்கள் தொடர்புடைய உரிமைகளை இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் போதுமான அளவுக்கு நிறைவேற்றவில்லை. அவர்களுக்குத் தேவையான அழுத்தங்களை இருக்கக்கூடிய முஸ்லீம் கட்சிகள் கொடுக்காததின் காரணமாகத் தான் த.மு.மு.க அமைப்புத் தேவைப்பட்டு உருவாகும் நிலை ஏற்படுகிறது.

கீற்று: திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தும் விடுதலை வாங்கிய காலத்தில் இருந்தே பல முஸ்லீம்கள் பலர் வறுமை நிலையில் உள்ளனர். அவர்களுக்கான சார்புநிற்றல் (representation) குறைவாக இருக்கிறது. இன்று வரை அவர்களுடைய ஏழ்மை நிலை பெருகிக்கொண்டே போகிறது. இப்படிப்பட்ட நிலைகள் இருந்தும் முஸ்லீம் லீக் ஏன் இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சிந்திக்கவில்லை? 

              பிரிவினைக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு உள்ள காலகட்டம் இந்திய முஸ்லீம்கள் வரலாற்றில் மிக வேதனையான ஒரு காலம். முஸ்லீம் லீக் தான் பிரிவினைக்குக் காரணம் என்ற பொதுவான குற்றச்சாட்டு இருந்தது. ஆகவே நாம் தப்புச் செய்துவிட்டோமோ என்னும் மனநிலையில் முஸ்லீம் லீக்கில் இருந்தவர்கள் பணியாற்றினார்கள். கிட்டத்தட்ட எழுபது வரை மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட பார்வையைப் பார்க்கமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஓரளவு இயல்பான நிலை வந்தபிறகு இதைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்க வேண்டும். 

       எடுத்துக்காட்டாகச் சொல்லப் போனால் 2006இல் வந்த சச்சார் குழு அறிக்கையைப் போல இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருக்கும்போது கோபால் சிங் குழுவின் அறிக்கை வந்தது. அது சச்சார் குழு சொன்னதை இருபது ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது. கோபால் அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில் எங்களுக்கு உரிமைகள் வேண்டும் என்று குரல் கொடுக்கக்கூடிய நிலை இல்லாத சூழல்தான் இருந்தது. அதனால் முஸ்லீம் தலைமை தொலை நோக்குடன் இயங்குவதற்குத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கீற்று: நீண்டகாலமாக திராவிட இயக்க அரசியலில்தான் இஸ்லாமியர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். நாற்பதாண்டுகால திராவிட இயக்கம் இஸ்லாமிய சமூகங்களிடையே எவ்விதமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்தது?

முஸ்லீம் சமூகத்தின் நலனுக்காக பலவற்றைத் திராவிட இயக்கங்கள் செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. சமூக நல்லிணக்கம் இங்கே நிலவுகிறது என்றால் திராவிட இயக்கங்களின் தலைவர்களுடைய பேச்சுகள், எழுத்துக்கள் அதற்குக் காரணமாகும். ஒப்பீட்டு அளவில் அதிமுகவை விட திமுக அதிகமாகச் செய்திருக்கிறது என்று சொல்லலாம். அதே வேளையில் தி.மு.க ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. 1997இல் கோயமுத்தூரில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்ட பிறகு நடந்த நிகழ்வுகள் ‘தமிழகத்தில் ஓர் ஆட்சி இருக்கிறதா?’ என்று கேள்வி எழும் அளவுக்கு மிக மோசமாக இருந்தன. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம், பல உயிர்கள் படுகொலை ஆகியவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத ஓர் ஆட்சியாக அது இருந்தது. கடைகள் இழந்தோர்,  பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகள் வழங்கினார்கள். ஆனால் அங்குக் கொலைகளில் ஈடுபட்டவர்கள், கொலைகளுக்குக் காரணமான காவல்துறை அலுவலர்கள், சமூக எதிரிகள் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்குப் பிறகு தான் கோயமுத்தூரில் தொண்ணூற்று எட்டில் குண்டுவெடிப்பு நடக்கிறது. அதனால் திராவிடக் கட்சிகள் சில தளங்களில் நன்மைகள் செய்திருக்கிறார்கள்; ஆனால் பிற்காலத்தில் பல தளங்களில் கோளாறுகள் செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். 

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பதினான்கு, முஸ்லீம்களால் நடத்தப்படுகின்றன. புதிதாகத் தொடங்கப்படும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசு உதவிகள் வழங்குவதில்லை என 1991இல் ஜெயலலிதா முதல்வரான பிறகு கொள்கை முடிவை எடுத்தார். அதன் பிறகு வந்த தி.மு.க. அரசும் அதே முடிவில் தான் உள்ளது. இதனால் கல்வி வணிகமயமாவதற்கும் எட்டாக்கனியாவதற்கும் அரசே காரணம் என்பதும் அதனால் சிறுபான்மையினர் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுமே வருந்தத்தக்க நிலையாக உள்ளது. 

கீற்று: இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற நிலை நிலவுகிறதா? தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல முடியுமா?

