ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்துவரும் சிறீலங்கா அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கி, தமிழர் படுகொலைகளைத் தூண்டி விட்டு வருகிறது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து, சிங்கள ராணுவம் விமானக் குண்டுவீச்சு நடத்துகிறது. தமிழ் ஈழப் போராளிகளோ அழித்தொழிக்கும் சிங்கள ராணுவத்தை மட்டுமே தாக்குகிறார்கள். அதுவும் தமிழர்களைப் பாதுகாப்பதற்குத்தான். சிங்களப் பொதுமக்கள் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதே இல்லை.

ஆனால், தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ‘இந்து’ ராம், சுப்ரமணியசாமி, ‘துக்ளக்’ சோ, பா.ஜ.க. இல.கணேசன், இந்து முன்னணி ராம. கோபாலன் போன்ற பார்ப்பனக் கூட்டம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கூடாது என்கிறார்கள். தமிழர்களுக்கு ஆதரவான, இயல்பான தமிழினத்தின் குரல் தமிழகத்தில் எழக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். சிங்கள அரசு ‘இந்து’ ஏட்டின் ஆசிரியருக்கு ‘சிங்கள ரத்னா’ விருதே வழங்குகிறது.

‘இந்து’, ‘தினமலர்’ உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் ஈழத் தமிழர்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும் போராடும் போராளிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்புகின்றன. சிங்கள அரசு அன்றாடம் வெளியிடும் பொய்ச் செய்திகளை உண்மையானவையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரியின் பெயர் அம்சா. இவர், சிறீலங்காவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி. தமிழ்நாட்டில் பல பத்திரிகை யாளர்களை அவர் தனது செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். அவரின் ஊதுகுழலாக செயல்படுவதற்கு அவ்வப்போது விருந்துகளும், பரிமாற்றங்களும் நடக்கின்றன.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையை நடத்தி முடித்து விட்டு - அதைக் கொண்டாடும் வகையில் இவ்வாண்டு சிறீலங்கா தூதரகத்தில் வழக்கத்துக்கு மாறாக ‘தீபாவளி’ கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பத்திரிகை அலுவலகங் களுக்கு, ‘தீபாவளி’ இனிப்புகள் வழங்கப்பட்டன. ‘இந்து’ நாளேடு, சிறீலங்கா தூதரகத்தின் தீபாவளி கொண்டாட்டத்தை வெளியிட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது.

ஆனால், தங்கள் சொந்த இனம் செத்துப் பிணமாவதை எதிர்த்து தமிழன் ஒன்று கூடி வாய்விட்டு அழ முடியவில்லை. ஒன்று கூடி கண்ணீர் விட்டு கதற முடியவில்லை. அனுமதிக்காதே என்று பார்ப்பன சக்திகள் தமிழக அரசை மிரட்டுகின்றன.

இந்த அவலம் - தமிழர்களுக்கு நீடிக்கலாமா? தமிழினப் பகைவர்களான பார்ப்பனர்கள், தமிழின உணர்வுகளை நசுக்குவதை எதிர்த்து தமிழர்கள் கொதித்தெழ வேண்டாமா? சிந்தியுங்கள், தமிழர்களே!