அணுசக்தி பற்றிய விவாதங்கள் - அறிவார்ந்த வட்டத்திலும், மேட்டிமை மட்டத்திலுமே பேசப்பட்ட நிலைமாறி - இப்போது மக்கள் மன்றத்தின் விவாதப் பொருளாகியுள்ளது. இந்தியாவின் ஆளும் பார்ப்பன-பனியா வர்க்கம் எப்போதும், சர்வதேசப் பிரச்சினைகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வருவதை விரும்புவதில்லை. இராணுவம் தொடர்பான விவாதங்களை நாடளுமன்றத்திலே நடத்திட, மக்கள் பிரதிநிதிகளுக்கே உரிமை இல்லை.
மன்மோகன்சிங் ஆட்சிக்கு - இடதுசாரிகள் தரும் ஆதரவு திரும்பப் பெறப்பட்டு, மத்தியில் ஆட்சிக் கவிழுமா என்றும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் வருமா என்றும், பரபரப்புத் தீனிகளை விற்பனை செய்ய முயன்ற ‘வெகுமக்கள்’ ஊடகங்கள் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய செய்திகளை வெளியிடும் கட்டாயத்துக்கு வந்தன. எப்படியோ ‘நக்மா’, ‘திரிஷா’, ‘நவ்யா’, ‘பத்மா’, ‘ரஜினி’, ‘விஜய்’ போன்ற ‘சர்வதேச’ பிரச்னைகளுக்கு முன்னுரிமை தந்த ‘வெகுமக்கள்’ ஊடகங்கள் - ‘அணுசக்தி’ போன்ற பிரச்னைகளையும் எழுத வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான்!
அணுசக்தி என்பதுதான் உலகிலேயே மிக வலிமையானது என்பதை உலகம் ஒப்புக் கொண்டுவிட்டது. மின்சக்தி, மின் காந்த சக்தி, அணு சக்தி என்ற சக்திகள் தான் அறிவியல் ஒப்புக் கொண்ட சக்திகள். ‘கடவுள் சக்தி’ என்று ஒன்று இருப்பதாக அறிவியல் ஏற்கவில்லை.
‘கடவுள் உருவாக்கிய நாடு’ என்று நம்பிக் கொண்டிருப்பவர்களே அணுகுண்டு சக்தியைக் கண்டு அலறுகிறார்கள்.
அகிலத்தை அலற வைக்கும் இந்த அணுசக்தியைப் பயன்படுத்துவது பற்றித்தான் இப்போது, காரசாரமான விவாதங்கள் நடக்கின்றன. காரணம், சர்வதேச அரசியலை நிர்ணயிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது, இந்த அணு சக்தி!
சரி; இப்போது பிரச்சினைக்கு வருவோம். இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை செய்துக் கொண்டிருப்பது பற்றித்தான் இப்போது விவாதங்கள் நடக்கின்றன. இந்த ஒப்பந்தத்தை ‘123’ ஒப்பந்தம் என்று ஏன் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன?
வேறு ஒன்றுமில்லை.
அமெரிக்கா, 1954 ஆம் ஆண்டிலேயே அணுசக்தி சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அந்த சட்டத்தின் கீழ் ‘123’ பிரிவில் இப்போது ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் வருவதால், ‘123’ என்று குறிப்பிடப்படுகிறது.
சரி; இந்தியா, இப்போதுதான் முதன்முறையாக அமெரிக்காவுடன் இப்படி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதா? இல்லை.
1963 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவுடன் இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்துள்ளது.. இந்தியாவில் தாராப்பூரில் இரண்டு அணு மின்சார தயாரிப்பு ஆலை இருக்கிறது. இதற்குத் தேவையான ‘மிதமான செறிவூட்டப்பட்ட யுரேனிய’ எரிபொருள்களை அமெரிக்காவிடமிருந்து பெறுவதற்காக இந்த ஒப்பந்தம் உருவானது.
30 ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 1993 ஆம் ஆண்டு வரை நீடித்திருக்க வேண்டும். ஆனால் நீடிக்காமல் போய்விட்டது.
1974 இல் இந்தியா ‘அணுகுண்டை’ வெடித்து சோதனை நடத்தியதால், இனி தாராப்பூருக்கு எரிபொருள் வழங்க முடியாது என்று அமெரிக்கா பின் வாங்கியது. பின்னர் 1993 வரை பிரான்சு நாட்டிலிருந்து இந்தியா அணு உலை களுக்கான எரிப் பொருள்களைப் பெற்று வந்தது.
