protestதமிழ்நாட்டில் அரசியலை மதமாக்கி மதவெறிக் களமாக்கும் பா.ஜ.க.வின் வேல் யாத்திரையைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

திருப்பூர் : தமிழ்நாட்டில் அரசியலை மதமாக்கும் வேல் யாத்திரையைக் கண்டித்து 20.11.2020 அன்று காலை 11 மணியளவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு தலைமையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.

மனுவில் வேல் யாத்திரை நடை பெற்றால், வேல் யாத்திரையை கண்டித்து பெரியார் கைத்தடி ஊர்வலம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வேல் யாத்திரைக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக, திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையைக் கண்டித்து, 22.11.2020 அன்று காலை 10 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து பெரியாரிய உணர்வாளர்கள் பெரியார் கைத்தடி கண்டன ஊர்வலமாகச் சென்றார்கள். தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்காதே என்று முழக்கமிட்டனர். 

ஊர்வலத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் சண் முத்துகுமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர்  சு. துரைசாமி, மாவட்டச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, தெற்கு பகுதி செயலாளர் ராமசாமி, வடக்கு பகுதி செயலாளர் கருணாநிதி, மாநகரத் தலைவர் தனபால், மாநகரச் செயலாளர் மாதவன், மாநகர அமைப்பாளர் முத்துக்குமார், சரசு விஜய், வீரலட்சுமி, தமிழ்நாடு  மாணவர் கழகம், பிரசாந்த் ஈழமாரன், பெரியார் பிஞ்சு யாழிசை, யாழினி, லவ்லி பாபா ஆகிய கழகத் தோழர்களும்  கலந்துகொண்டனர்.

கைத்தடி ஊர்வலத்தில், திராவிடர் கழகம் கருணாகரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம்  இல. அங்க குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரமேசு, இளைஞர் இயக்கம் சதீஷ், தமிழ் புலிகள் கட்சி சபாபதி, திராவிட தமிழர் கட்சி குணசேகரன், மக்கள் அதிகாரம்  பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழமுதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி - ஜாபர், திராவிடர் தமிழர் கட்சி பாக்கியராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி துரைவளவன் ஆகிய அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 8 மணியளவில் விடுவித்தது.

பொள்ளாச்சி : நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நடைபெறும் வேல் யாத்திரையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் 23.11.2020 அன்று காலை 11 மணியளவில், ‘வேல் வேண்டாம், வேலை கொடு’ என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் காசு நாகராசு தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் முன்னிலை வகித்தார். ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழக மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறித்து விட்டு வடநாட்டவர்களுக்கு தாரைவர்ப்பது போன்றவற்றை கண்டித்து கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30ற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செயப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகில் பாஜகவின் வேல் அரசியல் யாத்திரைக்கு விதிமுறைகளை மீறி பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசே வேல் யாத்திரைக்கு தடை விதித்திருந்தும் விதிமுறைகளை பாஜகவினர் பின்பற்றாமல் 6 அடி உயரத்தில் பதாகைகள் வைக் கப்பட்டதைக் கண்டித்து,

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி தலைமையில் அனைத்து தோழமை இயக்கங்கள் சார்பில் 18.11.2020 அன்று காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

தோழர்கள் அதே இடத் தில் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து புகார் மனு வாங்கப்பட்டது. மாலை 6:30 மணியளவில் பாஜகவின் பதாகைகள் நகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது.

- பெரியார் உணர்வாளர்கள்

Pin It