பசுமைப்புரட்சியின் கதை - ஒரு முன்னோட்டம்

இந்தியப் பொருளாதாரம் மற்றும் விவசாயத்திற்குப் பசுமைப் புரட்சி பெரும் நன்மையைச் செய்திருக்கிறது என்று ஒரு தரப்பும், பசுமைப் புரட்சியால் விளைந்த நன்மைகளை விடத் தீமைகளே அதிகம் என்று ஒரு தரப்பும் தொடர்ந்து விவாதத்தில் ஈடு பட்டு வருகின்றன.

-காலச்சுவடு 99 ஆசிரியர் கூற்று.

இப்பட்டிமன்றத்தின் நோக்கம் எல்லாவிஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் போல இப்பசுமைப் புரட்சியும் சில நன்மை களையும் சில தீமைகளையும் கொண்டுள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது. நமது விளை நிலங்கள் கெட்டுவிட்டது என்ற பேச்சு துடங்கிய காலத்தில் இருந்து இவ்வூடகங்கள் இந்த பாணியை கடைபிடிக்கின்றன.

இதையே அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு போட்டதில் நன்மை அதிகமா தீமை அதிகமா என்றும் இவ்வூடங்களால் பட்டிமன்றம் நடத்த முடியும். அமெரிக்கர்களுக்காக நமது ஊடங்கள் சில நன்மைகளையும் பட்டியலிடவும் கூடும். அதுபோலத்தான் சில நன்மைகள் உள்ளன. ஆனால் அந்த நன்மைகளை  அடைந்தவர்கள் அமெரிக்க, ஐரோப்பிய - டிராக்டர், பூச்சிக்கொல்லி, விதைகள் - கம்பெனிக்காரர்களே.

இத்தனை வருடங்களுக்குப் பின்னாலும் இந்த ஊடகங்களின் - அது இலக்கிய ஊடகமாக இருந்தாலும் - விசுவாசம் பிரமிக்க வைக்கிறது. புதிய ஜனநாயகமும் இவ்வூடகங்களில் ஒன்றாக ... எப்படி? இவ்வூடகப் பிரச்சார வலிமை இதில் ஆற்றும் பங்கை கண்டு அச்சப்பட வேண்டிய நிலையை என்னென்பது. இவ்வஞ்சக வலையில் புதிய ஜனநாயகத்தைக் காணும்போது ஜீரணிக்க முடியவில்லை.

கீழ்க்காணும் தொடர்கள் இப்பசுமைப்புரட்சியின் இன்றியமையாமையை வலியுருத்த பலர் கூறிய கருத்துக்களைச் சுருக்கமாக காட்டியுள்ளேன். இதற்குப் பின்னால் இக்கருத்துக்களுக்கு எதிரான பழைய தகவல்களையும் சுருக்கமாக காட்டியுள்ளேன். முதலில் ஆதரவுக்கருத்துக்கள்

•..... உணவுப் பஞ்சம் தலை விரித்தாடிய 1960 - களில் ..... - புதிய ஜனநாயகம். ஜன 2008 பக். 14.

•1950 - 1951 இல் உணவு உற்பத்தி 5 கோடி டன். இன்று 21 கோடி டன்.

•- எஸ்.வி. நாராயணன் 23.02.2006 தினமணி கட்டுரை.

