திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன், லெனின் சிலையை அகற்றியதுபோல, தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று 2018-இல் ஆணவத்தோடு சமூக ஊடகத்தில் பதிவிட்டார் எச்.ராஜா. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. சென்னை மாவட்டத் தோழர்கள் எச்.ராஜாவின் பேச்சுக்கு எதிர்வினையாக தியாகராயா நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர்களின் பூணூலை அறுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. அசோக் நகர் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

10 தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். உமாபதி, சுகுமார், இராவணன், கோபி, ஜான், அருண், பிரதீப், பிரபாகரன், திவாகர், நந்தா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 7‌ தோழர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு 6 மாதங்கள் சிறை தண்டனைப் பெற்றனர். வழக்கறிஞர் இளமாறன், உதவியாளர் பேரன்பு ஆகியோர் வழக்கை சிறப்பாக நடத்தினார்கள்.

அதேபோல, 2008-இல்‌ கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக ராஜ்பவன், வெல்கம் உணவகங்களை முற்றுகையிட்டு சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வுணவகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தோழர்கள் உமாபதி, தமிழ்செல்வன், தட்சணாமூர்த்தி, கார்த்திக், ஜெயக்குமார், ஜெயராம், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஒருமாதத்திற்கு பின்னர் பிணையில் வெளிவந்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கிலும் பிப்ரவரி 10-ஆம் தேதி தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வழக்குரைஞர் ஜான் சிறப்பாக வாதாடி, தோழர்களை வழக்கில் இருந்து விடுவித்தார்.