       இரண்டு கட்சிகளையும் மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்வது கடினம் தான்! ஏனெனில் இரண்டு பேருமே தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்டாலும் கடந்த காலங்களில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டவர்கள். தங்களுடைய கொள்கை, கோட்பாடு ஆகியவற்றைவிட ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தல் கூட்டணி வைத்து பா.ஜ.க.வின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் இருந்திருக்கிறார்கள். தற்போது இரண்டு பேருமே அதற்குத் தயக்கம் காட்டக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். எனவே பொத்தாம் பொதுவாக இவர்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்ல முடியாது. அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் வைத்துத்தான் அதற்கான சாயத்தைப் பூச முடியும்.

கீற்று: இஸ்லாமிய சகோதரர்களுக்குக் குறிப்பாக ம. ம. கட்சிக்கு இணக்கமாக எந்தக் கட்சிகளைப் பார்க்கிறீர்கள்?

       தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிச்டு பொதுவுடைமைக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற நிலையில் மிக உறுதியாக இருக்கிறார்கள். இந்த இரண்டைத் தவிர, பா.ம.க. வும் ம.தி.மு.க. வும் பாரதிய சனதாவுடன் இருந்திருக்கிறார்கள். தே.மு.தி.க. இதுவரை யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. எனவே எங்களைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கட்சிகள் இரண்டும் தான் மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார்கள்.

கீற்று: நீதிக்கட்சிக் காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியல் என்பது இருந்து வருகிறது. இன்றும் அதற்கான தேவைகள் உள்ளன. இவ்விடயத்தில் ம.ம.க. வின் நிலைப்பாடு என்ன?

       தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் தேவை என்று மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. அதற்கான கருத்து உருவாக்கத்தையும் செய்து வருகிறது. சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் இன்றியமையாதது. அதை எதிர்க்கக்கூடிய ஆட்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான தளத்தில் தான் ம.ம.க. நிற்கிறது.

பொதுவான மனித நியதிகளுக்கு எதிராக இருப்போரை நாங்கள் எதிர்க்கிறோம். தீண்டாமைக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்போம். தீண்டாமையை ஆதரித்து அந்தக் கோட்பாட்டைச் செயல்படுத்த வேண்டும்; அந்த நடைமுறை இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகத்தான் இருப்போம்.

கீற்று: தமுமுக - வின் அரசியல் அணியாக மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியிருக்கிறீகள். மனித நேய மக்கள் கட்சி இஸ்லாமியர்களின் அரசியல் கோரிக்கைகளை மட்டும் முன்னெடுக்கும் கட்சியாக இருக்குமா அல்லது சமூகத்தின் பிற பிரிவினரின் நலன்களையும் உள்ளடக்கிய கோரிக்கைகளை முன்னெடுக்குமா? எவ்வாறாக இருப்பினும், சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பாலான உங்கள் பார்வைகள் அணுகுமுறைகள் என்ன? 

       ஒன்றை மட்டும் இதற்கு விடையாகச் சொல்ல விரும்புகிறேன். த.மு.மு.க. முழுக்க முழுக்க முஸ்லீம்களுக்கான ஓர் அமைப்பாக இருந்த போதிலும்கூட, நாங்கள் தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்பாகவே, த.மு.மு.க. வின் பணிகளை நீங்கள் பார்த்தீர்களேயானால் அது இரத்தத் தான சேவையாக இருந்தாலும் சரி, விபத்து முதல் உதவி, இயற்கைப் பேரிடர் உதவி ஆகிய நிகழ்வுகளாக இருந்தாலும் சரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர், சாலை, மின்வசதி ஆகியவற்றில் குறைபாடாகவோ இருந்தாலும் சரி அனைத்துச் சமூக மக்களுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறோம்; போராடியிருக்கிறோம். ம. ம. க. வைப் பொருத்தவரை அது ஓர் அரசியல் கட்சி. இந்த அரசியல் கட்சியில் முஸ்லீம்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கிறார்கள். முஸ்லீம் அல்லாதோரும் நிர்வாகிகளாகப் பல்வேறு மட்டங்களில், அளவுகளில் செயல்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சமூக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கக் கூடிய கட்சியாகத்தான் ம. ம. க. விளங்கும். இம்மக்களுக்காகப் பல போராட்டங்களை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

முஸ்லீம் மக்கள் தொடர்பான விடயங்களுக்கு மட்டும் போராடாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவளி, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வை எதிர்ப்பது முதலிய பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தின் தீயவிளைவை எடுத்துரைத்து அங்குள்ள டாக்டர். புகழேந்தி ஆகியோரையெல்லாம் இணைத்துப் போராடியிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்; முழு மதுவிலக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று மதுக்கடை மறியல் போராட்டத்தை மாநில அளவில் நடத்தியிருக்கிறோம். ம. ம. க. ஒரு பொதுவான தளத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தூய்மையான அரசியல் நெறிமுறைகளை வகுப்பதற்காக இயங்கக்கூடிய ஒரு கட்சியாகும்.