அமெரிக்காவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலைகளுக்கான எரி பொருளை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. இதற்காக கடந்த 24 மாதங்களாக (பா.ஜ.க. ஆட்சி காலத்திலேயே) இரு நாட்டின் பிரதிநிதிகளும் விவாதித்தனர். இப்போது ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. மீண்டும், அணு உலைகளுக்கு அமெரிக்கா எரிபொருள், எந்திரம், தொழில் நுட்பங்களை வழங்குவதற்கு இந்தியாவுக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகள் தான் ‘123’ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
நிபந்தனைகள் என்ன?
அணுசக்தித் துறையை இந்தியா இரண்டாகப் பிரித்துவிட வேண்டும். மின் உற்பத்திக்கான அணுசக்தித் துறை என்பது ஒன்று; ராணுவத்துக்கான அணுசக்தித் துறை என்பது மற்றொன்று; இதை ஏற்றுக் கொண்டு இந்தியா இரண்டாக துறையைப் பிரித்துவிட்டது.
இந்தியாவில் அணுசக்தியைப் பயன்படுத்தும் எல்லா உலைகளையும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி இந்தியாவில் உள்ள 22 உலைகளில் 14 உலைகளை கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா சம்மதித்துவிட்டது.
அணு உலைகளில் யுரேனியம் என்ற எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த யுரேனியம் என்ற எரிபொருள் எரிந்து தீர்ந்த பிறகு, எரிந்த யுரேனியத்திலிருந்து, ‘புளுட்டோனியம்’ என்ற பொருளை, மிக நுட்பமான வழிமுறைகளில் தனியே பிரித்தெடுக்க முடியும். அந்த புளுட்டோனியத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்க முடியும். எனவே தான் அணு உலைகளில் மறு சுழற்சி முறை, எப்போதும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி மறுபயன்பாட்டுக்கு யுரேனியம் எரிபொருளைப் பயன்படுத்துதலை அமெரிக்க சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதற்கு இந்தியா சம்மதித்து விட்டது.
அணு மின்சார தயாரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் எந்திரங்களில், சில எந்திரங்கள் அணுகுண்டு தயாரிக்கவும் பயன்படுமானால், அந்த எந்திரங்களை அமெரிக்கா மட்டுமல்ல, எந்த நாடும் இந்தியாவுக்கு தரக்கூடாது என்பது மற்றொரு நிபந்தனை; இதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்தது. ‘புன்னகைக்கும் புத்தர்’ என்று அதற்கு பெயரிடப்பட்டது. அப்போது முதல் அணு ஆயுத நாடுகள் வரிசையில் இந்தியா இணைந்தது.
பிறகு 1998 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அதே பொக்ரானில் அணுகுண்டு வெடிக்கப் பட்டது. பரிசோதனைக்காக இந்த வெடிகுண்டை வெடித்த அன்றைய வாஜ்பாய் ஆட்சி, ‘இந்தியா அணு ஆயுத நாடு’ என்று அறிவித்தது. மேற்குறிப்பிட்ட இரண்டு முறை நடந்த குண்டு வெடிப்புகளுமே பிரதமர்கள், ஒரு சில விஞ்ஞானிகள் மட்டத்தில் மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டன.
பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்குக் கூடத் தெரியாது. பிறகு 1995 இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அணு குண்டு வெடிப்புக்குத் திட்டமிடப்பட்டது. அதை தன்னிடமிருந்த சக்தி வாய்ந்த செயற்கைக் கோள் வழியாக அமெரிக்கா தெரிந்து கொண்டது. எனவே இந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இந்தியா மீண்டும் அணுகுண்டு வெடிக்குமானால், அமெரிக்காவின் இந்த ஒப்பந்தமே ரத்தாகிவிடும். அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கிய தொழில் நுட்ப உதவிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும். அமெரிக்கா தனது உதவிகளை நிறுத்தினாலும், இந்தியாவின் அணு உலைகள் மீதான சர்வதேச கண்காணிப்பு மட்டும் தொடரும். இதற்கும் இந்தியா சம்மதித்துவிட்டது.
