தமிழகத் தேர்தல் வரலாற்றில், நடிகர்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நடிகர்கள் தங்களுக்கெனக் கட்சிகளை ஆரம்பித்து அதன் அடிப்படையில் தொகுதிப் பங்கீடுகளையும் முடித்துக் கொண்டு ஓரணியாகத் திரண்டிருப்பது இது தான் முதல் தடவை!.

அதிலும் குறிப்பாக முன்னாள் நடிகையான அ.தி.மு.க வின் தலைவி ஜெயலலிதாவின் தலைமையில் நடிகர்களது கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை எதிர் கொள்வது வியப்பாக உள்ளது.

ஆனால் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் எண்ணம் கைகூடுமா என்பது வாக்காளர்களின் கைகளில்தான் இருக்கிறது.

தி.மு.க கூட்டணியில், ‘நெல்லிக்காய் மூட்டை’க் காங்கிரஸோடு, ‘தாவல் திலகம்’ மருத்துவர் அய்யா, திருமாவளவன் கட்சி என்று சுயநலமே முதல் நலமாகக் கொண்டவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இதில் தி.மு.க- காங்கிரஸ் இரண்டுக்கும் இடையே இறுதிக் காலம் வரை நீடித்த ‘பனிப் போர்’, நிர்ப்பந்தம் காரணமாக ‘முக நக நட்பும்’ நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது அடிமட்டத் தொண்டன் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை யாவரும் அறிந்த செய்தி.

எனவே, இவ்விரு கட்சிகளின் தலைமைகளும் ‘கை குலுக்கி’க் கொண்டாலும் அதன் தொண்டர்கள், உண்மையான விசுவாசிகள் என்போர் இந்தத் தேர்தலில் மனம் ஒன்றிச் செயல் படுவார்களா என்பது ஐயத்துக் கிடமானது.

அதிலும், தேர்தல் முடிந்த பின்னர் (வெற்றி பெற்றால்) கூட்டாட்சி என்னும் நிலைதான் தி.மு.க வுக்குக் காத்திருக்கிறது! அது இம்முறை போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலன்றி தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. எனவே தி.மு.க வின் தலைமையில் அமையப் போகும் ஆட்சியில் நிச்சயம் காங்கிரஸுக்கும் பங்கு கொடுத்தே ஆகவேண்டும்.

ஒருவகையில், காங்கிரஸைத் தமிழகத்தில் இருந்து முற்றாக அகற்றும் நோக்கோடு கட்சியை ஆரம்பித்த முன்னாள் முதல்வர் ‘அண்ணா’வின் கனவுகளை, அவர் இறந்து 52 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ‘கனவாகவே’ ஆக்கிய பெருமையினைக் கலைஞர்; தனது அறுபதாண்டு அரசியல் வாழ்க்கையின் மூலம் சாதித்திருக்கிறார்(?) என்றும் சொல்லலாம்.

வடக்கு வளர்வதற்கும், தெற்குத் தேய்வதற்கும் ஆரிய-திராவிட இன வேறுபாடே அடிப்படை என்பதால், தெற்கை வாழவைக்க வேண்டுமாயின் திராவிடர்களான நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்னும் உந்துதலால் திராவிடர் கழகமாக உருவெடுத்துப் பின் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமாகப் பரிணமித்த தி.மு.க இன்று தனித்துத் தமிழகத்தை ஆள்வதற்கு வழியற்று நிற்கும் நிலை ஏற்பட்டிருப்பது வேதனையானது! இந் நிலை உருவாக வழி ஏற்படுத்தியவர் கலைஞர் கருணாநிதியே என்பதைத் திராவிட உணர்வு கொண்ட எவரும் மறுக்கமாட்டார்கள்.

இந் நிலைக்கு அவரையும் அவரது கட்சியையும் இட்டுச் சென்றது அவரது பேராசையும், குடும்ப பாசமுமேயாகும்.

