‘தேசிய அறிவு ஆணையம்’ என்று ஒரு அமைப்பு இதன் தலைவராக இருப்பவர், கணினி நிபுணராகப் போற்றப்படும் டாக்டர் சாம்பிட்ரோடா! இந்த ‘அறிவு ஆணையம்’ பெங்களூரில் கூடி, ‘இடஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது; தேசிய நலனைப் பாதிக்கும்’ என்று அறிவித்தது. எப்படி பாதிக்கும்? என்பது பற்றி எல்லாம் இந்த “அறிவாளிகள்” - ஆய்வு எதுவும் நடத்தவில்லை. இடஒதுக்கீட்டுக்கு மாற்றாக திட்டங்கள் எதையும் முன்வைக்கவில்லை.

இவைகளை எல்லாம் செய்யாமல், பொத்தாம் பொதுவாகக் கருத்துக் கூறுவதற்கு, ஒரு ‘அறிவு ஆணையம்’ தேவையா? இதைவிட மிகவும் வேடிக்கை - அறிவு ஆணையத்தின் தலைவரான சாம்பிட்ரோடா அளித்த ஒரு பேட்டியாகும்! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்பதே தனக்குத் தெரியாது என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் தலைசிறந்த அறிவாளியின் கதை இப்படி இருக்கிறது! இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இருந்த விஞ்ஞானி டாக்டர் பி.எம். பார்கவா, பொருளாதார பேராசிரியர் ஜெயந்திகோஷ் இருவரும், இந்த ‘இடஒதுக்கீடு எதிர்ப்பு கருத்து’ தங்களுக்கு உடன்பாடில்லை என்று அறிவித்துவிட்டனர். அதற்காக அவர்களைப் பாராட்டலாம்.

மான்டினிகுரோ தனிநாடானது

மான்டினிகுரோ எனும் சின்னஞ்சிறிய நாடு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி தனிநாடாகியிருக்கிறது. முன்னாள் யூகோஸ்லோவியாவில் அடங்கியிருந்த நாடுகள் தனித்தனியாக பிரிந்த பிறகு, செர்பியா - மான்டினிகுரோ என்ற இரு நாடுகள் மட்டும் தங்களுக்குள் கூட்டமைப்பை 2003-ல் உருவாக்கிக் கொண்டு இருந்தன. ஒரே கூட்டமைப்பாக இருந்தாலும், இரு நாடுகளும் தனித்தனிப் பாராளுமன்றங்களைக் கொண்டிருந்தன.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பிரிந்து போக விரும்பினால், வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து போகலாம் என்று இரு நாடுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, வாக் கெடுப்பு நடத்தி மான்டினிகுரோ, செர்பியா கூட்டமைப்பி லிருந்து பிரிந்து தனிநாடாகியுள்ளது. பிரிந்து போவதற்கு ஆதரவாகக் கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் புள்ளி 5 சதவீதம் மட்டுமே! 13812 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம். மக்கள் பேசும் மொழி மான்டினிகுரோ.

அமெரிக்க ஊடகங்களில் கறுப்பர்களுக்கு உரிமை

1922-ல் அமெரிக்காவில் ‘அமெரிக்க சமூகத்திற்கான பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்’ என்ற அமைப்பு துவக்கப்பட்டது. அமெரிக்க பத்திரிகைகளில் கறுப்பர் மற்றும் மைனாரிட்டிகள் 3.95 சதவீதம் மட்டுமே 1975-ல் இருந்தனர். 1978 ஆம் ஆண்டு இந்த சங்கம் நடத்திய மாநில மாநாட்டில் கறுப்பர் மற்றும் மைனாரிட்டிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது பற்றி விவாதித்து, இதை மாற்றி அமைக்க முடிவெடுத்தனர்.

2000 ஆம் ஆண்டை இலக்காக வைத்து, அதற்குள் கறுப்பர் மற்றும் மைனாரிட்டி சமூகத்தினர், அவர்கள் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப, பத்திரிகையாளர்களாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இதற்காக பத்திரிகை அலுவலகங்களில் கறுப்பர்கள், மைனாரிட்டிகளுக்காக பயிற்சி மய்யங்கள் துவக்கப்பட்டு பயிற்சிகள் தரப்பட்டன. வேலை வாய்ப்புக்கான கண்காட்சிகள் நடத்தப்பட்டு, கறுப்பர்கள் பத்திரிகையாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 1446 பத்திரிகைகளில் 950 பத்திரிகை நிறுவனங்கள், இந்த முடிவுக்கு உடன்பட்டு செயல்பட்டன. இதன் விளைவாக, இப்போது அமெரிக்க பத்திரிகைகளில் 11.64 சதவீதம் கறுப்பர்கள் மற்றும் சிறுபான்மையினர் வந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி பத்திரிகைகள்,

அதில் பணியாற்றும் கறுப்பர் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் எண்ணிக்கை விவரம்: (விற்பனையாகும் பத்திரிகை எண்ணிக்கை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.)

பத்திரிகை விற்பனையாகும் கறுப்பர் மற்றும் பெயர் பிரதிகள் மைனாரிட்டிகள்

வால்ஸ்டீரிட் ஜர்னல் 17.52 லட்சம் 17.1 %
நியூயார்க் டைம்ஸ் 11.32 லட்சம் 16.2 %
லாஸ்ஏஞ்செல்ஸ்டைம்ஸ் 10.80 லட்சம் 18.7 %
யு.எஸ்.ஏ. டுடே 17.58 லட்சம் 18.7%
வாஷிங்டன் போஸ்ட் 7.75 லட்சம் 19.5%

சூப்பர்வைசர், லே அவுட் எடிட்டர், செய்தியாளர், புகைப்படக் கலைஞர் என்று 56,393 கறுப்பர்கள் மற்றும் மைனாரிட்டிகள் அமெரிக்க பத்திரிகைகளில் பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்க பத்திரிகையாளர் சங்கம், இத்தகவல்களை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதனுடைய லட்சியத் திட்டமாக ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டுள்ளது. அந்தப் பிரகடனம் இவ்வாறு கூறுகிறது:

“அனைத்து சமூகத்தினருக்கும் முழு வாய்ப்பு வழங்குதற்கும், ஜனநாயகத்தில், அனைத்து சமூகங்களும், உரிய பங்களிப்போடு கடமையாற்றுவதற்கும், சந்தை வாய்ப்புகளில் வெற்றி பெறுவதற்கும், நாட்டின் ஒவ்வொரு பத்திரிகை செய்தி அறையும், அமெரிக்காவின் பல்வேறு இனங்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்க வேண்டும்” என்று அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஊடகங்களில் கறுப்பர்கள், சிறுபான்மையினர் எண்ணிக்கை 38 சதவீதத்தை எட்டிவிடும் என்றும் அமெரிக்க பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. (ஆதாரம்: சந்திரபான் பிரசாத்)

இது அமெரிக்காவில் உள்ள நிலை!

Pin It