ஏழைகளுக்கு ஏட்டுச் சட்டம் உதவி செய்யாது!
தற்போது கல்வி வணிகச் சந்தை பரப்பரப்பாக இருக்கிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இந்தியாவில் கல்வி வணிகச் சந்தையின் மதிப்பு 3,60,000 கோடியாகும். அதனால் ஒவ்வொரு ஆண்டும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் விளம்பரங்களுக்கும் ஆரவாரத்திற்கும் பஞ்சமிருப்பதில்லை. கல்விக் கட்டணம், நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு, கல்வி நிறுவனங்களுக்கு ஏற்பிசைவு, தகுதி மதிப்பெண், சமச்சீர்கல்வி போன்றவை குறித்து ஒவ்வொரு ஆண்டும் காரசாரமாக விவாதங்கள் நடைபெறுகின்றன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. பெரும்பாலான நீதிமன்றத் தீர்ப்புகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சார்பாகவும், கல்வி வணிகக் கொள்ளைக்கு ஆதரவாகவும் அமைகின்றன.
இக்கல்வி ஆண்டில் தமிழகத்தைப் பொறுத்த அளவில், சமச்சீர் கல்வியின் திட்டப்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் மழலையர் பள்ளி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களிடம் பெற வேண்டிய கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்திய அளவில் 6 முதல் 14 அகவைக்குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி வழங்கும் சட்டம் 1-4-2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பதற்கான சட்ட வரைவு 3-5-10 அன்று நாடாளுமன்றத்தில் முன் மொழியப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மானியக்குழு இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்விக்குழு ஆகியவற்றைக் கலைத்துவிட்டு தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான ஆணையத்தை அமைப்பதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு விவாதத்திற்கு விடப்பட்டுள்ளது. கல்வி தொடர்பாக நடுவண் அரசு எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும், கல்வி வணிகச் சந்தையில் தனியார் மயத்தை மேலும் ஊக்குவிப்பதாகவும், கல்வி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை நடுவண் அரசிடம் மேலும் மேலும் குவிப்பதாகவுமே இருக்கிறது. பொது அதிகாரப்பட்டியலில் கல்வி இருப்பதால், மாநிலங்களின் அதிகாரம் தொடர்ந்து பறிக்கப்படுகிறது.
இருபது ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் செல்லிடப்பேசி இல்லை. ஆனால் இன்று 60 கோடி கைபேசிகள் உள்ளன. கடந்த மார்ச்சு, ஏப்பிரல் மாதங்களில், மாதந்தோறும் இரண்டு கோடி செல்பேசிகள் விற்பனையாகும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து முழுப்பக்க விளம்பரங்கள் 22-5-10 அன்று நாளேடுகளில் வந்துள்ளன. 60 கோடி செல்லிடப்பேசிகள் உள்ள இந்தியாவில் ஒரு நாளைக்கு %.20க்கும் குறைவான வருவாய் உடையவர்களாக 80 கோடி மக்கள் இருப்பதாகக் கூறப்படுவதை எப்படி ஏற்க முடியும்? என்று எகத்தாளம் பேசுகிறார் செட்டிநாட்டுச் சிதம்பரம்.
தகவல் தொழில் நுட்பத்துறையில் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேகமான வளர்ச்சியை விட மிகப்பெரிய வளர்ச்சியை - புரட்சியை கல்வித்துறையில் உண்டாக்கிட வேண்டும் என்று கொக்கரிக்கிறார் கபில்சிபல். கல்வியைக் கடைச்சரக்காக ஆக்க நினைக்கிறார் அவர். கடந்த இருபது ஆண்டுகளாக நடுவண் அரசின் கல்விக் கொள்கை இதுவாகவே இருக்கிறது. மாணவர்களின் அறிவுத் திறனை ஒளிரச் செய்யும் - அவர்களின் பண்புகளையும் பல் திற ஆற்றல்களையும் சிறக்கச் செய்யும் இடமாகக் கல்விக் கூடங்களை அரசும், ஆட்சியாளர்களும் கருதுவதில்லை. மாறாக, கல்வி நிலையங்களை வெறும் தொழிற்சாலைகளாகவே காண்கின்றனர். ‘கல்வி வள்ளல்கள்’ என்கிற மோசடிப் பெயருடன் கல்வி வணிக முதலைகள் கல்வி நிறுவனங்களில் சிறு முதலீடு செய்து கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கு அரசும், நிர்வாகமும், நீதித்துறையும் உறுதுணையாக விளங்குகின்றன. இதற்காக இவர்கள் எல்லோருக்கும் பெருந்தொகை கையூட்டாகக் கொடுக்கப்படுகிறது.