கீற்று: பா.ம.க. தொடக்கத்தில் வன்னியர் சங்கமாக இருந்தபோது வன்னியர்களுக்கான அமைப்பாக மட்டும் அறியப்பட்டிருந்தது. பின்னர் அவர்களிடையே ஒரு மாற்றம் ஏற்பட்டு பா. ம. க. என்னும் அரசியல் கட்சி தொடங்கப்படுகிறது. அப்போது பெரியார், அம்பேத்கார் ஆகியோரின் கொள்கைகளை முன் வைத்து, தமிழ்த்தேசியம் பேசினார்கள்; தலித் எழில்மலை முதலிய தலித்தலைவர்களையும் மற்றவர்களையும் இணைத்தார்கள். ஆனால் படிப்படியாக மீண்டும் மாற்றம் பெற்று பா. ம. க. வன்னியர்களுக்கான கட்சியாக விளங்கி வருகிறது. இது போன்ற ஒரு வரலாற்றுப் பாடம் நம் கண் முன்னால் நடந்திருக்கிறது. இதை ம. ம. க. எப்படிப் பார்க்கிறது?

      jawarulla_350 பா. ம. க. வைத் தொடங்கியபோது மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல ஒரு விடயத்தை நாங்கள் சொல்லவில்லை. த. மு. மு. க என்கிற சமூக அமைப்பு அரசியலில் ஈடுபட வேண்டும்; தேர்தல் ஆணையத்தில் பதியப்பட்ட ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்பதற்காக ஒரு பொதுவான பெயரில் ம. ம. கட்சியைத் தொடங்கியிருக்கிறோம். இது முதன்மையாக முஸ்லீம்களுக்கான ஒரு கட்சியாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் வாதாடுவோம்; போராடுவோம். இந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, இது முஸ்லீம்கள் அதிகமாக இருக்கக்கூடிய கட்சி என்பதை அறிந்துகொண்டு முஸ்லீம் அல்லாதோர் ஏராளாமான பேர் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். எனவே எங்களைப் பா. ம. க. உடன் ஒப்பிட வேண்டாம். அவர்கள் கூறியது போல நாங்கள் சொல்லவில்லை. காரல் மார்க்சுப் படத்தையும் பெரியாரின் படத்தையும் காயிதே மில்லத்தின் படத்தையும் போடக்கூடிய பா. ம. க. இதுவரை நடந்திருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தியதில்லை என்பது தான் கசப்பான உண்மை. நாங்கள் அவர்களைப் போலச் சொல்லவில்லை.

இது முஸ்லீம்கள் அதிகமாக உள்ள ஒரு கட்சி; முஸ்லீம்களுக்குச் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி மன்றத்திலும் ஆக்கப் பங்களிப்பு இல்லாத ஒரு வெற்றிடம் நிலவுகிறது. அதை நிரப்புவதற்காகத் தான் இந்த அரசியல் கட்சியாகும். அதே நேரத்தில் எல்லாப் பிரிவு மக்களின் சிக்கல்களையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம். இதைப் புரிந்து, அறிந்து நிறையப் பேர் ம. ம. ம. வில் உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றார்கள். அவர்கள் த. மு. மு. க. என்னும் பாரம்பரியத்தில் எங்களுடைய பணிகளைப் பார்த்திருக்கிறார்கள். அரசியல் கட்சியாக இல்லாத போதே தன்னலமற்ற வகையில் பணியாற்றியதைப் பார்த்திருக்கிறார்கள். அதை மனத்தில் வைத்துத் தான் இக்கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

கீற்று: இராசேந்திர சச்சார் குழு அறிக்கை, இரங்கநாத் மிஸ்ரா அறிக்கை தொடர்பான விவாதங்கள் மேலெழுந்து வரும் சூழலில் ஆக்கப்பூர்வமான செயலைக் காங்கிரசுக் கட்சி செய்யும் என எதிர்பார்க்கிறீர்களா? நடுவண் அரசுகள் சச்சார் அறிக்கை குறிப்பிடும் சிக்கலை எந்த அளவு தீர்க்க முன்வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

       இதில் இரண்டு விடயங்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முதலாவது முஸ்லீம்களின் கல்வி, பொருளியல் ஆகியன பற்றிய நீதியரசர் இராசேந்திர சச்சார் குழுவின் அறிக்கை என்பது நிலவரத்தை எடுத்துச் சொன்னது; இரண்டாவது நீதியரசர் இரங்கநாத மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை என்பது அந்நிலவரத்திற்குரிய தீர்வைச் சொன்னது. சச்சார் அறிக்கை முஸ்லீம்களின் சமூகம், பொருளியல், கல்வி ஆகியவற்றின் நிலை பல தளங்களில் இந்தியாவில் வாழும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களைவிட மிக மோசமாக இருக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. நடுவண் அரசு அமைத்த குழுவின் அறிக்கை என்பதால் அது முதன்மை பெறுகிறது. அடுத்தது 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரசு, தி. மு. க. ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளில் முஸ்லீம்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இந்திய அளவில் இட ஒதுக்கீடு தருவோம் என உறுதிமொழி அளித்தார்கள். ஆட்சிக்கு வந்தபின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த அளவுச் செயல்திட்டத்தில் ஆறு மாதங்களுக்குள் ஓர் ஆணையத்தை அமைத்து அவ்வாணையத்தின் பரிந்துரையைப் பெற்று கல்வி, வேலை ஆகியவற்றில் இட ஒதுக்கீடு தருவோம் எனச் சொன்னார்கள். மிஸ்ரா ஆணையம் அதற்காகத் தான் அமைக்கப்பட்டது.

