சகோதரர்களே!

“சமய சீர்த்திருத்தம்” என்பது பற்றி பேசுவது என்பது என்னைப் போன்ற ஒருவருக்கு இலேசான காரியமல்ல. அதற்குத் தக்க ஆராய்ச்சி வேண்டும். சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசவும் எனக்குப் போதுமான திறமையில்லை. நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லை. கடந்த ஆறேழாண்டுகளாக அரசியலில் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நடைபெற்று வந்த காங்கிரசில் நான் உழைத்து வந்தது அன்பர் பலர் அறிவர். அரசியலின் மூலம் நாட்டின் சீர்திருத்தத்திற்கு அரும்பாடு பட்டும் யாதொரு பலனும் அடைய இயலாமல் போனதாலும், அதற்கு காரணம் சமய சம்மந்தமான கொள்கைகளே தடை என்று உணர்ந்ததாலும் அக்குறைகளை நீக்க உழைப்பதுதான் அவசியமெனத் தோன்றிய பின்னர் அவ்வழியில் உழைத்துப் பார்க்கலாமென முற்பட்டேன். சமயத்தின் பேரால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும் விடுதலைக்கு விரோதமானவைகளையும் மக்கள் சுயமரியாதையற்ற வாழ்க்கையில் துன்புறுவதையும் ஒழிக்கவே முதலில் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் விடுதலை அடைய முடியும். நம் நாடு விடுதலையடைய முடியாததற்கும் சுயமரியாதையற்ற தன்மையில் வாழ்வதற்கும் நமது சமயக் கொள்கைகள்தான் இடையூறாக இருக்கின்றன.

periyar03நான் இப்பொழுது பேசினால் கேட்போர்களில் சிலருக்கு மன வருத்தமாய்த்தான் தோன்றும். ஏனெனில் நம் மக்களுக்கு சமயப் பற்று என்கிற மூட நம்பிக்கையை சுயநலக்காரர்கள் அதிகமாய் ஊட்டிவிட்டார்கள். அது நமது இரத்தத்திலும் நன்றாய்க் கலந்து விட்டது. சுலபமாய், கேட்போருக்கு சமாதானம் சொல்லி சரிப்படுத்த முடியாத அளவு பதிந்திருக்கின்றது. நாட்டின் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் நான் பேசும் விஷயங்களை உறுதியாய் நம்புகிறேன். நம் நாட்டிற்கு என்றுமே விடுதலை இல்லாத வழியில் காரியங்கள் சமயத்தின் பேரால் நடைபெற்று வருவதைத் தெரிவித்தால் சிலர் மனம் வருந்தும். அதற்குப் பயந்து வெளிப்படுத்தாமல் போனால் நான் சுயநலம் கருதுபவனாவேன்; அல்லது பயங்காளித்தனம் கொண்டவனாவேன். பகுத்தறிவைக் கொண்டு பொது நிலையில் இருந்து ஆராய்ச்சி செய்தால் நான் சொல்லுவதில் குற்றம் சொல்ல அவசியமிராது. சமய விடயம் பேசும் பொழுது அதன் பயனாய் அரசியலிலும் ஏற்பட்ட குற்றங் குறைகளை கூற வேண்டி இருக்கிறது. அரசியலில் நான் தீவிர வேலை செய்தேன் என்பது இங்குள்ள பலர் அறிவர். பின்பு அவ்வனுபவத்தைக் கொண்டு அஃதல்ல விடுதலை அடைய பாடுபடும் வழியெனக் கருதியே அதை விட்டு வெளியேறினேனேயன்றி, மற்றபடி யாராலாவது வெளியேற்றப்பட்டோ, அல்லது சிறு அபிப்பிராய பேதம் ஏற்பட்டோ வெளிவந்தவனல்ல. நான் சாதாரண நிலையிலிருந்து வெளிவரவில்லை. அரசியலில் ஒரு பொறுப்புள்ள பதவியிலும் உத்தியோகத்திலுமிருந்தே நான் வெளி வந்தேன். நமது நாட்டுக்கு இவ்வரசியல் இயக்க மூலம் ஒன்றும் ஆகாது எனக் கருதியே வெளிவந்தேன். காஞ்சிபுரம் மகாநாட்டில் தான் இவ்வுணர்ச்சிகள் பலப்பட்டு வெளிவந்தேன். அரசியலில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், தமிழ்நாட்டுக் காரியதரிசியாகவும் பல ஆண்டுகள் இருந்தேன். அப்பொழுதுதான் நான் ஆற்றும் தொண்டு வீண் தொண்டெனவும், நமது எதிரிகளுக்கு அனுகூலமாய் இருந்து கொண்டு நாட்டையும் சமூகத்தையும் பாழாக்குகின்றோம் எனவும் கருதி நான் விலகினேன்.

மத சம்பந்தமாகவும் எனது நிலையை நீங்கள் அறிய வேண்டுமானால் 1904 ஆம் வருடம் முதல் 1927 ஆம் வருடம் சூன் மாதம் வரையில் சுமார் 23 வருட காலமாக எனது தாலூகாவாகிய ஈரோடு சர்க்கில் தேவஸ்தான கமிட்டிக்கு காரியதரிசியாகவும் தலைவனாகவுமிருந்தேன். இந்துமத பரிபாலன போர்டாரும் எனது நிர்வாகத்தைப் பற்றி பெருமை பாராட்டியே பேசியும், எழுதியும் வந்திருக்கிறார்கள். தற்பொழுது உண்டாகிய புதிய போர்டார் புதிய கமிட்டியை நியமிக்கவே, அவர்கள் நான்கு தாலூகாவிற்கு ஒரு கமிட்டியாக ஏற்படுத்தி அதில் என்னையும் தேவஸ்தானக் கமிட்டி அங்கத்தினராக நியமித்திருக்கிறார்கள். தற்கால மந்திரி சபைக்கும் எனக்குமுள்ள சம்மந்தம் நீங்கள் அறிந்த விடயமே. அவர்கள் செய்யும் குற்றங்களைப் பளிங்கு போல் எடுத்துக் காட்டி வருகின்றவர்களில் நான் ஒருவன். அப்படி இருந்தும் அவர்கள் என்னை நியமித்தார்கள். என்னைப் பற்றிய பிராதுகள் பல அவர்களுக் குப் பார்ப்பனர்கள் அனுப்பி என்னை நியமிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அவைகளில் முதல் பிராது நான் குற்றவாளி என்றும், சிறை சென்றவனென்றும், இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டவனென்றும் எழுதி அனுப்பினார்கள். அந்த பிராது எனக்கே என் பார்வைக்கு வந்தது. நான் அவர்கள் எழுதியதெல்லாம் உண்மை தான். ஆனால் மூன்று தடவை சிறை சென்றேன் என்பதற்கு பதிலாக இரண்டு தடவை என்று எழுதியதுதான் பிழை என்று திருத்தி அனுப்பி விட்டேன்.

