அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசவேண்டும். ஆமாம் எப்படியாவது பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் அது ஒன்றும் எளிதல்ல. எனவேதான் அப்படியான இக்கட்டான நேரங்களில் பலரும் பம்மிப் பதுங்கி பல்லிளித்து நாவொடுங்கி நமத்துப்போய்விடுகிறார்கள். ஆனால் எளிய மக்கள் மீதுள்ள அக்கறைகளினால் மட்டுமே உந்தப்பட்டு களமிறங்குகிறவர்கள் உண்மையைத் துணிந்து பேசிவிடுகிறார்கள்- அதன் விளைவுகளை அறிந்திருந்தும்கூட. செங்கடல் படத்தை முன்முடிவுகளற்று பார்க்கிற எவரொருவரும் இவ்வாறே விளங்கிக்கொள்வாரென நினைக்கிறேன்.
தான் பேசவந்தப் பொருளோடு தொடர்புபட்டுள்ள இந்திய மற்றும் இலங்கை அரசுகள், இவ்விரு நாடுகளின் கடற்படை மற்றும் காவல்துறை, வாய்ச்சவடால் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், மதம் என்று சகல அதிகார மையங்களையும் அம்பலப்படுத்திவிடுகிற இப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச்சான்று வழங்கப்படாதது இயல்பே. நெடும் போராட்டத்தினூடே ஒரு வெட்டுகூட இல்லாமல் தணிக்கைச்சான்று பெற்றுவிட்ட போதிலும் வெகுஜனத் திரையிடலுக்கு அனுமதி கிட்டாததும், அப்படியே ஒருவேளை கிடைத்தாலும் வெளியிட விநியோகஸ்தர்களோ திரையரங்குகளோ கிடைக்காமல் போவதிலும் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. எந்திரன், ஏழாம் அறிவு போன்ற பெருங்கேடுகளால் தனது நுரையீரலையும் இருதயத்தையும் அழுக விட்டிருக்கிற தமிழ்த்திரைத்துறை, செங்கடல் என்கிற - தலைப்பிலிருந்தே பிரச்னைகள் தொடங்கிவிடுகிற- ஒரு படத்தை வெளியிடுவதற்கான துணிச்சலை திடுமெனப் பெற்றுவிடாது.
இது ஒரு கதையா என்று நினைப்பு வரும் தருணத்தில் இடைமறித்து- இல்லை நீ வாழும் காலத்தில் உன் கண்முன்னே நடந்து கொண்டிருப்பவை என்று செவிட்டிலறைந்தாற் போல சொல்லிவிடுகிற உண்மைச்சம்பவங்களும் ஆவணங்களும் இடம் பெறுவதும், இந்தப்பாடுகளிலிருந்து விடுபட்டு சாந்தமாய் வாழ்ந்துவிடும் மனிதப் பெருங்கனவு மணிமேகலை, சூரி, சித்தார்த் என்கிற ஆமை போன்றவற்றினூடாக குறியீட்டுத்தன்மை கொண்டதொரு புனைவாகி இழைவதுமான படமாக்கல் முறை, படம் பேசும் அரசியலுக்கு நம்பகத்தன்மையை வழங்குகிறது. ராமேஸ்வரம் மீனவர்களும் ஈழ அகதிகளுமே கதாபாத்திரங்களாக பங்கேற்பதும் அவர்கள் சினிமாவுக்கான தரப்படுத்தப்பட்ட மொக்கை மொழியில் அல்லாமல் தத்தமது மொழியிலேயே அதன் வீரியத்தோடு பேசுவதனாலும் படத்தின் இயல்புத்தன்மை கூடுகின்றது.
***
‘டெய்லி பொண்டாட்டி புள்ளைய பாக்குறமோ இல்லையோ, பொணத்தைப் பார்க்கிறோம்’ என்று போலிஸ்காரர்களும், ‘மீன் பிடிச்சக் காலம் போய் பொணம் பொதைக்கிற காலமா இல்லே ஆயிப்போச்சு’ என்று மீனவர்களும் சலித்துக் கொள்ளுமளவுக்கு சுட்டுத்தள்ளுவதும் வெட்டிக் கொல்வதுமாக 422 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நரவேட்டையாடியிருக்க, சடலக்கூராய்வு செய்து மரண சர்டிபிகேட் வழங்கும் பொறுப்பை இந்திய தமிழக அரசுகள் ஏற்றிருக்கின்றன. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் 5 மீனவர்கள் இலங்கையின் சிறையில் கடந்த ஒருமாத காலமாக அடைபட்டுக் கிடப்பதாகவும் அவர்களுக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக வெளித் தெரிந்து வெறும் எண்களாக சிறுமைப்படுத்தப்பட்ட இந்தப் படுகொலைகளுக்கும் கைதுகளுக்கும் சிறை வைத்தலுக்கும் ஆளாகியுள்ள மக்களின் பாடுகளைப் பேசுவது என்கிற ஒற்றைப்புள்ளியிலிருந்து அதற்கான காரணங்களையும் தொடர்புடைய பிற விசயங்களையும் பேசத் தொடங்குகிறது படம். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் மீனவக்குடிகளின் துயரங்களை ஆவணப்படமாக்கச் செல்லும் மணிமேகலையிடமிருந்து பறிக்கப்படுகிற ஒளிப்பதிவு நாடாக்களை ஓடவிட்டுப் பார்க்கிற மாவட்ட காவல் கண்காணிப்பாளரோடு சேர்த்து நாமும் மீதிப்படத்தை படத்துள் படமாகப் பார்க்கிறோம்.
