tha.pandiyan4வரலாறு என்பது புனைகதைகளும் பொய்யும் நிரம்பியது அன்று. இவற்றை வரலாறு என்று நம்பினால் பகுத்தறிவு வளர வேண்டிய பூமியில் செத்த விலங்குக்குள் புழுக்கள் புழுப்பது போல மூட நம்பிக்கைகளே முட்டிமோதிக் கொண்டு வளரும். மூட நம்பிக்கைகளை முள் நிறைந்த காடுகளாக வளர்த்து விட்டால் சிங்கம், புலி, நாய், நரி போன்றவற்றின் தீனிக்குப் பஞ்சம் இருக்காது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகிலுள்ள எல்லா நாடுகளின் வரலாற்றையும் ஆராய்ந்தால் நரிகளின் நாட்டாமையே அதிகமாக இருந்ததை - இருப்பதை அறியலாம். அஃறிணைகளில் பெரும்பாலும் பெரிய உயிரினங்களே சிற்றுயிர்களை எடுத்துப் போட்டு விழுங்கும்.

ஆனால் மானுட சமுதாயத்தில் மட்டும் சிற்றினங்கள் பெருவாரியாக வாழும் மக்களைச் சுரண்டியே வாழும். தாங்கள் சுரண்டலுக்கு ஆட்படுகிறோம் என்பதைக் காலங்காலமாக அறியாமல் பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்தார்கள் - வாழ்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

கொதிப்பதை அடக்க எரிவதை இழுப்பதே எளிய வழி. மனிதனுக்குப் பரந்த அறிவைத் தருபவை பட்டறிவும் படிப்பறிவுமே. பழந்தமிழ்ப் புலவர்களின் கவிதைகளில் இவற்றின் வெளிப்பாட்டைச் சங்க இலக்கியங்கள் முழுவதிலும் காணலாம் தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம். 334:2) ஒரு முயல் எவ்வளவு நுட்பமாகப் பார்க்கப்பட்டுள்ளது என்பதை இச்சான்றின் வழி அறிய முடிகின்றது.

படிப்பறிவு மட்டும் இருந்தால் இவ்வாறு விளக்க வராது;பட்டறிவு வேண்டும். இரண்டையும் வளர விடாமல் காயடித்து விட்டால் மாடுகளாக ஏர் உழவும் வண்டி இழுக்கவும் நீர் இறைக்கவுமே காலம் போய் விடும்.

வருணத்தால் உயர்ந்தவர்கள், மதத்தால் உயர்ந்தவர்கள், நிறத்தால் உயர்ந்தவர்கள் என்று உலகம் முழுவதிலும் மார்தட்டிக் கொண்டிருந்தவர்கள் - இருப்பவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தவர்களின் உழைப்பைச் சுரண்டி உண்டதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ததாகத் தெரியவில்லை.

தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களின் வியர்வை மட்டுமல்லாமல் இன்னும் நிறையச் சிந்தி - ஊற்றி விளைந்தவற்றை உட்கொண்டு எப்படி இவர்களால் சிந்தித்துப் பல்வேறு வகையான பொது வாழ்க்கைக்கு உதவாத நீதிகளையும் தத்துவங்களையும் தங்கள் திருவாய்களில் இருந்து கக்க முடிந்தது என்பதை நினைக்கப் புதிராகவே இருக்கின்றது.

சுரண்டல் என்பது உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பக் காலங்காலமாக நடந்த கொண்டுதான் இருக்கின்றது. எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் எதிர்க்குரல் எழுந்துள்ளது.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
(புறம். 189: 1-5)

நாடாண்ட பாண்டியன் அறிவுடை நம்பி உழவிலும் தொழிலிலும் உற்பத்தி செய்யப்படுபவற்றையும் சுரண்டியும் பதுக்கியும் நுகர்வதை நயத்தக்க நாகரிகத்தோடு வெளிப்படுத்துகின்றார்.

உலகம் முழுவதிலும் தாய்வழிச் சமுதாய முறை வலுவிழந்து இனக்குழு வாழ்க்கை வலுப்பெற்ற காலத்திலிருந்தே - அஃதாவது ஆணாதிக்கம் மேலோங்கிய காலத்திலிருந்தே நாடு பிடிக்கும் மண்ணாசை தொடங்குகின்றது.

முடியாட்சிக் காலத்தில் நடந்த போர்களும் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசைக்காகவே நிகழ்ந்துள்ளன. அண்டை நாட்டுடன் போரிட்டுக் கொள்ளை அடித்தவற்றைப் பரிசாக வழங்கியமை சங்க இலக்கியங்களில் பதிவாகி உள்ளது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுழுடுமிப் பெருவபதி இவ்வாறு செய்ததைக் காரிக்கிழார் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.

அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி
(புறம்.6:15- 16)

உலகிற்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்ததாகப் பீற்றிக் கொள்ளும் இந்தோ-ஐரோப்பியரின் மண்ணாசைதான் ஆக்டோபஸ் போல உலகம் முழுவதையும் வளைத்துப் போட்டுக் கொண்டது.

அவர்களின் கோரப் பிடியில் இருந்து விடுபடக் காலங்காலமாக எவ்வளவு போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஜீவநதிகள் போல அன்று ஓடிய இரத்த ஆறுகள் உறைந்து கிடக்கின்றன; இன்றும் புதிய இரத்த ஆறுகள் உற்பத்தி ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன.

முடியாட்சிக் காலத்தில் மன்னர்களை அடியாட்களாக வைத்துக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள செழிப்பான நிலங்களை எல்லாம் மதத்தின் பெயரால் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள். உலகம் முழுவதையும் தங்கள் காலனி ஆக்கிக் கொண்ட ஐரோப்பியர் இருந்த காடு, மலைகளை எல்லாம் அழித்தார்கள். தொழிற்புரட்சி என்பதை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டினார்கள்.

