மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவான பார்ப்பன ‘இந்து’வின் பொய்கள் - அதன் தலையங்கம் என்ற பெயரில் அச்சேற்றப்படுகின்றன. அந்த அடுக்கடுக்கான அவதூறுகளுக்கு நமது பதில்.

இலங்கையின் இரண்டாவது தூதரகமான ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’வான ‘இந்து’ - தனது பச்சையான பார்ப்பன விடத்தைக் கக்கி, ஒரு தலையங்கம் தீட்டியுள்ளது (செப்.25). ‘வாய்ப்பான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தனது ‘குருதி உறவான’ - ராஜபக்சே அரசுக்கு புத்திமதி கூறியுள்ளது. பிரசல்ஸ்சில் கூடிய இணை தலைமை நாடுகள் மீண்டும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு நார்வே மூலம் விடுத்துள்ள வேண்டுகோளை ராஜபக்சே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பச்சை விளக்கு காட்டியுள்ளது.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, களத்தில் கணிசமான வெற்றிகளைக் குவித்துள்ளதாக ராஜபக்சே அரசுக்கும், கருணா கும்பலுக்கும் பாராட்டுகளைக் குவித்துள்ளது, ‘இந்து’. இதேபோல் களத்தில் புலிகள் ராணுவ ரீதியாக வெற்றிகளைக் குவித்தால் - ‘பார் பார்; புலிகளின் வன்முறையை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதைப் பார்’ என்று கண்டனக் குரல் எழுப்புவார்கள். போர் நிறுத்த ஒப்பந்தங்களைப் பகிரங்கமாக மீறி, ‘சம்பூரை’ ராணுவம் கைப்பற்றினால், அது போர் நிறுத்த ஒப்பந்த மீறலாக ‘இந்து’வுக்கு தெரியாது. அது சிறீலங்கா அரசுக்கு கிடைத்த வெற்றியாக பாராட்டு மாலைகளைக் குவிப்பார்கள். பார்ப்பனர்களின் இரட்டை அணுகுமுறை; இரட்டை வேடம்; இரட்டை நாக்கு; இப்படி எல்லாம் வெறி கொண்டு அவர்களை எழுத வைக்கிறது.

துரோகக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவோம் என்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிறீலங்கா சர்வதேச சமூகத்தின் முன் ஒப்புக்கொண்ட கோரிக்கை, அதை அமுலாக்காத சிறீலங்காவைக் கண்டிக்காமல், கருணா குழுவுக்கு ‘ஓ’ போடுகிறது, ‘இந்து’. என்னே பார்ப்பன கயமை!

மூதூர், மண்டைத் தீவு, முகமாலை போன்ற யாழ்ப் பாணப் பிரதேசங்களில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து, ராணுவத்தை ஓடஓட விரட்டி அடித்த புலிகள், அந்தப் பிரதேசம் தங்கள் கட்டுப்பாட்டில் வந்த பிறகும்கூட, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறக் கூடாது என்று, தங்கள் நிலைக்கு திரும்பினர். சம்பூரை ஆக்கிரமிக்க வந்த ராணுவத்தை அப்படியே விட்டு வைத்து சர்வதேச சமூகத்தின் பார்வையை சிறீலங்காவின் ஒப்பந்த மீறலின் பக்கம் குவித்து, ராஜதந்திர களத்தில் புலிகள் வாகை சூடி நிற்கிறார்கள்.

இதுவரை விடுதலைப்புலிகள் தான் தாக்குதலை நடத்துகிறார்கள் என்று கூறி ஒரு சார்பான நிலை எடுத்த மேற்கத்திய நாடுகளும், அய்ரோப்பிய நாடுகளும், இன்று சிறீலங்கா அரசை நியாயப்படுத்த முடியாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

செஞ்சோலையில் 55 மாணவிகளைக் குண்டு வீசி படுகொலை செய்த சிறீலங்கா ராணுவம் - அது காப்பகம் அல்ல; ராணுவப் பயிற்சி மய்யம் என்று அவிழ்த்து விட்ட பொய் சர்வதேச சமூகத்தின் முன் அம்பலமாகியது; சிறீலங்காவின் ‘கோர முகமூடி’ கிழிந்து தொங்குகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அய்.நா.வும், வெளிப்படையாக சிறீலங்கா அரசைக் கண்டித்துள்ளன.

ராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான யாழ்ப் பாணத்திலும், மட்டக்களப்பிலும், ஒவ்வொரு நாளும், இளைஞர்கள் கடத்தப்பட்டு, படு கொலைச் செய்யப்படுவது அதிகரித்துக் கொண்டே போகிறது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, நிலைமையை நேரில் உணர்ந்து, சிறீலங்கா அரசை கண்டித்துள்ளது.

மாவிலாறு அணைப் பிரச்சினையை முன் வைத்து ராணுவத் தாக்குதலைத் துவக்கியதே சிறீலங்கா அரசு தான். திரிகோண மலையில் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்கி, மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு தண்ணீரை மறுத்த அநீதியை எதிர்த்து, தமிழர்கள் தான், தங்கள் எதிர்ப்பைக் காட்ட அணையை மூடினர். மாவிலாறு அணை - ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியோடு பராமரிக்கப்படுகிறது. இந்த மாவிலாறு பிரச்சினையே மக்கள் புனர்வாழ்வுத் திட்டத்தின்கீழ் வரக்கூடிய, பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தான்.

அதனால் தான் விடுதலைப்புலிகள் தலையிட்டு, ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரிகளுடன் கலந்து பேசி, சுமூகமான தீர்வை உருவாக்கி, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடன் அணையைத் திறந்து விடச் சென்றனர். அப்படி அணையைத் திறக்க வந்தவர்களை நோக்கி, ஏவுகணை வீசி தாக்குதலைத் துவக்கியதே சிறீலங்கா தான். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கே புலிகள் தான் பதுங்கு குழியில் அடைக்கலம் தந்து பாதுகாத்தார்கள். இது சர்வதேச சமூகத்துக்கு தெரியும். பார்ப்பன ‘இந்து’ மறைக்க முயன்றாலும், நிவாரணப் பணி தொடர்பான பிரச்சினையை ராணுவப் பிரச்சினையாக்கி தாக்குதலைத் துவக்கி வைத்ததே, சிறீலங்கா அரசுதான் என்ற உண்மை சர்வதேச சமூகத்துக்குப் புரியும்; தெரியும். தொடர்ந்து நடத்தப்பட்ட சிறீலங்கா ராணுவத் தாக்குதலுக்கு எதிரான தற்காப்புத் தாக்குதலையே புலிகள் நடத்தினர்.

திரிகோணமலையை அதன் துறைமுகத்தை இலக்கு வைத்துத் தகர்க்க - புலிகளுக்கு சம்பூர்தான் தளமாக இருந்தது என்று, சிறீலங்கா ராணுவமும், ‘இந்து’ ஏடும், பிரச்சாரம் செய்து வருவது சுத்தப் பொய். திரிகோணமலை துறைமுகத்தை இலக்கு வைத்துத் தாக்குவதற்கான பகுதிகள், இன்னமும் புலிகள் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.

விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தீர்மானிக்க அவர்களுக்கு எப்போதுமே ‘பூகோளப் பகுதிகள்’ தேவை இல்லை. கொழும்பில் கட்டு நாய்க்கா விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் அனைத்தையும் விடுதலைப்புலிகளின் படை தகர்த்து எறிந்ததே; அது எந்த பிரதேசத்தை முன் வைத்து தாக்கப்பட்டது? ‘இந்து’ ஏடு பதில் சொல்லுமா?

யாழ்ப்பாணத்தின் - போக்குவரத்துப் பாதையைத் துண்டித்து, மாதக் கணக்கில் தனது கட்டுப்பாட்டின் கீழ் வாழும் தமிழ் மக்களின், உயிர் வாழும் உரிமையையே மறுத்து வருகிறது, சிறீலங்கா அரசு. உணவுப் பொருள் இல்லை; வேலை இல்லை; பட்டினிச் சாவுகள் துவங்கிவிட்டன.

ராணுவத்தின் தாக்குதலால், உடைமையிழந்து, உணவின்றி, வீதிகளில், வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவும், உடையும் வழங்கிய ஒரே அமைப்பு, தமிழர் புணர்வாழ்வு கழகம் தான். சிறீலங்கா அரசின் அனுமதியோடு செயல்பட்டு வந்த, இந்தப் புணர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கை முடக்கி விட்டது ராஜபக்சே ஆட்சி. மக்களின் நிவாரணப் பணிகளும் நின்று போய் விட்டன. ‘இந்து’ பார்ப்பானுக்கு, ராஜபக்சேயின் இந்த மனித விரோத ஒடுக்குமுறைகள், இனிக்கலாம். ஆனால், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு இது தெரியும்; புரியும்.

