பெருந்தெய்வ வழிபாடு, இடைத் தெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு - எனக் கடவுள் வழிபாட்டில் மூவகையுள்ளன.

சிவன், திருமால், பிரம்மன் வழிபாடு பெருந்தெய்வ வழிபாடு. காளியம்மன், மாரியம்மன், அய்யனார் முதலிய வழிபாடு - இடைத் தெய்வ வழிபாடு. மதுரை வீரன், சுடலை மாடன், வீரமாச்சியம்மன், மீனாட்சியம்மன், பட்டத்தரசியம்மன், அத்தனூரம்மன் என நீளும் வழிபாடு - சிறு தெய்வ வழிபாடு.

காக்கையை முன்னோராகக் கருதுவதும், நம் மக்களின் நம்பிக்கை. படைப்புச் சோற்றை வீட்டுக் கூரை மீது போட்டு, காக்கை உண்ட பின்பே உண்ணத் தொடங்குவது இன்றும் தொடரும் வழக்கம். (விருந்தில் நஞ்சு கலந்துள்ளதா என்பதைக் காக்கைக்கு முதலில் வைத்து அறிந்து கொள்வதே இதன் உண்மை நோக்கம்.)

பலி கொடுத்தல் முறை - இப்போது மாறிவிட்டது. உயிர் பலி கொடுப்பதற்கு மாறாக - குங்குமம் பூசிய பூசணிக்காயையோ எலுமிச்சம் பழத்தையோ வெட்டிக் குருதி சிந்துவதுபோல் காட்டப்படுகிறது. அம்மை நோய் வந்தால் - மாரியம்மன் கோவில் பூசாரிக்கு இளநீர், பனங்கற்கண்டு, கோழி, ஆடு எனப் பூசைப் பொருட்களும், காணிக்கைகளும் முன்பு குவியும்; இன்று மறைந்து விட்டது. தூய சைவர்கள் கூட அச்சம் காரணமாக ஆடு, கோழி, பலி கொடுத்து இறைச்சியைப் பிறருக்கு வழங்கி விடுவது அன்றைய வழக்கம்.

சுடலை, மாரி, சூலக்கல் மாரி - என ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த தெய்வங்கள், இன்று மக்களின் நினைவிலிருந்து மறைந்து விட்டன.

அய்யப்பன், ஆதிபராசக்தி, மூகாம்பிகை முதலிய புதிய தெய்வ வழிபாடுகள் இப்போது அறிமுகமாகியுள்ளன.

தாயின் வயிற்றிலிருந்து நாம் வந்ததற்கு அடையாளமே நமக்குள்ள தொப்புள், பிறப்பு இல்லாமல் தானாகவே தோன்றிய கடவுளுக்கு எப்படித் தொப்புள் வந்தது? அறிவியல் எழுப்பும் இந்த வினாவிற்கு விடை சொல்லத் தெரியாமல் விழிக்க வேண்டியுள்ளது. கடவுள்களின் தொப்புளை மறைத்து ஓவியமும் சிறப்பமும் அமைப்பதில் - இன்று ஓவியர்களும் சிற்பிகளும் கவனமாய் உள்ளனர்.

‘எல்லாம் மாறியே தீரும்’ என்னும் விதிக்குக் கடவுள்களும் கூட தப்ப முடியவில்லை - என்பதையே கடந்த கால வரலாறு காட்டுகிறது.

 ‘மதம், கடவுள், மனிதன் - வளர்ச்சி வரலாறு’ நூலில் புலவர் செந்தலை ந. கவுதமன்

Pin It