ஆசை கொண்டவர்கள் தங்கள் ஆற்றலுக்கும் அதிகமான செயல்களில் ஈடுபட்டு அதன் மூலம் தம்மைச் சிக்கலுக்குள் ஆழ்த்திவிடுவார்கள். ஆனால் பேராசை கொண்டவர்கள் தாம், பிறருக்குச் சேரவேண்டியதைத் தாமே அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.அந்த ஆசையின் மற்றொரு வடிவம் ஊழலாக வெளிப்படுகிறது.

எழுபதுகளில் தி.மு.கவின் இந்தப் பேரசையைக் கண்டித்து, அண்ணாவின் பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும் வரை கலைஞரால் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர இயலவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர்- ஊழலை எதிர்த்து அவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் பேரால்- ஆட்சி நடாத்தியவர்களே தங்கள் மீதும் அதே ஊழல் சேற்றைப் பூசிக் கொள்ள ஆரம்பித்த காரணத்தால், கலைஞர் மீண்டும் தமிழகத்தினை ஆளும் வாய்ப்பினைப் பெறமுடிந்தது.

எனினும், அவரது குருதியில் படிந்திருந்த குடும்ப பாசமும், ஊழல் அபிமானமும் அவரைவிட்டு அழியாத காரணத்தால், அடுத்திருக்கும் ஈழத்தில் தன்னினம் படு கொலை செய்யப்பட்ட போதும், தமிழக மீனவர்கள் சிங்களரால் வேட்டையாடப் பட்டபோதும், ஒப்புக்குச் சில ‘நாடகங்களை’ அரங்கேற்றித் தன்னை ‘இன உணர்வாளன்’ எனக் காட்டிக் கொண்டதன்றி; மறுபுறம், தன்னால் ‘பதவி’யில் அமர்த்தப் பட்டவர்களது நேர்மையற்ற நடவடிக்கைகளை மூடிமறைக்கும் ‘யுக்தி’களுக்கே முதலிடம் அளித்துவந்தார். ஆனால், ”திருடனை வெளியே விட்டு வேவு பார்க்கும் காவலர்கள் போன்று” மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, கலைஞரின் ‘காலை வாருவதற்கு’க் காலம் பார்த்திருந்தது!

2ஜி-உயர் அலைவரிசை ஊழலில் கலைஞரின் சீடர்களில் ஒருவரும்; அதனைத் தொடர்ந்து கலைஞர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் சிக்கிக் கொள்ள, காங்கிரஸ் தனது பிடியை இறுக்க ஆரம்பித்தது.

விளைவு, எண்பதுகளின் ஆரம்பத்தில், ‘விஞ்ஞான பூர்வமாக’ ஊழல் புரிந்து விட்டு, அதிலிருந்தும் தப்புவதற்காக இந்திரா காந்தியிடம் மண்டியிட்டது போன்று, இப்போது அவரது மருமகளிடம், கலைஞர் ‘அண்ணாவின் திராவிட ஜீவனை’ப் பணயம் வைத்திருக்கிறார்.

அதாவது, மக்களின் உணர்வுகளைச் சீண்டுவதற்காகத் திராவிடம் பேசும் இந்த அரசியலாளர்கள், தங்களையும் தங்கள் பதவிகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய அரசிடம், இவர்களது வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியத்திடம்’ மண்டியிடத் தயங்குவதில்லை! உண்மையில் இவர்கள் யாவரும் அரசியலில் தங்கள் விருப்புகளையும், எண்ணங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக நடிப்பவர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இவர்கள் தாம் இவ்வாறெனில், இவர்களை எதிர்த்து நிற்பவர்கள் மட்டும் ‘ஆரிய’த்தைப் புறந்தள்ளும் ‘திராவிட அபிமானம்’ உள்ளவர்கள் என எண்ணுவதற்கில்லை. தங்கள் கட்சிகளின் பெயர்களில் ‘திராவிட’ அடைமொழியைக் கொண்டிருக்கும், தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ‘திராவிடத்’தைத் தொலைத்துப் பல வருடங்களாகி விட்டன!