மறுபடியும் பல பார்ப்பனரல்லாதாரிடமும், பல பார்ப்பனர்களிடத்திலும் கையொப்பம் வாங்கி “இவன் மதத்தை நிந்திக்கிறான். எப்பொழுதும் பார்ப்பனரையே வைகிறான். வேண்டுமானால் சி.ஐ.டி. ரிப்போர்ட்டர்களின் ரிப்போர்ட்டுகளைப் பாருங்கள்” என்று ஒரு விண்ணப்பம் சர்க்காருக்கு அனுப்பினார்கள். அதைப் பற்றியும் சர்க்கார் என்னைக் கேட்டார்கள். நான் அதற்கு பதில் எழுதியதில் நான் ஒரு வகுப்பாரை மாத்திரம் வையவில்லை. எல்லோரையும் வைகிறேன். என் தொண்டுக்கு எந்தெந்த வகுப்பார் கொள்கை எதிரிடையாக இருக்கிறதோ அவர்களைக் கண்டியாமல் இருக்க என்னால் முடியாதென்றும், எல்லாருக்கும் சம உரிமை வழங்கப்படுவற்காக உழைக்கிறேனேயல்லாமல் வேறு அல்லவென்றும் அறிவித் தேன். மறுபடியும் என்னை நியமித்தார்கள்.

சென்னைக்கு வருவதாலும் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதனாலும் எனது தலைமைப் பதவியைப் பொறுப்பு வாய்ந்த ஒருவருக்குக் கொடுத்து நான் இன்று வரையில் உபதலைவராகயிருந்து வருகிறேன். என்னை சிலர், நான் செய்யும் உபந்நியாசங்களைக் கேட்டு ‘நாஸ்திகன்’ ‘மதத்தை நிந்திக்கிறவன்’ என்றும் ‘சுயராஜ்ய விரோதி’ என்றும் ‘சர்க்கார் நேசன்’ என்றும் குறைகூறி வருவார்கள். சர்க்காருக்கு வேண்டியவன் என்பதற்கு அறிகுறி ஒன்றும் எனக்குப் புலப்படவில்லை. சர்க்கார் அன்று என்னை எப்படி பாவித்து நடத்தி வந்தார்களோ அதுபோலவே இன்றும் என்னை நடத்தி வருகிறார்கள். இன்னும் எனக்குப் பின்னால் போலீஸ்காரர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நான் உங்கள் முன்னிலையில் சொல்ல வந்தது சமய சீர்திருத்தம். நான் சொல்லுவதையெல்லாம் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டுமென்றும், அதன்படி நடக்காவிட்டால் பாவம் வரும் என்றும் சொல்லி பார்ப்பனர்களைப்போல் நான் உங்களை ஏமாற்ற வரவில்லை. நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்டு பிறகு உங்கள் பிரியம்போல் நடவுங்கள் என்று சொல்லிய பின்பே நான் இன்று பேச எடுத்து கொண்ட சமய சீர்திருத்தம் என்னும் விஷயத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறேன்.

சமய சீர்திருத்தம்

சமயம் என்பதும், மதம் என்பதும் ஒன்றுதான். சமய சீர்திருத்தம் என்றால் மதத்தை சீர்திருத்த வேண்டுமென்பதுதான் பொருள். சமயம் அல்லது மதம் என்றால் பொருள் என்ன? மதம் வேண்டுமென்கிற உணர்ச்சி எப்போது உண்டாயிற்று? மதம் எதற்காக வேண்டும்? என்பவைகளை உணர வேண்டும். மதம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் எந்த முறையில் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றால் மக்கள் கூடி கூட்டமாக வசிக்க ஏற்பட்டவுடன் அவர்களுடைய நித்திய வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருக்கவும் மற்றவர்களுக்கு மனிதன் துன்புறுத்தாமல் உபயோகப்படுகின்ற முறையில் தான் ஏற்படுத்தப்பட்டது. அந்த முறையில் ஏற்படுத்தின காலத்தில் அக்கால மக்களுக்குள்ள அறிவு, ஆற்றல், நிலைமை, சீதோஸ்ண ஸ்திதி முதலியவைகளுக்கு ஏற்றவாறு ஒரு சிறு கொள்கைகளை அமைத்து உண்டாக்கி இருக்க வேண்டும்; நாளைடைவில் அது வளர்ந்து கொண்டும் தனி மனிதன் பெருமைக்கும், அவன் ஆசைக்கும் பிறகு அரசியலுக்கும் ஆக சிறிது சிறிதாய் மாறி இப்போதுள்ளவைகள் போல் சமயம் ஏற்பட்டிருத்தல் வேண்டும். நமது நாட்டில் ஆதியில் சமயம் ஏற்பட்ட காலத்தில் சமயத்திற்கும் அரசியலுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அக்காலத்தில் அரசியலில் நம் மக்களுக்குள்ள உணர்ச்சி இல்லை. உணர்ச்சி உண்டாக வேண்டிய அவசியமுமில்லை. ஏன்? பதினாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள சரித்திரங்களை ஆராயுங்கள். அக்காலத்தில் வேளாண்மை மிகுதியுமிருந்தது. ஒவ்வொருவனுக்கும் வேண்டிய பொருள்கள் அனைத்தும் இருந்து வந்ததோடு மிகுதியும் பட்டது.

நெல் வைத்திருப்பவன் பருத்தி வைத்திருப்பவனுக்கு நெல்லைக் கொடுத்து பருத்தியோ அல்லது துணியோ பெறுவான். இதுபோல் எல்லா சௌகரியமும் உண்டு. இதுதான் பண்டமாற்றுதல் என்று பெயர். நம்மவர்கள் ஓய்வு நேரங்களில் சிந்தித்ததிலேயே சில சட்டங்களும் மற்ற சமய கட்டுப்பாடுகளும் ஏற்பட்டது. ஆனால் இதுதான் பின்னால் நம் நாட்டிற்கு வந்த பார்ப்பனர்கள் கவலையற்று இருந்த நம் மக்களை ஏமாற்றி தங்கள் நன்மைக்குத் தகுந்தபடி திருப்பி தங்களுக்கு இவைகள் எல்லாவற்றையும் அடிமையாக்கிக் கொண்டு இவைகளுக்குத் தாங்களே கர்த்தாவாகவும் எஜமானர்களாகவும் ஆகிவிட்டார்கள். கொள்கையொன்றும் ஏற்படவில்லை. அவரவர் இஷ்டம் போல் அனுபவித்தார்கள். மகமதிய மதமும், கிருஸ்துவ மதமும் வெறும் கடவுளை வணங்குதல் என்பதோடல்லாமல் வர வர அரசியல் கருத்தைக் கொண்டும், தங்கள் தங்கள் மதத்தை பொறுத்த வேலை செய்தும், செய்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் நாம் கட்டுப்பட்டுக் கிடக்கும் சமயத்தையோ அந்த காலத்திலிருந்த நிலையிலே இருக்க வேண்டுமேயல்லாமல் ஒரு சிறிதும் மாற்றக்கூடாது என்கிறார்கள். இதை நம்புகிறவர்களும் பிடிவாதக்காரராய் இருக்கிறார்கள்.

