கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு

வணக்கம் நலமாகயிருக்கிறீர்களா? உங்களை மதுரைக்கூட்டத்தில் பார்த்தது. சுமார் ஏழு அல்லது எட்டு வருடங்கள் இருக்கும். அழகிய புன்சிரிப்பொன்றை உதிர்த்து வணக்கம் சொன்னீர்கள். பின்பு காலச்சக்கரம் என்னை வெளிப்படையான அரசியல் வாழ்விலிருந்து தலைமறைவு வாழ்க்கைக்கு அழைத்துச்சென்றது. நான் தலைமறைவு அரசியலை கைக்கொண்டிருந்தபோது எமது கட்சியான இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோயியர்)- ன் மத்தியக்குழு உறுப்பினர் ஒருவருக்கு புதிதாக வந்த புத்தகங்களை படித்து அதில் முக்கியமான புத்தகங்களை பரிந்துரைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். ஒவ்வொரு மாதமும் நான் பரிந்துரைக்கும் புத்தகங்களில் தங்களது எழுத்துக்கள் தவறாது இடம்பெற்றிருக்கும்.

அந்தத் தோழர் “ஆகா என்ன தோழர்? நீங்கள் தோழர் அ.மார்க்சின் ரசிகர் ஆகிவிட்டீர்கள் போல” என்று செல்லமாக கிண்டல் செய்வார். அதற்கு நான் நீங்கள் அனைத்து விடயங்களையும் இயக்கவியல் பொருள்முதல்வாத வெளிச்சத்தில் காண்பதாக பதிலுரைத்தேன். அது உண்மைதான் நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் இயக்கவியல் பொருள்முதல்வாத வெளிச்சத்தில் கண்டுணர்ந்தே பதிலுரைத்தீர்கள். தோழரே இன்னும் நிறைய விடயங்கள் என்னை உம்மிடமும் உங்கள் எழுத்திடமும் இழுத்துச் சென்றன. சமீர் அமீனைப்பற்றி உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். புதிய சனநாயகப்புரட்சி வெற்றிபெறாத நாடுகளின் பொதுவுடமைத்தோழர்களின் இலக்கியங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நீங்கள் சொன்னவிதம் என்னை தோழர் அந்தோணியா கிராம்சியின் சிறைக்குறிப்புகளை ஆழ்ந்து வாசிக்கவைத்தது. அதன்பின்பாகவே நான் கட்சிக்குள் அக்கபக்கமான அரசியல் ஆயுதபோராட்டங்களோடு பண்பாட்டுப் போராட்டமும் கைக்கொள்ளப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். சாதாரணதொரு கீழ்மட்ட ஊழியராக இருந்தாலும் எனக்கும் கட்சி செவிமடுத்து சீர்செய் இயக்கம் விரைவில் வருமென உறுதியளித்து அதை விரைவில் செயல்படுத்தவும் செய்தது.

இன்னமும் நான் டிராட்சிகியின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் ரசிய பொதுவுடமைக்கட்சியினால் துரோகியென அழைக்கப்படும் வரை அவரின் எழுத்துக்கள் கட்சித்தோழர்களால் வாசிக்கப்பட்டதுதானே, ரசியக்கட்சியால் அங்கீகரிக்கப்பட்டதுதானே. அதை ஏன் நாம் வாசிக்கக்கூடாது அதை ஏன் விமர்சனத்துக்கு உள்ளாக்கி செயல்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினேன். கட்சி டிராட்சிகியின் இலக்கியங்களை நான் வாசிப்பதில் ஏதும் பிரச்சினையில்லை என்று என்னை வாசிக்கச்சொன்னது. உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இதுவும் உங்கள் எழுத்தின்மூலம் நான் பெற்ற ஊக்கம்தான். இன்னும் நிறைய இருக்கிறது தோழரே உங்களைப்பற்றியும் உங்கள் எழுத்து என்மீது ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் கூற. என்(ம்) உயிர்த்தோழன் நவீன்பிரசாத் புயல்காற்றுக்கெதிராய் குன்றென நின்று எம்மைக்காத்து வீரச்சாவெய்தியபோது, அந்த உண்மையறியும் குழுவிலே நீங்கள் நின்றீர்கள். இன்னொரு அப்பாவி பழங்குடித்தோழனுக்கு என்ன ஆனதோ என்று நாங்கள் திகைத்து நின்றபோது நீங்களே எம்தோழனை உயிரோடு மீட்டீர்கள்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரோடு நான் முதன்முதலில் மாற்றுப்பாலினத்தவரைப் பற்றியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றியும் அவர்கள் மீதான நேபாள மாவோவியர்களின் மிகவும் பிற்போக்கான நிலபிரபுத்துவ பார்வை பற்றியும் பேசியதற்கு உங்கள் எழுத்துக்களை நான் வாசித்ததுதான் காரணம் தோழரே. என்னிடம் மத்தியக்குழு உறுப்பினர் அதன்பின்பாக உங்கள் அரவாணித் தோழரை கட்சியில் இணைக்கமுடியுமா என்று ஆர்வத்தோடு கேட்டார். உமக்கும் தோழர் மருதய்யனுக்கும் இடையிலான விவாதத்தைப் பற்றியும் அதில் தங்களது எழுத்துக்கள் பற்றியும் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக்கட்சியின் மூத்த தோழர் சிலாகித்தது இன்னமும் என் நினைவில் நிற்கிறது தோழரே. உம் தந்தைபற்றி அறிந்தபோது இன்னமும் பூரித்துப்போனேன். மீன்குஞ்சிற்கு நீந்த கற்றுத்தரவேண்டியதில்லை என்று நினைத்து மகிழ்ந்தேன்.

