‘தமிழ்த் தேசியத்துக்கு’ வரைவிலக்கணம் எழுதும் உரிமையை தனதாக்கிக் கொண்டு ‘தமிழர் கண்ணோட்டத்தில்’ அவ்வப்போது எதிர்வினையாற்றி வருகிறார் தோழர் பெ.மணியரசன்.

‘பெரியார் : ஆகஸ்டு 15’ நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு நிகழ்வில் (18.2.2007) நூலாசிரியர் தோழர் எஸ்.வி. ராஜதுரை நிகழ்த்திய உரையின் சுருக்கம் ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’தில் வெளிவந்தவுடன், தோழர் பெ. மணியரசன் (பெ.ம.), தனது பேனாவைத் தூக்கிவிட்டார். இதற்கு எஸ்.வி.ஆர். விரிவான பதிலளித்து எழுதிய நூலே ‘மார்க்சியம்; பெரியாரியம்; தேசியம்’ எஸ்.வி.ஆர். தந்துள்ள விரிவான பதிலுடன் பெ.ம. எழுதிய மறுப்பு, கவிஞர் தமிழேந்தி ‘தமிழர் கண்ணோட்டம்’ இதழுக்கு எழுதிய மறுப்பு, தமிழேந்திக்கு பெ.ம. தந்த பதில்; ஆகியவை இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

கவிஞர் தமிழேந்தி - தனது கடிதத்தில் “பெ.ம. எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற தன்மையில் தோழமை மறந்து எழுதுவதாக” சுட்டிக்காட்டியிருக்கிறார். அதை உறுதிப்படுத்தி, பெ.ம.வின் பேனாவிலிருந்து சிதறிய சிந்தனைகள் சில:

பெரியார் திராவிடர் கழகத்தை - ஒரு “பூதம்” பிடித்தாட்டுகிறது; அது ‘தமிழ்த் தேசிய பூதம்’.

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாளிய அய்ரோப்பாவை ஒரு ‘பூதம்’ பிடித்தாட்டுகிறது. அது ‘கம்யூனிச பூதம்’ என்று காரல் மார்க்சும், ஏங்கல்சும் சொன்னதோடு ஒப்பிட்டு, பெரியார் திராவிடர் கழகத்தை தமிழ்த் தேசிய பூதம் பிடித்தாட்டுகிறது என்று கூறுகிறார், பெ.ம.

அதாவது பெரியார் திராவிடர் கழகத்தை - மிரள வைத்துக் கொண்டிருக்கிறதாம், பெ.ம. நடத்தும் ‘தமிழ்த் தேசியப் புரட்சி’.

பெரியார் தி.க.வின் கிழமை ஏடான ‘பெரியார் முழக்க’த்தில் - “அவ்வப்போது தமிழ்த் தேசியத்தை எதிர்த்தோ அல்லது அதன்மீது அவதூறு பொழிந்தோ ஏதாவது ஒன்று எழுதிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார், பெ.ம. கவனியுங்கள்; ஏதாவது ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார்களாம்!

பூதம், பிசாசு என ஏதுவுமில்லை என்று பரப்புரை நிகழ்த்திவரும் பெரியார் தி.க. தோழர்களுக்கு ‘தமிழ்த் தேசியம் மட்டும் பூதமாக’த் தெரிகிறது என்கிறார். ‘பூதம்-பிசாசு’ இல்லை என்ற பரப்புரைகூட இங்கே ‘எள்ளல்’ செய்யப்படுகிறது.

மிரண்டு போய் நிற்கும் பெரியார் தி.க. “பெ.ம.”க்களின் ‘புரட்சி’யை எதிர்கொள்ளத் திணறி நின்ற காலத்தில் நல்லவேளையாக - பெரியார் திராவிடர் கழகத்தைக் காப்பாற்றுவதற்கு ஒரு பூசாரி வந்து சேர்ந்தாராம். அவர் தான் ‘எஸ்.வி.ஆர்.’ - என்கிறார் ‘பெ.ம.’