இந்தியா மறுபடியும் அணுகுண்டு வெடித்தால், உடன்பாடு ரத்தாகும் என்று பிரிவு ‘123’ உடன்பாட்டில் நேரடியாக இடம் பெறவில்லை. அதே நேரத்தில் அமெரிக்க நாடாளுமன்றம், தனது நாட்டுக்காக நிறைவேற்றியுள்ள ‘ஹைடு’ சட்டத்தின் மூலம், இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஹென்றி ஹைடு என்ற அமெரிக்க செனட்டர் (நாடாளுமன்ற உறுப்பினர்) தயாரித்த மசோதா இது என்பதால் இது ‘ஹைடு’ சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தை, இந்தியா முறையாக செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணித்து, அமெரிக்கா நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று, இந்த சட்டம் மறைமுகமாக இந்தியாவைக் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்கா வின் இந்தச் சட்டம், மற்றொரு நாட்டைக் கட்டுப் படுத்தாது என்று, ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்கள், விளக்கம் தந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்காவின் அமைச்சக செய்தி தொடர் பாளர் மக்கார்மாக் என்பவர் குட்டை உடைத்து விட்டார். இந்தியா அணு குண்டை வெடித்தால், ஒப்பந்தம் ரத்தாவது உறுதி என்று அறிவித்து விட்டார்.
அணுகுண்டு ‘கிளப்’பில் உள்ள வல்லரசு நாடுகள் தவிர வேறு எந்த நாடு அணுகுண்டு வெடித்து சோதனை செய்தாலும், அந்த நாட்டோடு, அமெரிக்கா செய்துள்ள ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்று ‘ஹைடு’ சட்டம் கூறுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தோடு அமெரிக்கா ‘ஹைடு’ சட்டத்தையும் தனது நாட்டில் நிறைவேற்றி வைத்திருப்பதுபோல், இந்தியாவுக்கான தனி சட்டம் எதுவும் இங்கே நிறைவேற்றப்படவில்லை.
ஒப்பந்தப்படி அமெரிக்கா எரிபொருள், தொழில் நுட்ப உதவி, எந்திரங்களை வழங்கத் தவறுமானால், ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு, இந்தியாவால் முடியாது. இந்திய நாடாளுமன்றத்தாலும் முடியாது.
அணுசக்தி தொடர்பான இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை - அமெரிக்கக் கொள்கையுடன் இசைவாக இருக்க வேண்டும் என்பது, இந்த ஒப்பந்தத்தில் அடங்கியுள்ள மற்றொரு முக்கிய அம்சம். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் அத்தனை ‘அடாவடி’ நடவடிக்கைகளுக்கும் இந்தியா துணை போக வேண்டியிருக்கும்.
இந்தியா, தனது மின் உற்பத்தித் திறனைப் பெருக்குவதற்கு அணு மின்சக்தியை நாடிப் போக முடிவெடுத்துவிட்டது. அதற்கு இந்த ஒப்பந்தம் தான் ஒரே வழி என்கிறார் மன்மோகன் சிங்.
இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் (1,26,839 மெகாவாட்) நிலக்கரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனல் மின்சாரத்தின் உற்பத்தி - 66 சதவீதம்.
அணைகளில் தேங்கிடும் நீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புனல் மின்சாரத்தின் உற்பத்தி 26 சதவீதம்.
காற்றாலை, சூரிய சக்தி வழியாக (சுற்றுச் சூழலுக்கு பாதிப்புகளை உருவாக்காத) உற்பத்தியாகும் மின்சாரம் 5 சதவீதம்.
ஆனால் அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் 3 சதவீதம் மட்டுமே.
இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.3897 கோடி.
அதே நேரத்தில் சூரிய சக்தி, காற்றாலை முறையில் தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு அரசு ஒதுக்கியுள்ளது ரூ.600 கோடி மட்டுமே.
இந்த ஒதுக்கீட்டிலே 5 சதவீத மின்சார உற்பத்தி நடக்கும் போது, ரூ.4 ஆயிரம் கோடியை ஒதுக்கி, 3 சதவீத அணு மின்சாரத்தை உற்பத்தி செய்யத் துடிக்கிறது இந்திய அரசு.