‘நீ அவல் கொண்டு வா; நான் உமிகொண்டு வருகின்றேன்; இரண்டையும் கலந்து ஊதித்தின்போம் என்றொரு சொலவச் கூறுவார்கள்.அப்படித்தான் ஐரோப்பியர்கள் தொழில் வளர்ச்சிக்காக மரங்களை வெட்டி அழித்தார்கள்; நிலக்கரி போன்றவற்றைத் தோண்டி எடுத்தார்கள்.

காலங்காலமாக வேளாண்மை செய்து வாழ்ந்த மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டு அவர்களைப் பண்ணை அடிமைகளாக ஆக்கியதைப் போன்று தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டினார்கள்.

மானுடம் உயிர்த்திருத்தலுக்கு அடிப்படையான தொழில்கள் வேளாண்மையும் அது தவிர்த்த பிற தொழில்களுமே. எனவேதான் மகாகவி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (பார.பாட. 356) என அடிப்படையாக உள்ளவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார். இதனால் தான் காலங்காலமாகவே மூளை உழைப்பாளிகளாகிய வஞ்சிக்கும் நயவஞ்சகர்கள் உடல் சார்ந்து உழைப்பவர்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பொது நலம் சார்ந்து சிந்திப்பவர்களைத் தான் சிந்தனையாளர்கள் என்று தான் குறிப்பிட வேண்டும். உழவு, தொழில் சார்ந்து வாழ்வோரைச் சுரண்டி வாழ்வோரைச் சிந்தனையாளர் என்று கூற மனம் ஒப்பவில்லை. ஒட்டுண்ணி, புல்லுருவிகள் என்று கூறுவதே பொருந்தும்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ (புறம். 192: 1) என்றார் கணியன் பூங்குன்றனார். நாடு, மொழி என மக்களுக்கு வேறுபாடு இருக்கலாம்; இனத்தால் அனைவரும் மானுடரே. மக்களுள் வருணம் பிரித்த காலக்கட்டத்திலேயே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (திருக். 972) என்று அனைத்து உயிர்களுக்கும் ஒரே மதிப்பைக் கொடுத்த பெருமை உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரை மட்டுமே சாரும்.

உலகில் பல்வேறு மொழிக் குடும்பங்கள் காணப்பட்டாலும் எல்லாவற்றுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே. அவ்வாறு என்றால் எல்லா மொழிக் குடும்பங்களுக்கும் மூலமொழி (Proto - Language) ஒன்றே. மூலமொழி ஒன்றே என்றால் உலகம் எங்கும் பரந்து வாழும் மக்கள் அனைவரும் ஒரே குலத்தினரே.

ஆதி மானுட இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவியதாக மானுடவியல், தொல்லியல், மொழியியல் அறிஞர்கள் குறிப்பர். திருமூலர் ஒன்றே குலம் என்று குறிப்பிடுகிறார்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் முதிர்மொழி மேம்போக்காகக் கூறப்பட்ட ஒன்று அன்று; உலக இயக்கமும் வரலாறும் அதனுள் உயிர்த்துக் கொண்டுள்ளன. திரிபுவாதங்கள் கற்பனைக்கு ஏற்பப் புனையப்பட்டாலும் வரலாற்று ஆய்வின் முன்னர்த் தவிடுபொடி ஆகிவிடும்.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது பழமொழி மட்டும் அன்று; உண்மை மொழியும் அதுவே. உலகுக்கே நாகரிகத்தைக் கற்றுத் தந்தவர்கள் நாங்களே என்று மார்தட்டிய ஐரோப்பியர் மத்தியில் உலக நாடுகளின் வளங்களையும் உழைக்கும் மக்களின் உழைப்பையும் சுரண்டியவர்களும் ஐரோப்பியரே என முழங்கிய மாமேதை கார்ல் மார்க்சும் ஐரோப்பாவில் பிறந்தவரே!

ஐரோப்பாவிலும் கவர்ந்து கொண்ட அமெரிக்காவிலும் தொழிற்சாலைகள் பெருகின. பொருள் உற்பத்திக்கானமூலப் பொருளுக்கும் விற்பனைக்கும் ஐரோப்பியர்களுக்கு உலக நாடுகள் தேவைப்பட்டன. இவ்வகையான முதலாளித்துவ உற்பத்தி உறவில் தொழிலாளர்களுடன் முரண்பாடு தோன்றுவது இயல்பே.

கார்ல் மார்க்சுக்கு முன்னர் உலக இயக்கம், பொருளாதாரம் போன்றவற்றைப் பல அறிஞர்கள் எழுதி உள்ளார்கள். உயர்திணையாகிய மானுடத்தைப் போல எதிர்காலத் தேவைக்காக அஃறிணையில் எறும்பு, எலி, புலி போன்றவை சேர்த்து வைக்கும். புலியின் சேமிப்பு கூட அடுத்த நாளுக்குத்தான். புதிய இறைச்சியைவிடப் புழுவைத்து அழுகியதுதான் அதற்குப் பிடிக்குமாம்.

ஆனால் எறும்பு, எலியின் சேமிப்பு அவ்வாறு இல்லை. இவற்றின் சேமிப்பு ஏறக்குறைய அவற்றுக்குப் பயன்படுவதே இல்லை. ஈரம்பட்டு முளைக்கும்; நாள்பட்டால் மக்கிப் போகும். எலிபிடிப்போர் வளையை வெட்டும்போது உள்ளே பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெற்கதிர், நிலக்கடலை போன்றவற்றை அள்ளிப் போவார்கள். மானுடரின் தேவைக்கு அதிகமான சேமிப்பும் இவ்வாறுதான் போகும்.

பாம்புகளின் உணவுகளில் எலி முக்கியமானது ஆகும். சேமிப்புக் குணமிக்க எலியைப் பிடிப்பதில் சாரைப் பாம்பு ஏமாந்து போகும். எலி ஏமாற்றி விடும். எலி வளையில் பல அறைகள் இருக்கும். எல்லாவற்றையும் அடைத்து வைத்திருக்கும். சாரையால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நல்ல பாம்பு, எலி பதுங்கி உள்ள பகுதியை அறிந்து, வளையின் தடையைத் தகர்த்துப் பிடித்து விழுங்கி விடுமாம்.