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்று சொன்னானாம்’ என்கிற பழமொழி ஒன்று உண்டு. அதுபோல இந்தியாவில் 40 விழுக்காடு மக்களை இன்னும் எழுத்தறிவற்றவர்களாக வைத்துக் கொண்டு, உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை தற்போது 10 விழுக்காடாக இருப்பதை 2020க்குள் 30 விழுக்காடாக உயர்த்துவேன் என்று கபில்சிபல் கூறுவது அப்படித்தான் இருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அரசின் வழிகாட்டி நெறிப்பகுதியில், ‘இந்த அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகாலத்திற்குள் 6-14 அகவைக்குட்பட்டவர்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வியை அளிக்க முயல வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது. இந்தியாவைப் போல் அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் பலவற்றிலும், பத்து இருபது ஆண்டுகளுக்குள்ளாக அனைவருக்கும் அடிப்படைக் கல்வியைக் கொடுத்து விட்டார்கள். 1948இல் விடுதலைபெற்ற இலங்கையில் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே 90% க்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு பெற்று விட்டனர். இந்தியாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் 40% பேர் எழுத்தறிவற்றவர்களாக இருக்கின்றனர். 5 ஆம் வகுப்பும் முடிக்காதவர்கள் 60% பேரும், 8ஆம் வகுப்பு வரை படிக்காதவர்கள் 80% பேரும் உள்ள கேவலமான நிலை இந்தியாவில் இருக்கிறது.
இந்த இழிநிலைக்கு முதன்மையான காரணம், உழைக்கும் மக்களாக இருக்கின்ற கீழ்ச்சாதி மக்களுக்குக் கல்வி தரக்கூடாது என்று காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வருணாசிரமக் கொள்கையை மேல்சாதி ஆளும் வர்க்கம் இன்றும் பற்றி நிற்கிறது. பார்ப்பன நேருவும், இந்திரா காந்தியும், இராசிவ் காந்தியும் 36 ஆண்டுகள் ஆண்டனர். நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரசுக் கட்சி நரசிம்மராவைப் பிரதமராகக் கொண்டு அய்ந்து ஆண்டுகள் ஆண்டது. சோனியா காந்தியின் முன் மண்டியிடும் மன்மோகன்சிங் ஆட்சி ஆறு ஆண்டுகளாக நடக்கிறது. ஆனால், வெகுமக்களுக்கு அடிப்படைக்கல்வி எப்போது கிடைக்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
வானத்தை வில்லாக வளைப்பேன்; மணலைக் கயிறாகத் திரிப்பேன் என்று வாய்ச்சவடால் விடுவதில் வல்லவர் வழக்குரைஞர் தொழில் செய்த அமைச்சர் கபில்சிபல். ‘நாளை அதாவது 1-4-10 வியாழக்கிழமை கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வரப்போகும் நாள். இந்திய வரலாற்றில் முதல்முறையாகக் கல்வி பெறுவது அரசியல் சட்டப்படியான உரிமை என்ற நிலை ஏற்படுத்தப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் இது’ என்று 31-3-10 அன்று கபில் சிபில் பெருமிதத்துடன் கூறினார்.