அணு சக்தியைப் பயன்படுத்துவதால் உருவாகும் ஆபத்துகள் பற்றி, உலகம் முழுதும் பேசப்படுகிறது. இந்த உற்பத்திகளில் உருவாகும் கழிவுகள் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றன. அணுக் கழிவுகளை ஆபத்து இல்லாமல், எப்படி கழிப்பது என்பது பற்றிய பாதுகாப்பு முறைகள் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை.
1979 இல் அமெரிக்காவில் ‘3 மைல் தீவு’ என்ற இடத்தில் உள்ள அணு உலையில் விபத்து நடந்தது. 200 கோடி டாலர் செலவிட்டும், அதன் பாதிப்பி லிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்கள் விடுபட முடியவில்லை.
1985 இல் ரஷ்யாவில் செர்னோபில்லில் நடந்த அணு உலை விபத்தில், லட்சக் கணக்கில் பாதிக்கப்பட்டனர். இதன் பாதிப்பு 2030 வரை மரபு வழியாக இருக்கும் என்று கண்டறியப்பட் டுள்ளது.
அணு உலைகளுக்கான மூலப் பொருள்கள் இந்தியாவிலேயே போதுமான அளவு கிடைத்திடும் போது இந்த ஒப்பந்தம் தேவை இல்லை என்பதே, இந்திய விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
அமெரிக்கா யுரேனியம் வழங்குவதை நிறுத்தியவுடன், இந்திய விஞ்ஞானிகள், அணுசக்தி தொழில் நுட்பத்தில் ‘அதி வேக ஈனுலையை’ உருவாக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாகவே இந்தியாவில் யுரேனியம் இருக்கிறது. அதைவிட அதிகமாக தோரியம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக, தோரியம் அதிகமாகக் கிடைக்கும் நாடு இந்தியா. ஆனாலும், இந்தியா ஏன் இப்படி ஒரு ஒப்பந்தத்தைப் போட துடிக்க வேண்டும்?
அணு ஆயுதப் போட்டியைத் தொடங்கி வைத்ததே அமெரிக்கா தான். இரண்டாம் உலகப் போரில் 1945 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள இரோசிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மாண்டார்கள். அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வரை அமெரிக்கா - கேள்வி கேட்பாரற்ற ஆதிக்க சக்தியாக இத் துறையில் கோலோச்சியது.
அதன் பிறகு 1949 இல், சோவியத் ஒன்றியம், ஒரு அணு ஆயுத அரசாக வெளிப்படுத்தியது. அதன் பிறகு 1952 இல் இங்கிலாந்தும், 1960 இல் பிரான்சும், 1964 இல் சீனமும் அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத அரசு களாயின. தொடர்ந்து அணு ஆயுத அரசுகள் உருவாகிடக் கூடாது என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்தன.
1965 இல் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி, 1968 இல் ஒப்பந்தம் உருவாகி, 1970 இல் அய்.நா.வின் பொதுச் சபையில் ஏற்பு அளிக்கப்பட்டது. இதன்படி அதுவரை அணு ஆயுத சோதனைகள் செய்த அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் அணு ஆயுத அரசுகளாக அங்கீ கரிக்கப்பட்டன.
