இந்துக் கலாசாரத்திற்கு எதிராக, அநாகரிகமாகக் காதலர்கள் காதல் தினத்தைக் கொண்டாடக் கூடாது என்று, பஜ்ரங்தள், இந்து முன்னணியினர் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள் அண்மைக் காதலர் தினத்தை ஒட்டி.

எந்த ஒரு கலாசாரத்திற்கு எதிரானதோ, அநாகரிகமானதோ அல்ல காதல்.

உலகம் தழுவிய காதலைப் புறக்கணிக்கும் இந்துத்துவவாதிகளுக்கு "ஆபாசம்'' தான் உயர்ந்த கலாசாரமாகவும், நாகரிகமாகவும் இருக்கிறது போலும்.

கடந்த 7ஆம் தேதி பா.ஜ.க. ஆளும் கர்நாடகச் சட்டப்பேரவையில் கொண்டு வரப் பட்ட ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசிக் கொண்டு இருக்கும் போது, அங்கே மூன்று அமைச் சர்களின் கவன ஈர்ப்பும், கைபேசியை ஓடவிட்டு காமாந்தக ஆபாசப் படங்களைப் பார்ப்பதில் இருந்தது என்பதை ஊடகங்கள் அம்பலப் படுத்தின.

கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவேதி தன் கைபேசியில் ஆபாசப் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது, அவருக்குத் துணையாக, பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி. பாட்டீலும் அதே வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

குட்டு அம்பலமானதும், இந்த ஆபாசப் படத்தைத் தமக்கு, குறுஞ்செய்தி மூலம் அனுப்பி யவர் முன்னாள் அமைச்சர் கிருஷ்ண பாளேமர் என்று இந்த அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள்.

"ஓர் அமைச்சருக்கு வந்த வீடியோ குறுந் தகவல், மற்றொரு அமைச்சருக்குப் "பார்வர்டு' செய்யப்பட, அதை இரண்டு அமைச்சர்கள் பார்த்தார்கள் என்பதோடு, அவையில் பல எம்.எல்.ஏக்களுக்கும் இதே குறுந்தகவல் வந்ததாகவும், அவர்களும் பார்த்ததாகவும் அந்த நேரத்தில் அவைக்குள் இருந்தவர்களால் கூறப்படுகிறது'' - என்று "தினமணி' நாளிதழ் தலையங்கம் தரும் செய்தி, எவ்வளவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது!

இது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர் அணியில் இருந்த மோட்டம்மா, எம்.சி நானையா ஆகியோர் கருத்து தெரிவித்த போது, முதல்வர் சதானந்த கவுடா அதை மறுத்து, இந்தப் பிரச்சினை குறித்துப் பேரவை விசாரணைக் குழு அமைத்திருக்கிறது. ஆகவே பேரவை யில் விவாதிக்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

பேரவையின் மாண்புக்கு இழுக்கேற்படுத்திய ஒரு பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை யை அவையில் விவாதிக்கக் கூடாது என்பதில் என்ன நியாயம், நேர்மை இருக்க முடியும்! இது ஒரு புறம் இருக்க அந்த மூன்று அமைச்சர்களும் எப்படிப் பதவி விலகினார்கள் என்பதிலும் குழப்பம்.

லட்சுமணன் சவேதியும் கிருஷ்ண பாளேமரும் தங்களைப் பதவிவிலக யாரும் நிர்பந்திக்க வில்லை. தாங்களாகவே பதவி விலகி னோம் என்று கூறுகிறார்கள்.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தனஞ்செய்குமார், இம்மூன்று அமைச்சர்களைப் பதவி விலகக் கட்சி உத்தரவிட்டது என்கிறார்.

முதல்வர் சதானந்த கவுடாவோ அவர்கள் பதவி விலக அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறார். சந்தடி சாக்கில் "நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை...நாங்கள் பா.ஜ.க.வின் விசுவாசமான செயல்வீரர்கள்'' என்று அமைச்சர் சவேதியும் சொல்லிவிட்டார்.

கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த, வெயில் மழையில் கால்கடுக்க வரிசையில் நின்று மக்கள் வாக்களிக்க, அந்த வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்ற இவர்கள் -

மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதை விட்டுவிட்டு,
மக்கள் நலத்திட்டங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு,
மக்களின் பிரதிநிதிகளாக கடமையாற்றுவதை விட்டுவிட்டு,

பொறுப்புள்ள அமைச்சர்களாகச் செயல்படுவதைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, "காமரூப சரச சிருங்கார மும்மூர்த் திகளாக' பா.ஜ.க. அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் சல்லாபப் படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், இதுதான் இந்துக் கலாசாரமா? இதுதான் நாகரிகமா? காதலுக்கும் - காமத்துக்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியவில்லை இந்து கலாசாரவாதிகளுக்கு.

பா.ஜ.க.வின் இன்னொரு முகத்தையும் வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அம்பலப்படுத்தியுள்ளார்.

vakkil_250தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு கர்நாடகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதில் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அரசு தரப்பு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் மிக நேர்மையானவர் என்று கூறுகின்றனர். இந்தப் பொறுப்பில் இவரை 2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அமர்த்தியது.

இவரது வாதத்திறமை ஜெயலலிதா தரப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருவதால், மாநில பா.ஜ.க. அரசின் முதல்வர் சதானந்த கவுடா இவருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் என்பதை ஆச்சார்யாவே வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

"டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், "முதல்வர் சதானந்த கவுடாவும், சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமாரும் ஜெயலலிதா வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர். பா.ஜ.க.வின் மத்திய தலைமையிடத்திலிருந்தும், அழுத்தம் கொடுக்கப்பட்டது'' என்று கூறியுள்ளார் ஆச்சார்யா. இதன் காரணமாகவே அவருக்குக் கர்நாடக மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் (அட்வகேட் ஜெனரல்) பதவி வழங்கப்பட்டது. அவர்களே இரண்டாவது பதவியைக் கொடுத்து விட்டு, இரண்டில் ஒன்றை விட்டு விலகுமாறும் கூறினர். பெரிய பதவியான தலைமை வழக்கறிஞர் பதவியை வைத்துக் கொண்டு, ஜெயலலிதா வழக்கில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு வழக்கறிஞர் பதவியை அவர் விட்டுவிடுவார் என்று பா.ஜ.க. கருதியது. ஆனால் அவரோ, தலைமை வழக்கறிஞர் பதவியைத் தூக்கி எறிந்து விட்டார்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவைச் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து காப்பாற்ற, பா.ஜ.க. கட்சி குறுக்கு வழியைக் கையாண்டுள்ளது என்பதுதான். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட வசதியாகப் பா.ஜ.க. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக் கின்றார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர், ஊழலை ஒழிக்கவே அவதாரம் எடுத்து வந்துள்ள அன்னா அசாரேயின் முதுகுக்குப் பின்னால் இருந்து கொண்டு, ஊழலுக்கு எதிராகவும், ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு விட்டதாகவும் வீர வசனம் பேசிய பாரதிய ஜனதா கட்சி, இன்று வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த ஊழல் வழக்கில் இருந்து, அவரைக் காப்பாற்ற முயல்கிறது. இதுதான் ஊழல் ஒழிப்பு இந்துக் கலாசாரமா? நாகரீகமா?

ரெட்டி சகோதரர்களின் சுரங்க முறைகேடு, தன் உறவினர்களுக்கு வீட்டு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு ஆகியவற்றால் தன் முதல்வர் பதவியை இழந்தார் மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா.

பாரதிய ஜனதாக் கட்சியின் இந்துத்துவ கலாசாரமும், ஊழல் எதிர்ப்புவாதமும், இற்று இழிந்து தொங்கிக் கிடக்கின்றன என்பதற்குக் கர்நாடகமே சான்று !

Pin It