மருத்துவ ஆய்வு என்பது ஒரு மனிதனின் நோய்களை சொல்லும்; மருத்துவர் அதற்கேற்ப மருந்துகளைக் கொடுக்க வேண்டும். சச்சார் மருத்துவ ஆய்வு செய்பவர் போலச் செய்திருக்கிறார்; மிஸ்ரா மருத்துவராகச் செயல்பட்டிருக்கிறார். சச்சார் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை நடுவண் அரசு எடுத்திருக்கிறது. பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அப்படி வந்ததுதான்! இந்தியாவில் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் தொண்ணூறு மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வளர்ச்சிப் பணிகள் முஸ்லீம்கள் அல்லாதோருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆனால் இதற்கு மேல் வேறெதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

       மிஸ்ரா அறிக்கையை வெளியிடக் கோரி நாங்கள் 2007ஆம் ஆண்டு மார்ச்சு ஏழாம் நாள் நாடாளுமன்றத்திற்கு எதிரே பேரணி நடத்தினோம். அதன்பின் தான் 2007 ஆம் ஆண்டு மே மாதம் அந்த அறிக்கையைத் தலைமை அமைச்சரிடம் கொடுத்தார்கள். அந்த அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டி முதல்வர் கருணாநிதியிடமும் தலைமையமைச்சரிடமும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். அந்த அறிக்கையை 2009 ஆம் ஆண்டு திசம்பரில்தான் நாடாளூமன்றத்தில் வைத்தார்கள்; ஆனால் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் எந்தவித நடவடிக்கையையும் நடுவண் அரசு எடுக்கவில்லை. சச்சார் அறிக்கையையும் மிஸ்ரா அறிக்கையையும் மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துகிறார்களோ என்னும் ஐயம் இதனால்தான் ஏற்படுகிறது. உருப்படியாகப் பல செயல்களை அரசு செய்ய வேண்டியிருக்கிறது. அவற்றுள் இட ஒதுக்கீடு என்பது முதன்மையான ஒன்று. ஒரு சமூகம் பொருளியலில் முன்னேறக் கல்வி இன்றியமையாத ஒன்று. அக்கல்வியை ஊக்குவிக்க மாணவர் உதவித்தொகை(‘Scholarship’) வழங்குவது என்பதெல்லாம் சிறியதுதான்! அதற்கு மாற்றாகச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றிற்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு நடத்த வேண்டிய கல்வி நிலையங்களைத் தனியார் நடத்துகிறார்கள்; தனியார் நடத்த வேண்டிய மது விற்பனையை அரசு நடத்துகிறது என்னும் இழிநிலை இங்கு இருக்கிறது. இந்நிலை மாறி எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் நிலை வரவேண்டும். குறிப்பாகச் சிறுபான்மையினருக்கு அத்தகு வாய்ப்பைக் கொடுத்தால்தான் இச்சமூகம் முன்னேறும்.

கீற்று: முதலில் தேர்தலைப் புறக்கணிப்பது, பின்னர் சிறிய அமைப்பாக உருவாகி ஒரு சில இடங்களில் நின்று வென்று இருப்பை உனர்த்துவது, பின் ஆட்சியை நோக்கி நகர்வது என்பதைத்தான் தி.மு.க., பா. ம. க. ஆகிய கட்சிகள் செயல்படுத்தி வந்திருக்கின்றன. அண்ணா, கருணாநிதி ஆகிய அறிவுசார் கூட்டத்தைக் கொண்டு மக்களைக் கவர்வது, தலித்துகளின் கோரிக்கைகளைப் பேசுவது, பெண்களின் கோரிக்கைகளைப் பேசுவது எனப் பொதுவான கோரிக்கைகளைப் பேசித் தான் தி.மு. க. மக்கள் இயக்கமாக மாறியது என்பதையும் பார்க்கிறோம். இவற்றில் இருந்து ம.ம. கட்சியின் படிப்பினை என்ன? உங்களுடைய செயல்திட்டம் என்ன? அறிவுசார் கூட்டத்தின் மூலம் மக்களைக் கவர்வது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? குறிப்பாகத் தலித்துகள் முன்னேற்றத்திற்கு நீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன?

       ம. ம. கட்சியைத் தி.மு.க. உடனோ அ.தி.மு.க உடனோ ஒப்பிட முடியாது. நான் முன்னரே சொன்னது போல இது சிறுபான்மை மக்களை முன்னிலைப்படுத்தும் ஒரு கட்சியாகும். அதில் மற்றவர்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் ம. ம. கட்சியில் நிர்வாகிகளாக இப்போது இருப்பவர்கள் திடீரென ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை; திரைத்துறை முதலிய வேறு பின்புலத்தில் இருந்தும் அரசியல் கட்சியைத் தொடங்கவில்லை. நான் மனித உரிமைகளின் பல தளங்களில் பணியாற்றியிருக்கிறேன். ‘பியுசில்’ (‘P.U.C.L’) அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பணியாற்றியதன் வெளிப்பாடுதான் த. மு. மு. க. அமைப்பைத் தொடங்க வேண்டும் என்னும் நினைப்பு வரக் காரணம் என்று கூடச் சொல்லலாம்.

