சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம்:
இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த கவன ஈர்ப்புக் கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி இல்லாத நிலையில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது.
தற்போது நினைவுகூர்வதற்கான வெளிiயும் தமிழ் மக்களுக்கு அங்கில்லாத நிலையில், அதற்கான வெளியினை இலங்கைத்தீவுக்கு வெளியே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
உலகின் தலைநகரங்களில் முள்ளிவாய்க்கால் அடையாளச் சின்னங்களை உருவாக்கும் வகையில், அதற்கு முன்மாதிரியாகத் தமிழகத்தின் சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் அடையாளச் சின்னத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் எனக் கோருகின்றோம். இதற்குத் தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.
இது மட்டுமல்லாது மே-18 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளினை உலகெங்கும் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதமாக 'உலகத்தமிழர் தேசியத் துக்க நாளாக' மே-18 ஐ தமிழ்நாடு அரசு பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணையவழி நடந்த கண்டன கூட்டத்தின் சிறு தொகுப்பு : https://youtu.be/FKcNHjg_R-k
- வி.உருத்திரகுமாரன்