மேலே குறிப்பிட்டவர்களைப் போன்று பலர் உழைப்பு, கூலி, உபரி போன்றவற்றைப் பேசினாலும் கார்ல் மார்க்சின் கோட்பாடு அளவிற்று அவர்களால் வீறுநடை போட முடியவில்லை. பெரும்பான்மையானவர்களின் ஆய்வுகள் உற்பத்திப் பொருள், அவற்றின் நுகர்வு தொடர்பானவற்றைப் பேசுகின்றன.

கார்ல் மார்க்சின் இயங்கியல் வாதம் என்பது உழைப்பு, கூலி, உபரி போன்ற தொழிலாளர்களின் அடிப்படையான வாழ்வியலோடு தொடர்புடைய பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுகின்றது.இதனால்தான் நல்லபாம்பைப் போலக் கார்ல் மார்க்சின் பொதுவுடைமைக் கோட்பாடு உலகம் முழுவதும் பரவி இண்டு இடுக்குகளை எல்லாம் ஆராய்கின்றது.

சோவியத்து யூனியன், சீனா போன்ற நாடுகளில் புரட்சி நடக்கக் கார்ல் மார்க்சின் சித்தாந்தமே அடிப்படைக் காரணமாக இருந்தது. செகஸ்லோவாக்கியா, கியூபா போன்ற சில நாடுகள் பொதுவுடைமைக் கோட்பாட்டை ஆரத் தழுவிக் கொண்டன. கழுகு, பருந்து, காகம் போன்ற சற்றுப் பெரிய பறவைகள் ஏகாதிபத்திய நாடுகளைப் போலக் குஞ்சுகளையும் சிறு பறவைகளையும் பிடித்துத் தின்னும்.

கரிச்சான், கருவாட்டு வாலி எனப்படும் சிறு குருவியைக் கொல்லை வயற் காடுகளில் காணலாம். கருப்பு என்றால் அப்படி ஒரு கருப்பு; விளக்கெண்ணெய் தடவியது போல இருக்கும். அதன் இறகுகள் பளபளக்கும். அரிந்தால் ஆப்பைக்குள் கிடக்கும் கரி முணுக்கைக் காண முடியாது. அவ்வவு சிறிய குருவி! ஆனால் அதனுள் அடங்கிக்கிடக்கும் சீற்றம் வெளிப்படும் போது கியூபா தான் நினைவுக்கு வரும்.

கழுகு, பருந்து, காகம் போன்றவற்றை எல்லாம் சீறிப் பறந்து தாக்கும், அவை பறக்கும் சிறகை ஒடுக்கிக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்யும். இணையாகப் பறந்து செல்லும் காகங்கள் இரண்டையும் அலங்க மலங்க அடித்து விடும்.

ஒரு சிறு கருவாட்டுவாலிக்கே இவ்வளவு கம்பீரம் இருந்தால் உலகின் பெருங்கூட்டமாகிய உழைக்கும் மக்களின் வீரம் எவ்வளவு வெளிப்பட வேண்டும்? மதம், விதி போன்றவற்றால் உழைக்கும் மக்களை அறியாமை, மூடநம்பிக்கை, வறுமை போன்ற சாக்கடை, புதை சேற்றில் உழன்று கொண்டிருந்த மக்களுக்கு விடிவெள¢ளியாய்த் தோன்றியவரே மாமேதை கார்ல் மார்க்ஸ்.

இந்தியாவின் வேற்றுமைகளில் காணப்படும் ஒற்றுமைகளில் ஒன்று நிலவுடைமை. இந்தியாவின் தென்கோடியிலிருந்து வடகோடி வரை எவ்வளவு ஒற்றுமையாக வளமான நிலங்களை எல்லாம் ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் அதிகார வர்க்கத்தின் துணையோடு மாற்றிக் கொண்டார்கள். சிறுசிறு நில உடைமையாளர்களாக இருந்த குடியானவர்கள் பண்ணை அடிமைகளாக மாற்றப்பட்டார்கள்.

சோவியத்து நாட்டில் தொழில் அடிப்படையிலும் சீனாவில் வேளாண்மை அடிப்படையிலும் புரட்சி தோன்றியதாக ஜே.சி.குமரப்பா போன்றோர் குறிப்பிடுகின்றார்கள். இந்தியாவிலும் வேளாண்மை அடிப்படையிலேயே உழைக்கும் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு தோன்றிப் பிற தொழில் செய்வோரிடமும் விரிவடைந்தது.

1920களில் கார்ல் மார்க்சின் சிந்தாந்தம் இந்தியாவில் கால்கோள் கொண்டது. ஒரு நிலப்பகுதியில் ஆறுகள் பாய்ந்தனவென்றால் அப்பகுதி முழுவதும் செழிப்பாக இருக்கும். மரம், செடிகள் வளர்ந்திருக்கும்; கொடிகள் பரந்திருக்கும். நடப்பவை, பறப்பவை, ஊர்பவை நிறைந்திருக்கும். நன்செய், புன்செய்த் தானியங்கள் நிறைய விளையும்; காய்கறி, பழம், கீரை போன்றவை தாராளமாகக் கிடைக்கும்.

இவ்வளவு செழிப்பு மிக்க ஒரு பகுதியில் கதிரோன் தோன்றினான்/கவலை கொண்டு ஏங்கினோம் / உடையோ கோவணம் / உணவோ நீராகாரம் எனப் பெரும்பான்மையாக வாழும் ஒரு வர்க்கத்தினர் புலம்புகின்றார்கள்.