முஸ்லீம்கள், முஸ்லீம்கள் அல்லாத அறிவுசார் கூட்டம் எனப் பலர் எங்களுடைய பின்புலமாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தங்களை அடையாளம் காட்டலாம்; பலர் அடையாளம் காட்டாமல் இருக்கலாம். 2009ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் பல அரசியல் கட்சிகள் தொடாத பல விடயங்களையும் கருத்துகளையும் நாங்கள் சொன்னோம். சான்றாகக் ‘கடலோர மேலாண்மைத் திட்டம் என்னும் பெயரில் நடுவண் அரசு கொண்டு வரும் திட்டம் எப்படிக் கடலோர மக்களைப் பாதிக்கும்? அதற்கு மாற்றாக என்ன செய்ய வேண்டும்?’ என்பதைச் சொன்னதைச் சொல்லலாம். இது ஒரே ஒரு சான்றுதான்! இதே போலத் தலித்து மக்கள் எங்கள் தொப்புள் கொடி உறவு என்னும் அடிப்படையில் ஏராளமான செயல்திட்டங்கள் மட்டுமல்லாமல் களத்தில் இறங்கியும் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். எனவே ஒரு தொலைநோக்குப் பார்வை, அதற்கான அறிவுசார் பின்புலம் ஆகிய அனைத்தையும் கொண்டுதான் ம. ம. க. இயங்கிக் கொண்டிருக்கிறது.

கீற்று: சிங்கள பெருந்தேசிய இன வன்முறையையும், இலங்கை அரசையும் வெறுமனே தமிழ் மக்களுக்கு எதிரானது என்று மட்டும் பார்க்கிறீர்களா? அல்லது ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களுக்கும் எதிரானது என்று பார்க்கிறீர்களா?

       ஆமாம். ஒட்டுமொத்தமாகச் சிறுபான்மையினருக்கு எதிராகத் தான் ஈழச்சூழல் உள்ளது.

கீற்று: கடந்த ஆண்டு ஈழப்போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ஒருவழியாக போர் முடிவுக்கு வந்தது. இது அமைதிக்கு வழிவகுக்கும் என்று கருதுகிறீர்களா?

       இவற்றையெல்லாம் பற்றி நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். போர் முடிந்து விட்டது; அமைதி திரும்பி விட்டது என்னும் நிலையில் மக்கள் இருந்தாலும் கூட சர்வாதிகாரத்திற்குத் தான் இந்தப் போர் வழிவகுத்திருக்கிறது. பன்னாட்டு அவையின் பார்வையாளர் குழுவே வரக்கூடாது எனப் பன்னாட்டு அவையின் அலுவலகத்திற்கு முன் நின்று கொக்கரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது; பன்னாட்டு அவையின் பொதுச் செயலர் தம்முடைய அலுவலர்களை எல்லாம் திரும்பப் பெறும் சூழல் அமைந்திருக்கிறது. இப்படி சர்வாதிகாரத்திற்கு உரிய ஒரு முன்னோட்டமாகத் தான் சூழல் இருக்கிறது. சிங்களவர்கள், தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் இருந்தாலும் இந்த இரண்டு சிறுபான்மை இன மக்களின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் அளவில் சூழல் மாற வேண்டும் என்கிற அழுத்தத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடுக்க வேண்டும். தமிழர்களின் தலைமை எப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறதோ அதே போல எம். எச். அஸ்ரப் அவர்களின் மரணத்திற்குப் பிறகு முஸ்லீம்களின் தலைமையும் கூடப் பல கூறுகளாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது என்னும் வருத்தமான நிலைதான் இருக்கிறது. மீள்குடியேற்றம் எதுவும் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. இலங்கை அரசு முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் தன்னாட்சி தர வேண்டும். இந்தியாவில் நாம் பேசும் மாநிலத்தன்னாட்சியையாவது குறைந்தது அவர்களுக்குத் தரவேண்டும் என்பது தான் இச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும்.

கீற்று: தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குறுங்குழுவாதப் பிரிவினர் 1986-ல் விடுதலைப் புலிகள் யாழ்பாண முஸ்லீம்களை வெளியேற்றதையும் கிழக்குப் பகுதியில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களையும் குறிப்பிட்டு புலிகள் இயக்கத்தை விமர்சித்து வருகிறார்கள். அத்தகைய சம்பவங்களைக் குறிப்பிட்டு ஈழ விடுதலைக்கான நியாயத்தையே மறுத்தும் வருகிறார்கள். இலங்கை அரசின் பக்கம் சாய்கிற போக்குகள் வளர்ந்திருக்கிறது. ஆனால், ஈழத்தில் இஸ்லாமியர்கள் மீது மோசமான தாக்குதல்கள் நிகழத் தூண்டுதலாகவும் காரணமாகவும் இருந்த கிழக்குப் மாகாண முதல்வராக இப்போதிருக்கும் கருணா மீது விசாரணை நடத்தக் கோருவதில்லை. இது குறித்த உங்கள் பார்வைகள் என்ன? பொதுவில் ஈழ விடுதலைக்கு நியாயம் இருப்பதாக நினைக்கிறீர்களா? 

