சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் சட்டம் பயில வந்த மாணவர்கள் சாதி வெறியில் தங்களுக்குள் நடத்திய ‘யுத்தத்தை’ தொலைக்காட்சியில் நேரில் பார்த்தவர்கள் பதறிப் போனார்கள். இந்த இளம் தலை முறையையும் சாதிவெறி ஆட்டிப் படைப்பது தமிழகத்துக்கு மிகப் பெரும் தலைகுனிவு. காவல்துறை இந்தக் கொலை வெறித் தாக்குதல்களை பார்வையாளர்களாக வேடிக்கை பார்த்து நின்றது, மகாக் கேவலம்! இதற்கெல்லாம் எந்த சமாதானத்தையும் கூறிட முடியாது.
ஆனாலும், தலித் மாணவர்களை மட்டுமே குற்றம்சாட்டி விடவும் முடியாது என்றே கலவரத்தைத் தொடர்ந்து வெளிவரும் செய்திகள் கூறுகின்றன. கல்லூரியில் சாதியமைப்பின் தூண்டுதலால், ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை’ என்ற அமைப்பு சட்டக் கல்லூரியில் செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் டாக்டர் அம்பேத்கர் பெயரை சென்னை சட்டக்கல்லூரிக்கு சூட்டியிருப்பதையே ஏற்க மறுத்து ‘தேவர் ஜெயந்தி’க்காக வெளியிட்ட சுவரொட்டியில் ‘அரசு சட்டக் கல்லூரி’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
முத்துராமலிங்க தேவர் மீது பக்தியும், அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும், தலை சிறந்த மேதையுமான டாக்டர் அம்பேத்கர் மீது வெறுப்பும் கொண்டவர்களாக மாணவர்கள் சிந்தனையில் சாதிவெறி படிந்து நிற்கிறது. தலித் மாணவர்களானாலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களானாலும், இரு பிரிவினருமே ‘பார்ப்பன மனுதர்மத்துக்கு’ அடிமையாக்கப்பட்டு, கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.
டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு அரசியல் சட்டத்தின் வழியாக உறுதிப்படுத்தியவரும், டாக்டர் அம்பேத்கர் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சமூகத்தினரும், பார்ப்பனியத்தால் அடிமைப்பட்டிருந்த சமூகம் தான். தன்னுடைய சமூக மக்களின் மேம்பாட்டிற்காக அவர் உழைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அடிமைத்தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பல்வேறு தடைகளை சந்தித்துதான் முன்னேறி வந்திருக்கின்றன.
ஒட்டு மொத்தமாக இந்த சமூகப் போராட்டத்துக்கு வழியமைத்துத் தந்த பெருமைக்குரியவர் பெரியார். சாதி மதக் கடவுள் பெயரால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத மக்களை தீண்டப்படாதவர்களாகவும், ‘சூத்திரர்களாகவும்’ நிலைநிறுத்தப்பட்டிருப்பதை எதிர்த்துப் பெரியார் போர்க் குரல் கொடுத்தபோது, அதன் நியாயத்தைப் புரிந்து நேசக்கரம் நீட்டியவர் டாக்டர் அம்பேத்கர்.
ஆனால், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் அணுகுமுறையோ மாறுபட்டிருந்தது. ‘தேசியத்தோடு தெய்வீகத்தை’ இணைத்த அவர், சாதி, மத, கடவுள் எதிர்ப்புகளுக்கு எதிராகவே விளங்கினார். பெரியார் - அண்ணாவின் கருத்துகளை கடுமையாக சாடியவர் முத்துராமலிங்க தேவர்.
ஒரு சமூகம் விழிப்புற்று, தனது மீட்சிக்குப் போராடுவது என்பது வேறு. அதே சமூகம் தங்களைப் போல் உரிமைக்குப் போராடுகிற சக மக்களை சகோதரர்களாக, போராட்ட இலக்கில் பங்கேற்கும் சக தோழர்களாக பார்க்க வேண்டும். அத்தகைய புரிதல் உருவாக்கப்படாமல், தென் மாவட்டங்களில் நீண்ட நெடுங் காலமாக ஆதிக்க சாதியினரின் கீழ் தலித் மக்கள் அடங்கிப் போக வேண்டியவர்களாகவே வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு முத்துராமலிங்க தேவர் மீதான ‘பக்தியும்’ துணையாய் நின்றது. முதுகளத்தூர் கலவரம் உட்பட பல்வேறு சாதி கலவரங்களில் தென் மாவட்டங்களில் ரத்த ஆறு ஓடிய கறை படிந்த வரலாறுகளை மறந்துவிட முடியாது.