இந்தக் கொடுமை கண்ணுக்குத் தெரியாத தொலை தூரத்தில் நிகழவில்லை. வான் பொய்ப்பினும் தான் பொய்யா / மலைத்தலைய கடற்காவிரி (பட். 5-6), சோழநாடு சோறுடைத்து எனப் போற்றப்படும் சோழநாட்டில்தான் நிகழ்ந்துள்ளது.

காலங்காலமாக நெருக்கடி இருந்தபோதிலும் விவசாயச் சங்கங்கள் தோன்றிய பிறகே வேளாண் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு பலர் கொல்லப்பட்டார்கள். 1968இல் கீழவெண்மணியில் நாற்பத்து நான்கு விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

பழந்தமிழகத்தின் மேற்கு மலைப் பகுதியில் தோன்றிய காவிரி காலங்காலமாகச் சோழ நாட்டை வளப் படுத்தியது. கர்நாடகமாகிய பிறகு வஞ்சிக்கத் தொடங்கிவிட்டது. இது ஒரு பக்க வரலாற்று மோசடி என்றாலும் கர்நாடகம் என்று நினைக்கும்போது நினைவுக்கு வருபவர் தோழர் பி.எஸ்.சீனிவாச ராவ்.

இவரை நினைவு கூரும்போது கொல்லைப் புளியங்காய் குளத்து மீன் கவுச்சியைப் போக்கியதைப் போல என்றொரு சொலவச் சொல்லை பொதுவுடைமைக் கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தோழர் ப.வெங்கடேசன் குறிப்பிட்டார். கீழத் தஞ்சைப் பகுதியில் பண்ணைத் தொழிலாளர்களாக வாழ்ந்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் பட்டபாட்டை அறிந்தபோதும் படிக்கும்போதும் நெஞ்சம் நெகிழ்ந்து போகின்றது.

ஆனால் வளமான நிலங்களைக் கொல்லைப்புற வழியாக உரிமை ஆக்கிக் கொண்டு, எந்த விதமான கூச்ச உணர்வும் இல்லாமல் பண்ணைத் தொழிலாளர்கள் உழைப்பை உறிஞ்சியவர்களின் மனம் கல்லாக இருந்ததுதான் கொடுமைகளின் உச்சம். பண்ணைத் தொழிலாளர்களைச் சாட்டையால் அடித்தார்கள்; சாணிப்பால் குடிக்க வைத்தார்கள். காலங்காலமாக நடந்த இந்தக் கொடுமைகள் நாடு விடுதலை அடைந்த பிறகும் நீடித்தன.

மக்களில் தொழிலால் வர்க்கப் பாகுபாடு இருக்கலாம்; பிறப்பில் வேறுபாடு இல்லை என்னும் கோட்பாட்டைத் திருவள்ளுவர் (திருக். 972) கூறியுள்ளார். அக்கருத்துதான் கார்ல் மார்க்சாலும் முன்மொழியப்பட்டது. உலகம் தழுவிப் பரவிய பிறகுதான் இந்தியாவிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.

நால் வருணத்தில் தாங்கள் சூத்திரர் என்பது அறியாமலேயே தங்களுக்குக் கீழ் அடிமை இனம் இருக்கிறது என்று நினைத்தவர்களுக்கும் கார்ல் மார்க்சின் சித்தாந்தம் புரிந்த பிறகுதான் விழிப்புணர்வு ஏற்பட்டது. எங்கும்போலவே சென்னை மாகாணத்திலும் பலர் பண்ணை அடிமைத் தனத்தை ஒழிப்பதற்காகவே தங்கள் இன்னுயிரை எடுத்துக் கொடுத்துள்ளார்கள்.

கீழத் தஞ்சையிலேயே நாடு விடுதலை பெற்ற பிறகு வேட்டையாடப்பட்டவர்கள் பலர். அவர்களில் களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன், சாம்புவானோடைச் சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் போன்றவர்கள் நினைவில் நீங்காதவர்கள்.

நிலவுடைமையாளர்களைப் பாதுகாக்க ஆளும் வர்க்கம் பொதுவுடைமை பேசிய தோழர்களைக் குருவிகளைப் போலச் சுட்டுத் தள்ளியது. சித்திரவதை செய்தது. சித்திரவதைக்கு ஆட்பட்டவர்களில் வயது முதிர்வால் பலர் இயற்கை எய்திவிட்டார்கள்.

தோழர் இரா.நல்லகண்ணு போன்று சிலர் அந்தக் காலக் கொடுமையான நிகழ்வுகளை தங்கள் வீரம் செறிந்த வாழ்வோடு இணைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள்.

பொதுவுடைமைக் கோட்பாட்டோடு தன்னை இணைத்துக் கொண்டு வாழ்நாளையே அதற்காக அர்ப்பணித்தவர்களில் தமிழகச் சூழலில் குறிப்பிடத் தக்கவர் தா.பா. என மரியாதையுடன் குறிப்பிடப்படும் தோழர் தா.பாண்டியன். அவருடைய நூல், கட்டுரைகளை நிறையப் படித்திருந்தாலும் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு ஒரே ஒரு முறைதான் ஏற்பட்டது.

பொதுவுடைமைப் போராளி ஏ.எம்.கோபு என்னும் நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவின்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கவிஞர் சண்முகம் சரவணன் அறிமுகப் படுத்தினார்.

உடல் நலம் சரியில்லாமல் அமர்ந்திருந்தவரிடம் பலரும் வந்து சில விநாடிகள் குனிந்து நின்று பேசிவிட்டு அகன்றார்கள். என்னை அறிமுகப்படுத்தியவுடன் நாற்காலியை பிடித்துக் கொண்டு எழுந்து விட்டார். அமருங்கள் என்றாலும் கேட்கவில்லை. ‘ஒரு பேராசிரியரை நிற்க வைத்து நான் அமர்ந்து கொண்டு பேசலாமா?’ என்று ஒரே சந்திப்பில் என்னை நெகிழ வைத்துவிட்டார்.

