ஒன்றிய பாஜக அரசின் சிந்தனையில் உருவானதுதான் தேசிய தேர்வு முகமை. வெறும் ஒரு குடியிருப்போர் நலச்சங்கம் போல சொசைட்டியாகப் பதிவு செய்யப்பட இந்த முகமை நீட், ஜேஇஇ என முக்கியமான பல தேர்வுகளை நடத்துகிறது. அதில் பலப்பல மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல வகையான மோசடிகள் அம்பலமாகி நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து தினமும் பல மோசடி நபர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் (யுபிஎஸ்சி) பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இவரது ராஜினாமா பின்னணி குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
யுபிஎஸ்சி தலைவராக மனோஜ் சோனி கடந்த 2023ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. குஜராத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். மேலும், அரசியல் கட்சியை சேர்ந்தவர் போல நடந்து கொள்ளும் மனோஜ் சோனி, எந்த விதத்திலும் யுபிஎஸ்சி தலைவர் பதவிக்கு பொருத்தமான நபராக இருக்க மாட்டார் என காங்கிரசின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பல எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டவர்தான் மனோஜ் சோனி. தற்போது இவர் 5 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கும் நிலையில், திடீரென பதவியை ராஜினாமா செய்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 8 உறுப்பினர்களைக் கொண்டு யுபிஎஸ்சியில் தினேஷ் தாஸ் என்பவரும் குஜராத்தைச் சேர்ந்தவர். பிபி.ஸ்வைன் என்பவரும் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மொத்தம் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் போலிச் சான்றிதழ் தொடர்பான விசாரணை வளையத்தில் உள்ளனர்.
சமீபத்தில் புனே பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் விவகாரத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. சுமார் 300 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான பூஜா கேட்கர், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு கீழ் வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என பொய்யான ஓபிசி கிரிமிலேயர் சான்றிதழ் சமர்ப்பித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகையைப் பெற்றுள்ளார். ஐஏஎஸ் தேர்வில் 800வது ரேங்க் பெற்ற அவர், மாற்றுத்திறனாளி என போலி மருத்துவச் சான்றிதழ் தந்துள்ளார். பலமுறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியும் பூஜாவால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் பல குறுக்கு வழிகளைத் தேட முயன்ற அவர், ஒருகட்டத்தில் தனது அடையாளத்தையும், பெயரையும், அப்பா, அம்மா பெயரையும் மாற்றி, போலிக் போட்டோ, போலி கையெழுத்து, போலி இமெயில் ஐடி, போலி மொபைல் நம்பர், போலி முகவரி என பலப் போலிகளை கொடுத்துதான் ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கிறார்.
யுபிஎஸ்சியில் உயர் பதவியில் இருப்பவர்கள் துணை இல்லாமல் இவ்வளவு மோசடிகளையும் ஒருவரால் நிச்சயம் செய்ய முடியாது. அதே சமயம் பூஜா மட்டுமே மோசடி செய்த முதல் ஆளாக இருக்கவும் முடியாது. இவரைப் போல் இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் மோசடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகத் தேர்வாகி இருக்கலாம் என்பதால் இதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்திலும் மனுக்கள் தொடரப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல இதற்கு முன்பாக கடந்த 2020இல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆன விதமும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வரும் அஞ்சலி பிர்லா, மாடலிங் துறையில் இருந்தவர். திடீரென கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகி விட்டார்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் 3 நிலைகளைத் தாண்டித்தான் தேர்ச்சியடைய முடியும். முதலில் முதல்நிலை தேர்விலும், இரண்டாவதாக முதன்மைத் தேர்வுகளிலும் தேர்ச்சி அடைய வேண்டும். அதன்பிறகு நேர்காணலிலும் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
இந்த 3 படிநிலைகளைத் தாண்டினால் தான் இறுதியாக பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரால் நேரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிகளில் அமர முடியும். இப்படிக் கடினமான தேர்வில், ஒருசிலர்தான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுகிறார்கள். ஆனால், பலர் 2, 3, 4வது முயற்சிகளில்தான் வெற்றி பெறுகிறார்கள். இன்னும் பலரோ, தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் தவிக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் ஓம்பிர்லாவின் மகள் மாடலிங் துறையில் இருந்து விட்டு திடீரென ஒரே முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது தான் சந்தேகத்திற்குக் காரணம். தற்போது இந்த விவகாரத்திலும் பெரும் மோசடி நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
எனவே நீட் போல யுபிஎஸ்சி தேர்விலும் பணம் படைத்தவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆதாயம் அடைகிறார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுதோறும் யுபிஎஸ்சி கனவுடன் நடுத்தர, ஏழ்மை நிலையில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் இரவு பகலாக படித்து தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவியைக் குறுக்கு வழியில் சிலர் தட்டிச் செல்கின்றனர். அதுபோன்றவர்களுக்கு மனோஜ் சோனி போன்ற நபர்கள் மூலமாக ஒன்றிய அரசே துணை நிற்பதுதான் வேதனையின் உச்ச கட்டம். தனக்கு வேண்டிய நபர்களை முக்கிய பொறுப்புகளில் நியமித்து ஒன்றிய அரசே ஊழல்களுக்கு வழிவகுக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதாக குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுபோன்ற ஊழல்கள், மோசடிகள் அம்பலாகி வருவதால் முன்கூட்டியே மனோஜ் சோனியைக் காப்பாற்ற ஒன்றிய அரசே இந்த ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.
- விடுதலை இராசேந்திரன்