கல்வி, வேலை, அரசியல் என்று அனைத்து மட்டங்களிலும் பல்வேறு சாதிப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையான நோக்கமே சமூக சமத்துவத்தை உருவாக்கி, அதன் மூலம் சமூக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்; அதுதான் சமூக ஜனநாயகம்.
சமூகத்தில் வேறு எந்த அங்கீகாரமும் கிடைக்கப் பெறாத காலத்தில் “சாதிப் பெருமை”யை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். அதே சமூகம் - இன்று, கல்வி, உத்தியோகம், தொழில், உடைமை, வளர்ச்சி என்று பல்வேறு ‘சமூகப் பெருமைகளை’ பெற்ற பிறகும், போலியான சாதிப் பெருமையை கை கழுவ மறுப்பது ஏன்? அதை விட்டுவிடவே கூடாது என்று கடந்த காலங்களில் சாதி வெறியைப் பிடித்துத் தொங்கியவர்கள் இப்போதும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் அரசியலும், வாக்கு வாங்கியை குறி வைத்து, அதை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறது என்பதும் மிகப் பெரும் அவலமாகும்.
தமிழகத்தின் சட்டக் கல்லூரிகளில் ஆரோக்கியமான கல்விச் சூழல் கல்விக்கான கட்டமைப்புகள் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்ற கருத்தும் உண்டு. பொறியியல் படிக்கும் மாணவர்களைப் போலவோ, மருத்துவம் படிக்கும் மாணவர்களைப் போலவோ, சட்டம் படிக்கும் மாணவர்களுக்கான கல்வியமைப்புகள் இல்லாததும், கல்லூரி வருகை இல்லாமலே மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடக் கூடிய சூழல் நிலவுவதும், சட்டக் கல்லூரிகளில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கக் காரணமாகி விடுகிறது என்று கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படும் கருத்தை புறக்கணித்து விட முடியாது.
சாதியமைப்பைப் புறந்தள்ளி, அதை எதிர்க்கக்கூடியவர்களாகவும், சமத்துவத்தை பேணக் கூடியவர்களாகவும், சமூகம் பற்றிய கவலையும், அக்கறையும் உள்ளவர்களுமாக மாணவர்கள் வளர்த்தெடுக்கப்படுவதுடன் அதற்கேற்ற கல்விஅமைப்பையும், கல்வி வளாகச் சூழல்களையும் உருவாக்கிட வேண்டும். ஒரு காலத்தில் அரசியல் களமாகத் திகழ்ந்த சட்டக் கல்லூரிகள் இப்போது சாதிக் களமாக மாறிப் போனதற்கான காரணம் அரசியலே சாதியாக்கப்பட்டு, அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சாதி வெறி மேலே வரத் தொடங்கிவிட்டதுதான். இதில் அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு.
பிறப்பின் அடிப்படையில் சமூக மதிப்பீடுகளை கட்டமைத்த சாதியை கடந்த தலைமுறைகளோடு விடை கொடுத்துவிட்டு, புதிய தலைமுறை, விரிந்த பார்வையைப் பெறவேண்டும். கல்லூரி வளாகத்துக்குள் ‘தேவர் பேரவை’, ‘நாடார் சங்கம்’, ‘கவுண்டர்கள் கழகம்’ என்றெல்லாம் சாதியமைப்புகள் முளைப்பது சமூக ஆரோக்கியமல்ல! இத்தகைய அமைப்புகளை தடை செய்வது பற்றிகூட அரசு பரிசீலிக்க வேண்டும்! தலித் - பிற்படுத்தப்பட்டோர் மோதல் பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.