வயதில் மட்டும் அல்லாமல் பேச்சிலும் எழுத்திலும் முதிர்ச்சியைக் காணலாம். அவருடைய எழுத்தில் காண்பதைப் போன்று பேச்சு வழியும் உலக, இந்திய வரலாறுகள், பொதுவுடைமை வரலாறு, இலக்கியங்கள் போன்றவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அரசியல் ஆளுமைகளின் பேச்சைத் தோழர் தா.பா. மொழி பெயர்க்கும்போது கேட்டார்ப் பிணிக்கும் வகையில் இருக்கும்.

தோழர் தா.பா.நாட்டில் பிரச்சினைகள், சிக்கல் எழும்போது உடனுக்குடன் எவ்வாறு இயங்கினார் என்பதற்குக் கொரோனாத் தொற்று தொடங்கியபோது எழுதிய நூலே சான்றாகும். கொரோனாவும் கார்ப்பரேட்டும் 2020. (விளக்கம்) தேசியக் கட்சிகளாக இருந்தாலும் சரி, மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது.

அந்த வரலாறு தெரிந்திருந்தால் பிற்காலத்தில் வெளிப்படும் வரலாற்றுப் பிழைகளையும் திரிபுகளையும் சுட்டிக் காட்ட முடியும். பெரும்பாலான இளந்தலைமுறை அரசியல்வாதிகளுக்குத் தங்கள் கட்சியின் வரலாறே தெளிவாகத் தெரியவில்லை.

பெருமையாகப் பேசக்கூடிய வரலாற்று ஆசிரியர்களின் இந்திய வரலாற்று நூல்களைப் படிக்கும்போது அவர்களுக்குத் தெரியவில்லையா? திரிக்கின்றார்களா? நம்மைக் குழப்பி விடுவார்கள்.

இந்தியப் பண்பாடு என்பதை ஒற்றையாகப் பார்க்கக் கூடாது; முடியாது. இந்தியா முழுவதும் தமிழோடு தொடர்புடைய திராவிட மொழிகள் இருபத்தைந்துக்கும் மேற்பட்டவை தற்போதும் பேசப்படுகின்றன.

அண்மையில் இரா.பாலகிருஷ்ணன் (2019) எழுதி வெளியிட்டுள்ள நூலில் தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பான்மையான பெயர்கள் இந்தியா முழுவதும் காணப்படுவதைத் தொகுத்துக் கூறுகின்றார்.

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகத்தோடு தொடர்புடையது என்பதை இந்திய (Iravatham Mahadevan, 2003) வெளி நாட்டு அறிஞர்கள் (அலெக்சாந்தர் காந்திரதாவ், Asko Parpola) குறிப்பிடுகின்றனர். சிந்துவெளி அகழாய்வு நிகழ்ந்தபோது (ராகுல சாங்கிருத்யாயன், ந.சுப்பிரமணியன்) இந்நாகரிகம் திராவிட நாகரிகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிந்து வெளிநாகரிகம் ஆரிய நாகரிகம் அன்று எனத் தெரிந்தும் ஏதோ ஒரு குழுவின் நாகரிகம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்களே தவிர (ரிக்வேத கால ஆசிரியர்கள், பக். 6-7, இந்திய வரலாறு பக். 24) திராவிட நாகரிகம் என்ற உண்மையை ஏற்கவில்லை என்றால் அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

இந்தியப் பண்பாடு என்று பொத்தாம் பொதுவில் கூறிவிட முடியாது. திராவிடப் பண்பாடும் ஆரியப் பண்பாடும் கலந்தது என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம். இவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதற்கு மானுடவியல், தொல்லியல், மொழியியல், வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்கின்றன,

இந்திய, தமிழகச் சூழலில் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களில் மறைந்த தோழர் தா.பா. சற்று முற்போக்காகச் சிந்திக்கும் தன்மையானவர். அவர் பேச்சு, எழுத்துகள் வழி அறியமுடிகின்றது.

வர்க்க முரண்பாடு, பொருளாதாரம் பற்றியே அதிகமாகப் பேசும் பொதுவுடைமையாளர் மத்தியில் தமிழ்மொழி, தமிழர் நாகரிகம். ஈழத்தமிழர் பற்றி எல்லாம் தயங்காமல் எடுத்துப்பேசக் கூடியவர்; எழுதக் கூடியவர் தோழர் தா.பா. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைத் தோற்றுவித்து வளர்த்த தோழர் பா.ஜீவாவின் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.

வாழ்க்கைக்கு மூலதனம், உற்பத்தி, உழைப்பு, கூலி, உபரி போன்ற பொதுவுடைமைச் சித்தாந்தங்களை அறிந்து கொள்வது தேவை என்பது போல புற உலகை அறிந்து கொள்ள இதழ்களும் மனதைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும் அறிவை அகலமாக்கிக் கொள்ள மன்றங்களும் தேவை என்பதைத் தோழர் ப.ஜீவா போன்ற தொடக்ககாலப் பொதுவுடைமையாளர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

ஜனசக்தி அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும் தாமரை இதழ் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ளவும் தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பொது மக்களிடம் கருத்துச் சென்று சேரவும் பெரும் துணைபுரிகின்றன.

இவற்றை வளர்த்தெடுத்த தோழர் ப.ஜீவா அவர்களோடு தோழர் தா.பா.வின் பங்கும் அளப்பரியதாக இருந்துள்ளதை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வரலாற்றைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம்.

மகாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவர் இந்திய விடுதலைக்காக வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை மக்களிடம் எழுப்பிய விடுதலை உணர்வு போன்றவற்றைப் பார்க்காமல் சநாதன தர்மங்களை மீறியவர் என்று ஒதுக்கி வைத்தனர்.

