அண்மையில் பெய்த பெருமழையால் பாலையாக இருந்த எங்கள் கிராமம் பச்சைப் பசேலெனச் சோலை யாக மாறியுள்ளது. எங்கள் கிராமத்தை விட்டுப் ‘புலம்பெயர்ந்து’ நான் நகரவாசியாக மாறி முப்பது ஆண்டுகளாகின்றன. எப்போதாவது சொந்த பூமியை எட்டிப் பார்ப்பதோடு சரி! என்னால் எந்தப் பிரயோசன மும் இல்லை என்றால் கூட எங்கள் கிராமத்து மக்கள் என்னை விடமாட்டார்கள்.

குறிப்பாக விவசாயம் செய்வதில் உள்ள சிரமங்கள், விவசாயம் தங்களை எப்படிக் கடனாளிகளாக ஆக்கிவிட்டது, மாற்றுவழி தெரியாமல் தாங்கள் எப்படி மாட்டிக் கொண்டு தவிக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் வருத்தப்பட்டுக் கூறும்போது, நெஞ்சில் இரத்தம் வடியும்! இவர்களுக்கு என்ன வழி என்று தெரியாமல் நான் மட்டும் இவர் களை விட்டுவிட்டுச் சொகுசு வாழ்க்கை வாழும் குற்ற உணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.

தற்போது, கடந்த பல ஆண்டுகளாக இல்லாத மகிழ்ச்சியை அவர்கள் முகங்களில் இந்த மழை கொண்டு வந்திருக் கிறது என்பது எனக்கு ஓர் ஆறுதலான செய்திதான். ஏர் உழுவது, நாற்றுப் பறிப்பது, நடவு செய்வது என எல்லாரும் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கும் போது, விவசாயம் செய்ய ஆட்கள் கிடைப்ப தில்லை; இருப்பவர்களும் “விவசாயம் செய்ய விரும்பு வதில்லை” என்ற பிரச்சாரங்களிலெல்லாம் உண்மை இருக்கின்றதா என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது.

பாரதியைப் போல,

“ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

சுண்ணமிடிப்பார்த்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்

கொட்டியிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்”

நெஞ்சைப் பறிகொடுக்காமல் பட்டணத்து வாசியாக நான் ஏன் ஓடினேன்?

என்னுடைய மக்களை, என்னுடைய மண்ணை, என் தொழிலான விவசாயத்தை உதறிவிட்டு நான் ஓடிவந்தது பெருங்குற்றந்தான்! ஆனால், இந்தக் குற்றத்தை நான் ஏன் செய்தேன்? விளக்க முயல்கிறேன். தண்ட னையைப் பின்னர் நீங்கள் தீர்மானியுங்கள்!

எங்கள் கிராமத்தினர் அனைவரும் நெல்பயிரிடும் வேளாண் பெருங்குடிமக்கள். அபிதான சிந்தாமணியில், கூறப்பட்டிருக்கும் 108 வகையான நெல் ரகங்களில் பெரும்பாலானவற்றை அவர்கள் பெயரிட்டுக் கூறும் போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். குறிப்பாக, ஆர்க்காடு, கிச்சிலி என்னும் ஆறு மாத சம்பாப் பயிர் வளரும் அழகைப் பார்த்தவர்களால் மட்டுமே அப்பெயர் சொல்லும் போது பரவசப்பட முடியும்.

அச்சு மட்டமாக வளர்ந்து, பூப்பூத்து, சாயாமல் நிற்கும்போதும், சரி நெற்கதிர்கள் முற்றித் தரையோடு படுத்து அறுவடைக்குத் தயாராகும் போதும் சரி, வயல்வெளிகளில் நடப்பது எவ்வளவு ரம்மியமாக இருக்கும் தெரியுமா? சம்பாப் பட்டத்தில் கிச்சிலி, நவரைப் பட்டத்தில் வெள்ளைக்கார், சொர்ணவாரிப் பட்டத்திற்குக் குள்ளக்கார் இப்படியாக, அதிக மழை வெள்ளத்தைத் தாங்கும் நெல் ரகங்கள், வறட்சி யைத் தாங்கும் நெல் ரகங்கள் என்று எத்தனை எத்தனை நெல் ரகங்கள்! என்னென்ன பயிர் வகைகள்! இப்பொழுது இவை எதுவுமே இல்லை! இவற்றை ஒழித்தது யார் தெரியுமா? நானும், என்னைப் போன்ற வர்களும்தான்!

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுக் கிராமத்தில் கால் வைத்தபோதுதான், “பசுமைப்புரட்சி” என்ற பெயரில் எங்கள் ஊரில் அரசாங்கம் உள்ளே நுழைந்தது.

“அதிக விளைச்சல் அதிக இலாபம்; கட்டு கலம் காணலாம்; கதிர் உழக்கு நெல் காணலாம்” என்றெல் லாம் சொல்லி, ஐ.ஆர். ரகங்களை எங்கள் ஊரில் தமிழக வேளாண்துறை எங்களைப் போன்றவர்கள் மூலம் நுழைத்தது.