இங்குதான் அபிப்பிராய பேதம் ஏற்படுகிறது. நமக்கு அவசியமானபடி நாம் மாற்றிக் கொள்ளல் வேண்டும். அப்படி மாற்றுவதில் அடியோடு மாறவும் ஏற்படலாம். நம் மதம் கட்டுப்பாடு உடையதல்ல. ஒரு குறிப்புக்கு ஒத்ததல்ல. இக்காரணமே நம்மை அடிமையாக்கிற்று. ஆனால் இதனை நம் மக்கள் அறியார். இப்படி இருந்தால் நாம் எப்பொழுது முன்னேற்றமடைய முடியும்? நாம் எப்படி அடிமை வாழ்வினின்று நீங்கி சுயமரியாதையுடன் வாழமுடியும்? ஆகையால் ஒரு நாடோ, ஒரு தேசமோ சுயமரியாதையுடன் வாழ தடுக்கின்றவர்களை அழிக்க உடனே முற்படல் வேண்டும். பிடிவாதக் குணத்தை விட்டொழித்து மக்கள் நிலைமைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு காரியங்களை முடித்து தடைகளை அகற்றி சுயமரியாதை அடைந்து விடுதலை பெற வேண்டும்.

இந்து மதம்

சிலர் தங்களை இந்து என்கிறார்கள். ஆனால் அவர்களை இந்து என்றால் என்ன என்றால் 100 -க்கு 90 பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படி இருந்தும் நம் மக்கள் மூட நம்பிக்கையால் மதத்தின் பேரால் கொண்டுள்ள அன்பு செப்பத்தரமல்ல. மற்ற மதக்காரர்கள் அவைகளை அறிவது போல் நம் மதம் நாம் அறியக் கூடாதவர்களாயிருக்கிறோம். மகம்மதியர்களில் 100 -க்கு 90 பேர் தங்கள் மதத்தைப் பற்றி தெரிந்தவர்களாயிருக்கிறார்கள். நம் மக்களை யாராவது உங்கள் மதம் என்ன? யார் ஏற்படுத்தியது? அதன் காலம் என்ன? இது போன்ற வினா வெழுப்பினால் பதில் சொல்லுவாரில்லை. மகமதியரையோ அல்லது கிறிஸ்தவர்களையோ அல்லது புத்தர்களையோ வேறு யாரையோ கேட்டால் உடனே பதில் சொல்லத் தயாராயிருக்கிறார்கள். இந்து மதத்தில் இவர்கள் கற்பிக்கப்படும் வயது இலேசானதல்ல. அதாவது கடையில் உள்ள காகிதங்களையெல்லாம் வாங்கி அதில் ஒன்று போட்டு அதன் பின் எத்தனை முட்டை வடிவம் போட்டாலும் அதற்கு மேல் போகுமேயன்றி குறையாது. தலைவர் யார் என்றால் சொல்லும் நிலைமையிலில்லை. கடவுளால் ஏற்பட்டது என்பர் சிலர். ஆதாரம் என்னவென்றால் வேதம் என்பார்கள். அது என்ன சொல்லுகிறது என்றால் நீ பார்க்கக் கூடாது, நீ கேட்கக் கூடாது, படிக்கக் கூடாது என்பார்கள். அதை கடவுள் எழுதியிருப்பார் என்று யாராவது நம்ப முடியுமா? என்று பாருங்கள். ஒரு பொழுதும் முடியாது. ஏனெனில் கடவுள் சொன்ன வேதமானால் உலகத்தார் எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும். யாரும் பார்க்க வேண்டும். அப்படி இருக்க நாம் எப்படி அந்த வேதத்தை நம்புவது அதன்படி நடப்பது?

மற்ற மதக்காரர்கள் தங்கள் வேத நூல்களை பல மொழிகளில் மொழி பெயர்த்து அச்சிட்டு தங்கள் மதஸ்தர்கள் அல்லாத ஒவ்வொருவர் கையிலும்கூட கிடைக்கும் வண்ணம் தங்கள் வேதத்தையும் மதத்தையும் பரப்பி வருகிறார்கள். முகமதியர்களும் கிறிஸ்தவர்களும் இத்தகைய முயற்சி எடுத்து தங்கள் மதங்களையும் வேதங்களையும் மற்ற மக்களிடம் பரப்பினதால்தான் ஏழரைக்கோடி முகமதிய சகோதரர்களும் ஒரு கோடி கிறிஸ்தவர்களும் நமது நாட்டில் உண்டாக நேரிட்டது. இந்த ஏழரைக் கோடி முகமதியரும் அரபி அல்லது துருக்கி முதலிய தேசத்திலிருந்து வந்தவர்களென்று யாராவது சொல்ல முடியுமா? முடியாது. அப்படி வந்தவர்களும் ஒரு கோடிக்கு மேலிருக்க முடியவே முடியாது. மற்ற மக்கள் நம் ‘இந்து’ மதத்திலிருந்து பிரிந்து சேர்ந்தவர்களேயாவார்கள். கிறிஸ்துவ சமயத்திலும் வெளியிலிருந்து வந்தவர்கள் 2 அல்லது 3 இலட்சம் பேரே இருப்பார்கள். மற்ற 97 இலட்சம் பேரும் நம் மக்கள்தான். திருவனந்தபுரத்திலே 40 இலட்ச மக்களுள் பதினாறரை லக்ஷம் கிறிஸ்தவர்களும் மூன்றரை லக்ஷம் முகமதியர்களும் உண்டாகி இருப்பார்களானால் எத்துணை மக்கள் நம் சமயம் விட்டு பிற சமயம் புகுந்தார்கள் என்பது இதில் காணக் கிடக்கின்றது.

வாரம் ஒன்றுக்கு இந்துக்கள் என்போர்களில் 4000 பேர் அன்னிய மதம் புகுகின்றார்கள். காரணம்? அவர்கள் மத பிரசாரம் செய்கிறார்கள். மத பிரசாரம் செய்து ஏற்றுக் கொண்ட மக்களுக்கு முதலில் மதத்தைப் பற்றியும் கல்வியிலும் பயிற்சியடையச் செய்கிறார்கள். பின்பு அவன் வாழ்க்கையை செவ்வனே கழிக்க ஒரு தொழில் ஏற்படுத்தி பின்பு தங்கள் மதமே உலகத்தை ஆள வேண்டுமென்ற உணர்ச்சியை உண்டாக்குகின்றார்கள். இவ்வளவு காரியத்திற்கும் அவர்கள் வெகு குறைந்த பணத்தைத் தான் மதத்தின் பெயரால் செலவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் நாம் மதத்தின் பேரால் செலவிடுவதில் 100-ல் ஒரு பங்கு கூட செலவு செய்ததில்லை. நம்மைப் போல் மற்றெந்த மதக்காரர்களும் செலவிட மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் நம் நாட்டிற்கு வந்து சொற்ப நாள்களுக்குள் நம்மக்களைச் சேர்த்து கல்வி கற்பித்து அவர்களை நமக்கு எஜமானர்களாக்கியிருக்கிறார்கள். உயரிய நிலைக்கும் கொண்டு வருகிறார்கள். 100 -க்கு 90 பேர் படிக்கும்படி செய்து வருகிறார்கள். ஆனால் கடவுளால் ஏற்படுத்தப்பட்டதென்றும் கோடிகோடி வருஷங்களானதென்றும் சொல்லும் நமது மதத்தையோ பெரும்பான்மையான மக்கள் படிக்கக்கூடாது. அப்படி மீறி படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும், படித்து விட்டால் நெஞ்சை அறுக்கவும் மற்றும் பலவிதமான தண்டனைகள் உண்டு.