மகாகவியின் முற்போக்குச் சிந்தனையை அறிந்து வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத் தக்கவர் தோழர் ப.ஜீவா. அவரை அப்படியே பின்பற்றி வாழ்நாள் முழுவதும் பழந்தமிழ் இலக்கியங்களையும் கவிச்சக்கரவர்த்தியையும் மகாகவியையும் உயர்த்திப் பிடித்தவர் தோழர் தா.பா. பேச்சாற்றலோடு அவர் எழுதி வெளிவந்துள்ள மொழிபெயர்த்துள்ள நூல்களின் பட்டியலைப் பார்க்கும் போதே வியப்பாக இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் (2002) ஜீவாவும்... நானும் (2004), கண்டேன் சீனாவை! (2006), அழியும் கருவிகளால் அழியும் மனித இனம் (2005), சோக வரலாற்றின் வீரகாவியம் (2006), இன்றைய இந்தியா (2007), பெரியார் என்னும் ஆளுமை (2012), கல்லும் கதை சொல்லும் (2012), நெல்சன் மண்டேலா (2014), காலச் சக்கரம் சுழல்கிறது (2015), பொதுவுடைமையரின் எதிர்காலம்? (2017), பெரியார் என்னும் இயக்கம் (2018), இந்தியாவில் மதங்கள் (2020), கொரோனாவா முதலாளித்துவமா? (2020), பாரதியும் சாதி ஒழிப்பும், இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை, படுகுழிக்குள் பாரததேவி, மதமா அரசியலா?, தெய்வத்திற்கு என்ன வேலை?, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பாரதியும் யுகப் புரட்சியும், ஒரு லாரி டிரைவரின் கதை, விழி திறந்தது வழி பிறந்தது, ரத்தப் பொட்டும் ரப்பர் அழிப்பும், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், மார்க்சிய சிந்தனைச் சுருக்கம், என் முதல் ஆசிரியர் நிலமென்னும் நல்லாள், மேடைப் பேச்சு, கம்பனின் அரசியல் கூட்டணி, திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம், சமுதாயமும் தனிநபரும்.

உடல் உழைப்பு இல்லாமல் எல்லா மதங்களுமே அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப நீதிகளை வகுத்துக்கொண்டு உழைக்கும் மக்களைச் சுரண்ட வழிவகுத்துக் கொடுத்துள்ளன. உலக அளவில் மதமும் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் உழைக¢கும் மக்களைச் சுரண்டும் முறையைக் கார்ல் மார்க்ஸ் வெளிப்படுத்திய பிறகு எங்குமே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.

தொடக்க காலத்தில் அரசியல், சமுதாய விழிப்புணர்வு எனப் பொது நலம் சார்ந்த பணியில் ஈடுபட்டவர்கள் நிறையப் படித்தார்கள்; எழுதினார்கள். மக்களோடு ஒன்றிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். களத்தில் இறங்கியும் போராடினார்கள். அந்த வகையில் பொதுவுடைமைப் போராளிகளில் தோழர் தா.பாவும் குறிப்பிடத் தக்கவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை அவரது எழுத்துகள் வழி அறிந்து கொள்ளமுடிகின்றது.

இன்னொரு வியப்பு என்னவென்றால் இந்தக் கொரோனாத் தொற்றுக் காலம் அப்படியே உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது. முதியவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பல்வேறு வகையான தொற்றா நோய்களுடன் மருந்து மாத்திரைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு அறுபது – எழுபது - எண்பதுகளைக் கடந்து கொண்டிருந்தவர்களை எல்லாம் தொற்றும் கொரோனா இலகுவாகப் பிரித்து எடுத்து விழுங்கிவிட்டது.

அறிவியலில் பருந்து போல உயரப் பறக்கின்றோம் என்று மார்தட்டிக் கொண்டிருந்த நாடுகளை எல்லாம் கொரோனாத் தொற்று மண்ணைக் கவ்வவைத்து விட்டது. எவ்வாறு சமாளித்தோம் என்பது பெருமை அன்று; ஏன் வந்தது? எப்படிப் பரவியது என்பதைப் பார்க்க வேண்டும்.

இளைஞர்கள் நிறைந்த இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் கொரோனாத் தொற்று முடக்கத்தால் என்ன பாடுபட்டார்கள் படுகின்றார்கள் என்பதை ஊடகங்கள் வழி அறியும்போது தான் உலக நடப்பையே அறிந்து கொள்ள முடிகின்றது.

செவ்வாய் போன்ற அண்ட கோளங்களை ஆராய்வதோடு இந்தப் பூகோளத்தை என்ன பாடுபடுத்தி இருக்கின்றோம் என்பதை ஆராய வேண்டியதில்லை. ஒரு பருந்துப் பார்வை பார்த்தாலே போதும். கழுதை தின்றதும் இல்லாமல் படுத்துப் புரண்ட கதையாக உலகிலுள்ள எல்லா வளங்களையும் அழித்துக் குப்பை மேடுகளாகவும் மாற்றி விட்டோம். மந்திரத்தால் மாங்காய் விழாது என்பது போல மழையும் பெய்யாது.

நோயோ, பேரிடரோ வருகின்றமையைத் தடுக்க முடியாது. ஆனால் அவை வந்த பின் மக்களை எவ்வாறு ஆளும் வர்க்கம் காப்பாற்றுகின்றது என்பதில்தான் அதன் வெற்றி அல்லது தோல்வி வெளிப்படும்.

திருவள்ளுவப் பெருந்தகை நோய்நாடி என ஈராயிரடும் ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு மூத்த - பழுத்த அரசியல்வாதி கொரோனாத் தொற்று பரவியதும் கொரோனாவா? முதலாளித்துவமா? (2020) என்னும் நூலில் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

தீநுண்மி எனும் இக்கொடிய கிருமி முற்றாக ஒழிக்கப்படக் கூடியது அல்ல என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் நோயைத் தடுக்கும் வலிமையையும் உடல் நலத்தையும் பேணுவதன் மூலம் நோய் எதிர்ப்புச்சக்திக் கூடுவதன் மூலம் நச்சுக் கிருமியின் பாதிப்பைச் சமாளிக்க முடியும் என அவர்கள் கருதுகின்றனர்.

