சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து விலக மறுக்கிறார்; அடம் பிடிக்கிறார்.
“அய்யா; தங்களது துணைவேந்தர் நிர்வாகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ரூ.80 கோடி கை மாறியிருக்கிறது என்று அரசு நியமித்துள்ள விசாரணை ஆணையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதே, அதற்கு அடிப்படை ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் அதே அரசாணை கூறுகிறதே; மகளுக்கு முறைகேடாக பல்கலையிலேயே மரபுகளுக்கு மாறாக பதவி வழங்கியிருக்கிறீர்களே! இவ்வளவுக்குப் பிறகும் பதவி விலகினால் தானே நீதிபதி கலையரசன் குழு முறையாக விசாரணை நடத்த முடியும்?” என்று சூரப்பாவிடம் கேட்டுப் பாருங்கள்; அவர் தயாராகவே பதிலடி வைத்திருப்பார்!
“நான் கருநாடகத்திலிருந்து தமிழ்நாடு ஆளுநரால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவன்; தமிழக அரசு ஆலோசனை கேட்டா நியமிக்கப்பட்டேன்? அண்ணா பல்கலைக்கழகம் இப்போ எனது சொத்து; அதாவது நம்முடைய சேர சோழர் பாண்டியர் எல்லாம் அந்தக் காலத்தில் ‘பிராமணர்’களுக்கு கிராமங்களையே தானமாகத் தந்தார்களே, அதுபோல; அதை உலகத் தரத்துக்கு உயர்த்த தமிழக அரசிடமா அனுமதி கேட்டேன்? நேரடியாக மத்திய கல்வித் துறைக்குத் தான் கடிதம் எழுதினேன்! தரம் உயர்த்த நானே நிதியை ஏற்பாடு செய்து கொள்வேன் என்று கூறியவன் நான். அரசிடமிருந்து சல்லிக்காசு வேண்டாம் என்றேன். தமிழ்நாடு அரசு என் மீது எப்படி விசாரணை நடத்த முடியும்? இந்த அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று சூரப்பா அனல் கக்குவார்.
“அப்படி எல்லாம் பேசக் கூடாது; நீங்கள் ஊழலை ஒழிப்பதற்காகவே ஆளுநரால் நியமிக்கப்பட்டதாக பா.ஜ.க. வினர் உங்களுக்காகப் பேசினார்கள். இப்போது உங்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டு. பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டாமா?” என்று கேட்டுப் பாருங்கள்!
‘முடியாது; வேண்டுமானால் பதவி நீக்கம் செய்து பார்க்கட்டுமே!” என்று சவால் விடுவார்.
“அய்யா, இலஞ்ச ஒழிப்பு சூரரே! உலகத் தரத்துக்கு பல்கலைக்கழகத்தை உயர்த்தத் துடிக்கும் உத்தமரே! ஏற்கனவே தமிழ்நாட்டில் முறைகேடு ஊழல் புகார்கள் வந்தபோது இராதாகிருஷ்ணன் (கோவை அண்ணா பல்கலைக்கழகம்), மன்னர் ஜவகர் (சென்னை அண்ணா பல்கலைக்கழகம்) ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுப் பாருங்கள்!
“எல்லாம் தெரியும்; அவர்கள் கதை வேறு; என் கதை வேறு; நான் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்திலிருந்து வந்தவன். விசுவ இந்து பரிஷத்தில் வேலை செய்தவன்; ஆளுநரின் ஆசி பெற்றவன்; பகவத் கீதையை பாடத் திட்டத்தில் சேர்த்தவன்” என்று பதிலடி கொடுப்பார்.
சரி; தமிழக பா.ஜ.க.வினரிடம் கேட்டால், அவர்கள் என்ன கூறுவார்கள்?
“ஒரு ஊழலும் நடக்கவே இல்லை; விசாரணை முடிவு இன்னும் வரவில்லையே! கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்றால் விசாரணை நடத்துவீர்களா? சூரப்பா, ஒரு இந்து என்பதால் அவரைப் புண்படுத்தலாமா? எப்போதுமே தி.மு.க. இந்து எதிர்ப்புக் கட்சி; அதனால்தான் சூரப்பா என்ற இந்துவைப் புண்படுத்துகிறார்கள். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது இவர்கள் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாதா? அண்ணா பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்ததே தி.மு.க. தானே! அப்படி ஒரு பல்கலைக் கழகமே இல்லாமலிருந்தால் சூரப்பா துணை வேந்தராகியிருப்பாரா? ஊழலைத்தான் செய்திருப்பாரா!”
- என்று வரலாற்று ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
ஆளுநரிடம் போய் கேளுங்கள்.
“என் அனுமதியின்றி துணைவேந்தரை விசாரிக்க முடியுமா? சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டிருக் கிறேன்; விளக்கம் கிடைக்க நான்கு அல்லது அய்ந்து வாரங்கள் ஆகலாம், நான்கு அல்லது அய்ந்து வருடங்கள் வரை அது மேலும் நீடிக்கவும் வாய்ப்பு உண்டு. அதற்குப் பிறகு இது குறித்த முடிவு எடுப்பேன்.”
மத்திய அரசு அதிகார வட்டாரங்களில் கேட்டுப் பாருங்கள்!
“பெரிய ஊழல் என்றால் பெரிய மாநிலத்துக்கும்; சிறிய ஊழல் என்றால் சிறிய மாநிலத்துக்கும் சூரப்பாவை ஆளுநராக நியமிக்க பரிசீலிக்கிறோம். இவரைவிட ஆளுநர் பதவிக்கு சரியான ஒருவர் சிக்க மாட்டார்” என்பார்கள்.
சிவப்பாக இருப்பவன் பொய் பேச மாட்டான்; பா.ஜ.க.வும் அதைச் செய்யாது என்று நம்புவோமாக!
- கோடங்குடி மாரிமுத்து