       ஈழவிடுதலை என்பது ஒரு தனி விடயம். நான் இந்தத் தலைப்புக்குள் போக விரும்பவில்லை. ஆனால் அம்மக்களின் உரிமைகள் – அவர்கள் ஈழத்தமிழர்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி, மலையகத் தமிழர்களானாலும் சரி, அவர்களுடைய உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் இலங்கை அரசு நடந்து கொண்டிருக்கிறது. அது கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதே நேரத்தில் ஈழத்தின் வடகிழக்கு மாகாணத்தில் வாழக் கூடிய முஸ்லீம்கள் பல நிகழ்வுகளில் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி (‘Caught in cross fire’) என்பது போல இரண்டு மோதல்களுக்கு இடையில் சிக்கித் தவித்துத் தங்கள் வாழ்வை, நிலத்தை இழந்து ஆழமாகக் காயப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கருணாவுக்கு ஆதரவாகவெல்லாம் இல்லை. அவர்களுடன் நான் தொடர்பில்தான் இருக்கிறேன். கருணாவை அவர்கள் நம்பவில்லை. இந்தக் காயங்களுக்கு மருந்து போடும் வகையில் நல்லிணக்கம் மலர்வதுதான் சிறுபான்மைச் சமூகங்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு வழியை அமைக்கும்.

கீற்று: நல்லிணக்கம் ஏற்படுத்தும் அதே நேரம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லவா?

       தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும். 2009ஆம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் என்னுடைய தேர்தல் பரப்புரைகளையும் ம. ம. கட்சியின் தேர்தல் அறிக்கைகளையும் பார்த்தீர்கள் என்றால் ஈழப்படுகொலையை நாங்கள் கடுமையாகக் கண்டித்திருக்கிறோம் என்பது தெரியும். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் மனித உரிமைத் தளத்தில் பணியாற்றுபவன் என்னும் அடிப்படையில் ‘பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒரு போர்க்குற்றவாளி இராசபக்சே’ என்று நான் தான் மயிலாடுதுறை செய்தியாளர் கூட்டத்தில் முதன் முதலில் சொன்னேன். அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் பிற தலைவர்கள் அதைச் சொல்லத் தொடங்கினார்கள். எப்படிப் போபால் படுகொலைக்குக் காரணமான வாரன் ஆண்டர்சனைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ‘திராணி’யற்று இருக்கிறதோ அதே போல ஒரு ‘கிரிமினல்’ குற்றாவாளியான டக்ளஸ் தேவானந்தாவிற்குத் தலைமையமைச்சரே விருந்துபச்சாரம் செய்கிறார். அதைப் பற்றிய செய்திகள் வெளிவந்த பிறகும் அவர் திரும்பவும் அதையே தொடர்கிறார் என்பதெல்லாம் ஒரு வெட்கக்கேடான செயல் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.

கீற்று: இங்குள்ள தி. மு. க., போன்ற கட்சிகள் மாநிலம் சார்ந்த அரசியலில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு வெளியுறவுக்கொள்கையில் எவ்வித நிலைப்பாடும் இல்லை. அதனால் ஈழத்தமிழர் படுகொலையைத் தடுக்கும் வலுவற்றவர்களாக இருக்கிறார்கள். வெளியுறவுக் கொள்கை பற்றிய தேவையும் தி. மு. க போன்ற கட்சிகளுக்குப் பெரிதாக இல்லை. ஆனால் ம. ம. க. விற்கு வெளியுறவுக் கொள்கையில் ஒரு நிலைப்பாடு, ஒரு பார்வை இருக்க வேண்டிய தேவை இருப்பது போலத் தெரிகிறது. இந்திய அரசின் முஸ்லீம் நாடுகளுடனான உறவு, இஸ்ரேலுடனான உறவு ஆகியவற்றில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க அரசை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. வெளியுறவுக்கொள்கையில் தொடர்ந்து பல்வேறு தவறுகள் நடந்து வருகின்றன. இப்போது பங்களாதேஸ் உடன் மோசமான அணுகுமுறை, பாகிஸ்தானுடன் மோசமான இந்துத்துவ நிலைப்பாடு என வெளியுறவுக்கொள்கை இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன விடை சொல்கிறீர்கள்?

       நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்! வெளியுறவுக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கும் தொடர்புடையது என்பதை எல்லாம் புறந்தள்ளிய வண்ணம்தான் தமிழக அரசியல் கட்சிகள் இருக்கின்றன. பல அமைச்சகங்களை நடுவண் அரசிடம் கேட்பவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகத்தைக் கேட்க மாட்டார்கள், இத்தனைக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் தெற்காசிய நாடுகளிலும் இன்னும் பல்வேறு நாடுகளிலும் தொழிலுக்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். இப்போது நீண்ட காலமாக நாங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் தமிழக அரசு வெளிநாட்டில் வாழக்கூடிய தமிழர்களுக்கு ஓர் அமைச்சகத்தை உருவாக்கவிருக்கிறார்கள். இதை நீண்ட நாட்களுக்கு முன்பே கேரளம் செய்துவிட்டது வெளியுறவுக்கொள்கை என்பது மிக மிக இன்றியமையாத ஒன்று என்னும் அடிப்படையில் . ம. ம. க. வைப் பொருத்தவரை பல கருத்துகளைப் பல அழுத்தங்களை மிகத் தெளிவாகவே அவ்வப்போது நாங்கள் கொடுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அண்மையில் பல்வேறு தளங்களால் இஸ்ரேலினால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கக்கூடிய காசாவிற்குப் புலோட்டிலா என்னும் படகுக்குழுமம் சென்றபோது அதை இஸ்ரேல் மிக மோசமாகத் தாக்கியதை எதிர்த்து இந்திய அரசு ஒரு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாத ஒரு சூழ்நிலை இருந்தது. அதைக் கண்டித்து நாங்கள் ஓர் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் கண்டனத்தை மட்டுமாவது இந்திய அரசு தெரிவித்தது.

