அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை யெல்லாம் சிறையில் அடைப்பதா? என்றும் போலீஸ் ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்றும் தேசத் துரோக சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Stan Swamyசட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத் துரோகக் குற்றப் பிரிவு முதலான குற்றப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இதழாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள மன வேதனைகளையும் துன்ப துயரங்களையும் நீதிமன்றங்கள், சமூகம் மற்றும் அரசாங்கம் பரிசீலனை செய்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி.லோகூர் வலியுறுத்தியுள்ளார். சனிக்கிழமையன்று (ஜூலை 24) தில்லியில் முன்னாள் நீதிபதிகள் பங்கேற்ற ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் மோசமான பாதிப்புகள் மீது இணையவழி மாநாடு’ சனிக் கிழமையன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி மதன் பி.லோகூர் இவ்வாறு கூறினார்.

சிறைகளில் சுகாதார வசதியின்றி சித்ரவதை அவர் மேலும் பேசியதாவது: “அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து வேறுபாடுகளைக் கூறியதற்காகவே தேசத் துரோகிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் தம் குடும்பத்தினரும் நண்பர்களும் எந்தவிதமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கேட்கிறார்கள். இவ்வாறு சிறையில் அடைக்கப் பட்டிருப்பவர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் மீது ஏற்பட்டுள்ள மன உளைச்சல்கள் மற்றும் பாதிப்புகளைப் பாருங்கள். அக்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது அவர்களுடைய வகுப்பு மாணவர்கள், “என்ன உங்கள் தந்தை ஒரு பயங்கரவாதியாமே!” என்று இவர்களைப் பார்த்துக் கேட்கிறார்கள். அவர் இது தொடர்பாக எதுவுமே செய்யாத நிலையில் இவ்வாறு கேட்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறைகளில் அதிக அளவில் சிறை வாசிகளை அடைத்து வைத்திருப்பதன் மூலம் ஒருவிதமான “மென்மையான சித்ரவதை” (soft torture) மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எவ்விதமான சுகாதாரமான வசதியுமின்றி அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக் கிறார்கள்’’.இவ்வாறு மதன் பி.லோகூர் கூறினார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா, பார்க்கின்சன் நோயால் பாதிக்கப் பட்டிருந்த அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி மரணத்தைச் சுட்டிக்காட்டி, “நாம் எல்லாம் மனிதர்கள் தானா?” என்று கேள்வி எழுப்பினார். “பசு மூத்திரம் கோவிட்-19 தொற்றைப் போக்க ஒரு மருந்து கிடையாது என்று சொன்னதற்காக மணிப்பூரில் ஒருவர் மீது தேசத் துரோகக் குற்றப் பிரிவு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார். நாம் என்ன போலீஸ் ராஜ்ஜியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் முறைகேடாக செய்யப்பட முடியும் என்பதற்கு இவை யெல்லாம் நிரூபணங்களாக இருக்கின்றன. எனவே நீதிமன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின்கீழ் தலையிட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த வழி காட்டும் நெறிமுறைகளை ஏற்படுத்திட வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்ட குப்தா, இப்போதுள்ள வடிவத்தில் இந்த சட்டம் நீடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்தாப் ஆலம் பேசுகையில், ‘‘அரசாங்கம் தங்கள் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை யெல்லாம் இந்தச் சட்டத்தின் மூலம் அடைத்து வைத்திருப்பதன் மூலம் இந்த அரசாங்கம் உண்மையான பயங்கரவாத வழக்குகளிலிருந்து தன் கவனத்தைத் திசை திருப்பி இருக்கிறது. பல ஆண்டுகாலமாக சிறையிலிருப்பதன் காரணமாக பலருடைய வாழ்க்கை அழிந்துவிட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படுவது அரிதிலும் அரி தாகும். நாம் எவ்விதமான அரசாங்கத்தைப் பெற வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கான காலம் வந்துவிட்டது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் ஏராளமானவர்களைச் சிறையில் அடைத்து வைத்திடும் இதுபோன்ற வலுவான அரசாங்கத்தையா நாம் விரும்புகிறோம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிபதி கோபால கவுடா பேசுகையில், “இந்த அரசாங்கம் மனித உரிமைப் போராளிகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் இடையேயான யுத்தமாக இதனைப் பார்க்கிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டால், பயங்கரவாதம் தானாகவே இயற்கையான மரணத்தைத் தழுவி விடும். ஒரு சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ள நீதிமன்றங்களே பிணையில் விட முடியாது என்று கூறுமானால் அதுவே அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

அரசாங்கம் தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களை சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தால் அவர்களைப் பிணையில் விடுவதற்குத் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றங்கள் கூறக்கூடாது. அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி மரணம் அடைவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் பயங்கர மானவைகளாகும். தேசியப் புலனாய்வு முகமையும், நீதிமன்றங்களும் அவர் பிணையில் செல்வதற்குத் தகுதி படைத்தவர் என்பதைப் பரிசீலனை செய்யத் தவறி விட்டன” என்று கவுடா கூறினார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It