கறுப்பர் கூட்டம் மீதான ஒடுக்கு முறைகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று ‘காலச் சுவடு’ மாத இதழ் (ஆகஸ்ட்) எழுதிய தலையங்கம்.

கறுப்பர் கூட்டம் யூட்டியூப்' இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துகளை வெளியிட்டதாகவும் கந்தசஷ்டிக் கவசத்தின் வரிகளைத் திரித்துக் கூறியதாகவும் இந்து அமைப்புகள் சிலவும் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால் கனகராஜும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் மத்திய குற்றப் புலனாய்வு சைபர் க்ரைம் போலீசார் அய்ந்து பிரிவுகளின் கீழ் கறுப்பர் கூட்டம் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன் அலுவலகமும், ஸ்டுடியோவும் முடக்கப்பட்டுள்ளன. செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சியை வழங்கிய நாத்திகன் என்ற சுரேந்தரும் சரண் அடைந்திருக்கிறார். கறுப்பர் கூட்டம் அலைவரிசையின் அனைத்துக் காணொளிகளும் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன.

கறுப்பர் கூட்டம் மீது தொடுக்கப் பட்டுள்ள புகார்களைக் கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை முடக்கும் நோக்காகவே கருத வேண்டியிருக்கிறது. புராணங்கள், மனுஸ்மிருதி, சமஸ்கிருத வசனங் களுக்கான விளக்கங்கள், ஆர்எஸ்எஸ் ஷாகாக்கள் பற்றிய கடும் விமர்சனம், குழந்தைபிடிச் செயற்பாடுகள் என இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துக்களைத் தமது காணொளிகளில் வெளிப் படுத்தியது கறுப்பர் கூட்டம்.

இந்து அமைப்புகளும் பாஜகவும் வரும் தேர்தலில் திமுகவைச் சுற்றி வளைக்கும் ஒரு இராஜ தந்திரமாகத் தான் இதைக் கையில் எடுத்தனவா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. மனத்தைப் புண்படுத்துதல், வன்முறை போன்ற சொல்லாடல்களால் இந்தக் கருத்துகளை எதிர்கொண்டன இந்து அமைப்புகள்.

கறுப்பர் கூட்டத்தின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கு அவர்கள் தாமாகவே பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்துத் தமது தளத்திலிருந்து காணொளியை நீக்குவதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் இந்த அறிவிப்புக்குப் பிறகு தான் கறுப்பர் கூட்டத்தின் மீது அபவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. அவர்கள் முஸ்லீம்- கிறிஸ்துவ கைக்கூலிகள் என்று அவதூறுகளும் வசைகளும் வாரி இறைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்தே இந்தக் கைதும் முடக்க நடவடிக்கையும்!

இரண்டு செய்திகளை இங்கு குறிப்பிட வேண்டும். மற்றவர் ஏற்க முடியாத கருத்தாக இருப்பினும் ஒருவருக்குத் தன் கருத்தை வெளி யிடுவதற்கான உரிமை உண்டு. அதுவே கருத்துச் சுதந்திரம். அதை விரும்பா தோர் நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் கைது செய்வதோ முடக்குவதோ கூடாது.

கறுப்பர் கூட்டம் செயல்பாட்டாளர்களை விரட்டி விரட்டிக் கைது செய்திருப்பதும் குடும்பத்தினரைத் துன்புறுத்தி இருப்பதும், 'குற்றம்' இழைத்தவர்போல் நிற்க வைத்துப் படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டு இருப்பதும் மனித உரிமை மீறலாகும். அத்தோடு கறுப்பர் கூட்டம் சானலில் இருந்த வீடியோக்களை போலீசாரே நீக்கியிருப்பது பெரும் பிழையாகும். கருத்துச் சுதந்திரம் அடிப்படையில் இது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

இது ஒரு கருத்தியல் குழுவின் நடவடிக்கை. இதற்குப் பின்னால் பெரும் திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பார்வை யில் எதிர்காலத்தில் மாற்றங்கள் வரலாம்; வராமலும் போகலாம்.

ஆனால் இதற்காக அந்த இளையர்களின் எதிர்கால வாழ்க்கையை மொத்தமாக முடக்கக் கூடிய வழக்குகளைப் பின்னுவது கொடும் வன்முறை; மோசமான முன்னு தாரணம். காலகாலத்திற்கும் மாற்றுக் கருத்துக்களை எழவிடாமல் செய்யக் கூடிய போக்கு அது.

தமக்கு எதிரான குரல்கள் ஊடகங்களில் எழாமல் தடுக்கவே இந்து பாஜக அமைப்புகள் இந்த நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. சுதந்திர உரையாடல் வெளிகளை மட்டுப்படுத்துதல், தமக்கு எதிரான குரல்களை களையெடுத்தல் போன்ற செயல்பாடுகள் மிக வெளிப்படையாகவே தமிழ் ஊடகச் சூழலில் நிகழத் தொடங்கிவிட்டன.

தம்முடைய கைக்கு அடக்கமாகத் தமிழக ஆட்சியாளர்கள் இருப்பதைப் பெரும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்துத்துவச் சக்திகள். தம் ஆட்சி முறையைக் கொண்டு அதிமுக கூடப் பெறமுடியாத பலாபலன்களை இந்துத்துவம் பெற்று கொண்டாடி வருகிறது.

இருண்ட இந்தக் கொரோனா காலகட்டத்திலும் ஜனநாயகச் சக்திகளும் மனிதாபிமானச் சக்திகளும் கருத்துரிமைக்கும் ஊடகச் சுதந்திரத்திற்கும் ஆதரவாக நிற்க வேண்டியது அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.

எதிர்க் கருத்தாளர்கள் ஒடுக்கப் படுவது ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கும் சகமனிதர் மேலான வெறுப்புக்குமே வழிகோலும்.

- காலச் சுவடு

Pin It