.... மக்கட் தொகை பெருக்கத்துக்கு ஈடு கொடுத்து வந்த பசுமைப்புரட்சியின் வேகத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க இயலவில்லை என்றே கூறலாம். இத்தகைய சமுதாயப் பாதிப்பைத் தவிர, சுற்றுப்புறச் சூழலின் மீது பசுமைப்புரட்சியின் தாக்கம் என்னவென்பது முழுவதுமாக ஆராயப்படாத ஒன்று. பசுமைப்புரட்சியால் மகசூல் பெருகியதென்னவோ உண்மையானாலும் அதற்காக விவசாயிகள் சூழலியல் ரீதியாகக் கொடுத்த விலை அதிகம். முன்பு விளைவித்த நாட்டுப் பயிர்களை விடுத்து நீரை அதிகமாக உட்கொள்ளும் வீரிய விதைகளை விதைத்து, மேம்பட்ட வேளாண்மை கருதி நிலத்தடி நீரை அதிகமாக உபயோகித்தனர். மகசூலைப் பெருக்கவும் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்ட வேதி உரங்களும், பூச்சிக்கொல்லிகளும், களைக்கொல்லிகளும் நிலத்தடி நீரைப் பல இடங்களில் வேதிப் பொருட்களால் மாசுப் படுத்தியதும் பல இடங்களில் மேல்மண் களரானதும் மறுக்கவியலா உண்மைகள். •சுதந்திரம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகியும் உணவு தானியச்சாகுபடியில் இந்தியா சுய தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் நிலையை அடைந்திருக்கவில்லை. எனவே அதிக மகசூலைத் தரும் புதுவகைப் பயிர்களைச் சாகுபடி செய்தல், தீவிர - நவீன வேளாண்மை முறைகளை மேற்கொள்ளுதல் போன்ற முக்கியமான கூறுகளைக் கொண்ட பசுமைப் புரட்சி 1967இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

-சு.கி. ஜெயகரன். காலச்சுவடு.

.... பதில்; நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி விதிவிலக்காக எங்காவது யாராகிலும் அதிக மகசூல் எடுத்திருக்கலாம். ஆனால் 99 சதவீதம் 50 மற்றும் 60 ஆண்டுகளில் ஏக்கர் ஒன்றுக்கு நெல் சராசரி மகசூல்** 500 முதல் 600 கிலோவாகத்தான் இருந்தது. அதோடு அன்று நெல்* சாகுபடிக்கு விதைப்பு முதல் அறுவடை வரை 5 முதல் 6 மாதம்வரை தேவைப்பட்டது. ஆனால் இன்று 3 மாதம்தான் தேவைப்படுகிறது.

பா.லிங்கம், காலச்சுவடு

மேற்கண்ட பத்திரிகைகளில் சொல்லப்பட்ட செய்திகள் - 60கள் வரை மிகமோசமான நமது விவசாய முறைகளும் நமது மரபு விதைகளும் உயர்ந்து வரும் சனத் தொகையைச் சமாளிக்க முடியாததையும் பசுமைப்புரட்சி மட்டுமே இதைச் சாத்தியமாக்கியதாக கூறுவதைக் காணலாம். இக்கருத்தையே அதிகம் படிக்காத விவசாய\ பொது மக்களும் கொண்டிருக்கிறார்கள். 1985 வாக்கில் மரபு நெல் விதைகளை சேகரித்த காலத்தில் பழைய மரபு விதைகள் குறித்து 30 வயதுகாரர்கள் சொன்ன செய்திகளுக்கும் 60 வயதுக்காரர்கள் சொன்ன செய்திகளுக்கும் பாரதூரமான வித்தியா சங்கள் இருப்பதைக் காணமுடிந்தது.

மரபு விதைகள் நீண்டகாலம் - சுமார் 6 மாதம் - ஆகும். விளைச்சல் குறைவு அரை மேனி. பல கிராமங்களிலும் இதேத் தகவல்கள் சொல்லப்பட்டபோது, அது குறித்து விசாரித்தப் போது, களப்பணியாளர்கள் காட்சியளித்தனர். ஆரம்ப காலத்தில் தலையாரிகளே இப்பணியை செய்தனர். இப்பணியின் பரப்பு கூடியபோது இதற்காகத் தனியாக ஆட்களை சேர்த்தனர். இவர்கள்தான் புதிய தலைமுறை விவசாயிகளுக்கு இப்படிப்பட்டக் கருத்துக்களைக் கூறுவதற்காக நியமிக்கப்பட்ட - கங்காணிகள் - களப் பணியாளர்கள். இவர்கள்தான் ரசாயன உரங்களின் அருமைப் பெருமைகளைக் கூறுபவர்கள். பூச்சி கொல்லிகளின் வீரப் பிரதாபங்களைக் கூறுபவர்களும் இவர்களே. இவர்களுக்குச் சொல்லித்தரும் கருத்துக்களைப் விவசாயிகளிடம் பரப்புவதே இவர்கள் வேலை. இக்களப்பணியாளர்களின் ஒரேத் தகுதி இவர் களுக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதிருப்பதுதான்.

