ஊராட்சித் தவைர்களாக ‘தலித்’ பஞ்சாத்துகளில் தேர்வு செய்யப்பட்டவர்களை ஜாதி வெறியர்கள் தேசியக் கொடியை ஏற்ற அனுமதிப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண் டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இது குறித்து களஆய்வு நடத்தி, அரசிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தது.

‘தலித்’ பஞ்சாயத்துத் தலைவர்கள் மீது திணிக்கப்படும் 40க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் குறித்து விரிவாக அந்த அறிக்கை பட்டியலிட்டுக் காட்டியது. கடந்த ஆண்டு 20 தலித் பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளூர் ஜாதி வெறியர்களால் குடியரசு - சுதந்திர நாளில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து தமிழக அரசு தலைமைச் செயலாளர், சுதந்திர நாள் அன்று தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதினார். கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களே கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் கிராம பஞ்சாயத்துக்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கொடி ஏற்றும் விழாவுக்கு நேரில் சென்றார். அவரது கண் முன்னிலையில் தலித் பெண் பஞ்சாயத்துத் தலைவர் அமிர்தம் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டிலிருந்து அந்த தலித் பஞ்சாயத்துத் தலைவருக்கு கொடி ஏற்றும் உரிமையை உள்ளூர் ஜாதி வெறியர்கள் தடுத்து வந்துள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்துக் கூட்டங்களைப் புறக்கணித்த தோடு பெண் தலித் தலைவர் செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்து வந்துள்ளனர். தலைமைச் செயலாளர், பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்துள்ளார். செயலாளர் இல்லாமல் பஞ்சாயத்து இருப்பதை அறிந்து புதிய செயலாளரை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். பணிகள் தடையின்றி செயல்பட கண்காணிப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்தகால அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இது பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத ஆட்சியாகவே இருந்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடி சமூகத்தைச் சார்ந்த பெண் எளிதாக வந்துவிட முடியும். ஆனால், உள்ளூர் பஞ்சாயத்தில் ஒரு தலித் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும் செயல்பட முடியாது என்பது தான் இந்திய சுதந்திரத்தின் நிலை.

தமிழ்நாட்டிலே இதற்கான விழிப்புணர்வு இயக்கங்கள் செயல்படுவதால் பிரச்சினை வெளிச்சத்துக்கு வருகிறது. வட மாநிலங்களில் ஜாதியக் கட்டமைப்பு அப்படியே ‘கெட்டி தட்டிப்’ போய் குன்றாக நிற்கிறது. தீண்டாமைக் கொடுமைகள் அம்மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் தொலைக் காட்சிகளிலும் ஏடுகளிலும் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்குள் அதிகாரங்களைக் கைப்பற்றுவதிலும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் ‘ஜாதிய அணி திரட்டலே’ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியக் கருத்தியலை இடைநிலை ஜாதிகள் ஓரளவு வளர்ச்சியடைந்த பிறகு அதைத் தங்களது கருத்தியலாக ஏற்றுக் கொண்டு தங்களுக்குக் கீழே ஜாதியப் படி நிலையில் புறந்தள்ளப்பட்ட மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்து கிறார்கள். பார்ப்பனிய இயங்குதளம் ஜனநாயகத்தை ஜாதி நாயகமாக்கி தனது இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறது. ஜாதியத்தை மதத்தோடு பிணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் பா.ஜ.க. மாவட்ட ரீதியாக ஜாதிய அணி திரட்டலை திட்டமிட்டு நகர்த்தி வருகிறது.

இதில் பாதிக்கப்படுவது ஒடுக்கப்பட்ட தலித் மக்களும், எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையாக அடையாளமிழந்து கிடக்கும் ஜாதிக் குழுக்களும், அனைத்து ஜாதிகளைச் சார்ந்த பெண்களும் தான். ஜாதியத்தை இறுக்கமாக்கும் குடும்ப அமைப்புக்குள் சிக்கி மூச்சுத் திணறும் பெண்கள் சுயமாக முடிவெடுக்க முடியாதவர்களாக ஜாதியத்துக்கு பணிந்து போக வேண்டியவர்களாக கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். ஆணவப் படுகொலைக்கு உள்ளா கிறார்கள்.

ஜாதியக் கட்டமைப்புகளின் இறுக்கத்தை பலவீனப்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. ஒவ்வொரு ஜாதிக் குழுவிலிருந்தும் சொந்த ஜாதிக் கட்டமைப்புக்கு எதிரான குரல்கள் வலுவாக எழும்போதுதான் அது சாத்தியப்படும். இதில் பெண்களுக்கு முக்கிய வரலாற்றுப் பாத்திரம் இருக்கிறது. அடிமைத்தனத்தை ஏற்க மறுக்கும் படித்த பெண்கள், ஜாதி எதிர்ப்புக் களத்தின் முன்னணிப் படையாக உருவெடுக்கும் சமூக அரசியல் சூழலை சமூக இயக்கங்கள் உருவாக்கி அதில் புறந்தள்ளப்பட்ட ஜாதிக் குழுக்கள் மதச் சார்பற்ற முற்போக்கு சக்திகளை இணைத்து ஜாதி எதிர்ப்புக் களம் ஒன்றை கட்டமைக்க வேண்டும்; கருத்தியலை வழங்கும் பார்ப்பனர்களின் ‘வர்ணாஸ்ரம’ நிறுவனங்களை அம்பலப்படுத்துவதோடு, சுயஜாதி எதிர்ப்பையும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவை!

- விடுதலை இராசேந்திரன்

Pin It