இப்போது அணு ஆயுதம் தொடர்பான ஒரு முன்வரைவைக் (‘Nuclear Civil Liabilities Bill’) கொண்டு வரப் போகிறார்கள். அது முழுக்க முழுக்க நம்முடைய நலன்களுக்கு எதிரானதாகவும் அமெரிக்காவின் நலனை மட்டும் பாதுகாக்கக்கூடியதாக ஒன்றாகவும் தான் இருக்கிறது. அதைப் பற்றி அ. தி. மு. க. வோ தி. மு. க. வோ சுற்றுச்சூழலுக்கும் எங்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்லிப் பசுமைத் தாயகம் நடத்தக்கூடிய பா. ம. க. வோ கூட எந்த எதிர்ப்புக்குரலையும் எழுப்பாத நிலையைப் பார்க்கிறோம். ஆனால் ம. ம. க. கட்டாயமாக அந்தச் சிக்கல்களை எடுத்துரைக்கும். அவ்வப்போது இவை தொடர்பான அறிக்கைகளை வெளியிடுகிறோம். அவை பற்றிய ஒரு தெளிவான பார்வையும் எங்களுக்கு உண்டு.

கீற்று: கீற்றில் நாங்கள் சில கட்டுரைகளை வெளியிடும்போது இஸ்லாமிய நண்பர்கள் சிலர், ‘நாங்கள் மரைக்காயர்கள்; நாங்கள் தாம் உயர்ந்தவர்கள்; பிற இஸ்லாமியர்கள் தலித்துகளாக இருந்து மாறியவர்கள்; அவர்களுடன் நாங்கள் அக மண உறவு வைத்துக்கொள்வதில்லை’ என்றெல்லாம் பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார்கள். அக்கருத்து உண்மைதானா? அது எந்த அளவுக்கு இஸ்லாத்திற்குள் சாத்தியம்? இவை போன்ற வேறுபாடுகள் இஸ்லாத்தில் இருக்கின்றனவா?

       இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் சாதிக்கும் சாதிய வேறுபாடுகளுக்கும் மனிதர்களுக்கிடையிலான பாகுபாடுகளுக்கும் இடமில்லை. ‘ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணில் இருந்தும் தான் உங்களைப் படைத்திருக்கிறோம். நீங்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே வெவ்வேறு நிறத்தினராக, கோத்திரத்தினராக, மொழியினராக நீங்கள் இருக்கிறீர்கள்’ என்பது தன் இஸ்லாத்தின் மிகத் தெளிவான கோட்பாடு. அதனால்தான் முதன்முதலாகத் தொழுகைக்கு அழைக்கக்கூடிய ஓர் உயர்ந்த பணி கருப்பு நிறம் உடைய மிலால் என்னும் நபித்தோழருக்கு நபிகள் நாயகத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் அரபிக்கும் அரபி இல்லாதவனுக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறி இனப்பாகுபாடுகளை ஒழித்த ஒரு முழக்கம் தான் இஸ்லாம்! அந்த அடிப்படையில் எந்தச் சாதியப் பாகுபாடுகளுக்கும் இஸ்லாத்தில் இடம் இல்லை என்பதுதான் இயல்பான உண்மை.

தமிழகத்தில் வாழக் கூடிய தொண்ணூற்று எட்டு விழுக்காட்டு முஸ்லீம்கள் – நீங்கள் குறிப்பிட்ட மரைக்காயராக இருக்கட்டும் இராவுத்தராக இருக்கட்டும், தக்கினியாக இருக்கட்டும், இலெப்பையாக இருக்கட்டும், எல்லோரும் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சாதிய வேறுபாடு என்பது ஒரு சிலர் அறியாமையின் காரணமாகச் சொல்லக் கூடிய ஒரு கருத்தாகும். அப்படிப்பட்ட ஒரு பாகுபாடு இருக்குமேயானால், தமிழகத்தில் ஏராளமான பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அங்கு யாரும் எப்போது வேண்டுமானாலும் சென்று சமநிலையில் நின்று இறைவனை வணங்கலாம். நீ உள்ளே வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை. அகமணத்திருமணங்களும் நடைபெற்று வருகின்றன என்பது தான் உண்மையான நிலை. சிலர் இதை மாற்றி அறியாமையின் காரணமாகவும் சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பில் வாழ்ந்துகொண்டிருப்பதாலும் பேசலாம். இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கீற்று: கருத்தடை, கட்டாயத் திருமணப் பதிவு ஆகிய சமகால மாறுதல்களை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்னும் கருத்தைப் பலர் முன்வைக்கிறார்கள் என்பது பற்றிய உங்கள் கருத்து என்ன?

