மனித குலத்தின் பெரும் கேடு ஒன்று விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தபொழுது என்னுடைய முந்தைய “சிந்தனைகள்’’ கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன். என்னுடைய பெரும் கவலையெல்லாம் நமது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய அடிப்படைக் கடமையை நிறைவேற்றிவிட வேண்டுமென்பது தான்.

26 நாட்களுக்கு முன்பிருந்ததை விட இன்று நான் சற்று அமைதியாகவிருக்கிறேன் இந்தக்குறுகிய கால இடைவெளியில் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கிடைத்த தகவல்களை சர்வதேச மக்களின் கருத்துக்காக திரும்பவும் வலியுறுத்தி செழுமைப்படுத்தித்தர என்னால் முடியும்.

உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றில் தனது நாடு வெற்றி பெற்றால் ஜூலை 2ஆம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தைக், காண தான் வரப் போவதாக ஒபாமா உறுதியளித்திருந்தார். அதற்கு முன்னதாக மிகவும் நாசகரமான நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் அந்தக் காலிறுதி ஆட்டம் நடைபெறவேப் போவதில்லை என்பதை மற்றெவரையும் விட அவருக்குத் தான் அதிகம் தெரிந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

கடந்த வெள்ளியன்று ஜூன் 25ஆம் தேதி தானளிக்கும் தகவல்களிள் விபரங்கள் விளக்கமாக இருப்பதில் மிகவும் கவனம் செலுத்தும் ஒரு செய்தி ஏஜென்சி, இஸ்லாமியப் புரட்சிக் காவல்படையின் சிறப்புச் சேனையின் கடற்படைத் தளபதி ஜெனரல் அலிஃபதாவியின் அறிக்கைகளை வெளியிட்டது, “சர்வ தேசக் கடல் பகுதிகளில் அமெரிக்காவும் அன் கூட்டாளிகளும் ஈரானியக் கப்பல்களைச் சோதனையிடுவார்களேயானால் பெர்சியன் வளை குடாவிலும் ஹோர்முஸ் கடல் சந்தியிலும் தக்க பதிலடியைப் பெறுவார்கள், ” என்று அவர் எச்சரித்தார்.

இந்தத் தகவல் ஈரானின் தேசியச் செய்தி முகமையான மெஹர் இல் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. அந்த செய்தி ஏஜென்சியின் தந்தியின்படி ஃபதாவி “புரட்சிக் காவல் படையின் கடற்படையில் ஏவுகனைகள் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான கப்பல்கள் தற்போது இருக்கிறது’’ என்று மேலும் கூறினார். இந்தத் தகவல் ஜூன் 24, வியாழன்று என்னால் எழுதப்பட்டு ஜூன் 25 வெள்ளியன்று ‘கிரான்மா’ ஏட்டில் வெளியிடப்பட்ட போதோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ வெளிவந்திருப்பது, கிரான்மா வில் வந்த கட்டுரையின் கார்பன் பிரதியைப்போலவே இருக்கிறது. இந்த ஒற்றுமையை, நான் எப்பொழுதுமே கையாளும் தர்க்கரீதியிலான வழிமுறையைச் சிறிதளவு பயன்படுத்துவதாலேயே விளக்கிவிட முடியும். ஈரானின் தேசிய செய்தி ஏஜென்சியால் பிரசுரிக்கப்பட்ட செய்தியின் ஒரு சொல்லைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் போர்க்கப்பல்களும், ஈரானின் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் இதர கப்பல்களும் தங்களுக்கான இடங்களில் நிலை கொண்ட பிறகு ஈரானில் வர்த்தகக் கப்பல் ஒன்றை சோதனையிட முற்படும் தருணத்தில், இரண்டு பகுதிகளிலும் ஏவுகணைகளில் மழை பொழியத் தொடங்கி விடும் என்பதில் நான் எள்ளளவும் ஐயம் கொண்டிருக்கவில்லை. அந்தத் துல்லியமான கணத்தில் தான் அந்தப் பயங்கர யுத்தம் துவங்கும் கப்பல்கள், எவ்விதமாக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டு விடுமென்பதை முன் கூட்டியே கணிப்பதென்பது இயலாத ஒன்று.

