தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கலைஞர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் லட்சியத் தோழர்கள் ஏழு பேரையும் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. கலைஞர் ஆட்சி இவர்கள் மீது பிறப்பித்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் செல்லாது என்று, கடந்த ஏப்ரல் 26, 27 தேதிகளில் உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்தது. மூத்த வழக்கறிஞரும், கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, கழக வழக்கறிஞர் இளங்கோவன் ஆகியோர் இந்த வழக்கில், தோழர்கள் சார்பில் வாதாடினர்.

சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கழகத் தோழர் எஸ்.குமரன், நீதிமன்றத் தீர்ப்பினையொட்டி, ஏப்.20 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஏற்கெனவே, இவர் மீது காவல்துறை, கிரிமினல் சட்டப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்திருந்த வழக்கில், இவருக்கு பிணை கிடைத்திருந்ததால், உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏனைய தோழர்கள் மீது ரத்து செய்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், ஏற்கனவே அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குத் தொடர்பாக, பிணை பெறப்பட வேண்டியிருப்பதால், உயர்நீதிமன்றத் தீர்ப்பினையொட்டி இவர்கள் உடனடியாக விடுதலையாக முடியவில்லை.

வியாழக்கிழமை - பெரம்பலூர் மாவட்டத் தோழர்கள் இலக்குமணன், தாமோதரன் ஆகியோர் விடுதலையானார்கள். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள் இராம. இளங்கோவன், குமரகுருபரன், முருகானந்தம், அர்ச்சுனன் ஆகியோர் மீதான பிணை மனு, வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வருகிறது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தினை எதிர்த்து இராம. இளங்கோவன் சார்பாக அவரது துணைவியார் நாத்திக ராணியும், குமரகுருபரன் சார்பாக அவரது துணைவியார் ஜோதியும், இராம. முருகானந்தம் சார்பாக அவரது தாயார் புஷ்பாவும், அர்ச்சுணன் சார்பாக அவரது துணைவியார் ரஞ்சிதாமணியும், லெட்சுமணன் சார்பாக அவரது நண்பர் சாக்ரடீசும் தாமோதரன் சார்பாக அவரது சகோதரர் இளங்கோவனும் மற்றும் குமரன் சார்பாக அவரது துணைவியார் கவுரி குமரனும் கழக வழக்கறிஞர்கள் வி. இளங்கோவன் மற்றும் எம்.செந்தில் குமார் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு’ மனுக்களை தாக்கல் செய்தனர்.

வழக்கறிஞர் வி. இளங்கோவனின் வாதத்தை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் கே.மோகன்ராம் ஆகியோர் ‘ஆட் கொணர்வு’ மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு 11.2.2007 அன்று தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

பெரும் பரபரப்புடனும், ஆவலுடனும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 7 வழக்குகளில் இலட்சுமணன், தாமோதரன் மற்றும் குமரன் ஆகிய மூவரின் வழக்குகளை மட்டும் 26.4.2006 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் ஜே.ஏ.கே.சம்பத் குமார் ஆகியோர் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.

பெரியார் திராவிடர் கழக ஆட்சிக் குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி ஆஜராகி அவர்கள் மீது போட்ட வழக்குகளுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் பொருந்தாது என்றும், பூணூல் அறுத்ததாக சொல்லப்பட்டதாலேயே தேசத்திற்கு என்ன பங்கம் ஏற்பட்டுவிட்டது என்றும் வாதிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடினார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் போட்டது சரி தான் என்றும் இச்சம்பவத்தினால் இந்திய தேசத்திற்கு ஊறு ஏற்பட்டது என்றும், மாநில அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் பாபுமுத்து மீரானும் மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் குமரேசனும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களை வெளியே விட்டால் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்றும், இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு பேரிடர் ஏற்படும் என்றும் வாதிட்டனர். வழக்கறிஞர் துரைசாமியின் வாதத்தை ஏற்று நீதிபதிகள் மூவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்றும், உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து இலட்சுமணன், தாமோதரன் மற்றும் குமரன் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்றும் 26.4.2007 அன்று உத்தரவிட்டனர்.

