இன்றைக்கு தமிழ் வணிகம் செழிக்க, அன்னிய செலவாணி தமிழ்நாட்டுக்கு வருவதை தடுக்கின்ற முயற்சியாக மதவாதிகள் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை தடுக்க களம் இறங்கி இருக்கிறார்கள். ராமன் கட்டிய பாலத்தை இடிப்பதா என்கிறார்கள். வால்மீகி இராமாயணத்திலுள்ள செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இராவணன் மிகவும் ஒழுக்க சீலன்.
அவன் எந்த பெண்ணின் சம்மதமும் இல்லாமல் தொட்டால், அவளுடைய மனம் புண்படுமேயானால், இராவணன் தலை சுக்கு நூறாக உடைந்துவிடும் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது. அப்படியானால் சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போனபோது சீதை சம்மதம் இல்லாமல் இருந்தால் இராவணன் தலை வெடித்து இருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை என்றால், சீதையின் சம்மதத்தோடு போயிருக்கிறாள் என்றுதான் பொருள்படும்? இதில் யார் ஒழுக்கசீலன்?
ராமன் குடிகாரனாகவும், மாட்டுக்கறி சாப்பிடுகிறவனாகவும் இருந்திருக்கிறான். இதை நாம் மேடையில் பேசினால் இந்துக்கள் மனம் புண்புடுகிறது என்றால் நம்மை குரங்குகளாக, அயோக்கியர்களாக சித்தரிக்கிறார்களே, எங்கள் மனம் எவ்வளவு புண்படும்? இந்த ராமர் யோக்கியதை தெரியுமா? இவன் ஆட்சி செய்கிற காலத்தில் சம்பூகன் எனும் சூத்திரன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான். அப்பொழுது வேதம்தான் பாடம். அதை படிக்கவோ, காதில் கேட்கவோ சூத்திரருக்கு உரிமையில்லை. அதனால்தான் பார்ப்பான் அழுதுக் கொண்டே ராமனை நோக்கி வருகிறான். ராமனைப் பார்த்து ராமா உன் ஆட்சியில் அக்கிரமம் நடக்கிறது என்றும் அக்ரகாரத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அதற்குக் காரணம் சம்பூகன் என்ற தாழ்த்தப்பட்டவன் கடவுளை நோக்கி தவம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள்.
ராமன் காட்டிற்கு சம்பூகனிடம் சென்று தனது வலது கைக்கு ஆணையிடுகிறான். அவன் தலையை வெட்டு என்கிறான். அவன் தலை வெட்டப்படுகிறது. அவன் உயிர் பிரிந்தது. உடனே அந்த பார்ப்பனக் குழந்தை உயிர்த்தெழுந்ததாம். இப்படிப்பட்ட இராமன் ஆட்சிதான் இந்தியாவிற்கு வரவேண்டும் என்று பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் போன்ற பார்ப்பன அமைப்புகள் கூறி வருகின்றன.
மும்பையில் (தாராவில்) புறநகர் தி.மு.க. மாவட்டத் தலைவர் அப்பாதுரை, துணைத் தலைவர் குமணராசா, இளைஞரணி தலைவர் இராசேந்திரன் (தமிழர்கள், பகுத்தறிவாதிகள்) ஆகியோர் இராமரைப் பற்றியும், இராமர் பாலம் பற்றியும் விவாதிக்கக் கூடினார்கள். அப்பொழுது அங்கு வந்த இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ்.யைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக வந்து நம்முடைய ஆட்கள் குறைவாக இருந்ததால் எளிதாக தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். ஆனால், இதில் என்ன ஆச்சர்யம் என்றால் தாக்கிய குழுவின் தலைவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடேசன் என்பவர் நமது நாடார் இனத்தைச் சார்ந்தவர்.
எந்த இராமனுக்கு ஆதரவாக இவர்கள் தாக்கினார்களோ அவர்கள் நிலை இந்து மதத்தில் என்னவாக இருந்தது தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்களை தொட்டால் தீட்டு, நாடார்களை கண்ணால் பார்த்தாலே தீட்டு என்ற நிலை. இதைவிட மிகக் கொடுமை நாடார் குல பெண்கள் மேல் ஆடை அணியக் கூடாது என்ற நிலை இருந்தது. அதற்கென்று ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. நாடார் குல பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், அவர் வீட்டு முன்பு சமஸ்தானத்து பல்லக்கு வண்டி வந்து நிற்கும். அந்தப் பெண்ணை வண்டியில் அனுப்பி வைக்கவேண்டும்.
இந்த நிலையை மாற்ற அவரவர் வீட்டுக் கதவில் கிருஸ்துவ மதக் குறியை வரைந்தார்கள். அப்படி வரைந்த வீட்டுக்கு சமஸ்தானத்து வண்டி வந்து நிற்காது. அப்படி இந்த சமுதாயத்தின் பெண்களைக் காப்பாற்றியது கிருஸ்துவ மதக்குறியே தவிர இராமன் இல்லை. ஆனால், இன்றைக்கு இராமனுக்காக இந்த நாடார் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள், தம் சொந்த தமிழர்களையே தாக்குகின்ற சம்பவம் நமக்கு வேதனை அளிக்கிறது.