சரியான தருணத்தில் உண்மையைக் கண்டறிவது தான் நமது மக்களுக்கு மிகவும் முக்கியமானது. எனது சக நாட்டவர்கள் ஏறத்தாழ அனைவருமே, 99. 9 சதவிகிதம் பேர் என்றுகூட வைத்துக் கொள்வோம், இயற்கை உள்ளுணர்வால் உந்தப்பட்டு, நம்பிக்கையுடன், நான் தவறாகக் கணித்து விட்டதாக இருக்கவேண்டும் என்கிற என்னுடைய உண்மையான விருப்பத்துடன் ஒத்துப்போவதால் பயனேதுமில்லை. நான் எனது நெருங்கிய வட்டத்திற்குள்ளிருப்போரிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், உயர்ந்த பண்பு கொண்ட உண்மையானவர்களாக இருக்க வேண்டுமென்று எண்ணுகிற, மனசாட்சியுள்ள ஏராளமான குடிமக்களிடமிருந்து தகவல்கள் பெறுகிறேன். அவர்கள் என்னுடைய சிந்தனைகளைப் படிக்கிறார்கள், என்னுடைய கருத்துக்களை சிறிதளவு கூட எதிர்விவாதம் செய்வதில்லை. மாறாக நான் முன்வைக்கும் காரணங்களை உள்வாங்கிக் கொண்டு அதில் நம்பிக்கை வைத்து ஏற்றுக்கெள்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய பணிகளை முடிப்பதற்கு தங்களின் ஆற்றலை செலவிடுவதில் முனைந்து விடுகிறார்கள்.

நமது சக குடிமக்களிடமிருந்து சரியாக இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம். முன்கூட்டியே இவ்வாறு தான் நடக்கும் என்று எண்ணும்படியான எந்தத் தகவலுமில்லாமல் திடீரென்று மிகவும் நாசகரமான நிகழ்வுகள் நடக்குமென்கிற செய்திகள் கிடைப்பது மிகவும் மோசமான ஒரு விஷயமாகும். பிறகு குழப்பமும், பீதியும் பரவும், அது 1962இல் ஒரு பெரும் அணு ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகும் தருணம் எக்கணமும் வருமென்று தெரிந்திருந்த போதிலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத்தயங்காத வீரமிக்க கியூப மக்களுக்கு அழகாக இருக்காது.

தங்களுடைய வீரமிக்க சர்வதேசக் கடமைகளை ஏற்றுக்கொண்ட நமது புரட்சிகர ராணுவத்தின் வீரர்களும், படையதிகாரிகளும் அங்கோலாவை ஒட்டிய தென் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது, நமது கியூபப் படைகள் மீது அணு ஆயதத்தாக்குதல் நடக்கக்கூடிய அபாயமேற்பட்டது, அங்கு குய்ட்டோ குவானா வேல் தாக்குதலில் தென்னாப்பிரிக்கப் படைகளை விரட்டித்து விட்டு நமீபியாவின் எல்லையில் அது நிலை கொண்டது.

அப்பொழுது, நமது சிந்தனை கட்டுரைகளில் நாம் விவரிதிருந்தது போல அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்த ‘பென்டகன்’ இஸ்ரேல் மூலமாக இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு 14 அணு ஆயுதங்களை வழங்கியிருப்பது நமக்குத் தெரிந்துதானிருந்தது.

நானொன்றும் இறைத்தூதனோ அல்லது வருவதை முன்னுணர்ந்து கூறும் தீர்க்கதரிசியோ அல்ல. என்ன நடக்கப்போகிறதென்று யாரும் என்னிடம் ஒருவார்த்தை கூடக் கூறவில்¬. அவையெல்லாம் இன்று நான் விவரித்துக் கொண்டிருக்கும் தர்க்க ரீதியான விவேகத்தின் விளைபொருட்கள் தான்.

நாம் ஒன்று மறியாதவர்களுமல்லர் அல்லது இந்த விவகாரத்தில் தலையிடுபவர்களும் அல்லர் ஒரு அணு ஆயுத யுத்தத்திற்குப் பிந்தைய நெருக்கடியில் மிஞ்சியிருக்கும் ஐபெரோ அமெரிக்க மொழி பேசப்படும் அமெரிக்காவில் என்ன நடக்குமென்பதை நாம் ஊகிக்க முடியும்.