இன்னும் நிறைய இருக்கிறது தோழரே. பக்கங்கள் தாளாது. நீங்கள் ஒரு பத்திரிக்கையில் பேட்டியளித்தபோது மகிழ்வுந்தின் முன்பிருந்து புகைப்படத்திற்கு முகமளித்தீர்கள். நான் ஒரு மாநிலக்குழு உறுப்பினரிடம் என்ன அ.மார்க்சு மகிழ்வுந்து வாங்கி விட்டாரா? எப்படி அவ்வளவு பணம் அவரிடம்? தெரிந்திருந்தால் நிதி வாங்கியிருக்கலாமேவெனச் சொன்னபோது அந்தத் தோழர் அது அவரின் மகிழ்வுந்தாகயிருக்காது அவர் பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுகிறார் என்று தகவல் என்று சொன்னார். உங்களோடு எமக்கு கொள்கைரீதியாக சில அக முரண்பாடுகள் இருந்தாலும் இணைந்து செயலாற்றுவதில் எந்தச் சிக்கலுமேயிருந்ததில்லை. அதிலும் உங்களின் நுண்ணறிவு மற்றும் விசாலமான மார்க்சிய அறிவு எம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்தியது.

இப்போது நான் கட்சியிலிருந்து வெளியில் வந்துவிட்டு ஒரு கூலித்தொழிலாளியாக என் வாழ்க்கையை ஒரு தொழிற்சாலையில் கழித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னமும் உங்கள் எழுத்தின்மீதான விமர்சனங்கள் ஆவல்கள் அப்படியே இருக்கிறது. சரி தோழரே. இப்போது எப்படியிருக்கிறீர்கள்? உடல்நலம் எப்படியிருக்கிறது? இணையதளங்கள் உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. முக்கியமாக விடுதலைப்புலிகளின் சமீபத்திய பாரிய தோல்விக்குப்பிறகு (நான் இதை அலையிறக்கம் என்றே அழைக்க விரும்புகிறேன், உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பினும்) உங்கள் நடவடிக்கைகள் மிகவும் விமர்சனத்துள்ளாக்கப்பட்டுவிட்டன. எமக்கும் உம்மீதும் உம் சமகால நட்புறவுகள் பற்றியும் சில அகமுரண்களும், விமர்சனங்களும் உண்டு. அதுபற்றி உங்களோடு பேசவேண்டுமென்பது என் நெடுநாள் ஆசை. முன்னாள் மாலெ தோழரான உங்களுக்கு விமர்சன, சுயவிமர்சனங்கள் ஒன்றும் புதிதானவையில்லை. பொறுமையோடு என் எழுத்துக்களை வாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

1. நீங்கள் சமீபத்தில் இலங்கை சென்றுவந்து அது தொடர்பாக குமுதம் தீராநதியில் தொடர்கட்டுரை எழுதினீர்கள். அதில் புலிகள் பற்றி நீங்கள் விமர்சித்தது பற்றியோ அதன் பாரிய தாக்கங்கள் குறித்தோ நான் பேசவிரும்பவில்லை. அதுபற்றி எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அதுபற்றி பின்னாட்களில் பேசுவோம். ஆனால் நீங்கள் இலங்கைக்கு வெறும் இலக்கிய உரைமட்டும் தான் ஆற்றச்சென்றதாகச் சொல்லமுடியாது. அரசியல் தொடர்பின்றி நீங்கள் அங்கு செல்லமுடியாது. நீங்கள் ஊரறிந்த மனித உரிமைப்போராளி. பின்பு எப்படி உங்களை இலங்கை அரசு உள்ளே அனுமதித்தது? தோழர் அங்கையற்கண்ணி கைது செய்யப்படுகிறாரெனில் அவரைவிட மனித உரிமை அரங்கில் முன்னிற்கும் நீங்கள் ஏன் இலங்கை அரசால் கைதுசெய்யப்படவில்லை?

