இராமராஜ்ஜிய கனவோடு மதவெறியை திணித்து வரும் இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவின் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக பரப்பும் அவதூறுகள், நிகழ்த்தும் வன்முறைகள் அளவற்றது. அதில் ஒன்றுதான் முகலாய மன்னர்கள் காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, இந்துக்கள் கொல்லப்பட்டு ரத்த ஆறு ஓடியதைப் போல பரப்பப்படும் அவதூறு. அதற்கு மாறாக, வேதகால ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாகவும், அந்த பண்பாடு, கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டுமென்றும் பேசி வருகிறார்கள். இரண்டிலும் உள்ள உண்மை என்பது குறித்து ‘ஃபிரன்ட்லைன்’ இதழில் சாம்சுல் இஸ்லாம் என்பவர் எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம் இதோ....

mughal kingsஆர்.எஸ்.எஸ். பிரமுகரான ததாகதா ராய், உள்நாட்டுப் போர் இல்லாமல் இந்து- முஸ்லிம் பிரச்னை முடிவுக்கு வராது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இவர் 2015 முதல் 2018 திரிபுரா ஆளுநராகவும், 2018 முதல் 2020 வரை மேகாலயா ஆளுநராகவும் பதவி வகித்தவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுள் ஒருவரான சியாம பிரசாத் முகர்ஜியின் கருத்தைத்தான் தான் கூறியிருப்பதாகவும் விளக்கமும் கொடுத்தார். 1925ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உருவாக்கப் பட்டதில் இருந்தே அந்த இயக்கத்தின் முக்கிய கருப் பொருளாகவும் இது இருந்து வருகிறது. இந்தியா என்றால் அது ராமர் குழந்தைகளின் தேசம், இங்கு பாபரின் குழந்தைகளுக்கு இடம் கிடையாது என்பது மட்டுமல்ல, பாபரின் குழந்தைகள் முறைகேடாய் பிறந்தவர்கள் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்து.

வரலாற்றில் இஸ்லாமியர்களின் ஆட்சிக் காலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பழிவாங்க வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் வழிவந்த இந்துத்துவ இயக்கங்கள் பலவும் கூறி வருகின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றில் இஸ்லாமியர்களின் ஆட்சிக்காலம் என்பது ஏறத்தாழ 400 முதல் 500 ஆண்டுகள். இந்துத்துவ இயக்கங்களின் பரப்புரைகளின் பின்னால் உள்ள உண்மையை அறிந்து கொள்ள இஸ்லாமியர்கள் ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் உயர் ஜாதி இந்துக்களுடன் நட்புறவும், திருமண உறவும்கூட வைத்திருந்ததாகத்தான் வரலாறுகள் விவரிக்கின்றன. அதற்காக ஏன் இன்றைய இஸ்லாமியர்கள் பழிவாங்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதேசமயத்தில் இந்து வரலாறு என்பது மத, சமூக, அரசியல் துன்புறுத்தல்கள் இல்லாததா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவர்களின் சாம்ராஜ்யங்களை நடத்த அன்றைக்கு உயர்ஜாதி இந்துக்களும் உதவினர் என்பதை, இப்போது முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என முழங்கும் இந்துத்துவ வெறியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அக்பருக்கு பிறகு வேறு எந்த முகலாய பேரரசரும் இஸ்லாமிய தாய்க்கு பிறக்கவில்லை என்பதில் இருந்தே முகலாயர்களுக்கும் ஜாதி இந்துக்களுக்கும் இடையில் இருந்த இணக்கமான உறவைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல உயர் ஜாதி இந்துக்கள் ‘முஸ்லிம்’ ஆட்சியாளர்களுக்கு உண்மையாக சேவை புரிந்தனர். முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் இந்தியாவைக் கைப்பற்ற சில இந்து மன்னர்களையும்தான் அழைத்து வந்தார், அதில் உயர்ஜாதி இந்துக்களும் இருந்தனர்.

முகலாய அரசுகளில் இந்து அதிகாரிகள்

இந்திய தேசியவாதத்திற்கு இந்து அடித்தளத்தை வழங்கியவர்களில் மிக முக்கியமானவர் அரபிந்தோ கோஷ். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களுக்கு பொறுப்பு, பதவிகளை வழங்கியதாலும் இந்துக்களின் மூளையையும், பலத்தையும் பயன்படுத்திக் கொண்டதாலும் முகலாய ஆட்சி நூற்றாண்டுகளை கடந்தும் நீடித்ததாக அரபிந்தோ கோஷ் கூறுகிறார். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மேற்கு பஞ்சாப்பை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் நிலம் சார்ந்த உயர்ந்த உரிமைகள் அனைத்தும் இந்துக்களிடம் அளிக்கப்பட்டிருந்தன, அவற்றில் பெரும்பாலும் உயர் ஜாதி இந்துக்களான ராஜ புத்திரர்களிடம் இருந்தது என வரலாற்று ஆய்வாளர் தாரா சந்த் கூறுகிறார்.

1556 முதல் 1780 வரை (அக்பர் முதல் ஷா ஆலம் ஆட்சிக் காலம் வரை) முகலாயப் பேரரசில் அங்கம் வகித்த அதிகாரிகளின் விவரங்களை அறிய உதவும் அகராதி ’மாசிர் உல் உம்ரா’. ஷாநவாஸ் கான் மற்றும் அவரது மகன் அப்துல் ஹை ஆகியோரால் 1741 மற்றும் 1747-க்கு இடையில் தொகுக்கப்பட்ட இந்த அகராதி, முகலாயப் பேரரசில் அங்கம் வகித்த உயர்ஜாதி இந்துக்களை பற்றிய உண்மையான விவரங்களை தருகிறது. இன்றைய ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்புத்தனா, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிய புந்தேல்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் நூற்றுக்கணக்கான ராஜபுத்திரர்கள் முகலாய அரசில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி யுள்ளனர். ராஜபுத்திரர்களை அடுத்து பார்ப்பனர்கள் அதிக அளவில் உயர் அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் ’மாசிர் உல் உம்ரா’ அகராதியில் உள்ளன.

அவுரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களுக்கு எதிராக கொடுமைகளே நடக்கவில்லை என்பதை யாரும் மறுக்கவும் இல்லை, அது யாருடைய வாதமும் அல்ல. இஸ்லாமியர்களும் சேர்ந்தே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கடும் சோதனைகளை எதிர்கொண்டனர். அவுரங்கசீப்பின் தந்தை, சகோதரர்கள், ஷியாக்கள், இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்கள், கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் ஆட்சி புரிந்த இஸ்லாமிய குடும்பங்களும் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் மிகக் கொடூரமான அடக்குமுறைகளை சந்தித்தனர். துறவி சர்மாத்தை டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் வளாகத்தில் வைத்து அவுரங்கசீப் தூக்கிலிட்டார். அவரது சர்வாதிகார ஆட்சியில் இந்துக்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்கியதும் உண்மைதான். இருப்பினும் சமகாலத்தில் இந்து மற்றும் ஜைன மத வழிபாட்டுத் தலங்களை அவர் ஆதரித்திருப்பதற்கான ஆவணங்களும் கிடைக்கின்றன. டெல்லி செங்கோட்டையின் முக்கிய நுழை வாயில்களில் ஒன்றான லஹோரியில் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் உள்ள கவுரி சங்கர் கோயில் அதற்கு சிறந்த உதாரணம். இந்த கோயில் ஷாஜகான் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, அவுரங்கசீப் ஆட்சிக்காலத்திலும் அப்படியே தொடர்ந்தது. அவுரங்கசீப் செய்த குற்றங்களை இந்துக்களுக்கு எதிரானது என்றும் மற்றும் சுருக்குவது ஒட்டுமொத்த மனிதத்திற்கும் எதிரான குற்றத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டும் செயலாகவே உள்ளது.

குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் முகமது கஜினியால் இடிக்கப்பட்டது, சூறையாடப்பட்டது என்பதை எவராலும் மறுக்க இயலாது. ஆனால் இந்த சம்பவம் உள்ளூர் இந்துத் தலைவர்களின் உதவியுடனும், பங்கேற்புடனும் நடந்தது என்பது அதில் புதைந்திருக்கும் மற்றொரு உண்மை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு சித்தாந்தத்தை கொடுத்த கோல்வால்கரே இதனை கூறியிருக்கிறார். ”சோம்நாத் கோயிலில் கொள்ளையடிக்க முகமது கஜினி கைபர் போலன் கணவாயைக் கடந்து பாரதத்தில் கால் வைத்தார். ராஜஸ்தானின் மிகப்பெரிய பாலைவனத்தையும் கடந்து வந்தார். உணவு இல்லாமல், படைக்கு தண்ணீர் இல்லாமல் முகமது கஜினி அழிந்திருக்கக்கூடும். ஆனால், உள்ளூர் தலைவர்களை சவுராஷ்டிராவுக்கு எதிராக திருப்பும் யுக்திகளை முகமது கஜினி கையாண்டார். அற்பத்தனத்தாலும், முட்டாள் தனத்தாலும் உள்ளூர் தலைவர்கள் முகமது கஜினியை நம்பி, அவரோடு கைகோர்த்தனர். சோம்நாத் கோயிலை முகமது கஜினி சூறையாடியபோது, அவரது படையில் முன் நின்றவர்கள் நமது ரத்தத்தின் ரத்தங்கள், சதையின் சதைகள், ஆன்மாவின் ஆன்மாக்களான இந்துக்களே. இந்துக்களின் உதவியுடன் தான் சோம்நாத் கோயில் இழிவுபடுத்தப்பட்டது. இது வரலாற்றின் உண்மை” என ஆர்கனைசர் இதழில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி கோல்வால்கர் கூறியுள்ளார்.

இந்து மன்னர்கள் புனிதர்களா?

இந்து ஆலயங்களை இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் இழிவுபடுத்தவில்லை. புகழ்பெற்ற ஜெகன்னாத் கோயில் பழமையான புத்த ஆலயம் என்கிறார் விவேகானந்தர். “கோயிலை மட்டும் அல்ல, அங்கிருந்த புத்த மார்க்கத்தை சேர்ந்தவர்களையும் மீண்டும் இந்துவயப்படுத்தினோம். இதுபோல பல இடங்களில் நாம் செய்ய வேண்டும்” என விவேகானந்தர் கூறியிருக்கிறார். (The Complete Works of Swami Vivekananda நூலின் மூன்றாவது தொகுதியில் பக்கம் எண் 264-இல் அதற்கான ஆதாரம் உள்ளது.)

ஆரிய சமாஜை தோற்றுவித்தவர் தயனாந்த சரஸ்வதி. ஜைனத்தை மறுத்து வேதத்தை பரப்புவதற்காக பத்தாண்டுகளுக்கு மேல் தயானந்த சரஸ்வதி இந்தியா முழுவதும் பயணித்ததாக சத்யார்த் பிரகாஷ் என்பவர் எழுதியுள்ளார். மவுரிய வம்சத்தின் கடைசி பவுத்த மன்னராக அறியப்படுபவர் பிருஹத்ரதா. கி.மு. 184-இல் புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பனரால் பிருஹத்ரதா கொலை செய்யப்பட்டு, மவுரிய வம்சத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, சுங்க ஆட்சி நிறுவப்பட்டது.

(தொடரும்)

சாம்சுல் இஸ்லாம்

Pin It