எஸ்.வி.ஆர். மதிக்கத்தக்க அறிவாளிதான் என்கிறார் பெ.ம. - அதாவது, பெ.ம. மதிக்கத்தக்க அறிவாளி என்பது, இதில் அடங்கியுள்ள கூடுதல் சிறப்பு. ஆனாலும் அவர் மார்க்சியத்தை வளர்க்க உருப்படியாக எதையும் செய்ய வில்லை என்றும், பெ.ம. அறிவித்துவிட்டார். ஆனாலும் - பெரியாரியலை நிலைநிறுத்தப் பாராட்டத்தக்கப் பங்களிப்பும் செய்துள்ளதாக ஏற்பு வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் அத்தனை தமிழர்களின் சார்பில் நன்றியும் தெரிவித்திருக்கிறார். இதற்காக தோழர் எஸ்.வி.ஆர். பெருமையடையலாம்.

கவிஞர் தமிழேந்திக்கு எழுதியுள்ள ‘மறுமொழி’யில் - தோழர் பெ.ம. ‘பெரியார் திராவிடர் கழகம் பெயரில் வேண்டுமானால் ‘திராவிடர்’ என்பதை வைத்துக் கொள்ளட்டும்’ என்று அனுமதித்திருக்கிறார். ‘சமூக அறிவியலுக்கும் வரலாற்றுப் புரிதலு’க்கும் ஏற்ப - திராவிடம் என்ற பெயரைக் கைவிட வேண்டும். கைவிட மனம் இடம் கொடுக்கவில்லை என்றால், இடுகுறிப் பெயராக மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்” என்று மணியரசன் ‘ஜனநாயக உணர்வோடு’ ஆணையிட்டுள்ளார். “இல்லாவிட்டால் எதிர்வினை புரியத்தான் வேண்டியுள்ளது’ என்று எச்சரிக்கிறார்!

‘பெ.ம.’ முன் வைக்கும் தமிழ்த் தேசியம் ‘புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியல்’ என்றும் அவர் பிரகடனம் செய்து விட்டார். அதே நேரத்தில் ‘பெரியார் தேசிய இன வழிபட்ட தேசியத்தை மறுத்தது பெரியார் கருத்தியலுக்கு ஒரு ஊனமே’ என்பதையும் பெ. மணியரசன் எடுத்துக் காட்டிவிட்டார்.

அதாவது மணியரசன் முன் மொழியும் ‘புரட்சிகரத் தமிழ்த் தேசியக் கருத்தியலை’ பெரியார் சிந்திக்கத் தவறிவிட்டார். அது தமிழ்த் தேசியத்துக்கு ஊனமாகிவிட்டது என்பது பெ.ம. வழங்கியுள்ள ‘உச்சநீதி’ மன்றத் தீர்ப்பு.

பெ.ம. காட்டிய ‘புரட்சி வழி’யைப் பெரியார் பின்பற்றியிருந்தால்... கடவுள், மத, சாதி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. மூடநம்பிக்கையை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்திருக்க வேண்டாம். வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டுக்காக போராடியிருக்க வேண்டாம். சிலப்பதிகாரத்தை தமிழ்த் தேசக் காப்பியமாக ஏற்றுக் கொண்டு, கண்ணகி கோயிலுக்கு ஆண்டுதோறும் போய் வந்திருக்க வேண்டும்.

சூத்திர இழிவு ஒழிப்பு; பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்திருக்கவே தேவையில்லை; பார்ப்பனிய எதிர்ப்பு என்று பேசியிருந்தாலே போதுமானது. கேரளாவுக்குப் போய் வைக்கத்திலே போராடி ‘தமிழ்த் தேச’ துரோகியாகியிருக்க வேண்டாம். சூத்திர இழிவை வலியுறுத்துகிறது என்று இந்துமதத்தைக் கடுமையாக சாடி தமிழர் ஒற்றுமையை சிதைத்திருக்க வேண்டாம். தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறைகளுக்கு தனியாக குரல் கொடுத்து, தமிழர்களைக் கூறு போட்டிருக்க வேண்டாம்.