..... இந்தக் காவிரி நீர்பாசன மண்டலத்தில் குறுவை, சம்பா, தாழடி என்னும் மூன்று பருவமும், ஒவ்வொர் பருவத்திற்கும் ஏற்ற நெல் ரகங்கள் ..... என்று பா. லிங்கம் எழுதிச் செல்கிறார். இதுவே இத்தீருவாசத்தில் கார், பிசானம், முன் கார், என்று வழங்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இருபோகச் சாகுபடியை கன்னிப்பூ, கும்பப்பூ என அழைக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் இப்பட்டங்களுக்கு பெயர்கள் வித்தியாசமாக இருந்தாலும் இக்கால கட்டங்கள் ஒன்றுதான். ( ஜுன் - செப்டம்பர், அக்டோபர் - பிப்ரவரி, மார்ச் - மே. ) போகிறப் போக்கில் பா. லிங்கம் இம்முறையே பசுமைப்புரட்சி வழி அரசின் வேளாண்துறை கண்டுபிடிப்புப்போல் பீற்றிக்கொள்கிறார். இச்சொற்களின் பின்னே வரலாற்றின் ஊடாக பா. லிங்கம் சென்றால், பெரிய மீசையுடன் சோழன் கரிகால் பெருவளத்தானை பார்க்கலாம். ஆற் றுப் படுகைகளில் சில இடங்களை முப்போகம் விளையும் நிலம் என்று சொல்வார்கள். இக் களப்பாணியாளர்கள், ப.. லிங்கம் போன்றவர்களின் கணக்குப்படி ஒரு ஆண்டுக்கு எத்தனை மாதம் என்ற கேள்வி எழுந்தால் என்ன பதில் சொல்வார்கள்?.

நெல்லில் நமது மரபு விதைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. விதைப்பில் 75 நாட்கள் - சீங்கண்ணி, 60 தாம் குறுவை, பூங்கார், தீர்வாசத்து துய்யமல்லி - வட தமிழ் நாட்டு துய்ய மல்லி 120 நாட்கள். இதையே நாத்துபாவி நடுவதாக இருந்தால் 85 நாட்கள். பொதுவாக விவசாயிகள் தங்கள் நாற்றாங்கால்களில் நாற்றுப் பிடிங்கிய பின் இந்த இளவயது பயிரை ஏற்றுவதன் நோக்கம் 120, 165 நாட்கள் பயிர் அறுவடைக்கு முன் இந்த நாற்றாங் கால் பயிர் அறுவடையாக வேண்டும் என்பதால். சில மேட்டு நிலங்களுக்கு, பாசனம் குறைந்த நாட்களுக்குத்தான் கிடைக்கும் என்பதாலும் இந்த வகை நெல்லை பயிரிட்டனர். அரை மேனி முதல் முக்கால் மேனி வரை கிடைக்கும்.

அடுத்ததாக 100 நாள் பயிராக உள்ள நெல்லைப் பொதுவாக குறுவை என்று அழைத்தனர். கார் சாகுபடியில் குறுவை நெல்வகைகள் பயிரப்பட்டதால் இப்பட்டத்தை குறுவைபட்டம் என்றே - தஞ்சைப்பகுதிகளில் - அழைத்தனர். பிசானத்தில் குளத்துப்பாசன விவசாயத்தில் நீர் வசதியை கணக்கில் கொண்டு குறுவையா சம்பாவா? எதைப் பயிரிடுவது என்பதை விவசாயிகள் தண்ணீர் இருப்பை வைத்து முடிவு செய்தனர். காவேரியிலும், தாமிரபரணியிலும் ஜூன் 10 இல் தண்ணீர் திறப்பது இதற்காகத்தான். குறுவை மேனிபோகும், அடுத்து சம்பா வகைகள். அனேகமாக  கட்டிச்சம்பா நீங்கலாக  இவ்வகைகள் பிசானத்தில்தான் பயிரடப் பட்டன. 120 நாட்கள். அதனாலேயே இதைச் சம்பா பட்டம் - தஞ்சைப் பகுதியில் - என அழைத்தனர். ஒரு மேனி முதல் இரண்டு மேனி வரை கிடைக்கும். இரண்டு மேனியை குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் தான் எடுத்தார்கள், அவர்களின் கூடுதலான பண்டுவத்தை பெரிய நிலப்பரப்புகளில் செய்வது காரியசாத்திய மில்லை என்பதே காரணம்.

