UPAஇந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசும், தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும் கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பவர்களையும், மாற்றுக்கருத்து கொண்ட அறிவுத் துறையினரையும், ஊடகவியலாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்கள் மீது பல்வேறு ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது.

மாற்று கருத்து கொண்டவர்களை ஆளும் அரசுகள் முன்பிணை பெறமுடியாத, ஆள்தூக்கி கொடுஞ் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை (UAPA) கொண்டும், தேசிய புலனாய்வு அமைப்பைப் (NIA) பயன்படுத்தி வருடக்கணக்கில் சிறையில் தள்ளி வாழ்வை முடித்துவிடுகிறது.

கடந்த 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதி கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனப்பகுதியில் தண்டர்போல்ட் காவல் படையால் மாவோயிஸ்ட் மணிவாசகம் உள்ளிட்ட 3 பேர் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை பார்ப்பதற்குக் கூட மணிவாசகத்தின் தங்கை லட்சுமிக்கு கேரள காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கொல்லப்பட்ட மணிவாசகரின் உடலை பார்க்க, மணிவாசகம் பிறந்த ஊரான சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி, ராமமூர்த்தி நகரில் உடலை அடக்கம் செய்யவும், இறுதி நிகழ்வில் சிறையிலிருந்த மணிவாசகத்தின் இணையர் கலா மற்றும் தங்கை சந்திரா கலந்துகொள்ளவும் மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை கிளைஅனுமதி அளித்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14.11.2019 ஆம் தேதியன்று நடந்த மணிவாசகத்தின் இறுதி நிகழ்வில் மணிவாசகத்தின் உறவினர்கள், நண்பர்கள், சனநாயக சக்திகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கொல்லப்பட்ட மணிவாசகத்தின் இறுதி நிகழ்வு நடந்து முடிந்து 64 நாட்கள் கழிந்த பின்பாக ஒரு பொய் வழக்கை சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையம் குற்ற எண்.14/2020-ன் படி 188,120, 121,121(A), 124(A), இ.த.ச மற்றும் 10,13,15,18 UAPA-ன் கீழ் பதிவு செய்து மணிவாசகத்தின் உடன்பிறந்த தங்கை சந்திரா மற்றும் லட்சுமி, அவரது கணவர் சாலிவாகனன், அவர்களது மகன் சுதாகர், மணிவாசகரின் இணையர் கலா மற்றும் மாவோயிஸ்ட் அரசியல் சிறைவாசிகள் விடுதலை குழுவைச் சார்ந்த விவேக் ஆகியோரை கைது செய்தது.

இந்நிலையில் "தமிழக மக்கள் விரோத பாசிச பாஜகவை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிப்போம்" என்ற இயக்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை சென்னையிலும், சேலத்தில் ஆலோசனைக் கூட்டத்தையும் முடித்துவிட்டு வீட்டில் இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் சீனிவாசன், தோழர் செல்வராஜ் மற்றும் தோழர் சித்தானந்தம் ஆகியோரை போலி மோதலில் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் இறுதி நிகழ்விற்காக ஏவப்பட்ட வழக்கில் ஒரு வருடத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்ததாக கூறி கொடுஞ்சட்டமான UAPA வின் கீழ் கைது செய்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 04.02.2021 ஆம் தேதி கேரள மாநிலத்தை சார்ந்த Anti-Terrorism Squad (ATS) என்கிற சிறப்புப் பிரிவு காவல்துறையானது கோவையில் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தைச் சார்ந்த பல் மருத்துவர் தினேஷ் அவர்களின் மருத்துவமனை மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடத்தியது.

சோதனையில் ராஜேஷ் அவர்களுக்கு அவரது அலுவலகத்தில் இருந்து கொடுத்த லேப்டாப் மற்றும் போன் மற்றும் வீட்டில் இருந்த புத்தகம் ஆகியவற்றை எடுத்துச் சென்றது. மேலும் மருத்துவர் தினேஷ் அவர்களை நான்கு வருடமாக தேடப்படும் குற்றவாளி என்று கூறி அவரை பலவந்தமாக இழுத்துச் சென்றுள்ளனர் கேரள காவல்துறையினர்.

மருத்துவர் தினேஷ் அவர்கள் கோவையில் நடைபெறும் அனைத்து ஜனநாயக போராட்டங்களிலும் கலந்துக் கொள்வதோடு பல்வேறு இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்தவர். நெடுவாசல் ஹைட்ரோ - கார்பன் திட்டத்திற்கு எதிராக ரயிலில் பிரச்சாரம் செய்ததற்காக சுமார் 45 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சோதனை என்ற பெயரில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவது தொடர் வேதனையாக இருந்துவருகிறது. மக்கள் விரோத சட்டங்களான CAA, NPR மற்றும் NRC சட்டங்களை எதிர்த்து போராடிய மக்களுக்கு பண உதவி செய்ததாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது யூசுப் அவர்களது வீட்டில் கடந்த 03.12.2020 ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனை நடத்தினர்.

அதேபோன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர் பார்த்திபன் அவர்களின் வீட்டில் மருத்துவர் தினேஷ் கைது செய்யப்பட்ட கடந்த 04.02.2001 ஆம் தேதி கேரள காவல்துறை எவ்வித தகவல், அறிவிப்பு, உத்தரவும் இல்லாமல் சோதனை நடத்தினர்.

மத்திய மாநில அரசுகளும் அதன் காவல்துறையும் சமூக செயல்பாட்டாளர்களை சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவதை கைவிட வேண்டும் என்றும் கொடுஞ் சட்டமான UAPA வில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் பாலன், செல்வராஜ், சீனிவாசன், சித்தானந்தம் மற்றும் விவேக் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கொடுஞ்சட்டமான UAPA-வை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறோம்.

கோரிக்கை:-

- தோழர் பாலன், செல்வராஜ், சீனிவாசன், சித்தானந்தம் மற்றும் விவேக் ஆகியோரை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோருகிறோம்!

- மருத்துவர் தினேஷ் அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய கோருகிறோம்!

- சோதனை என்ற பெயரில் சமூக செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தாதே!

- இறுதி நிகழ்வைக் கூட குற்றமாக்கும் கொடுஞ்சட்டமான UAPA-வைத் திரும்பப்பெறு!

பங்கேற்பாளர்கள்:-

தோழர் ஹென்றி தீபன்
மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு.

தோழர் முரளி
தேசிய செயலாளர், PUCL.

தோழர் வாஞ்சிநாதன்
ஒருங்கிணைப்பாளர், PRPC.

தோழர் மீ.த.பாண்டியன்
தலைவர், தமிழ்தேச மக்கள் முன்னணி.

தோழர் ஜான் வின்சென்ட்
மூத்த வழக்கறிஞர்

தோழர் ஜெயராமசந்திரன்
மூத்த வழக்கறிஞர்

தோழர் ராஜேந்திரன்
சமநீதி வழக்கறிஞர் சங்கம்

தோழர் காஜா நஜ்முதீன்
மாநில செயற்குழு உறுப்பினர், NCHRO.

தோழர் ராஜா
குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

தோழர் குமரன்
புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் முத்துக்குமார்
தமிழ்புலிகள் கட்சி

தோழர் மகாலெட்சுமி
பெண்கள் எழுச்சி இயக்கம்

தோழர் அகராதி
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர் காந்தி
ஏழுதமிழர் விடுதலை கட்சி

தொடர்புக்கு:- 9790156351