அனைவருக்கும் தொடக்கக் கல்வியை 1960க்குள் அளிக்க வேண்டும் என்று 1950இல் அரசியல் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1968இல் கோத்தாரி கல்விக்குழுவும் இதை வலியுறுத்தியது. 1993இல் உச்சநீதிமன்றம் 6-14 அகவைக்குட்பட்டவர்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறியது. 2002இல் வாஜ்பாய் ஆட்சியில் பேராரவாரத்துடன் அரசியல் சட்டத்தின் 86ஆவது திருத்தம் மூலம் கல்வி அடிப்படை உரிமையின் கீழ் சேர்க்கப்பட்டது. இதனடிப்படையில் 2009இல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் 2010 ஏப்பிரல் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தை நிறைவேற்ற நடுவண் அரசும் மாநில அரசுகளும் 45:55 விகிதத்தில் நிதியைச் செலவிட வேண்டும். 2010-11ஆம் ஆண்டிற்கு திட்டக்குழு மாநில அரசுகளுக்கு 25,000/- கோடியும், மய்ய அரசுக்கு 15,000/- கோடியும் ஒதுக்கி உள்ளது. அடுத்த ஆண்டு முதல் ஆண்டிற்கு 1,71,000/- கோடி தேவை. இதுபோல் பத்து ஆண்டுகளுக்குச் செலவிட வேண்டும். இதற்கான பணம் தங்களிடம் இல்லை என்று பல மாநில அரசுகள் கூறியுள்ளன. பணப்பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, இத்திட்டச் செயலாக்கத்
திற்குத் தேவையான பள்ளிக் கட்டடங்கள், பிற கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் முதலானவை இல்லை. இவ்வளவு போதாமைகள் இருந்த போதிலும், ‘அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி தருவது மட்டும் இச்சட்டத்தின் நோக்கமன்று; எல்லாருக்கும் தரமான கல்வி தருவதே முதன்மை’ என்று கபில் சிபல் திருவாய் மலர்ந்துள்ளார். சாதியின் அடிப்படையிலான சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உலகமயச் சூழலால் மேலும் அதிகமாகி உள்ளன. இந்த நிலை நீடிக்கும் வரையில் அனைவருக்கும் ஒரே தரமான தொடக்கக் கல்வி கூடக் கிடைக்காது.
இந்தியாவில் 6-14 அகவையில் 22 கோடி சிறுவர்கள் உள்ளனர். இவர்களில் 4.6 விழுக்காட்டினர் - அதாவது 92 இலட்சம் பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர் என்று நடுவண் அரசு கணக்குக் காட்டுகிறது. குறைந்தது இரண்டு கோடிப் பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பார்கள் என்பதே உண்மை நிலையாகும். இவர்களுக்கு இச்சட்டம் புதுவாழ்வு தருகிறது என்று பூரிக்கிறார் கபில் சிபல். இவர்கள அவரவர் வயதிற்கு ஏற்பப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்; சிறப்பு கவனம் செலுத்தி ஆசிரியர்கள் இவர்களுக்குக் கற்பிப்பார்கள் என்று கூறுகிறார் கபில் சிபல். இவர்களைப் பள்ளியில் யார் சேர்ப்பது? அந்ததந்த ஊரில் உள்ள கிராமக் கல்விக்குழு இப் பணியைச் செய்ய வேண்டுமாம். படிக்கும் வயதில் பள்ளி செல்லா நிலையில் இருப்பதற்கு யார் பொறுப்பு? என்றோ, இத்திட்டத்தின் தோல்விக்கு யார் தண்டிக்கப்படுவார்கள் என்பது பற்றியோ இச்சட்டத்தில் எதுவும் இல்லை.
தனியார் பள்ளிகளில், அப்பள்ளிகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள ஏழை எளிய குடும்பங்களிலிருந்து 25% அளவுக்கு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. இம்மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசு அளிக்கும். இதை மாபெரும் புரட்சித் திட்டமாக கபில் சிபல் கூறுகிறார். இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் இருக்கும். தனியார் பள்ளிகள் காந்தியார் சொன்ன தர்மகர்த்தா சிந்தனையோடு பள்ளிகளை நடத்துவதில்லை. அவற்றுக்குக் கொள்ளை இலாபமே குறிக்கோள். மக்கள் காதில் பூ சுற்றுகிறார் கபில் சிபல்.
மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மேனிலைக் கல்வியை நடுவண் அரசு முழுமையாகத் தன்னுடைய அதிகாரத்தின் கீழ்க் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதற்காக 2010-11ஆம் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பில் கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வணிகவியலுக்கும் இதே போல் பொதுப் பாடத்திட்டம் கொண்டு வரப்படும். பொதுப் பாடத்திட்டம் இருந்தால்தான் ஒரே சீரான தகுதியுடன் இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத முடியும் என்று கூறுகிறார் கபில்சிபல். இந்த அடிப்படையில், பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்பில் சேருவதற்காக மாணவர்களுக்கு நாடு முழுவதுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வை 2013ஆம் ஆண்டு முதல் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான பாடத்திட்டம் கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று பெருமையுடன் கூறுகிறார் கபில்சிபல்.
இரு ஒருமைகல் அல்ல. தேசிய இன எழுச்சிமீது, மாநில உரிமைகள் மீது போடுகின்ற பாறாங்கல்! தமிழக அரசு இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு முறையை ஏற்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் பிரான்சு, இங்கிலாந்து நாட்டின் மக்கள் தொகையும் ஒரே அளவுதான். அவை தனித்தனி நாடுகளாக - வல்லரசுகளாக உள்ளன. தமிழ்நாட்டுக்கும் சட்டமன்றம் இருக்கிறது. மக்கள் வாக்களித்து தங்கள் பேராளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர்
களைச் சேர்ப்பதற்கு தில்லிதான் தேர்வு நடத்தும் என்பதும், தில்லி தீர்மானிக்கின்ற பாடத்திட்டத்தைத் தான் மேனிலைப்பள்ளியில் பின்பற்ற வேண்டும் என்பதும் எஞ்சியுள்ள மாநில உரிமைகளையும் பறிக்கும் சூழ்ச்சித் திட்டங்களேயாகும். கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் புதிய பொருளாதாரக் கொள்கையால் எல்லாத் துறைகளும் வேகமாகத் தனியார் மயமாகி வருகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையை அடுத்துக் கல்வித்துறை - குறிப்பாக உயர்கல்வித்துறை அதிக அளவில் தனியார் மயமாகி
யுள்ளது. பொதுக் கல்வி நிறுவனங்களைவிடத், தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்குமுன், மொத்த கல்லூரிகளில் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 42.6% ஆக இருந்தது. இப்போது இது 63.2% ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று மாணவர் எண்ணிக்கையில் தனியார் கல்லூரிகளின் பங்கு 32.9% ஆக இருந்தது. இப்போது 51.5% ஆக உயர்ந்துள்ளது. 1990இல் 28 ஆக இருந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை 2009இல் 126 ஆக உயர்ந்தது. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 75% ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 66%ம் தனியார் சுயநிதிக் கல்லூரிகளாக உள்ளன.
