அரசு அறிவித்த விழாவைக் கொண்டாடுவது ‘தேசத் துரோகமா?’

poliyanதமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசு விழா எடுத்து கொண்டாடி வரும் வேளையில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் தமிழ்நாட்டு கொடி ஏற்றியதற்காக தமிழக மக்கள் முன்னனியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன், தோழர் ஜான் மண்டேலா ஆகியோர் செங்கற்பட்டு சிறையிலும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் (ஏசு) ச.குமார், சு.நாகேந்திரன், சு.செல்வம் மற்றும் வட சென்னையைச் சேர்ந்த தோழர்கள் சேகர் (எம்.ஆர்.எப்.), ஆ.பாரத்குமார், அ.லோகநாதன், கு.பார்த்திபன், மு.சதிஷ், சு.சுரேஷ், சு.முரளி, இரா.அண்ணாதுரை, பு.சந்தோஷ்,  சி.வீரன் ஆகியோரை 124-ஹ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொன்னேரி சிறையிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பாஜக- அதிமுக அரசுகளின் இந்த அடக்குமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒருபக்கம் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழா என்று கூறி, தலைமைச்செயலகத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்து, தமிழ் மக்களுக்கு வாழ்த்து கூறி சிறப்பாக கொண்டாடினாலும், மறுபக்கம் அதே விழாவை சிறப்பாக கொண்டாட முயன்றவர்களை கைது செய்துள்ளது. இது, தமிழ்நாடு அரசு உண்மையிலேயே தனித்த இறையாண்மை கொண்ட தமிழ்நாடு அரசாக செயல்படுகிறதா, இல்லை பாஜகவின் பினாமி அரசாக செயல்படுகிறதா என்ற ஐயத்தை நமக்குள் எழுப்புகிறது.

அதே வேளை, கர்நாடக அரசு தனது கர்நாடக நாளை அரசு விழாவாக பொதுமக்களின் பங்களிப்போடு கர்நாடக கொடியேற்றி மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். பாஜகவின் அமைச்சரே கர்நாடக கொடியினை ஏற்றியிருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி கர்நாடகாவில் குற்றமாக கருதப்படாத ஒன்று தமிழ்நாட்டில் மட்டும் குற்றமாக கருதப்படுகிறது என்றால், அரசியலமைப்பு சட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும் தனித்த முறையில் செயல்படுமா? கன்னடர்களுக்கு கிடைக்கும் உரிமை, அதே இந்திய ஒன்றியத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது என்றால், இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா?

இந்திய ஒன்றிய அரசின் பாஜக அரசும், தமிழ்நாட்டின் அதிமுக அரசும் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதையே அவற்றை இன்றைய செயல்பாடுகள் காட்டுகிறது. பாஜக- அதிமுக அரசுகளின் அடக்குமுறையை தமிழர்களிடையே அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை நாம் உணர்வோம்.

தோழர் பொழிலன் உள்ளிட்ட 15 தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, அவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டுமென திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை விடுக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It