ஆகவே, போதிய சத்துணவை சகல மக்களுக்கும் வழங்கும் முதற்கடமையை அரசுகள் ஏற்க வேண்டும். ஆயுதத் தடவாளங்களால் நோய்த் தடுப்பை உருவாக்க இயலாது. அவை பயனற்றவையாக ஆக்கப்பட்டு விட்டன. ஒரு விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தயாரிப்பதை நிறுத்தினால் போதும். அந்த உற்பத்திச் செலவில் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற பல நாடுகளில் காணப்படும் உணவுப் பற்றாக் குறையை ஒரே நாளில் தீர்த்து விட முடியும் (பக்.5).

வெளிநாடுகளை விட்டுவிடலாம்; இந்தியாவில் கொரோனாத் தொற்றுப் பரவியதும் என்ன நிகழ்ந்தது? பணமதிப்பு இழப்புக் காலத்தில் மக்கள் திண்டாடித் தெருவில் நின்றது போல. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் உடம்பைத் தண்டித்து உழைக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அழுக்குப் படாமல் குளிர்சாதன வசதி உள்ள அறையில் பணி புரிந்தவர்கள் கூட நிலை குலைந்து போனார்கள்.

பெரும் நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி; மற்றவர்களுக்குக் கடன்; தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிப்பு; இராமர் கோயில் போன்றவை கட்ட அடிக் கல் நாட்டு விழா! எரிபொருள்களின் விலை ஏற்றம் காலங்காலமாகவே ஆளும் வர்க்கத்திடம் போராடியே வாழும் (அந்தோலன்) வேளாண் பெருமக்களின் போராட்டம் எனப் பல்வேறு பிரச்சினைகள்.

‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது’, பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது’ என்பார்கள். பெரும் பெரும் பொருளாதார நிபுணர்கள் இந்தியா மீண்டு விட்டது - மீண்டு கொண்டிருக்கின்றது என்கிறார்கள். குளுகுளு அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் அந்த நிபுணர்களுக்கு உண்மை புரியும்.

கொரோனாவா? முதலாளித்துவமா? என்னும் இந்நூல் மட்டுமல்லாமல் தோழர் தா.பா. எழுதியுள்ள நூல்கள் அனைத்திலுமே ஆன்மீகவாதிகள் உலக நலனுக்காகப் பொத்தாம் பொதுவில் வேள்வி செய்வது போன்றில்லாமல் எந்தெந்த நாடுகள் முதலாளித்துவம், எதேச் சதிகாரத்தின் பிடியில் சிக்கித் தவித்தனவோ தவிக்கின்றனவோ அவற்றைப் பற்றி எல்லாம் மிகவும் நுட்பமாக எழுதுகின்றார்.
ஆப்பிரிக்காவின் விடுதலைக்காகத் தம் வாழ்நாளின் (27 ஆண்டுகள்) பெரும் பகுதியைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா (2014) பற்றிய தோழர் தா.பா.வின் நூலைப் படிக்கும்போது நெஞ்சமே பதற்றப்படுகின்றது.

தொடக்க காலத்தில் மதம் உட்பட அனைத்துமே மானுடத்தின் மேன்மைக்காகவே வழி வகுத்துக் கொடுத்தன. மனிதர்களை மிருக உணர்விலிருந்து செந்தண்மை பூண்டொழுக அறவழி நடக்கும் மனிதர்களாகப் பண்பாடு வளரச் சான்றோர்கள் மதங்கள் என்பதைப் போதித்தார்கள் (இந்தியாவில் மதங்கள், பக்.12). காலவோட்டத்தில் போர் வெறியால் உலகில் ஏற்பட்டுள்ள அழிவுகளைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு எழுதுகின்றார். மதபோதனைகளும் போர் வெறிபிடித்தவர்களைப் பண்படுத்த இயலாமல் தோற்றுவிட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது (பக்.13).

கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் ஒரு தத்துவப் போராட்டமாகவே காலங்காலமாகவே நிகழ்ந்துள்ளது,உண்டு என்பவர்களும் இல்லை என்பவர்களும் ஒரே மேடையில் திறந்த மனதுடன் வாதிட்டிருக்கின்றனர், ஜீவாவும்... நானும் (2004) என்னும் நூலில் தோழர் ஜீவா. பேராசிரியர் சீனிவாசராகவன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் மேடைகளில் ஒன்றாக இருந்து நயத்தக்க நாகரிகத்துடன் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததைத் தோழர் தா.பா. பதிவு செய்துள்ளார் (பக். 66-67).

நன்னெறிகளைத்தான் சான்றோர் வேதம், சாத்திரம், பண்பு, ஒழுக்கம் எனப் போதித்து வந்துள்ளார் (இந்தியாவில் மதங்கள், பக். 13) எனக் குறிப்பிடும் தோழர் தா.பா. விதி விலக்கு இல்லாமல் எல்லா மதங்களிலும் தலைமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யும் பித்தலாட்டங்களைப் பல நூல்களிலும் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டுகின்றார்.

பொதுவுடைமைவாதியாக இருப்பவர் கடவுள் மறுப்பாளராக இருப்பதில் வியப்பில்லை. பெருவாரியான மக்களைக் காலங்காலமாகவே ஆளும் வர்க்கம் ஏதாவது பிரச்சனையில் மாட்ட வைத்தே குதிரைச் சவாரி செய்து கொண்டே இருக்கும். அவ்வாறு உழலும் மக்கள் தலைவிதி, கடவுளை நம்பியே காலத்தைக் கழிப்பார்கள்.பட்டம் பெற்றுப் பணியில் இருந்தால் பகுத்தறியக் கற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது பொருள் அன்று. கைகளிலும் கால்களிலும் கட்டியிருக்கும் வண்ணம் கயிறுகளைக் கொண்டே அறிந்து கொள்ளலாம்.