கல்விக்கட்டணம், நன்கொடை மற்றும் வேறு பெயர்களில் ஆண்டுதோறும் மாணவர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி உருபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனங்களுள் 80 விழுக்காடு கல்லூரிகள் உயர்கல்வியை அளிப்பதற்கு உரிய அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாதவைகளாக இருக்கின்றன. 2009இல் நடுவண் அரசு அமைத்த தாண்டன்குழு, ‘மொத்தமுள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 38 நிறுவனங்கள் மட்டுமே உரிய கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், சீர்படுத்தவே முடியாத நிலையில் இருப்பதால் அவற்றுக்கு வழங்கியுள்ள நிகர்நிலைத் தகுதியை இரத்து செய்ய வேண்டும், மேலும் 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் பல குறைபாடுகள் உள்ளன; இக்குறைபாடுகளை மூன்று ஆண்டுக் காலத்திற்குள் சரி செய்யாவிட்டால் அவற்றின் நிகர்நிலைத் தகுதியை நீக்க வேண்டும்’ என்று அறிக்கை அளித்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும், நிதி வழங்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான அனைத்து அதிகாரங்களும் நடுவண் அரசின்கீழ் இருக்கும் அமைப்புகளிடமே உள்ளன. இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம் , பல்கலைக் கழக நிதிநல்கைக் குழு, இந்திய மருத்துவக்கல்விக் கழகம் , தேசிய ஆசிரியர் கல்விக்குழு முதலான 13 மத்திய அரசு அமைப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில் முறைகேடுகளும், ஊழலும் பெருக்கெடுத்தோடுகின்றன. இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவராக இருந்த கேதன் தேசாயிடமிருந்து பணமாக 1800 கோடியும் தங்கமாக 1500 கிலோவும் ஏப்பிரல் மாதம் கைப்பற்றப்பட்டது.
2001ஆம் ஆண்டே கேதன் தேசாய் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது வழக்குப் போடப்பட்டது. அப்போதும் அவர் இதே பதவியில் தான் இருந்தார். இந்த ஊழல் பெருச்சாளியை அதே பதவியில் தொடர்ந்து இருக்குமாறு செய்தது யார்? கேதன் தேசாய் தனியொருவராகவே செயல்பட்டு இவ்வளவு தொகையைக் கொள்ளையடித்தாரா? கொள்ளையில் உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சகத்துக்கும், ஆட்சியாளர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும் தொடர்ந்து முறையாகப் பங்கு தரப்படுவதால்தான் கேதன் தேசாய் போன்றவர்கள் அச்சமோ, நாணமோ இல்லாமல் கொள்ளையடிக்க முடிகிறது. கடந்த ஆண்டு இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் தலைவரும் மற்றவர்களும் ஊழல் காரணமாகக் கைது செய்யப்பட்டனர். கோவையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தரும் கையூட்டுப் பெற்றதற்காகக் கைது செய்யப்பட்டார். இவையெல்லாம் வெளிப்பட்ட செய்திகள். வெளிவராதவை ஏராளம்!
உயர்கல்வியைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 13 மத்திய அரசு அமைப்புகள் இருப்பதால்தான் பல குறைபாடுகளும் முறைகேடுகளும் நடக்கின்றன. எனவே இவற்றைக் கலைத்துவிட்டுத் தேசிய உயர்கல்வி - ஆராய்ச்சி ஆணையம் (சூஊழநுசு) என்பதை அமைக்க நடுவண் அரசு முடிவு செய்துள்ளது. உயர்கல்வி தொடர்பாக மாநிலங்களிடம் எஞ்சியுள்ள அதிகாரங்கள் முழுவதையும் இந்த ஆணையத்தின் பெயரால் நடுவண் அரசு பறித்திடத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தராக எவரை அமர்த்த வேண்டும் என்கிற உரிமையும் இந்த ஆணையத்திடம் தரப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அளவில் துணைவேந்தராக அமர்த்தப் பெறுவதற்கான தகுதி உடையவர்களின் பட்டியலை இந்த ஆணையம் தயாரித்து வைத்திருக்கும். தமிழ்நாட்டில் எந்தவொரு பல்கலைக்கழகத்திற்கேனும் துணைவேந்தரை அமர்த்த வேண்டுமெனில், இதற்கான பெயர்ப்பட்டியலை தேசிய உயர்கல்வி ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும். ஆணையம் அனுப்புகின்ற 3 அல்லது 5 பேர் கொண்ட பட்டியலிலிருந்து தான் தமிழக அரசு ஒரு துணைவேந்தரைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இப்படியாக 6ஙூ கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்களுள் ஒருவரைத் துணைவேந்தராகத் தெரிவு செய்யும் அதிகாரம் கூட - ஒரு மாநில அரசுக்கு மறுக்கப்படுகிறது என்றால், இது கூட்டாட்சித் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைப்பதாகாதா?
