பாரதி புத்தகாலயம் சார்பில் ரூ.10 விலையில் 24 பக்கங்கள் கொண்ட அற்புதமான நூல் இது. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணன் எழுதியுள்ள இந்நூல் அடிப்படை மார்க்சியத்தினைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய அனைவரும் படிக்கவேண்டிய நூல்.

சோவியத் வீழ்ச்சிக்குப்பின்பு, ஊடகங்கள் மற்றும் முதலாளித்துவ நாடுகளால் திட்டமிட்டபடி செய்யப்பட்ட பிரச்சாரம் மூலைமுடுக்கெல்லாம் வேகமாகப் பரவியசூழலில் வந்துள்ள சிறிய கருத்துள்ள நூல் இது.

சோவியத் சிதைவுக்குப் பின்பு, எந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்திட்ட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மாண்டுவிட்ட சூழலில், லெனின் சிலைகள் தகர்க்கப்படும் காட்சியை அந்த நாட்டினரே அமைதியாய் வேடிக்கை பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

உலகமே பார்த்து சோகத்தில் இருக்கும்போது இந்திய மார்க்சிஸ்ட் “இன்றைய மார்க்சியம்’’ என்கிற தலைப்பில் ஓர் ஆவணத்தை உருவாக்கியது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கே வழிகாட்டும் ஆவணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. சிபிஐஎம், அவநம்பிக்கைக்கு எதிராக சரித்திர ஆதாரங்களுடன் நடத்திய கருத்துகளின் குவியல் இது.

“ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமே’’ என்பதை நிரூபித்துக் காட்டியவர் லெனின் என்பதை நாம் உணரமுடியும். தோற்றம் - சரித்திரம் - தத்துவம் பற்றிய புரிதல்களை - பலநாட்டுமொழிகளில் 544 பதிப்புகளாக வெளிவந்து மாற்றத்தை அற்புதமாகக் கொண்டு வந்தது “கம்யூ கட்சி அறிக்கை’’ என்பதை நாம் உணர வேண்டும். முதலாளித்துவத்தின் கோர வடிவங்கள், ஏற்றத்தாழ்வுக்கான காரணங்கள், சமூகப்புரட்சிக்கான அவசியம் இவற்றை அற்புதமாக 11, 12 பக்கங்களில் ஆசிரியர் உணர்த்தியுள்ளார், உபரிமதிப்பு, அது பற்றிய அரசின், தொழிலாளியின் புரிதல்களை எளிமையான உதாரணங்கள் மூலம் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். விசித்திரமாக இந்தியாவில் தான் ரூ 20/_க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் 83% பேர் உள்ளனர் என்ற சென்குப்தா சிபாரிசும் உலகின் 10 பணக்காரர்களில் 4பேர் இந்தியர் என்பதும் உள்ளது. மூலதனத்தின் வளர்ச்சி - மார்க்ஸ் எச்சரிக்கை. சரிவிலிருந்து முதலாளித்துவம் மீளுமா-என்கிற தலைப்புகளில் திரட்டப்பட்டுள்ள விவரங்கள் இன்றைய பொருளாதார நெருக்கடியை அன்றாடம் படம்பிடித்துக் காட்டியது போல் உள்ளது. மேலும் சிபிஐஎம் 19வது மாநாட்டுத் தீர்மானத்தில் - நவீனமயக் கொள்கைகளை ஏகாதிபத்தியம் தனது நலன்களுக்காக உலகமயம் என்கிற பெயரில் நிறைவேற்ற முயன்று வருகிறது - என்று சொல்லப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் இராணுவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளிலும் மேலாதிக்கத்தை நிலைநாட்டிட முயன்று வருகிறது. அரசு பற்றிய மார்க்சின் புரிதல், லாபவெறி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு முதலாளித்துவம் இருப்பதால் ஏற்படும் சீரமைப்புகள், புவிவெப்பமயம், அணுசக்தி பயன்பாடு நஷ்ட ஈட்டில் உள்ள அணுகுமுறை போன்றவற்றை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐரோப்பிய வளர்ச்சியும், ஆசிய வளர்ச்சியும் ஒரே மாதிரியான வளர்ச்சியல்ல என்பதை மார்க்ஸ் விளக்கியுள்ளது, அதனைப் புரிந்து கொள்ளாமல் கட்சியாளர்கள் இன்று செயல்படுவதும் உணர்ந்து கொள்ள வேண்டிய விவரங்களாகும். நிலவிநியோகம், தீண்டாமையில் நமது நடவடிக்கைகள், கலாசார அரங்கில் மக்களை வென்றெடுக்க வேண்டிய தேவையைச் சிறப்புடன் எழுதியுள்ளார்.

டெல்லியில் கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்காலம் சோசலிசத்திற்கே என்கிற லட்சியத்துடன் எடுத்துள்ள முடிவுகள் நம்பிக்கையை விதைத்துள்ளது. மார்க்சியத்தின் தேவையை அனைவரும் உணரும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் பரவலாக்கப்பட வேண்டும்.

ஜி. ராமகிருஷ்ணன்

பாரதிபுத்தகாலயம் சென்னை - 18

Pin It