தந்தை பெரியார் என்னும் பெயரைக் கேட்டதும் சிலர் வெறுப்பின் உச்சத்திற்கே போய் விடுகின்றார்கள், திங்கிற சோத்துல மண் அள்ளிப் போடுற ஆளு என்னும் சொலவச்சொல் பெரியாருக்கே பொருந்தும். அப்படிப்பட்ட தந்தை பெரியாரைத் தோழர் தா.பாவுக்கு மிகவும் பிடிக்கும். பெரியாரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பெரியார் ஒருவர்தான் துவக்கத்தில் இருந்து கடைசி வரை ‘கடவுள் இல்லை’ என்று முழங்கியவர் ஆவார். நெருங்கி யாராவது கடவுள் இல்லை, என்று கேட்டால் இல்லை என்பார், நிஜமா இல்லை, என்று கேட்டால் இல்லவே இல்லை என்பார் (பெரியார் என்னும் ஆளுமை, ப.19).

கடவுள் என்பது ஒரு நம்பிக்கையே தவிர, அப்படி ஒன்று உலகில் எங்கும் இல்லை என்பதை கண்ணுக்குத் தெரியாத கொரோனாத் தொற்றுக் கூட மக்களுக்குக் கற்றுத் தர முயற்சி செய்து விட்டது.பகுத்தறிவு படைத்த ஆணவமோ என்னவோ தெரியவில்லை.

இயற்கையும் தனக்கு அடங்க வேண்டும் என்று நினைக்கிறான், அது பொறுத்துப் பொறுத்துப் பொறுமையில் எல்லையைக் கடந்து வறட்சி, வெள¢ளம், பூகம்பம், சுனாமி, கொரோனா போன்ற வடிவில் திருப்பித் தாக்கும்போது மனிதன் திணறிப் போகிறான், ‘குடல் எரியவும் குடிக்கக் கூடாது; குடி எரியவும் தின்னக் கூடாது’ என்பார்கள்.

குடல் எரியப் பலபேர் வறுமையில் உழல்கின்றார்கள்; ஆனால் உலக இயற்கை வளம் அழியும் வகையில் சுரண்டிச் சிலர் உலகப் பணக்காரர் ஆகின்றார்கள். ஆளும் வர்க்கங்களும் அவர்களுக்கு முட்டுக் கட்டை கொடுக்கின்றன; காரணம் அவர்கள் அவற்றுக்கு முட்டுக் கொடுப்பதால்.

பொதுவுடைமையரின் வருங்காலம்? (2017) என்றொரு நூலைத் தோழர் தா.பா. எழுதியுள்ளார். பொதுவுடைமைக் கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் குறிப்பாகச் சோவியத்து யூனியன் வீழ்ச்சியைப் பற்றிப் பேசுகின்றார்கள்.

காலங்காலமாகவே மதச் சேற்றில் உழன்று கொண்டு அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் என்னும் சுமைகளால் அழுத்தப்பட்டு வாழ்ந்த மக்களைக் கரைச் சேர்த்தது மாமேதை கார்ல் மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தமே என்பதை முரண்படுகின்றவர்கள் கூட ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

பொதுவுடைமைச் சித்தாந்தம் மண்ணுக்கு ஏற்பச் செப்பம் செய்யப்பட வேண்டும். பொதுவுடைமைக் கோட்பாட்டின் வருங்காலம் பற்றித் தோழர் தா.பா.வின் சிந்தனைப் போக்கு எப்படி உள்ளது என்பது பதிப்புரையில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இந்தக் கட்சி, அந்தக் கட்சி மட்டுமில்லை; ஒட்டு மொத்தமாக எல்லோரையும் உள்ளடக்கி விவாதிக்கும் முறை; அவ்வாறு விவாதிக்கும்போது இன்னார் நம்மவர் - நம் கட்சி, இன்னார் பிறர் - பிற கட்சி என்ற பிரிவினையோ, பொதுவுடைமைக் கோஷ்டிப் பிரிவினைகளோ கருத்திற் கொள்ளாமல் அடிப்படையான தத்துவார்த்தக் கேள்விகளின் மீது கவனம் குவிக்கிறார் (ப.ப).

அண்மையில் (26.02.2021) இயற்கை தோழர் தா.பா.வைப் பற்றி நிறைய எழுதிக் கொண்டே போகலாம். உலக, இந்திய, தமிழக வரலாறு, அரசியல், இலக்கியம் போன்றவற்றில் ஆழங்கால் பட்டவர். ஒடுக்கப்படும் நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பதில் முன் நிற்கின்றார்.

வளர்ச்சி இயற்கையை அழிக்காமல் சீராகப் பரந்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்னும் கருத்தை எழுத்து, பேச்சு என இரண்டின் வழி முழங்கிக் கொண்டிருந்தவர் தோழர் தா.பா. பொதுவுடைமைச்சித்தாந்தங்களில் எவ்வளவு மாற்றங்கள் சரிவுகள் ஏற்பட்டாலும் அவை ஏகாதிபத்திய மனத்தின் தாக்கத்தால் ஏற்பட்டவையே.

மனிதனின் அடிப்படைத் தேவைகளையும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற உரிமைகளையும் சுரண்டலற்ற சமுதாயத்தையும் பொதுவுடைமைச் சிந்தனையால் மட்டுமே கொடுக்க முடியும் - பெறமுடியும். தோழர் தா.பா.வின் எழுத்துகள் இக் கருத்துக்குச் சான்றுகளாக உள்ளன.

நோய் அவரை முடக்கிப் போட முயற்சி செய்தாலும் இறுதி மூச்சு வரை தம் எழுத்தாலும் பேச்சாலும் இயங்கிக் கொண்டிருந்த தோழர் தா.பா. இளைய சமுதாயத்திற்கு எழுச்சியை ஊட்டக் கூடியவர் என்பதை அவர் வாழ்க்கை உணர்த்திக் கொண்டே இருக்கும். 

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It