இந்தியாவில் உயர்கல்வித் துறையையும் அதன் நிறுவனங்களையும் சீர்செய்ய வக்கற்ற நடுவண் அரசு, 3-5-10 அன்று நாடாளுமன்றத்தில் அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பதற்கான சட்டவரைவை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்துள்ளது. இந்தியாவிலிருந்து தற்போது ஒரு இலட்சம் மாணவர்கள் அயல்நாடுகளில் படிக்கின்றனர். அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் அனுமதிக்கப்படுவதால், இம்மாணவர்கள் இங்கேயே படிப்பார்கள். இவர்கள் அயல்நாடுகளுக்குச் செல்வதால் ஏற்படும் அந்நியச் செலாவணி மிச்சமாகும். அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் வருகையில் ஏற்படும் போட்டி காரணமாக இங்குள்ள பல்கலைக் கழகங்களின் தரமும் உயரும் என்று பல கருத்துகள் இச்சட்டத்திற்கு ஆதரவாக முன் வைக்கப்படுகின்றன.
உலக வணிக அமைப்பின் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான, சேவைகள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் உயர்கல்வித்துறை அந்நிய முதலீடுகளுக்காகத் திறந்து விடப்படுகிறது. ஆனால் உண்மையில் 2000 ஆண்டு முதலே 100% நிதி மூலதனத்துடன் அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. 156 அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 59 இங்கிலாந்தையும், 66 அமெரிக்காவையும் சார்ந்தவை. இந்நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு முறையில் செயல்படுகின்றன. தற்போது பட்டம் வழங்கும் உரிமை அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கிடையாது. இச்சட்டம் இவை தனித்து இயங்குவதற்கும் பட்டம் வழங்குவதற்கான உரிமையையும் தருகிறது.
‘தற்போது இந்தியாவில் 500 பல்கலைக் கழகங்களும் 20,000 கல்லூரிகளும் உள்ளன. உயர்கல்விக்கான வாய்ப்பை அதிகரிக்க இவை போதா! எனவே 2030க்குள் மேலும் 800 பல்கலைக் கழகங்களும் 40,000 கல்லூரிகளும் தேவைப்படுகின்றன. அப்போது தான் பட்டதாரிகள் எண்ணிக்கையை 12% என்பதிலிருந்து 30% ஆக உயர்த்த முடியும். சீனாவில் இப்போது இது 22% ஆக உள்ளது. வளர்ந்த நாடுகளில் 50%க்கு மேல் உள்ளது. உலக அளவில் போட்டியில் நாமும் முன்னிலையில் இருக்க வேண்டுமானால், அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும், நிதிப்பற்றாக்குறையை ஈடு செய்வதற்கும்
இவை கட்டாயம் தேவை’ என்று கபில் சிபல் கூறுகிறார். உள்நாட்டுக் கல்வி முதலைகள் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சுரண்டுவது போதாதென்று, அயல்நாட்டுக் கல்விக் கொள்ளையரும் இவர்களைச் சூறையாட அரசு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.
அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தம் நிறுவனங்களை அமைத்தால், அயல்நாடு சென்று படிக்கும் மாணவர்கள் இங்கேயே இவற்றில் படிப்பார்கள் என்பது தவறான எதிர்பார்ப்பு. அயல்நாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்கள் அயல்நாட்டில் உள்ள தரமான சூழ்நிலையில் படித்து, அங்கேயே வேலையிலமர்ந்து அங்கேயே நிலையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்கின்றனர். வெளிநாடுகளில் முதல்நிலையில் உள்ள ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், யேல், ஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் வெளிநாடுகளில் கிளைகளை அமைப்பதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் நம் ஊரில் வணிக நோக்கில் நடத்தப்படும் சாதாரணக் கல்லூரிகள் போன்றவை நிறையவுண்டு. அதுபோன்ற மூன்றாந்தர, நான்காந்தரக் கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் கடை விரிக்கும்.