அதே போன்று ஈரோடு மாவட்ட கழகத் தோழர்கள் சார்பாக தாக்கல் செய்த ஆட் கொணர்வு மனுக்கள் நீதிபதி பி.கே. மிஸ்ரா மற்றும் ஆர். சுதாகர் ஆகியோர் முன்னிலையில் 27.4.2007 அன்று விசாரணைக்கு வந்தது. இம்முறை ஜே.எ.கே. சம்பத் குமாருக்கு பதிலாக நீதிபதி ஆர். சுதாகர், நீதிபதி பி.கே.மிஸ்ராவுடன் விசாரணையில் அமர்ந்தார். வழக்கறிஞர் துரைசாமி மற்றும் வழக்கறிஞர் இளங்கோவன் பல்வேறு முன் தீர்ப்புகளை எடுத்துக்காட்டி, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என வாதிட்டனர்.

வழக்கம் போல் மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் கடுமையாக ஆட்சேபம் செய்தனர். ஆனால் நீதிபதி பி.கே. மிஸ்ரா மற்றும் ஆர். சுதாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கழகத்தினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறானது என்றும், ஆவணங்களை சரியாக ஆராயாமல் தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்து உடனடியாக நால்வரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவிக்க உத்தரவிட்டனர்.

கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அய்ந்து மாத சிறைவாசத்துக்குப் பிறகு தோழர்கள் விடுதலையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெரியார் சிலையில் கை வைத்தால் தமிழ்நாடு பொறுக்காது என்பதை, பெரியார் திராவிடர் கழகம், வரலாற்றில் பதிவு செய்து - இந்த மகத்தான ‘விலை’யைத் தந்துள்ளது.

வழக்கில் - வாதாடி - தோழர்கள் விடுதலைக்குக் காரணமான வழக்கறிஞர் துரைசாமி, இளங்கோவனுக்கு, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள், சால்வை அணிவித்துப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

கழக வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதங்கள்

நீதிமன்றத்தின் முன் கழகத் தோழர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி மற்றும் வி. இளங்கோவன் ஆகியோர் முன் வைத்த வாதங்கள்:

தங்கள் முன் உள்ள ஆவணங்களைச் சரிவர ஆராயாமல் இயந்திரத்தனமாக ஈரோடு மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்களாலும் சென்னை மாநகர காவல்துறை ஆணையராலும் கழகத்தின் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது தவறு.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கூடிய அளவிற்கு தேச பாதுகாப்பு விரோத நடவடிக்கைகளிலும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையிலும் கழகத்தினர் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டாலும் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் அடங்கிய தொகுப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குள் கைதிகளுக்கு வழங்காமலிருந்தது அவர்களின் உரிமையை பாதிப்பதாகும். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு தடுப்புக் காவல் ஆணையை எதிர்த்த விரைவாக முறையீடு செய்து கொள்ளும் உரிமையானது மறுக்கப்பட்டுள்ளது.

கழகத்தினர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்பதற்கு ஆதாரமேதுமில்லை.

பூணூல் அறுத்த சம்பவம் தேச விரோதம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கமா? பூணூல் என்ன தேசத்தின் புனித நூலா?

ஈரோடு மாவட்ட கழகத் தோழர்களுக்கு எதிராக போடப்பட்ட முந்தைய வழக்குகள் அனைத்தும் அதாவது 17.3.2006 அன்று நடைபெற்ற விசுவ இந்து பரிசத் மாநாட்டை எதிர்த்து ஈரோடு நகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தது, இரண்டாவதாக 26.5.2006 அன்று டெல்லியில் வேலை நிறுத்தம் செய்து வரும் உயர் சாதி பார்ப்பன மாணவர்களைக் கண்டித்து ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பாக இராம.இளங்கோவன் மற்றும் 38 நபர்களும் கோஷம் எழுப்பி தர்ணா போராட்டம் செய்தது.