இதன் பலனாய் வெள்ளைக்கார அரசாங்கம் நமது நாட்டிற்கு வந்து இப்போது கூட 100 -க்கு 5 பேர்தான் படிக்க முடிகின்றது. அதிலும் 100 -க்கு 90 பேர் பார்ப்பனர்கள். ஆனால் இப்போது சிலர் “நாங்கள் படிப்பதை தடுப்பதில்லை. வேதத்தைதான் படிக்கக் கூடாதென்கிறோமேயன்றி வேறில்லை” என்கிறார்கள். வேதகாலக் கல்வி இக்காலத்தைப் போன்று இங்கிலாந்து, ஐரோப்பா, அரேபியா முதலிய சரித்திரங்களல்ல. மற்றும் சேக்ஸ்பியர், மெக்காலே முதலியவர்களால் எழுதின நூல்களுமல்ல. ஆனால் அக்காலத்திய கல்வியென்பது நீதிகளை உணர்வது. நீதிகளோ வேதமாய் விட்டது. வேதமோ நாம் படிக்கக் கூடாதது. இம்முறையில் நாம் 1000 - க்கு ஒருவராவது படிக்க முடியுமா? வெள்ளைக்கார ராஜாங்கம் வராதிருந்தால் நம்மில் ஆயிரத்துக் கொருவராவது படிக்க நமது மதம் இடம் தந்திருக்குமா? வேதம்தான் படிக்கக் கூடாதென்றாலும் வட மொழியாவது கற்றல் கூடாதாவென்றால் அதுவும் கூடாது என்பார்கள். ஏன் என்றால் அது வாயில் நுழையாது என்பார்கள். இல்லை நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னால் வேதத்திலுள்ள நீதிகள் அதில் இடை இடையே வருமாதலால் அதைப் படிக்கக் கூடாதென்பார்கள். இம் மாதிரியாகவே மதத்தின் பெயரால் நாம் படும்பாடும் அடையும் இழிவும் செப்பத்தரமன்று. ஆனால் செலவாகும் ரூபாயோ கணக்கிலடங்காது.

இவ்வளவு ரூபாய் மற்றெந்த சமயக்காரர்களும் சமயத்தின் பெயரால் செலவிடுவதே இல்லை. மற்ற மதத்துக்கு யாரோ ஒருவர் இருவர் 1000 பவுன் 4 ஆயிரம் பவுன் கொடுப்பார்கள். அது சமயத்தை பரப்புவதற்கு பயன்படும். சமயம் பரப்புவது என்பது மக்கள் கல்வி அறிவு, மக்கள் நோய் தீரல், அற்புதம் கண்டுபிடித்தல் முதலியவை. ஆனால் நம் சமயத்திலோ ஒவ்வொருவரும் மத வரி கொடுத்து தான் ஆக வேண்டுமென்ற கட்டாயமிருக்கிறது. நம் மாகாணம் மட்டும் சர்க்கார் கணக்குப்படி ஒரு வருஷத்திற்கு 2 கோடி ரூபாய் மதத்தின் பெயரால் கோவிலுக்கும் மடத்திற்கும் மாத்திரம் வரும்படி வருகிறது. இஃதன்றி தனிமடம் கோவில்களின் வரும்படிகளைக் கணக்கு பார்த்தால் இப்படி எத்தனையோ பங்கு அதிகமாக முடியும். திருப்பதி கோவிலை மாத்திரம் எடுத்துக் கொண்டால் வருட வருமானம் 20 லட்சமாகும். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள மூன்று அல்லது நான்கு கோவில்களில் மாத்திரம் வருடத்திற்கு 2, 3 லட்சம் வரும்படி ஆகும்.

இன்னும் சிதம்பரம், இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய பெருமை பெற்றதென்னும் கோவில்களில் கணக்கைப் பார்த்தால் அதிகமாகவே முடியும். இவைகள் தவிர கணக்குக்கு வராத ரூபாய்கள் எவ்வளவு? உதாரணமாக இங்கிருந்து ஒருவர் திருப்பதிக்கு 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக செலுத்த புறப்படுகிறார் என்றால் அது தவிர அவனுக்கு நேரிடும் செலவு எவ்வளவு? அவன் தன் சுற்றத்தாரை அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. மஞ்சள் ஆடை தரிக்க வேண்டியிருக்கிறது. மேள வாத்தியங்களுடன் ஊர்வலம் வர வேண்டியிருக்கிறது. வீதிகளில் கோவிந்தா சப்தம் போட்டு பிச்சை வாங்க வேண்டி இருக்கிறது. இவ்வளவு செய்து 2 ஆயிரம் ரூபாய் காணிக்கை செலுத்துவது எதற்கு என்றால் அது அவரே செய்து கொண்ட பிரார்த்தனையாம். என்ன பிரார்த்தனை என்றால் அவர் முன்பு காயலாவாயிருந்த பொழுதோ வேறு கஷ்டமாயிருந்த பொழுதோ கடவுளை வேண்டிக் கொண்டாராம். கடவுளும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி அவரை நோய்வாயினின்றும் நீக்கினாராம்! அவர் நினைத்ததை அனுகூலம் செய்தாராம்! அதற்காகப் பிரார்த்தனை ரூபாயில் ஒரு காசுகூட குறையாமல் கொண்டுபோய் கொட்ட வேண்டுமாம். எனவே இதற்கு மற்ற செலவுகளிருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் எவ்வளவு ரூபாய் செலவாகுமென்று சற்று யோசியுங்கள். இதைப் போன்ற எத்தனை மக்கள் இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ளவர்கள் செல்வார்கள். உற்சவத்திற்காகவும் காணிக்கை வேண்டுதலை இல்லாமல் பல மக்கள் செல்லுகிறார்கள். அந்த முறையில் செலவிடும் செலவு எவ்வளவு? எனவே இவ்வித நம்பிக்கையைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. இப்படி செலவு செய்யும் பணத்தின் பலன் என்ன? இது என்ன ஆகின்றது? என்பதற்கே இந்த கணக்குச் சொல்லுகின்றேன். இதனால் யார் பலன் அனுபவிக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

