சென்னை D.D தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ‘ஹிந்தி மாத’ கொண்டாட்டம் 18.10.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை மட்டும் தவிர்த்துவிட்டுப் பாடப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் ஆளுநரின் தொடர் தமிழர் விரோதப் போக்கினைக் கண்டிக்கும் விதமாகக் கழக சார்பில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்ற வரியைக் குறிப்பிட்டு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் கழக சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. அவை பின்வருமாறு:-சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக ஆளுநர் ரவிக்கு ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பும் ஆர்ப்பாட்டத்தை சென்னை மாவட்டக் கழக சார்பில் நடத்தப்பட்டது. மேலும் ஆளுநருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களைக் கழகத் தோழர்கள் எழுப்பினார்கள். எழுதப்பட்ட 1000 அஞ்சல் அட்டைகளையும் அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் உள்ள தபால் பெட்டியில் போடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, தமிழ்நாட்டின் ஜீவநாடியான சமூகநீதி - பெண் விடுதலை - பெரியார் - அண்ணா - காமராசர் - கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஆளுநர் ரவி, தற்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற திராவிடம் என்ற சொல்லைத் தவிர்த்துப் பாடியது ஆணவத்தின் உச்சம் என்று குறிப்பிட்டார். இந்நிலை மேலும் தொடர்ந்தால் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்தக்கூடும் என்றும் எச்சரித்தார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை - வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக இளைஞரணி - மாணவரணியினர் பங்கேற்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் திருப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்குத் திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில் ராசு தலைமை தாங்கினார். கழக சமூக வலைதளப் பொறுப்பாளர் பரிமளராசன் முன்னிலை வகித்தார், நிகழ்வில் மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்து மற்றும் தோழர்கள் கார்த்திக், நஜ்முநிஷா, சங்கவி, பெரியார் பிஞ்சு ஆதன், தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேனி: தமிழ்நாட்டின் சுயமரியாதையைச் சீண்டிய ஆளுநர் ரவிக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் பெரியகுளம் வடுகப்பட்டியில் நடைபெற்றது. இதற்குத் தேனி மாவட்ட அமைப்பாளர் தேனி இராயன் தலைமை தாங்கினார். சந்திரன், பெரியார் சிவா முன்னிலை வகித்தனர். பெண்கள் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தேனி தமிழரசி கண்டன முழக்கங்களை எழுப்பினார். தினேஷ், அம்பேத் பிரபா, அஸ்வின், கவினா, கவிநயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை: 21.10.2024 அன்று மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி, பழங்தமிழர் இயக்கம், மக்கள் சட்டஉரிமை இயக்கம், தமிழக மக்கள் கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி: 20.10.2024 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு யாழ் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை, வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களின் சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர்.
- பெ.மு. செய்தியாளர்