காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம்.
சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஜாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கான அடிப்படை சிவில் உரிமைகளைப் பறித்து வைத்திருக்கின்றன. தீண்டாமையை பல வடிவங்களில் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். ரேசன் கடை நடத்துதல், முடி திருத்தும் கடை நடத்துதல், உணவகங்கள் நடத்துதல், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தல் போன்ற அன்றாட வாழ்வு முறையில் திணிக்கும் இந்த தீண்டாமைக் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். கண்டும் காணாத போக்கு நீடிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வரின் மாநில உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளைக் கடந்து ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாநாடு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
அதேபோல் தொலைக்காட்சிகளில் ஜாதி வரன் தேடும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானங்களைக் கழகத் தோழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஒத்த கருத்துள்ள இயக்கத் தோழர்களையும் அழைத்துப் பேச வைக்கலாம்.
- கொளத்தூர் மணி, தலைவர்
&
விடுதலை இராசேந்திரன், (பொதுச் செயலாளர்)
திராவிடர் விடுதலைக் கழகம்.