பச்சரிசி, பாசிப்பயறு, நெய், பாதாமி, சக்கரை இவைகள் வாங்க உதவுகின்றது. இதை யார் சாப்பிடுகின்றார்கள்? (கைதட்டல்) இது தவிர மதத்தின் பெயரால் சடங்குகளுக்கென்று எவ்வளவு வரி கொடுக்கின்றோம்? குழந்தை உற்பத்தி முதல் கடைசி வரையில் கொடுத்துதான் தீர வேண்டிய மாதிரியாய் அமைக்கப் பட்டிருக்கின்றது. ஆனால் இவைகளினால் நாம் அடையும் பலன் என்ன என்று பார்ப்போமானால் நம்மை மிருகத்திலும் கேவலமாய் ஒரு வகுப்பார் மதிக்கும்படி, நாமே நம்மை இழிவுப்படுத்திக் கொள்ளுகிறோம் என்பதல்லாமல் வேறு ஒன்றுமில்லை. ஒருவன் தனது பிரார்த்தனைக்காகவோ, தனது பாவம் தொலையவோ என்று ஒரு கோவிலைக் கட்டுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் அவன் அடைந்த பலன் என்ன? அவனே உள்ளே புக யோக்கியதையின்றி தனக்கென ஒரு இடம் வெளியிலே ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. நாம் மனிதனாகப் பிறந்தும் மனிதனாக மடிவதற்கில்லையே! நம் சமயக் கொடுமைகளைப் பற்றி பல பெரியோர்கள் நமக்கு முன்னும் கண்டித்திருக்கிறார்கள்; சீர்திருத்த முறையிலும் இருந்திருக்கிறார்கள். அதனால் ஒருபலனும் உண்டாகவில்லை. ஆனால் அவர்களெல்லாம் இப்பொழுது ஒரு சிலையாக இருந்து பூஜை பெற்று வருகிறார்கள்.

கடைசியாக நம்மவர்கள் “பெரியோர்கள் போன வழியே நாமும் பின்பற்றுவோம். நமக்கென்ன” என்பார் பலர். அவர் பெரியோர்கள் போன வழியில் மற்றவைகளில் நடக்கிறார்களாவென்றால் இல்லவே இல்லை. இந்து மத பரிபாலனத்திற்கு என்று ஏற்பட்ட சட்டத்தில் கூட வெறும் கணக்குப் பார்க்கத் தான் சுதந்திரம் உண்டேயன்றி வரவை யோக்கியமான முறையில் செலவழிக்க அதிகாரமிருப்பதாக ஒருவரிகூட இல்லை. (கைதட்டல்) முன்சொன்னப்படி ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக திருப்பதிக்குச் செலுத்தப் போகிறார் என்று தெரிந்த உடனே மகந்து என்கிற ஒருவர் தனது ஆளை ரயிலுக்கு அனுப்பி அவனை அழைத்து வரச் செய்து “நீங்கள் சென்னையிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் 2 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கொண்டு வந்திருக்கிறீர்கள் அல்லவா” என்றவுடன் இவனுக்கு இஃது எப்படி இவருக்கு தெரிந்தது? எல்லாம் உள்ளது உள்ளபடி உரைக்கின்றாரே என்று நம்பி அவரிடம் அதிக பக்தி செலுத்தி விடுகிறான். இதைப் பார்த்து மகந்து “நீங்கள் கொண்டு வந்த ரூபாயை இங்கே என்னிடத்தில் கொடுங்கள். அங்கு கொண்டுபோய் கெடாரத்தில் கொட்டினால் சர்க்கார் எடுத்து ஜர்மனி யுத்தத்தில் பட்ட கடனுக்கு வட்டியாக உபயோகித்துக் கொள்வார்கள். என்னிடத்தில் கொடுத்தால் நான் நேரிலே கடவுளுக்குச் சேரும்படி செய்வேன்” என்பார்.

சம்மதித்துக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவார். சந்தேகப்பட்டால் இதோ பார் இந்த படத்தை என்று ஒரு படத்தை சுட்டிக் காண்பித்து ஒரு காலத்தில் வெங்கடாசலபதி சாமி மகந்துவிடம் சதுரங்கமாடி தோற்றதாகவும் அதற்கு நிபந்தனையாக கடவுள் முதலில் மகந்துவை தரிசித்த பிறகுதான் தன்னை தரிசிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தாரென்றும் அங்குள்ள மகந்து ஆள்கள் சொல்லுவார்கள். இதை நம்பிதான் ஆக வேண்டும். நம்பாவிட்டால் “கங்கை ஆற்றங்கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாபத்திற்காளாவாய், தாயைக் கொன்ற பாவத்திற்காளாவாய்” என்று சொல்லுவான். பிறகு பேசாமல் கலகலவென்று ரூபாயை கொட்டி விடுவான். இந்த பணங்களெல்லாம் மேல் கண்ட 2 லட்சத்தில் சேராது. இதை அடக்க தேவஸ்தான மசோதாவில் சட்டம் இல்லை. இது தவிர அபிஷேகம் 1000 ரூபாய் அல்லது 5000 ரூபாயில் செய்து வைக்கிறார்கள். அல்லது வெள்ளியால் கலசம், பொன் வெள்ளி ரதம், வாகனம் செய்கிறார்கள். பட்டு பீதாம்பரம் சாற்றுகிறார்கள். 50 அல்லது 60 குடம் பால் ஊற்றுகிறார்கள். இதனால் என்ன பலன் என்று அறிய தேவஸ்தான பரிபாலன சட்டத்திலோ மதபரிபாலன சட்டத்திலோ இடமில்லை.

5000 வருடங்களுக்கு முன்பு கோவில்கள் கட்டப்பட்டன என்கிறார்கள். சில கோயில்கள் அதற்கு முன்பிருந்ததாகவும் சொல்லுகிறார்கள். இம்மாதிரியாக நம் தமிழ் அரசர்களாலும் மற்றும் பெரியோர்களாலும் கட்டப்பட்டு செலவழிக்கப்பட்ட செல்வம் எவ்வளவு? அவர்கள் செய்த மற்ற தர்மங்கள் எவ்வளவு? அவர்களுடைய குடும்பங்கள் இப்போது எங்கே? யாராவது ஒருவரைக் காண முடியுமா? உதாரணமாக தஞ்சாவூர் அரசரை எடுத்துக் கொள்ளுவோம். அவர் கட்டி வைத்த பள்ளிக்கூடங்களும் அக்ரகாரங்களும் மற்றும் பல தர்மங்களும் இன்னும் இருக்கின்றன. அப்படிச் செய்த அந்த அரசாங்கம் இன்று எங்கே! வெள்ளைக்காரன் கையில் போய் சேர்ந்து விட்டது. மீதியுள்ள சொத்துக்களுக்கும் சண்டை உண்டாயிற்று. ஒரு காலத்தில் அம் மன்னவனை க்ஷத்திரியன் என்று வானமளாவப் புகழ்ந்து அவரிடம் பிச்சை வாங்கி வயிறு வளர்த்த அன்னக்காவடிகளெல்லாம் நேற்று கலியுகத்தில் பிராமணன், சூத்திரன் என இரண்டு ஜாதிதான் உண்டு என்று கோர்ட்டில் சாட்சியம் கொடுத்திருக்கிறார்கள். நம் மக்கள் இன்னமும் இவைகளெல்லாம் செய்தால்தான் புண்ணியமும் மோக்ஷமும் கடவுள் தயவும் உண்டு என நினைக்கிறார்கள். இதைப்பற்றி யாராவது, சொன்னால் “பார்ப்பனர்களை வைகிறார்கள். நாஸ்திகம் பேசுகிறார்கள்” என்று நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்.