அடுத்து 165 நாள் வகைகள். இவ்வகை - அரிக்கிராவி, ஆனைக்கொம்பன், வல்லரக்கன் - நெல்லைப் பயிரிட் டதன் நோக்கம் தங்கள் கால்நடைகளுக்கு அதிகமான, நல்ல தீவனம் தேவைப்பட்டது என்பதே. நிறைய வைக்கோல் அதுவும் மாடுகள் விரும்பி சாப்பிடும் வைக்கோல் கிடைக்கும். 6 அடி உயரம் வளரும். அரிசி நல்ல ருசியாக இருக்கும். விளைச்சல் உறுதியாக ஒரு மேனி கிடைக்கும். இவ்வகை நெல்லை பிசானத்தில் மட்டுமே பயிரிட முடியும். மொத்த விளை நிலத்தில் 10 விழுக்காடு மட்டுமே இவ்வகை நெல்லைப்பயிரிட்ட னர். பெரும்பாலும் இவ்வகை நெல்லை ஆவணி கடைசி வாரத்தில் நாற்று விட்டு ஐப்பசியில் நடலாம். தேவைப்பட்டால் - மழைப்பிந்தினால் - கார்த்திகைகுள் நடலாம், பிந்தினாலும் இந்நாற்றுகள் நன்றாக சிம்புகள் வெடிக்கும்.. எல்லா வகை நெல்லுக்கும் நாம் பட்டம் வைத்திருந்தோம். பசுமைப்புரட்சி வந்த பிறகுதான் பட்டம் என்றால் என்ன என்று கேட்கும் நிலை ஏற்பட்டது. இவ்வகையில்தான் குலைவாழை என்னும் நெல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் - 7\8அடி உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்தாலும் - இந்நெல்லும் உயர்ந்து விளைந்து விடும். இதன் வைக்கோலும் சுவையாக இருக்கும். இன்று இக்குலைவாழை நெல் அனேகமாக இல்லை என் றே சொல்லலாம். கடைசியாக பாளையங்கால் பாசனத்தில் அரியகுளம் பகுதியிலும், படுகைப் பகுதியிலும் திரு வைகுண்டம் கால்வாய் பகுதிகளிலும் இந்நெல் பயிரிடப் பட்டது. இதுபோலவே களர் நிலத்திற்கும் களர்பாளை என்ற நெல்லை  100 நாள்  வைத்திருந்தார்கள். நெல்லைப் பகுதியில் இந்நெல் பனங் குறுவை என அழைக்கப்பது.

வரி விதிப்பிற்காக ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் பல இடங்களில் நெல் விளைச்சலை ஆய்வு செய்துள்ளனர். அது குறித்து ஒரு புள்ளி விபரம்

1878 இல் கோவை ஈரோடு பவானி பல்லடம் ஒரு ஏக்கருக்கு 2760 பவுண்ட்

The average yield of 2760 lb. per acre obtained in 1878 was by actual experiment. The yield for Coim­batore district now is about 2400 lb. per acre - Agricultural Development in Madras State. பக்கம் 87.

மாவட்டம் 1959 - 1960

செங்கல்பட்டு 2500\1788 1680

தென்ஆர்காடு 2000

தஞ்சாவூர் 2358\1744 2000

மதுரை 2647\1796 2200

திருநெல்வேலி 2400

கோவை முதல்போகம் 6522\1807 2400

2ஆம்போகம் 4919\1807

சராசரி விளைச்சல் 2760\1878

(These figures are said to have been accepted by the ryots in a conference convened by Mr.Hodgson)

... காணி ஒன்றுக்கு சராசரி கண்டு முதல் சென்னைப்பட்டண மரக்கால் 120 .... -

காணி சுமார் 1.32 ஏக்கர். மரக்கால் சுமார் 18.4 பவுண்ட்.. = 2208 பவுண்ட். -

- புதிய கோடாங்கி மார்ச் 2006. ரவிக்குமார்.