அத்தகைய சூழ்நிலைமைகளில் முதலாளித்துவத்தைப் பற்றியோ, சோஷலிசத்தைப் பற்றியோ ஒருவர் பேசமுடியாது. கண்டத்தின் இந்தப்பகுதியில் கிடைக்கக்கூடிய பொருட்கள், சேவைகள் ஆகியவற்றின் நிர்வாகத்திற்கான ஒரு கட்டம் தோன்றும் தற்பொழுது அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களே அந்தந்த நாடுகளில் ஆட்சியைத் தொடர்வது தவிர்க்கவியலாது, அவர்களில் பலர் சோஷலிஸத்திற்கு அருகாமையிலிருப்பார்கள் இதரர்கள் உலகச் சந்தையிலிருக்கும் வளர்ச்சிபெற்ற பணக்கார நாடுகளுக்குத் தற்போது அனுப்பப்ட்டுக் கொண்டிருக்கும் எண்ணெய், யூரேனியம், தாமிரம், லித்தியம், அலுமினியம், இரும்பு மற்றும் இதர உலோகங்களுக்கான சந்தை தமக்குத் திறந்து விடுமென்ற மகிழ்ச்சி மயக்கத்திலிருப்பார்கள் ஏனெனில் வளர்ச்சி பெற்ற பணக்கார நாடுகள் தான் திடீரென மறைந்து விடுமே.

தற்போது ஏராளமான உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை பெற்றுக் கொண்டிருக்கும் அந்த உலகச் சந்தையும் திடீரென மறைந்து விடும். அத்தகைய சூழலில், வாழ்வதற்குத் தேவையான மிகவும் அடிப்படையான பொருட்களான உணவுப் பண்டங்கள், தண்ணீர், எரிபொருள், அமெரிக்காவுக்குத் தெற்கிலிருக்கும் பூமியின் அரைக் கோளத்தின் இயற்கை வளங்களான மனிதகுலத்தை ஓரளவு பராமரிக்கக்கூடிய அளவுக்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. அவற்றை வகை தொகையில்லாமல் அராஜகமான முறையில் பயன்படுத்தியது தான் மனிதகுலத்திற்கு இத்தகைய நாசக்கேட்டை விளைவித்ததற்குக் காரணமாகும்.

இருந்தபோதிலும் தற்பொழுது சில விஷயங்கள் இன்னும் தெளிவில்லாமலிருக்கின்றன. இரண்டு மிகப்பெரும் அணு வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒன்றை ஒன்று எதிர்த்துத் தங்களுடைய அணு ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் தவிர்த்து விடுமா?

எதுவாகினும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் மிஞ்சியிருப்பது என்னவென்றால் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவைகளின் அணு ஆயுதங்கள் ஐரோப்பியாவிலிருந்து கொண்டு (இவைகளெல்லாம் இணைந்து தான், தவிர்க்க வியலாமல் யுத்தத்தை மூட்டி விடக்கூடிய ஐ. நா தீர்மானத்தை மிகுந்த உற்சாகத்துடன் திணித்தவர்கள், அந்தயுத்தம் மேலே விவரிக்கப்பட்ட காரணங்களுக்காக தவிர்க்க இயலாமல் அணு ஆயுத யுத்தமாக உருவெடுக்கும்) ரஷ்யா மண்ணிற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும், இத்தனைக்கும் ரஷ்யா, சீனாவைப் போலவே, தத்தம் சக்திக்கும் வாய்ப்புகளுக்குகேற்ப அத்தகையதொகு சம்பவம் நிகழாமலிருக்க இயன்றவரை முயன்று வருகின்றது.

மிகப் பெரிய அதி வல்லரசின் பொருளாதார சீட்டுக் கட்டு சிதறுவதுபோல தகர்ந்து விடும் இந்த சாம்ராஜ்யம் எங்கிருந்து தோன்றியதோ அங்கு, தான் உருவாக்கியதைப் போல ஒரு பெரு நாசத்தைத் தாங்க சிறிது கூடத் தயாராக இல்லாதது தான் அமெரிக்க சமுதாயம்.

நமது பூமிக்கோளின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கப் போகிற அணு ஆயுதங்களின் விளைவாக சுற்றுச்சூழல்களில் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படப்போகின்றன என்பது நமக்குத் தெரியாது. அதில், அதைவிட சக்திக்குறைவான வெடிப்பு வகைகளும் பரந்த அளவில் நடக்கும்.

அதைப்பற்றிய அனுமானம் ஏதேனும் செய்ய முற்பட்டால் அது நான் அறிவியல் புனை கதைகள் எழுதுவது போலாகிவிடும்.

(பீப்பிள்ஸ் டெகாக்ரஸி, ஜூன் 28, ஜூலை 04, 2010)

- பிடல் காஸ்ட்ரோ

தமிழில்: மிலிட்டரிப் பொன்னுசாமி

Pin It