இனி சடங்குகளைப்பற்றி சற்று கவனிப்போம். சடங்குக்காக நாம் செலவிடும் பணம் எவ்வளவு? சடங்குக்காக மனிதனென்று நம் மக்கள் கருதுகிறார்கள். பிறப்பதற்கு முன்பே நம்மை சடங்குச் சனி பிடித்துக் கொள்ளுகிறது. கரு தரிப்பதற்கு முன்பே சடங்கு செய்ய ஆரம்பிக்கிறோம். அதற்கு புரோகிதன் வேண்டும் என்கின்றோம். அவன் வந்து விறகை கொளுத்தி புகைத்துக் கரியாக்க வேண்டும். அவன் நல்ல பிள்ளை பிறக்கும் என்றால்தான் நமக்கு நல்ல பிள்ளை பிறக்குமென்று நினைக்கின்றோம். கர்பத்திலேயே உபதேசம் செய்தால்தான் ஞானம் வரும் என்று நினைக்கின்றோம். அக்குழந்தை கீழே விழுந்ததும் சடங்கு செய்ய வேண்டி இருக்கிறது. சாதகம் பார்ப்பதற்கும், தொட்டிலில் போடுவதற்கும், பாலூட்டுவதற்கும், கோவணம் கட்டுவதற்கும், சவரம் செய்வதற்கும், காது குத்துவதற்கும், பள்ளிக்கூடம் வைப்பதற்கும் சடங்குகள் செய்து தீர வேண்டியிருக்கிறது.

குழந்தைக்கு காய்ச்சல் வந்ததென்றால் சடங்குதான். இவைகள் எல்லாவற்றிற்கும் பார்ப்பானையே கூப்பிட வேண்டியது தான். அவனுக்கு பணம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. காயலா வந்தாலும் “சனியை சுக்கிரன் பார்க்கிறான் சாந்தி கழிக்க வேண்டும்” என்கிறான். பணம் கொடுப்பது தான் சாந்தி. கலியாண சடங்கோ பொருத்தம் பார்க்க வேண்டியிருக்கிறது. மரத்திற்கு மரம், பாலுக்குப் பால், கயிறுக்குக் கயிறு, பட்சிக்கு பட்சி, எழுத்துக்கு எழுத்து என சிலேட்டுப் பொருத்தம் பார்க்கிறான் (கைதட்டல்). இதற்கும் பணம் வேறு. ஒருவன் அந்தப் பெண்ணை அடைய ஆசைபட்டால் அந்த புரோகிதனுக்கு சாடை செய்து 1000, 500 ரூபாய் தருகிறேன் என்றால் பொருத்தம் இருந்தாலும் இல்லை என்றே சொல்லி விடுவான். அவன் இஷ்டம்போல் அநேகமாக நாளும் நேரமும் வைத்துக் கொடுக்கின்றான். கல்யாண மந்திரமென்று, கருமாந்திர மந்திரமோ ஏதோ சொல்லி காசு வாங்கி போகிறான். சில 10 நாளைக்குள்ளும் அந்தப் பெண் தாலி அறுத்துப் போகிறது. மாமியார் படுத்தும் துன்பமோ சொல்லி முடியாது. புருஷன் படுத்தும் உபத்திரவமோ தரித்திரமோ கணக்கு இல்லை. இதனை அந்த புரோகிதனை அடுத்து இவ்வளவு பொருத்தம் பார்த்தும் ஏனையா இப்படி ஆச்சுது என்றால் “அதன் கர்மம் அப்படி இருக்கிறது. இதற்கு யார் என்ன செய்ய முடியும்” என்று சொல்லி விடுகிறான். அதற்கு ஏன் இவ்வளவு பொருத்தமும் சடங்கும் செய்து பணம் பெற்றாய் என்றால் அது உன்னுடைய முட்டாள்தனம் என்கின்றான். பிறகு பிள்ளை பெறாவிட்டால் “எப்படியாவது பிள்ளை பெற்று தீர வேண்டும். காசிக்குப் போ இராமேஸ்வரத்திற்குப் போ, தருமம் செய், சாந்தி கழி, ஓமம் பண்ணு, இல்லையேல் புத் என்னும் நரகத்திற்குப் போய் சேருவாய்” என்கிறான். பிள்ளை இல்லா வீட்டில் சாப்பிட்டால் பெரிய பாவம் என்கிறான்.

உன் பெண்ஜாதியை உன் அண்ணன் தம்பிக்காவது விட்டு பிள்ளை பெற்றுத்தான் ஆக வேண்டுமென்கிறான். இதன் இரகசியம் என்ன? ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது பின் சந்ததி இருந்தால்தான் இப்பார்ப்பனர்கள் சடங்கு செய்து வாங்கி தின்பதற்கு வழி உண்டு. இல்லையேல் கொடுப்பாரில்லாமல் அந்தச் சந்ததி போய்விடுமே என்பதுதான். கடைசியாக சாகும் போதாவது நம்மை விட்டு விடுகின்றானா. சுங்கச் சாவடிகளில் எப்படி சுங்கம் வாங்கின பிறகு வண்டி போக அனுமதியளிக்கின்றானோ, அதைப் போல் இறந்து போகிறவன் இங்குள்ள பார்ப்பானுக்கு சுங்கம் கொடுத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. என்னவென்றால், இறந்தவன் மோட்சமடைய வேண்டுமானால் இங்குள்ள பார்ப்பானுக்கு ஒரு பசு வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். ஏனெனில் இந்த இறந்த ஜீவன் நெருப்பு ஆற்றை மயிர் பாலத்தின் மீது கடந்து மோக்ஷத்திற்குச் செல்ல வேண்டியிருக்கின்றதாம். இறந்த ஜீவன் பாரமான ஜீவன், நடக்கும் பொழுது மயிர்பாலம் அறுந்து விழுந்துவிட்டால் நெருப்பு ஆற்றில் விழுந்து பிசாசாக உலாவ வேண்டி வருமாம். ஆகையால் புரோகிதனுக்கு ஒரு மாடு கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஜீவன் போகும் போதே அறுந்து போகும். அந்த மயிரானது பெரிய மாடு நடந்தால் தாங்குமா? அதோடு நம் தந்தையும் அம்மாட்டு வால்பற்றி தொங்கினால் அந்த மயிர் இரண்டு பேரையும் தாங்குமா என்பதாக கொஞ்சமாவது சிந்திக்கிறோமில்லை. யாராவது சிந்தித்தாலே அதைப் பாவம் என்று சொல்லி விடுகிறான்.

