கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியுள்ளது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

சி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங் களிடமிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினி களுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டுள்ளது.

கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy Admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில் இருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினியில் தேர்வெழுத இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இக்கணினிகளில் தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

நீட் தேர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட கணினிகளில் இரகசிய மென்பொருட்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டவர்கள், தேர்வு முடிந்த உடனேயே அவற்றில் உள்ள ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துள்ளனர்.

சில மையங்களில் நேரடியாகவே இணைய இணைப்பு கொண்ட கணினியில் தேர்வை எழுத அனுமதிப்பதற்கு இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இலஞ்சம் கட்டிய மேட்டுக்குடி குலக் கொழுந்துகள், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடி எழுதியுள்ளனர். ஒரு சில மையங்களில் தேர்வு மைய நிர்வாகிகளே, கேள்விகளுக்கான விடைகளை துண்டுத் தாள்களில் எழுதி மாணவர்களிடம் கொடுத்துள்ளனர்.

நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட வுள்ளதாக அறிவிக்கபட்டபோதே, இது இன்னுமொரு “வியாபம்” ஊழலுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து சுட்டிக் காட்டப்பட்டது இப்போது நிரூபிக்கப் பட்டுள்ளது.

இந்த இலட்சணத்தில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வுகளில் தோல்வியடைந்ததற்கு தமிழகத்தின் கல்வித் தரம் பின் தங்கியுள்ளதே காரணம் என தமிழிசையும், ஆர்.எஸ்.எஸ். பொன்னாரும் கதை அளக்கிறார்கள்.

Pin It