அப்பாவி தமிழர்களின் இன்னல்களைவிட அவர்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதைவிட ‘செத்துப் புதைக்கப்பட்ட’ புலிகளின் சோ கால்டு அடாவடித்தனத்தைத்தான் நீங்கள் பேசுவீர்கள் என்று இலங்கை அரசு நம்பியது காரணமாகயிருக்குமோ? இலங்கை இனவெறி அரசு அப்பாவித்தமிழர்களை கொன்று குவிப்பதை நீங்கள் அங்கு பேசுவீர்கள் என்று இனவெறி அரசு நம்பினால் அவர்கள் எப்படி உங்களை உள்ளே அனுமதித்திருப்பார்கள் தோழரே? வர்க்கவேறுபாடுகள் கூர்மையடையும்போது நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேராசான் மார்க்சு சொன்னார். அங்கு தேசிய வேறுபாடு கூர்மையடைந்து நிற்கிறது. மக்களை காத்தே ஆகவேண்டும் என்ற நிலை. சட்டாம்பிள்ளை இலங்கை அரசு அவர்களை அடைத்து வைத்துள்ளது. அதை எதிர்த்து மனித உரிமைப் போராளியான நீங்கள் குரல் எழுப்புவீர்கள் என்று இலங்கை அரசு கருதியிருந்தால் உங்களை உள்ளே விட்டிருக்குமா? என்றாவது நீங்கள் உங்களை ஏன் இலங்கை அரசு உள்ளே சென்று அனைத்து இடங்களையும் பார்த்துவர அனுமதித்தது என்று சிந்தித்திருக்கிறீர்களா? இயக்கவியல் பொருள்முதல்வாதம் இங்கே என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுபற்றி ஆற அமர சிந்தித்திருக்கிறீர்களா? தமிழகத்தில் எம்தோழன் நவீன்பிரசர்த் வீரச்சாவெய்தியபோது அதுபற்றி உங்கள் குழு சென்றபோது அதுபட்ட இன்னல்களை, நான் தலைமறைவாயிருந்தபோது என்னிடம் சொன்னார்கள். இங்கேயே இந்தக் கதியென்றால் இலங்கையின் நிலை பற்றிச்சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்புறம் எப்படி உங்களை உள்ளே விட்டார்கள்? எங்கேயோ இடிக்கிறதே தோழரே!

புலிகளின் தவறுகளை மார்க்சிய வெளிச்சத்தில் ஆய்வுசெய்த என் அன்புத்தோழன் அ.மார்க்சு எப்படி இந்த விடயத்தை விசாரிக்க மறந்தார்? நான் நீங்கள் வேண்டுமென்றே மறந்ததாகவோ அல்லது உங்கள் தற்போதைய புதிய நண்பர்குழாம் இலங்கை அரசிடம் உறவாகயிருப்பதால் உங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லியிருப்பார்கள், அதனால் இலங்கை அரசும் அ.மார்க்சு நம்ம ஆளு என்று அனுமதித்திருப்பார்கள் என்றோ சொல்லமாட்டேன். ஏனென்றால் எனக்குத் தெரியும் எம் அன்புத்தோழன் அ.மார்க்சு பற்றி. ஆனால் நீங்களே உங்களை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்துங்கள் தோழரே. வர்க்கநெருப்பில் புடம்போடுங்கள். தெள்ளத்தெளிவாய் உண்மை தூலமாய் புலப்படும்.