பெரியார் தமிழ்த் தேசியத்தில் ஏற்படுத்திய ‘ஊனம்’தான் - இத்தகைய தேவையற்ற வீணான நடவடிக்கைகளில், அவரை ஈடுபடச் செய்துவிட்டது. பெ.ம.வின் புரட்சிகரத் தமிழ்த் தேசியத்தில் மேற்குறிப்பிட்ட ‘கருத்தியல்கள்’ இடம் பெறாததால்தான் அது புரட்சிகரத் தமிழ்த் தேசியமாக உருவெடுத்துள்ளதோடு பெரியார் தி.க.வை ‘பூதமாக’ மிரட்டிக் கொண்டிக்கிறது! இது பெரியாருக்குப் புரியவில்லை என்கிறார் பெ.ம.

இவை மட்டுமா? எஸ்.வி.ஆரை குற்றக்கூண்டில் நிறுத்தி பல கேள்விக்கணைகளை வீசோ வீசென்று வீசியிருக்கிறார். அதற்கு எஸ்.வி.ஆரும் பதிலளித்துள்ளார்.

தோழர் பெ. மணியரசன், மார்கஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் பயன்படுத்திய ‘Phillistine’ என்ற சொல்லுக்கு ‘அற்பவாதம்’ என்று விளக்கம் தந்து, எஸ்.வி.ஆர். அற்பவாதம் பேசுவதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு தோழர் எஸ்.வி.ஆர். விரிவாக அளித்துள்ள மறுப்பில் அந்த சொல்லை ‘பண்பாடற்றவன்’, ‘சமூக பிற்போக்குவாதி’ போன்ற பொருள்களிலே மார்க்ஸ், ஏங்கலஸ், லெனின் ஆகியோர் பயன்படுத்தியதாகவும், மணியரசன், பொருள் புரியாமல் எழுதுவதாகவும் மறுத்துள்ளார்.

பார்ப்பன இந்திய தேசியத்தில் தஞ்சமடைந்துவிட்டதாக பெ.ம. கூறிய குற்றச்சாட்டை மறுக்கும் எஸ்.வி.ஆர்., தேசிய இனப் பிரச்சினையை மார்க்சிய லெனினியக் கண்ணோட்டத்தில் தாம் பார்ப்பதாகவும், பெ.ம. பேசும் தமிழ்த் தேசியம் ‘பூர்ஷ்வாத் தமிழ் தேசியம்’ என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

“தேசம், தேசியம், தேசிய இன ஒடுக்குமுறை, ஆதிக்க தேசிய இனம், ஆதிக்கத்துக்குட்பட்ட தேசிய இனம் என்பன போன்ற விஷயங்களில் யாந்திரிகமான வாய்ப்பாடுகளை வைத்துக் கொண்டிருக்கிறார் பெ.ம. என்று கூறும் எஸ்.வி.ஆர், அதற்காகவே ‘இந்தி ஆதிக்க தேசிய இனம்’ என்று ஒன்று இருப்பதாகக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை ஆதிக்க தேசிய இனம் என்றும், ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனங்கள் என்றும், இனங்களைப் பாகுபடுத்த முடியாது என்றும், தேசிய இன ஒடுக்குமுறைத் தன்மை இந்திய தேச அமைப்பிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிகச் சரியான கருத்தாகும்.

இது தொடர்பாக இந்திய தேசியம் பற்றிய பெரியார் கருத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

“சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால் இந்தியாவில் தேசியம் என்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார் அதாவது மேல் சாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் விற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் தயாரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியால் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் பாதகமும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்” - பெரியார்.

பெரியார் சுட்டிக் காட்டிய அபாயகரமான, பாதகமான ‘இந்திய தேசியம்’ போன்றதோர் தேசியம் தோழர்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற பொதுவுடைமைத் தலைவர்கள் சந்தித்த தேசியச் சிக்கலில் கிடையாது.