***
எரிபொருளும் ஆயுதமும் கடத்திவந்து விடுதலைப்புலிகளுக்கு தருவதற்காக ஒருசில மீனவர்கள் எல்லைத் தாண்டியிருக்கலாம். ஆனால் அதற்குரிய தண்டனை கொலையா என்ன? ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் மே 2009ல் புலிகள் அழிக்கப்பட்டு- ஆயுதமோ எரிபொருளோ கடத்துவதற்கான தேவையே இல்லாத நிலையில் இப்போதும் ஏன் கண்ணில்படுகிற தமிழக மீனவர்களையெல்லாம் கொல்கிறது இலங்கை கடற்படை? நிராயுதபாணிகளான மீனவர்களை கடற் பரப்பில் மறித்து நிர்வாணமாக்கி, பச்சைமீனை தின்ன வைத்து, சிறுநீரை குடிக்க வைத்து, சித்திரவதை செய்து குற்றுயிரும் குலையுயிருமாக துரத்தியடிப்பதை அவர்கள் எதன் பேரால் நியாயப்படுத்திவிட முடியும்? முப்பதாண்டுகளாக இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்கப் பழகிய சிங்கள வெறியூறிய ராணுவமனம் அங்கு போர் முடிவுக்கு வந்த நிலையில் இப்போது தமிழக மீனவர்களைக் கொன்று தனது வெறியை தணித்துக்கொள்கிறதா? கொலைகார இலங்கையை அதட்டி தனது மக்களது உயிரைப் பாதுகாக்க இந்திய அரசாங்கம் ஏன் முன்வர மறுக்கிறது? இந்திய அரசாங்கத்திற்கு அப்படியொரு நெருக்கடியை உருவாக்க தமிழ்நாட்டின் வீராவேசக் கட்சிகள் ஏன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்பதான கேள்விகளை பார்வையாளரிடம் தன்னியல்பில் உருவாக்கிச் செல்கிறது செங்கடல்.
இலங்கை ஆட்சியாளர்களின் இனவெறிக்குத் தப்பி ஐரோப்பாவுக்கும் கனடாவுக்கும் பறந்தோட கதியற்ற தமிழர்கள் தமிழ்நாட்டிலிருக்கிற அகதி முகாம்களில்தான் அடைக்கலம் புக வேண்டியிருக்கிறது. தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரிலும் புதுச்சேரியிலும் ஒரு லிட்டர் பாலை 50 ரூபாய்க்கு விற்கிறவர்களைப் போன்ற ‘பச்சைத்தமிழர்’கள் இலங்கையிலும் இருப்பார்கள் தானே? அவர்கள், உயிர் பிழைத்தால் போதுமென ஓடிவரும் தமிழரிடம் ‘குழந்தைக்குக்கூட பத்தாயிரண்டு வாங்கிட்டு’ கள்ளத்தோணியில் ஏற்றி இந்தியக் கடற்பரப்பின் ஏதாவதொரு மணற்திட்டில் வீசிவிட்டுப் போய்விட, இரக்கமனமுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள்தான் தமது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள். இதில் வேறெந்த ஆதாயத்தை விடவும் சகமனிதர்கள் மீதான பரிவே பிரதானமாக தொழிற்படுகிறது என்பதற்கான உதாரணம்தான் அரிச்சல் முனையில் வந்திறங்கும் குடும்பத்தாருக்கு மீனவர் மாணிக்கம் தூக்குவாளியிலிருக்கும் தனது கஞ்சியைக் கொடுப்பது.
