ஆனந்த விகடன் நிருபர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் என்னை பேட்டிகாண என் வீட்டிற்கு வந்தபோது நான் அவர்களிடம் கூறிய முழு செய்திகளும் பத்திரிகையில் வெளி வரவில்லை. அவற்றில் விட்டுப் போனவற்றை இங்கு விளக்கியுள்ளேன்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இசைஞானி இளையராஜா அவர்கள் கடவுள் உற்பத்தி மையமாகிய எனது சிற்பக்கூடத்திற்கு வந்திருந்தார். அப்போது நியூசிலாந்து நாட்டிலுள்ள ஒரு இந்து கோவிலுக்காக 3 அடி உயரமும் சுமார் 300 கிலோ எடையும் உள்ள ஒரு பிள்ளையார் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தேன். இசை ஞானியார் இந்தச் சிலையை தொட்டுப் பார்க்கலாமா? என்று கேட்டார்.
அதற்கு நான் உற்பத்தியாகும் இடத்தில் யார் வேண்டுமானாலும் தொடலாம்! கோவிலுக்குள் போன பிறகு இரண்டு பேர் தான் தொட முடியும்! என்று கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே கோவிலுக்குப் போன பிறகு அர்ச்சகர் மட்;டும்தானே தொட முடியும்? இன்னொரு நபர் யார் என்றார்.
உடனே நான் சற்றும் தயங்காமல் பூசை என்கிற பெயரில் தினம் திருடும் திருடனும் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பூட்டை உடைத்துத் திருடும் திருடனும் மட்டும் தான் தொட முடியும். என்று சொன்னேன். பக்தியுடன் போகும் நீங்களும் தொடமுடியாது! சிலையை வடித்த நானும் தொட முடியாது! என்ற உண்மையைக் கூறினேன்.
மேலும் நிருபர் என்னிடம் நீங்கள் ஒரு நாத்திகராக இருந்து கொண்டு ஏன் கடவுளர் சிலைகளைச் செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் என்னிடம் 75 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுக்கணும். மேலும் சுவாமிமலை கடவுள் சிலை உற்பத்திக்கு பெயர் போனது. இங்கு வருபவர்கள் 100 சதவீதமும் கடவுள் சிலை வாங்கவே வருபவர்கள்; அவர்களிடம் நான் நாத்திகம் பேசினால் 75 குடும்பங்களின் கதி என்னவாகும்? என்னிடம் வாங்கு பவர்கள் தான் அதை கடவுள் என்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை அது ஒரு உருவம்தான்! ஒருவன் கையில் வேலைக் கொடுத்தால் அவன் முருகன். வேலைப் பிடுங்கி வில்லைக் கொடுத்தால் அவன் ராமன். அதையும் எடுத்து விட்டு புல்லாங் குழல் கொடுத்தால் அதே சிலை கிருஷ்ணன் ஆகி விடுகிறது. ஆகவே ஆயுதத்தை வைத்துத்தான் நம் கடவுளை அடையாளம் காணமுடிகிறது. மேலும் என்னிடம் கடவுள் சிலையென்று கேட்டாலும் கழுதை நாய் பன்றி என எதைக் கேட்டாலும் எல்லாமே கிலோ ரூ. 1500.00 தான். இவை அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் உலோகமும் கருவிகளும் ஒன்று தான். கடவுளுக்கென்று தனியாக எதுவும் கிடையாது!
அதுமட்டுமல்லாமல் நான் கற்றுக் கொண்ட தொழில் உலோகத்தை உருக்கி வாடிக்கையாளர் கேட்பதைச் செய்து கொடுப்பது தான். கடவுள் சிலை செய்வதற்கு கடவுளின் அருள் இருந்தால் தான் முடியுமென்றால் சங்கராச்சாரி முதல் கிருபானந்தவாரியார் வரை எல்லா பக்தர்களும் சிலை செய்யலாமே? ஏன் அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் எங்களைப் போல் அந்தத் தொழிலை கற்றுக் கொள்ளவில்லை என்பது தான் என்றேன். நிருபர் ரசித்து மகிழ்ந்தார்.
மேலும் நான் கூறிய மிக முக்கியமான செய்தி பத்திரிகையில் வரவில்லை. அது வேறொன்றுமில்லை! இதுவரை நான் கோவிலுக்காக சிலைகளைச் செய்யும் போது சிற்பிகளை கேவலப்படுத்துவது போல ஆரியர்கள் சூழ்ச்சி ஒன்றை செய்வார்கள். “நீங்கள் செய்யும் சிலைகளில் சக்தி ஒன்றும் கிடையாது! நாங்கள் (ஆரியர்கள்) மந்திரம் சொல்லி பூசை செய்த இந்த யந்திரத் தகட்டில் தான் எல்லா சக்திகளும் இருக்கிறது. இதை சிலையின் கீழே பீடத்தில் வையுங்கள்|| என்று சொல்லி ஒரு தகட்டினைத் தருவார்கள். இதுவரை ஒரு சிலையில் கூட நான் அந்தத் தகட்டை வைத்தது கிடையாது!
அதற்கு பதிலாக தந்தை பெரியார் அவர்கள் சொன்ன மூல மந்திரமாகிய கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்! கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்ற வாசகத்தை வைத்துத்தான் அனுப்பி இருக்கிறேன். எந்த ஒரு கடவுளும் இது வரை அந்தத் தகட்டினை அகற்றவில்லை!
சூத்திரர்களாகிய நாம் செய்யும் சிலைகளில் சக்தி இல்லையாம்! இவன்கள் கொடுக்கும் யந்திரத் தகட்டில் தான் சக்தியாம்! அதற்காகத் தான் நாத்திக யந்திரத் தகடுகளை நான் பதித்துள்ளேன். எல்லாம் அவன் செயல்: அவனன்றி ஒரு அணுவும் அசையாது!!