மகசூலை மதிப்பிடுவதற்கு மேனி என்ற அளவை நிர்ணயித்தனர். ஒரு மரக்கால் நிலத்தில் ஒரு கோட்டை நெல் கிடைத்தால் அது ஒரு மேனி. ஒரு மரக்கால் என்பது 8 செண்டு நிலம். ஒரு கோட்டை சுமார் 130 கி.கி. எனவே ஒரு ஏக்கருக்கு 12.5 மரக்கால் 130 ஜ் 12.5 = 1625 கி.கி. - மேற்கண்ட விளைச்சலில் பெரும் ஏற்ற தாழ்வுக்கு பெரிய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கைகள் குறைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலச் சிப்பாய்களின் உணவுக்காக நிறைய கால்நடைகள் தேவைப் பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1838 - 39 இல் 100 ஏக்கருக்கு 65.82 ஆக இருந்த கால்நடைகளின் எண்ணிக்கை 1871 - 72 இல் 31.94 குறைந்துள்ளது. ... ... The yield of food crops was found decresing and the Superintendent, Government Farms recommended large use of manures to arrest this evil. பக்கம். 85 - 86.

பசுமைப்புரட்சி குறித்து பேசுபவர்கள் அனைவரும் உணவு உற்பத்தியை மட்டுந்தான் குறிப்பிடுகின்றனர். அந்த பிசாசோடு சேர்ந்து அல்லது முன்பின்னாக நம் நாட்டிற்கு வந்த சமாசாரங்களையோ, அந்தப் பிசாசிற்கு துணைபுரிய நம் அரசு உருவாக்கிய அல்லது செயல் படுத்தியவைகளையோ சொல்லி வைத்தது போல ஒருவரும் பேசுவதில்லை.

அவற்றில் சில;

1. 1920 களில் தமிழ் நாட்டு மலைப்பகுதிகளில் அமெரிக்கர்கள் அறிமுகப்படுத்திய உண்ணிப் புதர்கள்.

2. 1939 களில் நம்நாட்டில் அறிமுகப்படுத்திய - குறிப்பாக - நெய்வேலி காட்டாமணக்கு, ஆகயத்தாமரை* முதலியன.

3. 1950 களின் பிறபகுதிகளில் - நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் -அறிமுகப்படுத்திய சீமைக்கருவேல், பார்த்தீனியன் முதலியவை.

4. ஐரோப்பிய பசுமாடுகளின் வருகையும் அவற்றிற்காக நமது அரசு உருவாக்கிய பசு மாட்டுக் கடன் வசதிகள். பால் பண்ணைகள் முதலியன. - காளை மாடுகளை அப்புறப்படுத்த - கமலையேற்றம், உழுவது, வண்டி இழுத்தல் முதலியத் தொழிலிலிருந்து.

5. மின்வாரியம் வாயிலாக கிணறுகளுக்கு நீர் இறைக்க மின்வசதியும் நிலவள வங்கி மூலமாக கடன் வசதியும்.

6. தொடக்க நிலை வேளாண் கூட்டுறவு வங்கி - விதைகள், இரசயன உரங்கள், அறிமுக நிலையில் பூச்சிக் கொல்லிகள் அளித்தல், அறவே நிலங்களில் நுண்ணுயிர்கள் அழிந்த நிலையில் ரைசோபியம் வழங்குதல் முதலியவைகளுக்காக

7. டிராக்டர் வழங்க வங்கிகளைத் தயார் படுத்துதல்.

8. கோவை வேளாண் கல்லூரியின் அசுர வளர்ச்சி.

9. 1970 களில் வனத்துறை மூலமாக பல ஆயிரம் ஏக்கரில் பயிரடப்பட்ட யூக்கலிப்டஸ் மரங்கள்.

10 பி.எல் 480 - அமெரிக்க அரசின் சட்டம் - அதன்கீழ் நமக்கு வந்த கோதுமை. முதலியன.

 

Pin It