       இது தேவையில்லாமல் எழுப்பப்படும் சிக்கலாகும். முஸ்லீம் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு திருமணமும் எழுத்தளவில் பதியப்படுகிறது. மணமகன் யார், மணமகள் யார், குடும்பத்தினர் யார் யார்? மணமகன் மணமகளுக்குத் திருமணப் பரிசாக என்ன கொடுக்கிறார், அதற்கு இரண்டுப் பேர் சான்றுகள், திருமணம் நடந்த இடம் என எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்கள். இப்படிப் பதிவு செய்தவர்களை மறுபடியும் ஏன் பதிவு செய்யச் சொல்கிறீர்கள் என்பது தான் தமிழக அரசிடம் கட்டாயத் திருமணப் பதிவை எதிர்த்துக் கேட்கும் வினாவாகும். நாங்கள் பதிவு செய்திருப்பதை ஏற்றுக்கொண்டு சான்றிதழ் கொடுங்கள் என்பது தான் முஸ்லீம் சமூகத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

       சமகால மாற்றம் என்னும் பெயரில் அரைகுறை ஆடைகளுடன் உடல் உறுப்புகளைக் காட்டிக் கொண்டு இருப்பதை இஸ்லாமியச் சமூகம் மட்டுமல்லாது எந்தச் சமூகமும் செய்யக்கூடாது. குற்றங்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கூடிக்கொண்டே வருகிறது. குடும்பங்களில் கணவன் மனைவி உறவு சிதைந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் உள்ள புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட இப்போது குற்றங்கள் கூடியிருப்பதற்கு என்ன காரணம்? செய்தி ஊடகங்களில் குறிப்பாகக் காட்சி ஊடகங்களில் எந்தவிதச் சமூக அக்கறையும் இல்லாமல் வெளிவரும் நெடுந்தொடர்கள் முதலியனதான் முதன்மைக் காரணம்! தமிழ் நெடுந்தொடர்களை விட இந்தி நெடுந்தொடர்கள் இன்னும் மோசமாக இருக்கின்றன. அந்த அளவுக்குத் தமிழும் போய்விடக்கூடாது என்னும் அக்கறை நமக்குத் தேவை.

இஸ்லாம் என்பது கட்டுப்பாடானதும் ஒழுக்க மாண்புமிகுந்ததுமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்னும் நிலைப்பாடு உடையது. தமிழ் இணையத்தளங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு விழுக்காடு அவர்களுடைய மக்கள்தொகை விழுக்காட்டை விட அதிகம்! யுனிகோடு முறையில் இலவசமாகத் தமிழ் எழுத்துருவைக் கொடுத்தவர் தமிழ்நாட்டு முஸ்லீம் உமர்தம்பி என்பவர் தாம்! மாற்றங்கள் ஆக்கத்தின் அடிப்படையில் இருக்கும்போது அதற்கு இஸ்லாமியர்கள் ஆதரவு தருவார்கள். சமூக அசிங்கங்களுக்கும் பிளவுகளுக்கும் காரணமாக அம்மாற்றங்கள் இருக்கும் என்றால் கட்டாயம் இஸ்லாம் அதை ஏற்றுக்கொள்ளாது.

கீற்று: ஜமாத் என்பது ஒரு மேலாண்மை அமைப்பே தவிர, மதம் தொடர்பான அமைப்பு இல்லை. அதில் முஸ்லீம்கள் மட்டுமே இருப்பதால் முஸ்லீம்கள் அல்லாதோர் அதை ஒரு மத அமைப்பாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சல்மான் ருஷ்டி ஒரு கவிதை எழுதினார் என்பதற்காக அவர் மீது தடை விதிப்பது என்பதையெல்லாம் ஜமாத்தான் செய்கிறதே தவிர அது மதத்தடை இல்லை. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

       ஜமாத்து என்பது அந்தந்தப் பகுதி முஸ்லீம்கள் உருவாக்குகின்ற ஒரு நிர்வாக அமைப்பு ஆகும். அது அந்தந்தப் பகுதிப் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வது, அடக்கத்தளங்களைப் பார்த்துக் கொள்வது, திருமணங்களை நடத்தி வைப்பது, திருமணங்களுக்குப் பின் சில இணையருக்கு (தம்பதியருக்கு) நடுவில் ஏற்படும் உரசல்களைத் தீர்த்து வைப்பது ஆகிய செயல்களைச் செய்து வருகிறது. சில இடங்களில் விதிவிலக்காகச் சிலர் தவறான முடிவுகளை எடுக்கலாம். அதற்காகச் ஜமாத் அமைப்பே தவறு என்று சொல்ல முடியாது. தங்கள் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களின் நலன்களைப் பேணுவதுதான் ஜமாத்தின் தலையாய கடமையாகும். பல ஜமாத்துகள் பள்ளிகள் தொடங்குவது, கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்துவது என ஆக்க வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேர்காணல்: கீற்று நந்தன்

தட்டச்சு: முத்துக்குட்டி