370ஆவது பிரிவை சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் வேலை திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டது. காஷ்மீர் இணைப்பு ஆவணத்தின்படி தற்காப்பு, அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு குறித்த அம்சங்களில்தான் காஷ்மீருக்குப் பொருந் தும் வகையில் இந்தியப் பாராளுமன்றத் திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப் பட்டது.  அதற்கு மேல் மாநில அரசாங்கத் தின் (அதாவது மாநில சட்டமன்றத்தில்) ஒப்புதலுடன் பிற அம்சங்கள் குறித்து சட்டமியற்றுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட லாம் என்றும் அப்பிரிவில் கூறப்பட் டுள்ளது. குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், பிரதமர் நேருவுக்கு 1949 மே 18-ந் தேதியன்று குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார். “காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் முழுமையாக வடிவமைக் கப்பட்ட பிறகு இந்தப் பிரிவைப் பயன் படுத்தி மத்திய அரசு மற்றும் - காஷ்மீர் மாநில அரசு உறவுகளைப் பற்றி முதலும் கடைசியுமாக முடிவு செய்யலாம். ஆனால், 370ஆவது பிரிவு வழங்கியுள்ள அசாதா ரணமான அதிகாரங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கும் அதிகாரம் இல்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். (ஆதாம்: ஏ.ஜி. நூரணி, தி ஸ்டேட் ஸ்மன் 16.6.1992). ஆனால் இக்கருத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

காஷ்மீர் மாநிலம் குறித்து எந்தெந்த தலைப்புகள் தொடர்பாக இந்திய நாடாளு மன்றம் சட்டம் இயற்றலாம் என்பது குறித்த குடியரசுத் தலைவரின் முதல் உத்தரவு 1954ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. (ஜம்மு-காஷ்மீருக்கு பயன்படுத்துதல் தொடர்பான) அரசியல் அமைப்புச் சட்ட உத்தரவு 1954 என்பது அதன் பெயர். 1952ஆம் ஆண்டு ஜூலை 24-ந் தேதியன்று செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா - நேரு உடன்பாட்டை செயல்படுத்துவதற்காக இது வெளியிடப்பட்டது. பின்னர் இந்த உத்தர வுக்கான திருத்தங்களை அவ்வப்போது வெளியிட்டதன் மூலம் புதிய தலைப்புகளும் இந்திய நாடாளுமன்ற வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.

1.            1954ம் ஆண்டில் வெளியிடப்பட்ட உத்தரவின் மூலம் நிதி ஒருங்கி ணைப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. மத்திய சுங்கவரித் துறை, கலால் வரித் துறை, அஞ்சல்-தந்தித் துறை, விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் அதிகார வரம்புக்குள் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கொண்டு வரப்பட்டது.

2.            ஜம்மு-காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் (1939) 75ஆவது பிரிவு, அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த காஷ்மீர் அமைச்சரவையின் விளக்கங்களே இறுதியானவை என்று குறிப்பிட்டிருந்தது. 1957ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஜம்மு-காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் இப்பிரிவு நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு ஆகியவை குறித்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் என்ற நிலை நீக்கப்பட்டது. மத்திய அரசின் வரம்புக்குள் உள்ள அனைத்து தலைப்பு களின் கீழும் காஷ்மீர் மாநிலத்துக்குப் பொருந்தும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்ற ஒரு புதிய உத்தரவை இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.

3.            1958ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிறப்பித்த உத்தரவின் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்திய தலைமைத் தணிக்கை அலுவலரின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது.

4.            மத்திய அரசு நியமனம் செய்யும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் அகில இந்திய நிர்வாகப் பணி யாளர்களை காஷ்மீருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் 1958இல் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் 312ஆவது பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

5.            ஜம்மு-காஷ்மீர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு 1960ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டது. அதேபோல் காஷ்மீரத் தேர்தல்களை மேற் பார்வை யிடும் உரிமை மத்திய தேர்தல் ஆணை யத்துக்கு வழங்கப்பட்டது.

6.            அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356, 357ஆவது பிரிவுகள் 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காஷ்மீருக்கு விரிவு படுத்தப்பட்டன. இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரலாம்.

7.            1965ஆம் ஆண்டில் சில மத்திய தொழி லாளர் சட்டங்கள் காஷ்மீருக்கு விரிவு படுத்தப்பட்டன.

8.            காஷ்மீர் மாநில முதல்வருக்கு வாசிர்-இ-ஆசம் (பிரதமர்) என்றும், காஷ்மீர் ஆளுநருக்கு சதாரி-ரியாசத் என்றும் காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் பெயர்களை சூட்டியிருந்தது. காஷ்மீர் ஆளுநர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக் கப்பட்ட காஷ்மீர் அரசியல் அமைப்புச் சட்டம் வகை செய்திருந்தது. 1965ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல்  மாதங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் மற்ற மாநிலங்களைப் போல முதலமைச்சர், ஆளுநர் என்று அழைக் கப்படுவார்கள் என்று மாற்றப்பட்டது. அவர்கள் நியமனம் தொடர்பான விதிகளும் பிற மாநிலங்களைப் போல மாற்றப்பட்டன.

9.            1968ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேர்தல்கள் குறித்து ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.

10.          1975ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செய்யப்பட்ட ஷேக் அப்துல்லா-இந்திரா ஒப்பந்தத்தின் மூலம் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏற்கப்பட்டது.

11.          1986ஆம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி யன்று இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்ட ஒரு உத்தரவின் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 249 ஆவது  பிரிவு காஷ்மீருக்கு விரிவு படுத் தப்பட்டது. இதன்படி சில குறிப்பிட்ட நேரங்களில் மாநில பட்டியலில் உள்ள தலைப்புகளில்கூட மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றலாம். இந்த திருத்தத் துக்கு காஷ்மீர் அரசாங் கத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத் தப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசால் நியமனம் செய்யப் பட்டிருந்த ஆளுநர் ஜக் மோகன் தானே இதற்கான காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலையும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

12.          இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லும் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டு மென்றால் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.  பஞ்சாப் மாநிலத்தில் 4 முறை இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது 59, 64, 67, 68 ஆகிய எண்கள் உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் விசேஷ அந்தஸ்து (?) உள்ள காஷ் மீரில் 1990 ஆம் ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை எத்தகைய அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தமும் நிறை வேற்றப்படாமல் குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலமே குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இவ்வாறு 1954 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விட்டன.

(கி.இளங்கோவன் எழுதிய ‘தொடரும் காஷ்மீர் யுத்தம்’ நூலிலிருந்து)

Pin It