மதத்தைப் பற்றியும் சடங்கைப் பற்றியும் நமக்கு கொஞ்சமும் புத்தி இல்லை. எவ்வளவு தூரம் நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை நாம் கொஞ்சமாவது உணர்ந்தோமில்லை. செத்தபிறகும் அவன் சொல்லும் வண்ணம் காலை மடக்கவும், முழங்காலிடவும், மண்டிபோடவும், பணங்கொடுக்கவும், பூணூலை மாற்றி போடவும், அவன் சொல்லுகிற படியெல்லாம் குரங்குபோல் ஆடவும் வேண்டியிருக்கின்றதேயன்றி, இழவுக்கு வந்தவர்களிடத்தில் பேசவுங்கூட ஓய்வில்லை. இறந்து 3 - ம் நாள், 4 - ம் நாள், 5 - ம் நாள், 6 - ம் நாள், 16 -ம் நாள் கிரியைகள் என்று பணம் பறிப்பதும் மாதம் மாதம் கொடுப்பதோடல்லாமல் காத்துக் கொண்டேயிருந்து, வரும் மாதம் தேதி ஆனவுடன் ஒரு வாரம் முன்பே “உங்கள் அய்யாவுக்கு வருகிற வாரம் திதி. சாமான் சேகரம் செய்துவை” என்கிறான். நாம் அதற்காக எல்லா சமையல் சாமான்களும் சாப்பாடு அதிகமாய் விட்டால் அஜீரணத்திற்குச் சுக்கும் மிளகும் கூட வைத்து, மிதியடி, குடை, பாத்திரம் முதலியவைகளுடன் கொடுப்பதோடு அல்லாமல், அவன் அழுக்குப்படிந்த காலில் நாம் மாத்திரமன்றி நம் அருமை பத்தினியையும் விழும்படி தூண்டி, பிறகு அந்தச் சாமான்களை ஆள்வசம் மூட்டைக் கட்டிக் கொடுத்து வீட்டில் சேர்க்கும்படி சொல்லி அனுப்புகிறோம். இந்தச் சாமான்களை விற்று சீட்டாடுவதுமாகிய இழி தொழிலுக்குப் பயன்படுகிறது. சில, வேசி வீட்டிற்குப் போய்ச் சேருகின்றது. செம்பு, பஞ்ச பாத்திரம், குடை, செருப்பு, வேஷ்டி இவைகள் தனக்கு வேண்டியது போக மீதியை ஒன்றுக்குப் பகுதியாய் விற்கிறான். விற்ற பணத்தில் சூதாடுகிறார்கள். 7 ரூபாய்க்கு வாங்கின குடத்தை இரண்டரை ரூபாய்க்கு விற்பான்.

ஒரு பார்ப்பான் நிலம் வாங்கினால் ஒரு தானியம்தான் அவன் பயிரிட முடியும். ஆனால் நம் வீட்டுத் திதிக்கு வந்தால் எல்லாத் தானியமும் அவனுக்கு விளைந்தால் போன்று எடுத்துக் கொடுக்கிறோம். எனவே நம் வீட்டில் ஒருவர் செத்தால் பார்ப்பானுக்கு சகல சாமானும் விளைகிற ஒரு பூமி வாங்கினது போல் ஆகிவிடுகின்றது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் செய்தால் மறுபடியும் அவன் திதியே செய்ய வேண்டியதில்லையென்பான். அப்படி செய்து விட் டால் பிறகு உனக்குத்தான் சக்தி இருக்கிறதே, சக்தி இல்லாமல் போனால்தான் அந்த சட்டம் பொருந்தும் என்பான். தனக்கே பிண்டம் போட்டுக் கொள்ளவும் செய்வான். செத்தவுடன் மக்களையும் பிண்டம் போடும்படி உயிரை வாங்கி விடுவான். சடங்கு இப்படி.

இனி மத ஆச்சாரியார்களையும், மத குருக்களையும் சற்று கவனிப்போம். இவர்களால் மக்களுக்குப் பயன் ஒரு சிறிதும் இல்லை. இந்து மதத்தின் பேரால் சங்கராச்சாரியார், சைவ மடாதிபதி, வைணவ மடாதிபதி முதலிய பலர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் யானைகளிலும், ஒட்டகங்களிலும் தன் இனத்தாருடன் வருவதும் ஓரிடத்தில் தங்குவதும், அவ்வூரிலுள்ள தங்களினத்தாரைக் கொண்டே சாமியாருக்குப் பாத பூசை பிச்சையென்று விளம்பரம் செய்வதும், ஒரு ரூபாய் ஒரு பவுன் கொடுத்து அவன் காலைக் கழுவின நீரை வாங்கி அருந்துவதும், அந்த ஊரில் கறக்கிற வரையில் அங்கே இருந்த பிறகு வேறு வேறு ஊர்களில் தங்குவதும், நம்மிடம் வாங்கின பணத்தைக் கொண்டே சாமியார் சூத்திரனைப் பார்த்ததற்கு ஒரு பிராயசித்தமும் ஒரு முழுக்கும், நிழல் மேல் பட்டதற்கு ஒரு பிராயசித்தமும் ஒரு முழுக்கும், நீச்ச மொழியாகிய தமிழில் பேசினதற்காக ஒரு பிராயசித்தமும் ஒரு முழுக்கும் போட வேண்டியவனாகி விடுகிறான். இம்மாதிரி ஆள்களில் சிலர் உலக குரு என்கிறார்கள். சிலர் குலகுரு என்கிறார்கள். குலகுரு என்பவர் ஓரிடத்திலிருந்து தனது ஆட்களில் ஒரு ஆளை அனுப்பி தான் வந்திருப்பதாக தெரிவிப்பார். சிஷ்யர்கள் மக்களோடும் மனைவியோடும் ஓடோடியும் சென்று அவர் காலில் விழும்படி அவனது மக்களுக்கும் மனைவிக்கும் கட்டளையிட்டு தானும் காலில் விழுவான்.

குலகுரு: உனக்கு எத்தனை குழந்தை என்பான்.

சிஷ்யன் : மூன்று குழந்தைகள். இரண்டிற்கு விவாகம் ஆயிற்று.

குலகுரு: உன் இரு குமாரன் இருதலைக்கட்டு, நீ ஒரு தலைக்கட்டு ஆக மூன்று தலைக்கட்டு. மூன்றோன் மூன்று, மூகால் முக்கால், ஆக மூன்றே முக்காலுக்கு ஒன்றேகால் வைத்திருக்கின்றாய் என்ன?

சிஷ்யன் : சாமி அடியேனை மன்னிக்க வேண்டும். என் அறியாமைக்கு அபராதம் 1 1/4 காணிக்கையும் சேர்த்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் என் மக்கள் இருவரும் உத்தியோகம் செய்யவில்லையே.

குரு : உங்கள் தந்தை தானே தலைகட்டுக்கு 1 1/4 கட்டளை என்று எழுதி தந்திருக்கின்றார். இதோ பட்டயம் பார், என்று சொல்லி பணம் வாங்கிக் கொண்டு சாமிகள் வீடு சிறிது பழுது பார்க்க வேண்டி இருப்பதால் நீங்கள் வந்து அவைகளை சீக்கிரம் முடித்துக் கொடுங்கள். சாமிகள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி வேறு ஊருக்கு கொள்ளையடிக்கப் போய் விடுவான். இவன் போன பிறகு யாராவது வந்து சிஷ்யனை உன்னுடைய மதம் என்ன அப்பா, நீ பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கிறாயே என்றால் ஒன்றுமே பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பான்.