‘காத்த சுவாசிக்கப் போனா கந்தக நாத்தம், நீரெல்லாம் நெருப்பா ஓடுது, நிலத்துலகூட கண்ணிவெடி... அங்க எப்படிய்யா இருக்கிறது? இயலாமத்தான் இங்க ஓடிவந்தமய்யா...’ என்று கதறிக்கொண்டு இலங்கை எல்லையிலிருந்து தப்பி தனுஷ்கோடிக்கு வந்துவிட்டதைத் தவிர அந்த வறிய தமிழர்களுக்கு இங்கு வேறேந்த ஆறுதலுமில்லை. ‘இந்திய அரசாங்கம் உங்கள நல்லாப் பாத்துக்குமா?’ என்ற கேள்விக்கு கொன்றாதுன்னு நம்புறோம் என்று பதிலளிக்கிறார் ஒரு அகதி. ஆமாம், கொல்லப்படவில்லையே தவிர மனித மாண்புகளுக்கு சற்றும் பொருந்தாத வகையில்தான் இந்திய/ தமிழக மண்ணில் நடத்தப்படுகின்றனர். ஆண் பெண் அனைவரையும் காவல் நிலையத்தில் நிர்வாணமாக்கிச் சோதனையிடுவது, ‘முட்டி பலமாக காய்ச்சியிருந்தாலே புலிகள்தான்’ என்று சந்தேகத்தில் சிறையிலடைப்பது, ஆபாசமாகத் திட்டுவது, முகாமை விட்டு வெளியே வந்து உலவினாலே பிடித்துவைத்துக்கொண்டு லஞ்சத்திற்கு விடுவிப்பது என்று கண்கொண்டு காணவியலாக் கொடுமைகள் நிகழ்வதை செங்கடல் சமரசமின்றி அம்பலப்படுத்துகிறது. ஏழேழு பிறப்பெடுத்தும் ஈழத்தமிழர்க்காகவே பேராடுவதாக கர்ஜிக்கிற மைக் முழுங்கிகளில் ஒருவரும் இந்த ஏழை அகதிகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பிஸ்கட் இல்லாதவர்களிடம் குழைய வேண்டியதில்லை என்பதை தெரிந்துவைத்திருக்கிற நாய்கள் வாலை வேறு மாதிரியாக ஆட்டுவது உலகியல் வழக்குதானே. அகதிகள் மனிதர்களாக நடத்தப்படுவதை உறுதி செய்வதில் மனித உரிமை அமைப்புகளோ வேறு மக்கள் இயக்கங்களோ அக்கறை காட்டாததால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் ரோஸ்மேரி போன்றவர்கள் தமது மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் சுருங்கிவிடவே நேரும் என்பதை படம் ஒரு எச்சரிக்கை போல உணர்த்துகிறது.
‘பகலையில் நேவிக்காரங்கள் வர்றாங்கள், எந்த வட்டுல குமரிபுள்ளைக இருக்குன்னு பார்த்துட்டுப் போறாங்கள்...ராவுல வர்றாங்கல்... சத்தமும் போட இயலாது, கூக்குரகூரலும் போட இயலாது..காசு வாங்காத வேசிகள் மாதிரி கண்ணைப் பொத்திக்கொண்டு காதை மூடிக்கொண்டு பாயில படுத்துக்கிடக்க வேண்டியதுதான்... கற்பத்தடை மாத்திரைகூட கடையில் சரியான தட்டுப்பாடு... ’, ‘இளங்காளைப் பயலுகளயெல்லாம் கொல்றாங்க...’ என்று அகதிகளாக வந்திறங்குகிறவர்கள் போலிஸ் விசாரணையின் போது தெரிவிக்கும் தகவல்களிலிருந்து இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்புணர்வுகளையும் தாக்குதல்களையும் கொலைகளையும் சொத்தழிப்புகளையும் அதன் தீவிரத்தோடேயே பார்வையாளர்களால் உணர்ந்துவிட முடிகிறது. ‘இலங்கை அரசாங்கம் ரசாயன குண்டு வச்சிருக்குன்னு நீங்க நம்பறீங்களா?’. ஒரு அகதியின் பதில்- நீங்க கொடுத்திருந்தா அவங்க வச்சிருப்பாங்க...’ இலங்கை ஆட்சியாளர்களின் இப்படியான அட்டூழியங்களுக்கு இந்திய அரசும் துணையாக இருந்ததை அம்பலப்படுத்த இந்த ஒரு காட்சி போதுமானதாக இருக்கிறது.
சர்வதேச நீதிமன்றங்கள் இலங்கை ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்குமோ மாட்டாதோ, ஆனால் மக்கள் மன்றத்தில் நிரூபிப்பதற்கான ஆவணமாக செங்கடல் உருவாகியுள்ளது. இறுதிக்கட்டத்தில் நடந்தது யுத்தமா படுகொலையா என்கிற கேள்வியை எழுப்பும் படம், அது படுகொலைதான் என்று நிறுவுவதற்கான பலத்துடன் இருக்கிறது. இவையெல்லாவற்றையும் புறந்தள்ளி இழிவுபடுத்துவார்கள் என்று தெரிந்திருந்தும்கூட புலிகளின் மீதான விமர்சனத்தையும் செங்கடல் முன்வைக்கத் தயங்கவில்லை. இலங்கை கடற்படையை எதிர்த்துப்போராட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும் என்று தொடங்குகிற படம் அரசாங்கத்திடமிருந்தும் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்கிற கனவை வெளிப்படுத்துவதில் முனைப்பு கொள்கிறது. மனிதகுலத்தின் இந்தப் பெருங்கனவை திரைப்படுத்துவதற்காக லீனா மணிமேகலை- ஷோபாசக்தி- ஜானகி சிவகுமார் குழுவினர் மேற்கொண்ட அயரா முயற்சியினால் இன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் செங்கடல் திரையிடப்படுகிறது. மதிப்புமிக்க பல விருதுகளைப் பெற்றுக்கொண்டும் வருகிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகளின் பிரச்னைகள் சர்வதேச அரங்குகளில் விவாதப்பொருளாய் மாறுவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படத்தை வெகுமக்கள் மத்தியிலே திரையிடுவதற்கான சாத்தியங்களை கண்டறிவதானது, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட யாவரது கடமையாகவும் இருக்கிறது.