இன்று எதிரணியில் நிற்பது ‘நடிகர்களின் கட்சி’ என்னும் தோற்றமே உருவாகி இருக்கிறது. ஜெயலலிதாவில் ஆரம்பித்து.. விஜயகாந் ,சரத் குமார்,விஜய் என ஓர் நடிகர் பட்டாளமே தங்களுக்கென கட்சிகளை ஆரம்பித்து அவையனைத்தையும் இணைத்து பிறிதொரு ‘திராவிடக்’கட்சியாய் எழுந்து நிற்கின்றது!

இவற்றுள், விஜயகாந்த்தின் கட்சி கடந்த காலங்களில் பெற்ற ஆதரவு, அவர் ஏற்கனவே, ஊழல் மற்றும் நேர்மையற்ற அதிகாரப் பிரயோகம், தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் வாழவைக்கும் திட்டங்கள் என வரையறையின்றி ‘அரசியல் புற்று நோயாய்’ வளர்ச்சி கண்டிருந்த இரு கழகங்களின் மீதும் வெறுப்புற்றிருந்த மக்கள் வழங்கியதே ஆகும்.

அவருக்கு முன்பு கிடைத்த ஆதரவு அனைத்தும் இன்று, தமது கூட்டணிக்குக் கிட்டும் என ஜெயலலிதா நினைப்பதும், அதனை ஒட்டி ஏற்கனவே அவரது கட்சிக்கு ஆதரவளித்தவர்களை அவரது பாணியில் நடாத்துவதும் நம்பிக்கை தருவதாயில்லை.

அதே சமையம், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தனிப் பெரும்பான்மை பலம் பெறும் வகையில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கும் அ.தி.மு.க தேவையான தொகுதிகளில் (சுமார் 120ல் ஆவது) வெற்றி பெற்றால் மட்டுமே தனிக் கட்சி ஒன்றின் ஆட்சி தமிழகத்தில் தொடர வாய்ப்பு உள்ளது. இல்லையேல் பல கட்சிகள் இணைந்த ஓர் அரசே சாத்தியமாகும். அதுவும், தி.மு.க- காங்கிரஸ் அணிக்கு ஆட்சி அமைக்கும் பலம் கிட்டாவிடில், வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு அ.தி.மு.க வுடன் இணையவும் வாய்ப்பு உண்டு.

அவ்வாறு ஏற்படின், தி.மு.க வின் ஆதரவின்றி, மத்தியில் அ.தி.மு.க வின் ஆதரவோடு நடுவண் அரசு தொடரவும், அதில் அ.தி.மு.க அமைச்சர்கள் இடம் பெறவும்…… அடுத்த ஐந்து வருடங்களுக்கு தி.மு.கவும் அதன் சில தலைவர்களும் ஊழல் வழக்குகளின் பேரில் தம் வாழ்நாளை விரயம் செய்யவும் வழி ஏற்படலாம்.

எவ்வாறு இருப்பினும், தமிழகத்தில் நடை பெறவிருப்பது மக்களுக்கு வேண்டிய நல்லாட்சிக்கான அரசியல் தேர்தல் என்பதை விடவும், நடிகர்களும், நடிப்பவர்களும் மோதிக் கொள்ளும் ’அதிகாரத்துக்கான விளையாட்டு’ எனச் சொல்வதே பொருத்தமாக அமையும்.

நேர்மையும், அரசியலில் நாணயமும், மக்கள் தொண்டில் உறுதியும் கொண்ட புதிய அணி ஒன்று தமிழகத்தில் உருவாகும்வரை, மக்கள் தொடர்ந்து ஏமாற்றங்களையே எதிர்கொள்ள நேரும்.

[www.sarvachitthan.wordpress.com]

Pin It