புணர் வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, 120 பிரெஞ்சு நாட்டு ஊழியர்களை சிறீலங்கா ராணுவம், ஏவுகணை வீச்சில் பலியாக்கிவிட்டதை, சர்வதேச சமூகங்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

மூதூரில் தாக்குதலைத் துவக்கி, அங்கே வாழும் முஸ்லீம்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் மோதலை உருவாக்க முயற்சித்தது, சிறீலங்கா. புலிகள், முஸ்லீம்கள் பக்கம் உறுதியாக நின்றார்கள். பாதுகாப்பான இடத்துக்கு போய்விடுமாறு முன்கூட்டியே முஸ்லீம் மக்களுக்கு அறிவித்தனர். கடந்த வாரம் அம்பாறையில் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் தொழிலாளர்களை, ராணுவம் வெட்டிக் கொலை செய்து, பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது. முஸ்லீம் சமூகம் விழித்துக் கொண்டது. இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் இது சிறீலங்கா ராணுவத்தின் படுகொலையே என்று அறிவித்தது. முஸ்லீம் பகுதியில் பேசுவதற்கு வந்த சிங்கள தீவிரவாத ஜே.வி.பி. தலைவர், முஸ்லீம்களைக் கண்டித்துப் பேச, கொதித்தெழுந்த முஸ்லிம்கள், அவரைத் தொடர்ந்து பேச விடாமல், விரட்டி அடித்துள்ளனர்.

ராஜபக்சே, தான் விரித்த வலையில், இப்போது அவரே சிக்கிக் கொண்டு விட்டார். சர்வதேச சமூகம், இதைப் புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பார்ப்பன ‘இந்து’ ஏடோ, ராஜபக்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் இருப்பதாக உண்மைகளை திசை திருப்புகிறது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்க மறுத்துவிட்டார் என்று மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது ‘இந்து’. இது நல்ல நடவடிக்கையாம். காரணம், அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் ‘ஏஜெண்டுகள்’ என்று திமிரோடு எழுதுகிறது, ‘சிங்கள ரத்னா’ விருது பெற்ற ‘இந்து’! தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளாகியவர்களை விடுதலைப் புலிகள் ஏஜென்ட் என்று எழுதி தனது ஈன புத்தியை வெளிச்சம் போடுகிறது ‘இந்து’!

உண்மையிலேயே ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கவலை இருந்தால், இப்படி எல்லாம் தரம் தாழ்ந்து எவனும் எழுத மாட்டான். விடுலைப்புலிகள் இயக்கத்தை ஒழித்து, அதன் வழியாக ஈழத் தமிழ் மக்களின் விடுதலை உணர்வை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற பார்ப்பன வெறி தான் இந்த சிங்கள தாசர்களை - ஆரியப் பதர்களை இப்படி எல்லாம் பொய்யை கக்க வைத்துள்ளது.

சர்வதேச சமூகத்தை ராஜபக்சேயிடம் கொண்டு வந்து நிறுத்தும் தரகு வேலையை ‘இந்து’ செய்கிறது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் உணர்வையும், பார்ப்பன ‘இந்து’ அவமதிக்கிறது. ஒவ்வொரு நாளும் உணவின்றி சாகிறது நமது இனம். கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்படுகிறார்கள், தமிழ் இளைஞர்கள். துப்பாக்கியால் சுடப்பட்டு, வீதியில் வீசப்படுகிறார்கள், நமது சொந்தங்கள்! தமிழினம் கொதித்துப் போய் நிற்கிறது; ஆனால் ‘மவுண்ட்ரோடு மகா விஷ்ணு’ பார்ப்பனர்கள், குதூகலிக்கிறார்கள்; கும்மாளமடிக்கிறார்கள்; ராஜபக்சேக்களை உசுப்பி விடுகிறார்கள். பார்ப்பனப் பதர்களே! துரோகங்களின் உருவங்களே! அவமானச் சின்னங்களே! நீங்கள் வட்டியும் முதலுமாய் சேர்த்து வாங்கிக் கட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை! புரிந்து கொள்ளுங்கள்!

Pin It