மூன்றாவதாக 22.11.2006 அன்று ஈரோடு நகராட்சி அலுவலகம் முன்பாக இடஒதுக்கீடு தொடர்பாக வீரப்பமொய்லி தாக்கல் செய்த அறிக்கையினை எரித்து போராட்டம் நடத்தியது ஆகிய 3 வழக்குகளும் சட்டப்பிரிவு 151 குற்ற விசாரணை முறை சட்டத்தில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எந்தவிதமான தேச விரோத நடவடிக்கைகளிலும் இதற்கு முன் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும், ஆனால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் உத்தரவில் ஏற்கனவே இவர்கள் பொது அமைதி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று பொய்யாக குறிப்பிட்டுள்ளது வேண்டுமென்றே இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரிவு 3(2)ன் கீழ் கைது செய்யத்தான்.

தடுப்புக் காவல் உத்தரவில் சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் பொருட்டு கழகத்தினர் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு ஆதாரம் ஏதும் வழங்கப்படவில்லை.

தனிப்பட்ட சொத்தை சேதப்படுத்தினர் என்பதற்கு தான் போலீசார் ஆவணங்களை காட்டியுள்ளனரே தவிர பொதுச் சொத்தை சேதப் படுத்தியதாக கழகத்தினர் மீது எந்தவிதமான சாட்சியங்களும் இல்லை.

உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் அரசியல் கட்சியினர் உத்தரவின் படி வேண்டுமென்றே ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கழகத்தின் மீது போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் லெட்சுமணன், தாமோதரன் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது 17.12.2006. ஆனால் அவர்கள் இருவரையும் 15.12.2006 அன்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்துவிட்டதாக பெரம்பலூர் நீதித் துறை நடுவரிடம் தெரிவித்துள்ளது பொய்யானது, ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று.

லெட்சுமணன் மற்றும் தாமோதரன் ஆகியோர் எந்த சூழ்நிலையிலும் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் தரவில்லை. அதற்குண்டான ஆவண ஆதாரமே இல்லாதபோது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தமது உத்தரவில் சொல்லிருப்பது கற்பனையானதாகும், வேண்டுமென்றே சொல்லப்பட்டதாகும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லியுள்ளார்.

சென்னை மாவட்ட கழகத் தோழர் குமரன் ஜாமீனில் வெளிவந்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி அசோக் நகர் காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும்போது நிபந்தனைக் காலம் முடிவதற்கு முன்பே குமரன் இது போன்றே தேசவிரோத நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடலாம் என்று கூறி எந்தவிதமான ஆதாரமுமில்லாமல் அவரை தடுப்புக் காவலில் வைத்தது தவறானதாகும்.

சென்னை மாநகர ஆணையருக்கு தமிழ் படித்து எழுத வராது. அப்படி இருக்கும்போது அவர் எப்படி ஒரே நாளில் நூற்றுக்கணக்கான தமிழிலுள்ள ஆவணங்களைப் படித்து புரிந்து கொண்டு ஒரே நாளில் குமரன் மீது தமிழில் உத்தரவு பிறப்பித்திருக்க முடியும்.

சென்னை மாநகர ஆணையர் தம் உத்தரவில் குமரன் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் எந்தவிதமான சாட்சியோ, ஆவணமோ குமரன் சொல்லப்பட்டதாகச் சொல்லும் ஒப்புதல் வாக்குமூலத்திலே குமரன் தான் பெட்ரோல் குண்டுகளை எரிந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. ஆகவே கற்பனையாக உள்ள சம்பவங்களைக் கொண்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தது செல்லாததாகும்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றாலே பிரிவு 3(1) அல்லது 3(2)-ல் தான் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால், குமரனுக்கு மட்டும் பிரிவு 10 இன் கீழ் சென்னை மாநகர ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதென்பது யாரோ எழுதிக் கொடுத்து அதில் ஆணையர் கையொப்பமிட்டதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டத்தை சரிவர பரிசீலிக்காமல் போடப்பட்ட உத்தரவாகும்.

Pin It