புராணக் கொடுமை

இராமாயணத்தில் இராமருக்கும் சீதைக்கும் ஒருமுறை கலியாணம் செய்திருந்தால், நாம் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் வாரத்திற் கொருமுறை நடத்துகிறோம். வீட்டில் வைத்தால், எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் எல்லாம் பறந்து போய்விடுவதோடு நமக்கு மோட்சமும் கொடுக்கும் என்று கருதியே, சீதா கலியாணம் செய்ய சாஸ்திரி காலில் விழுந்து இரண்டு ஜதை வேட்டியும் தருகிறோம். இராமாயணம், இராம பட்டாபிஷேகம், உற்சவம் செய்வதில் கேட்க கேட்க இன்பமாகத் தானிருக்கிறது. ஆனால் கடைசியில் படித்தால் நம்மை அடிமைகள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இராமர் அரசாளும் காலத்தில் ஒரு பிராமணக் குழந்தை செத்துப் போனதாகவும் அக்குழந்தையின் தந்தை இராமனை அணுகி “இராமா நீ ஆட்சி புரியும் இன்னாளில் என் குழந்தை எப்படி சாகலாம்” என்று கேட்டதாகவும், இதற்கு காரணம் கண்டுபிடிக்க இராமர் மாறுவேடம் பூண்டு நகர் சோதனை செய்ததாகவும், அப்போது ஓரிடத்தில் ஒரு சூத்திரன் சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட இராமன், சூத்திரன் சாமியை வணங்கினதால்தான் அப் பார்ப்பன பிள்ளை மாண்டதாக கருதி அவனை பாணத்தால் எய்து வீழ்த்தியதும், அப்பார்ப்பன பிள்ளை மீண்டும் உயிர் பெற்றதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது. எனவே இராமாயணப்படி நாம் கடவுளைக் கூட வணங்க உரிமையில்லாதவர்களாயிருக்கிறோம். சுயராஜ்யக் கட்சி பார்ப்பனர்கூட உங்களுக்கு இராமராஜ்யம் சம்பாதித்து தருகிறோம் என்று பேசியிருக்கிறார்கள். அப்படி இராம ராஜ்யம் வந்தால் நமது நிலைமை என்ன? சுவாமி கூட கும்பிடாமல் பார்ப்பானுக்கு அடிமையாயிருப்பதுதான் நமது கடமையென்பது விளங்கவில்லையா? தவிர பெரியோர்கள் போன வழியே நாமும் பின்பற்றுவோம் என்கிறவர்கள் மற்ற காரணங்களுக்கு மாத்திரம் ஏன் பெரியோர்கள் போன வழியே நடப்பதில்லை என்றால் பதிலில்லை.

ஒரு காலத்தில் ஆற்றங்கரை ஓரத்திலிருந்து மீன், பாம்பு முதலியவைகளைப் பிடித்து அதைச் சரியாக சுட்டும் சுடாமலும் தின்ற வெள்ளைக்காரர்கள் தற்பொழுது எந்த நிலையிலிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆணைப் பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் செய்கிறார்கள். எங்கேயோ இருந்த ஒரு பொத்தானை அழுத்தினால் எல்லா விளக்குகள் எரிகிறதும், மறுபடியும் அந்த பொத்தானை தட்டினால் விளக்குகள் நின்று விடுகின்றதும், மணிக்கு 500 மைல் ஆகாயக் கப்பல் பறக்கின்றதும் போன்ற பல தெய்வச் செயல்களையும் செய்து கொண்டு வருகிறார்கள். ஆங்கிலேயரும் பெரியோர் போன வழியே நாமும் போவோம் என்று போயிருந்தால் அவர்கள் இப்பொழுதுள்ள உன்னத நிலைமையிலிருக்க முடியுமா? பாவம் செய்பவன் புரோகிதனுக்கு பணம் கொடுத்தால் அந்த பாவம் அவனைவிட்டு நீங்கிவிடும் என்று நினைப்போமானால் மக்களுக்கு மேலும் மேலும் பாவம் செய்ய வழியேற்படும். பாவத்தை விலைக்கு விற்கும் மூடவழக்கத்தை மூட்டைக் கட்டி வைத்ததால் அவர்கள் சீரும் சிறப்புற்று விளங்குகின்றார்கள். நாமும் அப்படியே விளங்க வேண்டுமானால் போலிச் சமயமும், மூட வழக்கமும், குருட்டு நம்பிக்கையும் ஒழிய வேண்டும்.

இப்போது நீங்கள் இதையெல்லாம் கேட்டீர்கள். நாளைக்கு ஏதோ சடங்கு செய்ய வேண்டியதாயிருந்தால் புரோகிதனை அழைத்துத் தான் செய்ய முற்படுவீர்கள். காரணம் கேட்டால் பெண்கள் மீது பழிசுமத்துவீர்கள். அதோடு உம்பெண்களையும் அவன் காலில் விழும்படி தூண்டுவீர்கள். இப்புரோகிதக் கொடுமைகளைப் பற்றி நம் பெண்கள் உணர்வார்களாயின் “அய்யோ நீதான் மதியின்றி காலில் விழுந்ததுமல்லாமல் என்னை விழச் சொன்னாயே” என்று நம்மை இழிவுபடுத்துவார்கள். இவற்றையெல்லாம் பெரியோர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை. அவர்களுக்கு சில நொண்டிச் சமாதானங்கள் இருந்து கொண்டேயிருக்கும். இனிமேல் அவர்களை நம்புவதில் பயனில்லை. நான் வாலிபர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான். நீங்கள்தான் எதிர்காலத்தில் நாட்டை அடிமையிலிருந்து விலக்கப் போகின்றீர்கள். உங்க காலத்தில்தான் சுயமரியாதை உதயமாக வேண்டும். நான் உண்மையாய் நினைக்கிறேன். நீங்கள் நினைத்தால் புரோகிதக் கொடுமை தலைகாட்டாதொழியும், நீங்கள் ஆண் பிள்ளைகளானால் அடிமைத்தனத்தையும் மூட நம்பிக்கையையும் ஒழியுங்கள். புரோகிதக் கொடுமைகளுக்கு வழி கொடாதீர்கள். அதுதான் உங்களை அடிமையாக்கி இருக்கிறது. ஆகையால் இப்பொழுது நடக்கப் போகும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிற்கு பெருவாரியாய் வந்து உங்கள் சுயமரியாதைக்கு போராட உடனே இடுப்பைக்கட்டி முன் வாருங்கள்.

(குறிப்பு: சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் கூடிய கூட்டத்தில் சமய சீர்திருத்தம் என்ற தலைப்பில் 21.10..1927 அன்று ஆற்றிய சொற்பொழிவு.)

குடி அரசு - சொற்பொழிவு - 23.10.1927