2. இப்போது சோபாசக்தியைப் பற்றிப் பேசுவோம். அவர்மீது ஒழுக்கரீதியான குற்றச்சாட்டுக்கள் எழுப்பியிருக்கிறார்கள். அதுபற்றி நான் உரையாடவேண்டிய தேவையில்லை. ஏனெனில் எனக்கு அதுபற்றி சோபாசக்தியிடமும் தமிழச்சியிடமும் சில மனத்தாங்கல்களும் கடுமையான விமர்சனங்களும் உண்டு. அதுபோக ஒழுக்கம் பற்றிய புரிதலில் உங்களோடு எம் கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப்போகும். அதுபற்றி பிறிதொருமுறை பேசுவோம். ஆனால் இப்போது சொல்லுங்கள். சோபாசக்தியின் மீது மக்கள் கலை இலக்கிய கழகத்தோழர்கள், அவர் இலங்கை அரசின் கைக்கூலிகளிடம் பணம் வாங்கியதாக குற்றஞ்சாட்டினார்கள். அதற்கு சோபாசக்தி அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து தோழர் மருதய்யனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் வாங்கியதாக வினவு வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும் என்றும் அதற்காக பகிரங்க விசாரணையொன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். நியாயமான கோரிக்கைதான். பகிரங்க விசாரணை தேவைதான். ஆனால் இந்த விடயத்தில் முக்கியமானதொன்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இது பாலியல் பலாத்கார வழக்கு போன்றது. பெண்ணைப் பார்த்து எங்கே நிரூபி என்று சொன்னால் கணக்குத் தீர்ந்தது, உறுதியாக நிரூபிக்க முடியாது. இதில் ஆயிரம் வழக்குகளில் ஒன்று தவறாகப் போகவும் எந்தத்தவறும் செய்யாத ஆண்களுக்கு எதிராகப் போகவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிக்கலான பிரச்சனை இது.

சோபாசக்தியின் விவகாரத்திலும் இதைப்போலவே மகஇகவினர் நிரூபிக்கமுடியாது, வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டார்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் பாருங்களேன் தோழரே. ஏதோ பழமொழி சொன்னதுபோல் மகஇக சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கும் வண்ணம் சோபாசக்தியின் பயணவிவரம், சொந்த இணையதளம், பெரும்குடி மற்றும் இன்னபிற செலவுகள் போன்றவைகள் இடிக்கிறதே தோழரே. நீங்களே பணவிடயங்களில் சிரமப்படும்போது என்னைப்போன்ற பச்சைக்குழந்தையான அவருக்கு மட்டும் எப்படி பணம் கொட்டோகொட்டென்று கொட்டுகிறது தோழரே. இந்த மகஇக தோழர்கள் கேட்ட கேள்வியில் விடயம் இருக்கிறமாதிரி தெரிகிறதே. ஆனால் அதற்கு சோபாசக்தியின் பதில், கணக்குவழக்கை காட்டினால் கடனைக்கட்ட வேண்டுமாம். இது சரியான பேச்சா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். பகிரங்க விசாரணையை நீங்கள்தான் முன்னின்று ஏற்பாடு செய்யவேண்டும். மகஇகவையும் அழைப்போம். சோபாசக்தியையும் அழைப்போம். நீங்களே அவரிடம் கணக்கை பொதுமக்களிடம் ஒப்படைக்கச்சொல்லுங்கள். சரி பார்ப்போம்.

எனக்கென்னமோ சோபாசக்தியின் கணக்குவழக்குகள் நமது மார்க்சிய கணக்கு வழக்குப்படி இடிப்பதாகத்தான் படுகிறது. எனக்கே இடிக்கிறது என்றால் உங்களுக்கு சத்தியமாக இடிக்கும். ஏனெனில் உங்களின் நுண்ணறிவின்மீது எனக்கு நம்பிக்கையுண்டு. (பகடி செய்வதாக நினைக்க வேண்டாம்). சந்தேகமிருந்தால் நீங்கள் எழுதிய மாவோயிசத்தைப் பற்றிய புத்தகத்தை வாசிக்கவும். சத்தியமாக என்னைப் பலவழிகளில் மாற்றிய புத்தகமது. முக்கியமாக நான் உங்கள் ரசிகனாக மாறியது அந்த புத்தகத்தை வாசித்ததிலிருந்துதான். இந்தமுறை வாய்தாவிற்கு தோழர் மருதய்யனையும் தோழர் வீராச்சாமியையும் அழைப்போம். ஏனெனில் எனக்கு அவர்கள்மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஏனெனில் அறிவார்ந்த கூட்டமென்றால் மகஇகவினர் தலைவர்களையும், அடிதடிக் கூட்டமென்றால் அடிமட்ட தோழர்களை அனுப்புவதும் அவர்களின் புதிய பண்பாடு.

