நூல் மதிப்புரை
எஸ்.ஏ.பெருமாள் எழுதிய காலமெனும் பெருநதி
-சோலை, மூத்த பத்திரிகையாளர்

தோழர் ஜீவா கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குக் கிடைத்த காலபெட்டகம். அவர் எழுத்தாளர்-பேச்சாளர்-கவிஞர்-இலட்சியவாதி-போராளி-ஒரு பொதுவுடைமை வாதிக்குரிய எளிமையோடு வாழ்ந்தவர். இனிய பண்பாளர். அவர் அடியெடுத்து வைத்த துறைகளிலெல்லாம் சிகரம் தொட்டவர்.

அந்த வரிசையில் நமது காலத்தில் நமக்குக் கிடைத்த கருத்துப் பெட்டகம் தான் சத்திர ரெட்டியபட்டி சங்கரப்பன் எஸ்.ஏ.பெருமாள். அவர் கம்யூனிச இயக்கத்தில் காலடி எடுத்து வைத்த நாள் முதலாய் அறிவோம். அவரது படைப்புகள் அனைத்தும் ஆராய்ச்சியில் பிறந்தவைகள்தான். அவைகளில் 101 கட்டுரைக்களைத் தொகுத்து சித்திரைப் பதிப்பகத்தார் "காலமெனும் பெருநதி" யை தமிழகத்திற்குப் படைத்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய முயற்சி.

அரசியல் விமர்சனங்கள் -அறிஞர் பெருமக்களின் வரலாறுகள் - மார்க்சியத்தின் சிறப்புக்கள் ஆகிய பலப்பல கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதே சமயத்தில் தமிழால் நம்மை தாலாட்டுகின்ற படைப்புக்களும், கண்ணகிக்கு ஏன் சீற்றம் பிறந்தது, தீபாவளிக்குள் புகுந்த புராணம், கண்ணன் எப்படிக் கடவுளானான். வள்ளலாரின் மறுமலர்ச்சி, சிங்களத்து ராமாயண சீதை என்பன போன்ற இலக்கியவழி ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூலை அலங்கரிக்கின்றன. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவெனில் இந்தப் படைப்புகளெயெல்லாம் மார்க்சியக் கண்ணோட்டத்தில் மலர்ந்தவைகளாகும்.

அமெரிக்கா என்றும் இந்தியாவின் எதிரிதான்-இந்தியவைப் பிடித்த லண்டன் ரவுடி-கலாச்சார ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் என்பன போன்ற கட்டுரை களில் எஸ்.ஏ.பெருமாளின் சர்வதேசக் கண்ணோட்டம் பளிச்சிடுகிறது.
அரசியல் சிந்தனையாளர்களுக்கான எழுத்தோவியர்கள் - சமூக வரலாறு மீது ஆர்வம் கொண்டவர்களுக்கான படைப்புகள் பெண் உரிமை, விடுதலைக்காகப் போராடுபவர்களுக்கான கட்டுரைகள் என்று அனைத்துத் தரப்பினரின் ஆவலை நிறைவு செய்யும் முறையில் இந்தப் படைப்பு அமைந்திருந்திருக்கிறது. பொதுவுடைமை இயக்க ஆரம்பகால மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இந்தப் படைப்பு ஓர் கையேடு. வழிகாட்டி என்று கூடச் சொல்லலாம்.

சீனத்து இலக்கியப் பெரும் சுவர் மாவோ, நிகரற்ற புரட்சியாளன் சேகுவேரா என்று உலகத்து செம்மலர்களின் சிறப்புகளையெல்லாம் தோழர் பெருமாள் எளிய இனிய நடையில் படைத்திருக்கிறார். அதே சமயத்தில் தமிழகம் தந்த தவப்புதல்வர் தோழர் ஆர்.ஜீவா முதல் நெருடா நெருட, வரை என்று இந்த மண்ணில் கம்யூனிச இயக்கத்தை வேர்விடச் செய்த தமிழகத் தலைவர்களையும் மறக்காமல் நினைவுபடுத்தியிருக்கிறார்.

பெரியார் சகாப்தம் தொடருகிறது என்கிறார் தோழர் பெருமாள். நியாயம் தானே?

கட்சிப் பணிக்காக அவர் ஓடிக் கொண்டேயிருக்கிறார். அவருடைய ஓட்டத்தோடு அவருடைய சிந்தனையும் ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஆமாம்... சமுதாயச் சிந்தனைகள் அவருடைய ஓட்டத்தோடு போட்டிபோடுகின்றன. அதன் விளைவாக அவர் அற்புதமான படைப்புகளைப் படைக்கிறார். அத்தகைய அவருடைய படைப்புகளை தொடர்ந்து சித்திரைப் பதிப்பகம் வழங்கவேண்டும். அது தமிழகத்திற்கம் பொதுவுடைமை இயக்கத்திற்கும் செய்த தொண்டாக இருக்கும். நூலகங்களுக்குப் பெருமை சேர்க்கும் படைப்பு.

அன்புடன்
சோலை

வெளியீடு:
சித்திரைப் பதிப்பகம்
26/62, துர்க்கா இல்லம்
6, பாலாஜி தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை -600015
விலை ரூ.300.

Pin It