எனவே, இந்த இடைநிலை, கடைநிலை நிறுவனங்கள் இங்கே அமைவதால் உயர்கல்வியின் தரம் உயர்வதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் தரமான உயர்கல்வி தருகின்ற அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் படித்தவர்கள் உலக அளவில் சிறந்து விளங்குகிறார்கள். எனவே தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையாக, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தரம் உயர்த்துவதை விட்டுவிட்டு, அயல்நாட்டின் நிறுவனங்களை வரவழைப்பது உயர்கல்வித் தரத்தை உயர்த்தாது. அயல்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் என்பது அச்சூழலுக்கு ஏற்ப நீண்ட காலப் போக்கில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். எனவே ஒரு சில நல்ல கல்வி நிறுவனங்கள் வந்தாலும் அவற்றின் தாயகத்தில் உள்ள உயர்ந்த சூழலை இங்கு உருவாக்க முடியாது.
இந்தியாவில் அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதற்கு அவை இருபது ஆண்டுகள் கல்விச் சேவையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 50 கோடி நிதியை உறுதியளிப்புச் செய்ய வேண்டும். அவற்றின் இலாபத்தைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்லக் கூடாது. இலாபத்தில் 75 விழுக்காட்டைக் கல்வி நிறுவன மேம்பாட்டிற்குச் செலவிட வேண்டும். 25 விழுக்காட்டை உறுதியளிப்பு நிதியில் சேர்க்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் தரம் தாழ்ந்த அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் இங்கே அமைவதைத் தடுத்து விடாது. மாறாக இவற்றில் ஓட்டைகளை உண்டாக்கி இங்குள்ள அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுத்துவிட்டு அவை தம் விருப்பம்போல் செயல்படும்.
மேலும் இச்சட்டவரைவின்படி, அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதுடன் அரசின் அதிகாரம் - முடிந்து விடுகிறது. மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டணம், ஆசிரியர்களையும் மற்ற அலுவலர்களையும் அமர்த்தல், அவர்களின் கல்வித்தகுதி, ஊதியம் முதலானவற்றில் அரசு தலையிட முடியாது. நம்நாட்டு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களே இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவே முடியாது. இதே போன்று பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, மதிப்பீடு செய்தல், தேர்வு முறை, பட்டங்களை அங்கீகரித்தல் முதலானவற்றில் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அமைக்கப்படுகின்ற அயல்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் ஒரு சில தரமானவையாக இருந்த போதிலும், அவற்றால் இங்கு கல்வியின் தரம் உயராது. ஏனெனில் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் போன்றவை பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் தம் தரத்தை உயர்த்தவில்லை. மாறாக அவற்றின் நோக்கமெல்லாம் கல்விக் கொள்ளை மட்டுமே! அயல்நாட்டுக்கல்வி நிறுவனங்களின் நோக்கமும் இதுவாகவே இருக்கும்.
கல்வியைக் கடைச் சரக்காக ஆக்கும் கயமையைக் கல்வி முதலாளிகளும், ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், உயர் அதிகாரவர்க்கமும் கூட்டாகச் செய்கின்றனர். உயர்கல்வியை உலகக் கல்விச் சந்தையுடன் இணைக்கிறது நடுவண் அரசு. இதற்காகக் கல்வித்துறையின்மீது மாநிலங்களிடம் எஞ்சியுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு பறிக்கிறது. எனவே, கல்வியை 1976க்கு முன் இருந்ததுபோல் மாநில அதிகாரப் பட்டியலின்கீழ்க் கொண்டுவர வேண்டும் என்றும், மழலையர் கல்வி முதல் உயர்கல்விவரை தாய்மொழியில் கல்வி தரப்பட வேண்டும் என்றும், கல்வியில் பெருகிவிட்ட தனியார் கொள்ளைக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.