அதனால் அவர்கள் அதுபற்றி எழுதவும் இல்லை. எனவே இதுவரை சொல்லப்பட்டு வரும் மார்க்சிய, லெனினிய வரையறைக்குட்படாத பார்ப்பனர்களால் ஆங்கிலேயர் உதவியோடு உருவாக்கப்பட்ட இந்திய தேசியத்தைத் தோலுரித்து சரியாக அடையாளம் காட்டியது பெரியாரியல் ஆகும்.

“சமதர்ம பூமியை உடனடியாகச் சாத்தியமான ஒரு விஸ்தீரணத்தில் கட்டுவதற்கான முயற்சி முக்கியமானது” என்று தாம் கூறியதை, “ஒரு விஸ்தீரணத்துக்குள் புரட்சி நடந்தால் போதும்” என்று பெ.ம. திரித்து எழுதுவதை எடுத்துக்காட்டியுள்ள எஸ்.வி.ஆர். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டுகிறார்.

இதில், பெ.ம., எஸ்.வி.ஆர். மீது கூறிய ‘விஸ்தீரணப் புரட்சியாளர்’ என்ற குற்றச்சாட்டை எஸ்.வி.ஆர். வலிமையாக மறுத்துள்ளார். சிலப்பதிகாரம் - தமிழ்த் தேசிய காப்பியம் என்று, பெ.ம. கூறுவதை வலிமையான சான்றுகளுடன் எஸ்.வி.ஆர். மறுத்துள்ளார்.

‘திராவிடர்’ என்ற குறியீட்டை முன்னிறுத்துவதன் அடிப்படையான நோக்கம் பார்ப்பனரல்லாதவர் என்பதற்காகவே என்பதைப் புரிந்தப் பிறகும், திராவிடர் என்ற குறியீட்டைப் பயன்படுத்துவோர் ‘திராவிடத் தேசியம்’ பேசுவதாகவே பெ.ம. மீண்டும் மீண்டும் ‘நிழல் யுத்தம்’ நடத்திக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு, கேரளா, கன்னடம், ஆந்திராவை ஒருங்கிணைத்த திராவிட நாடு வேண்டும் என்று கோருவது தான் ‘திராவிடர் தேசியம்’ என்றால் அந்த திராவிடர் தேசியத்தைப் பேசுவது யார் என்பதை, ‘பெ.ம.’ இனியாவது விளக்க வேண்டும்.

தமிழர் கண்ணோட்டம் - நேச சக்திகளோடு முரண்பாடுகளை உருவாக்கவே துடிக்கிறது. கொளத்தூர் மணி, சுப. வீரபாண்டியன், தியாகு, எஸ்.வி.ஆர்., புனித பாண்டியன் என்று இந்த பட்டியல் தொடருகிறது. இதே போன்ற அளவு வேகத்தை பார்ப்பனர்கள், மதவெறி சக்திகள், இந்திய தேசியம் பேசுவோர் மீதும் தமிழர் கண்ணோட்டம் திருப்பலாமே!

அதே போல் - ‘தேசிய சுயநிர்ணய உரிமையை’ சர்வதேசப் பார்வையில் பார்ப்பதாகக் கூறும் தோழர் எஸ்.வி.ஆர். விடுதலைப் புலிகள் பிரச்சினையில் மட்டும் ‘நமது நாட்டில் செய்யவேண்டிய வேலைகள் நமக்கு நிறைய உள்ளன’ என்று கூறுவது, ஏற்கத்தக்கதாக இல்லை.

தோழர் எஸ்.வி.ஆர். கருத்துகள் சிலவற்றின் மீது பெரியார் திராவிடர் கழகத்துக்கு மாறுபட்ட கருத்துகள் உண்டு என்றாலும், தமிழ்த் தேசியம், சுய நிர்ணய உரிமை, தனித் தமிழ்நாடு, தமிழர் பண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஆரோக்கியமான விவாதங்களை முன் வைத்துள்ளது இந்த நூல்.

வெளியீடு:

விடியல் பதிப்பகம்,
11 பெரியார் நகர், மசக்காளி பாளையம் (வடக்கு),
கோவை - 641015,
தொலைபேசி: 0422-2576772
பக்கம்: 136 விலை : 60

Pin It