இந்த நாடுகளை அணு ஆயுதம் கொண்ட அரசுகளாகவும், ஏனைய நாடுகளை அணு ஆயுதமற்ற நாடுகளாகவும், இரண்டாகப் பிரிந்தது இந்த ஒப்பந்தம். இந்த அய்ந்து நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகள் அணு ஆயுதங்களையோ, அணு ஆயுத சாதனங்களையோ வைத்திருப்பதைத் தடை செய்தது இந்த ஒப்பந்தம். இந்த ‘அணு ஆயுதப் பரவல் தடை’ ஒப்பந்தத்தில் 185 நாடுகள் கையெழுத்திட்டன. போதிய அணு ஆயுத திறன்களைக் கொண்டிருந்த இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
அணு ஆயுத அரசுகள் - அணு ஆயுதங்களைக் கைவிடாமல், ஏனைய நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தடை போடுவது என்ன நியாயம் என்ற கேள்வியை எழுப்பியது இந்தியா. 1974 இல் இந்திரா பிரதமராக இருந்தபோது அணுகுண்டும் வெடிக்கப் பட்டது. அதன்பிறகு வாஜ்பாய் ஆட்சியிலும் இந்தியா அணுகுண்டு வெடித்தது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் என்பது ஒரு சர்வதேச ஒப்பந்தம். இதில் இந்தியாவை கையெழுத்திடுமாறு மிரட்டி வந்தது அமெரிக்கா. அதே அமெரிக்காதான், இப்போது, அந்த சர்வதேச ஒப்பந்தத்தை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, இப்போது புதிய ஒப்பந்தத்தை இந்தியாவுடன் உருவாக்கிக்கொண்டு விட்டது. அணுகுண்டு வெடித்த பிறகும், ‘அணு ஆயுத பரவல் தடை’ ஒப்பந்தம் ஒரு சார்பானது என்று கூறி, அதில் கையெழுத்திட மறுத்த இந்தியா, இப்போது, அமெரிக்கா விரித்த வலையில், வலிந்து போய் விழுந்துள்ளது. தனது ஆதிக்க நலனுக்காக எந்த சர்வதேச ஒப்பந்தத்தையும் தூக்கி எறியக் கூடிய நாடுதான் அமெரிக்கா என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
அது மட்டுமல்ல அய்.நா.வின், பாதுகாப்புக் கவுன்சில் உருவாக்கியுள்ள தீர்மானத்துக்கும் (1172) இது எதிரானது என்று கூறப்படுகிறது. (அணு சக்திக்கான பொருள்களை வழங்குவோருக்கு, வரை முறைகளை நிர்ணயித்துள்ளது இத் தீர்மானம்) சரி அணு சக்தி தயாரிப்புக்கு தேவையான பொருள்கள் என்ன? யுரேனியம், தோரியம், புளுட்டோனியம், இந்த தனிமங்களைப் பிளந்தால் - அதிலிருந்து சக்தி கிடைக்கிறது. அணுவிலிருந்து வெளிப்படு;ம் இந்த சக்தியைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தினால் மின்சாரம் தயாரிக்கலாம். கட்டுப்படுத்தாமல், சக்தியை அப்படியே வெளிப்படுத்தினால் அணுகுண்டு ஆகிவிடும்.
இந்தப் பொருள்கள் எல்லாம் இந்தியா வில் கிடைக்கிறதா? இது முக்கியமான கேள்வி. இதில் - யுரேனியம் மட்டும் இந்தியாவில் குறைவாகக் கிடைக்கிறது. (சுமார் 60,000 டன் யுரேனியம் உள்ளதாக மதி;ப்பிடப்படுகிறது) மற்றொரு பொருளான புளுட்டோனியம், தேவைக்கு அதிகமாகவே (சுமார் 2,25,000 டன்) இந்தியாவில் கிடைக் கிறது. மற்றொரு பொருளான தோரியம் இன்னும் அதிகமாகவே கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடு;த்தபடி, தோரியம் அதிகமாகக் கிடைக்கும் நாடு இந்தியா தான்.
யுரேனியம் மிகக் குறைவாகக் கிடைத்தாலும் அதைக் கொண்டே, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நவீன தொழில் நுட்பத்தை, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாபா அணு ஆராய்ச்சி மய்யத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.என்.பிரசாத் இவ்வாறு கூறுகிறார்:
‘‘நமது நாட்டில் உள்ள தோரியம் இருப்பைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். (தற்போதைய நமது மின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் மெகாவாட்) நமது எதிர்கால எரிசக்தித் தேவைக்கு உத்திரவாதம் அளிக்க முடியும். இதை நீண்டகாலத்துக்கு முன்பே நாம் மதிப்பிட்டுள்ளோம்.
நமது 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் முன்னேற்றத்தைக் கண்டு (தோரியத்தை அடிப்படையாகக் கொண்டது) பல முன்னெறிய நாடுகள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன... இந்தத் துறையில் நமக்கு 40 ஆண்டு அனுபவம் உண்டு என்பது அமெரிக்காவுக்கும் தெரியும்... தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நமது திட்டத்துக்கு முட்டுக் கட்டை போடுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாகவே தெரியவில்லையா என்ன?’’
- ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆக.7, 2007.
இப்படி, விஞ்ஞானிகளே வெளிப்படையாக எதிர்த்தும்கூட, இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய தேசியப் பார்ப்பனர் துடிப்பது ஏன்? (அடுத்த இதழில் பார்ப்போம்)