தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் நோக்கத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை யில் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் இத்தனை ஆண்டுகாலமாகச் செயல்பட்டுவந்த இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, `தேசிய மருத்துவ ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு செயல்படவிருக்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறை, தகுதியில்லாத மருத்துவர்கள், மருத்துவக் கல்வியில் குளறுபடிகள், ஊழல் நிறைந்த இந்திய மருத்துவ கவுன்சில்... இவையெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கூறும் காரணங்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை புதிய ஆணையம் சரிசெய்யுமா என்றால், ‘இல்லை’ என்றே கூற வேண்டும். எப்படி... வரிசையாகப் பார்க்கலாம்.

1) ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஆனால், இந்தியாவில் 1,600 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தப் பற்றாக்குறையைப் போக்க, தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது தேசிய மருத்துவ ஆணையம். அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதைவிட்டுவிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சிவப்புக்கம்பளம் விரிப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களை அதிகளவில் மருத்துவத் துறையில் புகுத்துவதற்கான உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

2) நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்கள், பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் படித்துவிட முடியும். ஆக, தகுதியற்ற மருத்துவர்களை அதிக அளவில் உருவாக்குவதற்கு இந்த ஆணையம் வழிவகுக்கிறது.

3) உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 85 சதவிகித இடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத் தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், தேசிய மருத்துவ ஆணையம், ‘50 சதவிகித இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே கட்டணம் நிர்ணயம் செய்துகொள்ளலாம்’ என்கிறது. இதனால், பணக்காரர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆக முடியும்.

4) தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். இதனால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டு, மாநில அரசின் சுகாதாரத் துறை உரிமைகள் பறிக்கப்படும். ஆணையத்தின் உறுப்பினர்களை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்காமல் மத்திய அரசுக்கு இணக்கமானவர்களை நியமிக்கும்போது மருத்துவத் துறை கார்ப்பரேட் பிடியில் அகப்படும். இதனால், சாமானியனுக்குக் கிடைக்க வேண்டிய சுகாதார சேவை வணிகமயமாக்கப்படும்.

5) மருத்துவ மாணவர்கள், எம்.பி.பி.எஸ் முடித்ததும் `எக்ஸிட்’ தேர்வு என்ற தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றால் மட்டுமே மருத்துவராகப் பணியாற்ற முடியும். முதுநிலை மருத்துவப் படிப்பில் நுழைவதற்கும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிறது ஆணையம். எம்.பி.பி.எஸ் படிப்பின் இறுதியாண்டில் தேர்ச்சிபெற்ற பிறகும் மேலும் ஒரு தேர்வை எழுதினால்தான் மருத்துவர் ஆக முடியும் என்பது மாணவர்களுக்குத் தேவையில்லாத சுமை. இது அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும். நோயாளிகளை வைத்து மருத்துவத்தைக் கற்றுக்கொள்ளாமல், பயிற்சி மையங்கள் மூலம் மருத்துவம் படிக்க, மாணவர்கள் முயற்சி செய்வார்கள். இது ‘ஏட்டுச்சுரைக்காய்’ மருத்துவர்களை உருவாக்கும்.

6) ‘சமூகநலப் பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு, சில ஆண்டுகள் பயிற்சியளித்து மருத்துவம் பார்க்க அனுமதியளிக்கப்படும்’ என்கிறது மருத்துவ ஆணையம். உயிர் காக்கும் மருத்துவ சேவையில் மருத்துவர் அல்லாதவரை மருத்துவம் பார்க்கவைப்பது ஆபத்தில் முடியும்.

இவையெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்தை மருத்துவர்கள் எதிர்ப்பதற்கான முக்கியக் காரணங்கள். மருத்துவத் துறையின் தரத்தை உயர்த்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, போலி மருத்துவர்களை நியமனம்செய்து புனிதமான மருத்துவத் துறையைக் கேலிக்கூத்தாக மாற்றவே வாய்ப்புகள் அதிகம்.

1934-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்திய மருத்துவ கவுன்சில். அதில் குளறுபடிகள், ஊழல் இருப்பதை மறுக்க முடியாது. குளறுபடிகளுக்குத் தீர்வு கண்டு, ஊழல்வாதிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். அதன் தலைமைப் பொறுப்புக்கும் பிற முக்கியப் பதவிகளுக்கும் ஊழல் கறை படியாதவர்களை நியமிக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சிலைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல், குற்றவாளிகளைச் சுதந்திரமாக உலாவவிட்டுவிட்டு, இப்போது அமைப்பையே மாற்றுவது ஏற்புடையதல்ல. தேசிய மருத்துவ ஆணையம் என்பது அரசியல் சாசனத்துக்கும், சமூகநீதிக்கும், மக்கள் நலனுக்கும் எதிரானது.

Pin It