மேமன் கருணை மநுவை தள்ளுபடி செய்த நீதிபதிகளில் ஒருவரான அனில் தவே, தூக்குத் தண்டனையை நியாயப்படுத்திட ‘மனுதர்மத்தை’ சமஸ்கிருத மொழியில் எடுத்துக் காட்டினார்.

“அரசன் சரியாக விசாரணை நடத்தினால், அவனிடத்தில் கருத்த மேனியும், சிவந்த கண்களும் கொண்ட பாவத்தைப் போக்குகிற தண்டம் எனும் தெய்வத் தன்மையுடைய புருஷன் பிறக்கிறான். ஆதலால் அத்தகைய அரசனிடத்தில் மக்கள் துன்பமடைய மாட்டார்கள்.”- (மனு அத்.7 : சுலோகம் 25)

இதே நீதிபதிதான் நான் சர்வாதிகாரி ஆனால் கீதையை தேசிய நூல் ஆக்குவேன் என்று சொன்னவர் ஆவார்.

பதவி விலகிய அதிகாரி

“யாகூப் மேமன் கருணை மனுக்களை தள்ளுபடி செய்து விசாரணை நடத்தியது உச்சநீதிமன்றத்தின் இருண்ட காலம். நீதி நெறி முறைகள் கைவிடப்பட்டன” என்று எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் முனைவர் அனுப் சுரேந்திர நாத், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜூலை 30ஆம் தேதி நள்ளிரவில் அவசர அவசரமாக கருணை மனுவை விசாரித்தபோது சுரேந்திர நாத்தும் உடனிருந்தார். ஆனால், உச்சநீதி மன்றத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் இந்த விலகல் செய்தி அவசர அவசரமாக மறுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள அதிகாரி சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பில், “சுரேந்திரநாத் என்ற ஆய்வாளர் குறுகிய காலத்துக்கு மட்டும் இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்; அவர் மீண்டும் தனது ஆய்வுப் பணியை தொடங்க விரும்பியதால், விடுவிக்கப்பட் டுள்ளாரே தவிர, உச்சநீதிமன்றம் நடத்திய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல” என்று அந்த மறுப்பு கூறுகிறது. ஆனால் சுரேந்திரநாத் தனது வலைதளத்தில், “மேமன் தூக்கிலிடுவதற்கு கடைசி 24 மணி நேரத்தில் உச்சநீதி மன்றத்தின் செயல்பாடுகள் அற்பமாகவும், கேலிக்குரிய தாகவும் இருந்தது. ஜூலை 29ஆம் தேதி மாலை 4 மணிக்கும், 30ஆம் தேதி விடியற்காலை 5 மணிக்கும் பிறப்பித்த இரண்டு ஆணைகளும் உச்சநீதிமன்ற வரலாற்றில் இருண்டகாலம்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். தேசிய சட்ட பல்கலைக்கழகம் நடத்தும் தூக்குத்தண்டனை தொடர்பான சட்டச் சிக்கல்களுக்கான ஆலோசனை மய்யத்தின் இயக்குனர் சுரேந்திரநாத், உச்சநீதிமன்றத்தின் துணைப் பதிவாளர் பதவியைத்தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் இயக்குனர் பதவிக்கு திரும்பிவிட்டார். அவமானப்பட்டுள்ள உச்சநீதிமன்றம், பொய்யான மறுப்புகளை வெளியிட்டு வருகிறது.

எதிர்ப்பு வலுக்கிறது

பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சர் மேனகாவின் மகனுமான வருண் காந்தி தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும், தூக்குத் தண்டனை குற்றங்களைக் குறைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க.வுக்குள்ளே கலகக் குரல் ஒலித்திருப்பது அக்கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சசிதரூர், தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். மேற்குவங்க சட்டமன்றத்தின் முன்னாள் தலைவர் ஹஷீம் அப்துல்கலீம், முஸ்லிம்கள் மட்டுமே தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்; சீக்கியர்களுக்கு எதிராக, குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் எவரும் தண்டிக்கப்படாதது ஏன் என்று கேட்டுள்ளார்.

அதேபோல் மேமன் இறுதி ஊர்வலத்துக்கு பெரும் எண்ணிக்கையில் திரண்டவர்களில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று திரிபுரா மாநில ஆளுநர் தத்தகத்தாராய் கூறியதற்கு முன்னாள் தலைமை நீதிபதி அல்ட்மாஸ்கபீர் இந்தக் கருத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

Pin It