சோபாசக்தி இப்படி செலவுசெய்வதற்கு பணம் எப்படி கிடைக்கிறது என்று கணக்கு கேக்கலாம். உண்மையிலேயே அவர் சரியான கணக்குவழக்கை ஒப்படைத்தால் அவருக்கு கடன் இருந்தால் உங்கள் தலைமையிலேயே பணம் வசூலித்துக் கொடுக்கலாம். நாம் மாலெக்காரர்கள். உண்டியல் பிடிப்பது ஒன்றும் பெரிய விடயமில்லை. சோபாசக்தியால் கணக்கை நிரூபிக்க முடியவில்லையென்றால் இலங்கை அரசிடமோ அல்லது இலங்கை அரசின் கைக்கூலிகளிடமோ பணம் வாங்கிக்கொண்டுதான் புலிகளைப் பற்றி எழுதுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டால் (புலிகள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களை விமர்சிப்பது என்பது வேறு, இலங்கை அரசிடமோ அல்லது அவர்களின் கைக்கூலிகளிடமோ பணம் வாங்கிக்கொண்டு விமர்சிப்பது என்பது வேறு) அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அல்லது தண்டனை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள். அவர் மனந்திருந்தி மன்னிப்புக்கேட்டால் மன்னித்து விட்டுவிடலாம். அப்படியும் அவர் அடம்பிடித்தால் அவருக்குத் தண்டணையைக் கொடுக்கலாமா? அல்லது கொடுக்க வேண்டாமா? என்பது பற்றிய அனைத்து கலந்துரையாடல்களையும் உங்கள் பொறுப்பிலேயே விட்டுவிடலாம்.

அப்படி அவருக்குத் தண்டணை கொடுப்பதை நீங்கள் உறுதி செய்தால் (பணம் வாங்கிக்கொண்டு செயல்படும் துரோகி என்று உறுதிசெய்யப்பட்டால்), அதையும் தோழர்களையே செய்யச் சொல்வோம். (எம் மாலெ சகலபாடியான மகஇகவிற்கு இதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது.) இவர்களுக்கு (புலிகளை விமர்சிப்பது என்ற விவகாரத்தில் மகஇகவிற்கும் சோபாசக்திக்கும் பெரிய வேறுபாடு இல்லையென்பதால்) அதில் உடன்பாடு இல்லையென்றால் நீங்களே அந்தக் காரியத்தை முன்னின்று செயல்படுத்துங்கள். ஈடு செய்யமுடியாத அல்லது ஈடு செய்யவேண்டிய இழப்புதான் என்று இலங்கை அரசு எழுதிவிட்டுப் போகட்டும். செய்வீர்களா தோழரே? (மாவோவின் “இது கொடூரமானது, இது நல்லது” என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறதா?). இது குற்றஞ்சாட்டிய மகஇகவிற்கும் அப்படியே பொருந்தும். தவறுசெய்தால் அதற்கு சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்வதில் மகஇகவிற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பதில் எனக்கு இன்னமும் நம்பிக்கையிருக்கிறது.

எனக்கு தனிமனித விமர்சனங்களில் அதிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட விமர்சனங்களில் நமது மாலெ மொழியில் சொல்வதென்றால் மயிர் பிளக்கும் விவாதங்களில் நம்பிக்கையில்லை. தனிப்பட்ட விமர்சனங்கள் ஓரளவிற்கு தேவையென்றாலும் அது அரசியலை அடிப்படையாகக் கொண்டு மார்க்சிய மெய்யறிவோடு ஆய்வு செய்யப்பட வேண்டும். அரசியலற்ற தனிப்பட்ட விமர்சனங்கள் பொழுதுபோக்கு சொற்றொடர்களாகவே அமையும். எனவே அரசியலை ஆணையில் வைப்போம். நடந்த சம்பவங்களை மார்க்சிய நுண்ணொளியில் ஆய்வு செய்வோம். தவறுகளை களைந்துகொள்வோம். எமக்கு நம்பிக்கையிருக்கிறது. நீங்கள் எமது கேள்விகளுக்கு பதிலுரைப்பீர்கள். சோபா பற்றி பேசும்போது சிறிதளவு உணர்வுவயப்பட்டு நான் எழுதியிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் எம் தோழன் அ.மார்க்சு அதைப் புரிந்துகொள்வார். புன்னகையோடு தமது தவறுகளை ஒப்புக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் அடுத்தவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ள உதவவும் அ.மார்க்சிற்கு பாட்டாளி வர்க்க மனம் உண்டு. ஏனெனில் அவர் எம் தோழர். அந்தோணியின் புதல்வர்.

புரட்சி நீடுழி வாழ்க
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
சந்திரசேகர ஆசாத்
நாகர்கோயில்

(பின்குறிப்பு்: பலபேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இப்போதெல்லாம் சில கட்டுரைகளுக்கு பதிலளிப்பதில்லையாம். இந்தக் கட்டுரைக்கு பதிலளிக்கவில்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து செல்லமாக மிரட்டி பதிலை எழுதச் சொல்லி வாங்கும் உரிமை எமக்கு உண்டு என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.)