பார்ப்பனரல்லாத 24 பேர், உப அர்ச்சர்களாகிவிட்டார்கள் என்பதற்காகப் பார்ப்பன அர்ச்சகர்கள், ‘கோயிலுக்குள் உள்ள ‘பெருமாளை’ ஆவாஹனம் செய்து கோயிலிருந்து வெளியே எடுத்துக் கொண்டு வந்து விட்டோம்; கோயிலுக்குள் பெருமாள் இல்லை என்று ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லுங்கள்’ என்று பேசி வருகிறார்கள். இந்த ஆவாஹனம் 1939லேயே அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு இருக்கிறது.

மீனாட்சி ஆவாஹனம் செய்யப்பட்ட மங்கள நிவாசம் என்ன ஆனது?

1939இல் மதுரைக் கோயிலில் ஆலயப் பிரவேசம் நடந்த பிறகு சனாதனிகளும் கோயில் அர்ச்சகர்களும் பெரும் கொந்தளிப்புடன் அதை எதிர்கொண்டார்கள். இப்போதைப் போலவே, அப்போதும் மீனாட்சி கோயிலை விட்டு வெளியேறி விட்டதாக வர்ணாஸ்ரம ஸ்வராஜ்ய சங்கம் லா பாயிண்ட் நடேசய்யர் கூறினார்.

என்னென்ன பொய்ச் செய்திகளைப் பரப்புவது, வழக்குகளை எப்படித் தொடுப்பது, கோயிலில் பட்டியலினத்தவரும் நாடாரும் நுழைந்துவிட்ட நிலையில் அதை எப்படித் தடுப்பது என்பதெல்லாம் ஆலோசிக்க ஒரு இடம் தேவைப்பட்டது.

அந்த இடம் தானப்ப முதலி தெருவில் இருந்த மங்கள நிவாசம். அந்த பங்களாவில்தான் தினமும் கூடி சனாதனிகள் ஆலோசனை நடத்தினர். பிறகு ஒரு நாள், மீனாட்சியை அங்கே ஆவாஹனம் செய்துவிட்டனர். அதுதான் மீனாட்சி அம்மன் கோயில் என்று கூறி, வழிபாடுகளையும் நடத்தி வந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகுதான் ‘டபுள் ஆவாஹனம்’ நடத்தி மீனாட்சி தமிழ்ச் சங்கச் சாலையில் இருந்த ஓரிடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், எதுவும் நிலைக்கவில்லை. 1945இல் வழக்கில் தோற்ற பிறகு, அர்ச்சகர்கள் தங்கள் அதிகாரங்களை இழந்து கோயில் பணிக்குத் திரும்பினர்.

மங்கள நிவாசம் இப்பொதும் இருக்கிறது. அதில் இப்பொது ஒரு வயர் விற்கும் கடை இருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It