“படித்தவன் சூதும் வாதும் செய்தால்

போவான் போவான்

ஐயோ வென்று போவான்”

அதனால், படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று படிக்காத எங்கள் ஊர் மக்கள் படித்த என் போன்ற வர்களை நம்பி, புதிய நெல் ரகங்களுக்கு வழிவிட்டனர். குறிப்பாக, ஐ.ஆர்.8, ஐ.ஆர்.20 நெல் ரகங்கள் மிகவும் பிரபலம். அதிக உரமேற்று, அதிக விளைச்சலைத் தரும். மழை, வெள்ளத்திற்குப் பயிர் சாயாது ‘நிறைந்த மகசூல் நிச்சயம்’ என்ற எதிர்பார்ப்புகளோடு எங்கள் கிராமங்களில் இந்த விதைகளைப் பரப்பினோம்.

“சம்பாவில் ஐ.ஆர்.8, 20” நவரையிலும் சொர்ண வாரியிலும் ஆடுதுறை நெல் ரகங்கள் சிவப்பரிசி வேண்டுமா? டி.கே.எம்.9 சன்ன அரிசிக்குப் பொன்னி, பவானி, ஏ.எஸ்.டி.15, மோட்டா நெல் ரகமா ஐ.ஆர்.8, ஜெயா, இப்படி வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி நெல் ரகங்களை வேளாண்மைத்துறை கொட்டித் தீர்த்தது.

தழை, மணி, சாம்பல் (NPK) சத்துக்கள் ஏக்கருக்கு முறையே 40:20:20 என்ற அளவில் இடவேண்டும் என்றார்கள். அதாவது ஒரு ஏக்கருக்கே 4 மூட்டை காம்ப்ளக்ஸ் உரம் 1 அல்லது 1ஙூ மூட்டை யூரியா போட்டவர்களெல்லாம் உண்டு.

இப்படிச் செயற்கை உரங்களை இடுவதனால் என்ன நேரும் என்று எங்களுக்குத் தெரியாது; யாரும் சொல்லவுமில்லை. பயிர்களில் பூச்சித் தாக்குதல் ஆரம் பித்தது. பயிரை எடுத்துக் கொண்டு வேளாண் அலுவலகங் களின் படிக்கட்டுகளைத் தஞ்சமடைந்தோம்.

இது குருத்துப் பூச்சி - ஃபாஸ்மாபிடான் அதாவது டிமெக்ரான் தெளியுங்கள். இது இலைச் சுருட்டுப்புழு என்டோ சல்ஃபான் - தயோடான், எக்கலாக்ஸ் எது வேண்டுமானாலும் அடிக்கலாம். டி.டி.டி.25ரூ (DDT25ரூ) கூடத் தெளிக்கலாம். மருந்து எத்தனை லிட்டர் தண்ணீரில் எந்த அளவு கலக்க வேண்டும் என்று வகுப்பு எடுத் தார்கள். அடிப்பது யார்? நாங்களே கலக்கி நாங்களே ஒருவழியாகப் பூச்சி மருந்து தெளித்த போது அதன் பாதிப்பு படிப்பு அறிவில்லாத எங்கள் மக்களைத்தான் முழுதாகச் சென்றமடைந்தது.

பூச்சித் தாக்குதலில் இருந்து ஓய்வதற்குள் பூஞ்சாணத் தாக்குதல், செங்கல் வடிவத்தில் நெற்பயிரில் சிவப்பாகத் திட்டுத்திட்டாகத் தெரிகிறதா? தெளியுங்கள் டைத்தேன் இசட் 78. இலை களின் ஓரங்கள் கருகுகின்றனவா? பிடியுங்கள் அக்ரிமைசின். அது பாக்டீரியல் இலைக் கருகல் நோய், கதிர் தோன்றும் போது பூச்சியா? ‘புகையானாக’ இருக்கலாம் அல்லது கதிர்நார்வாய்ப் பூச்சியாக இருக்கலாம் பி.எச்.சி.10ரூ தூவுங்கள்; கார்பரில் தெளியுங்கள்! புரடீனியப் புழுக் களைப் பார்த்தால் விளக்குப் பொறி வைத்துப் பிடியுங்கள்!

இவற்றிடமிருந்தெல்லாம் தப்பி நெல் பயிரும் வளர்ந்து நெல் மகசூலும் பரவாயில்லைதான்! ஆனால் ஓரிரு போகங்களிலேயே மீண்டும் பிரச்சினை!

“ட்வார்ஃப் வகை” என்றும் “குட்டைவகைப் பயிர்கள்” என்றும் கூறி பயிரிடப் போய் அவை புகழ்பெற்ற ஆங்கில நாவலான “கலிவர்ஸ் டிரேவலில்” வரும் “லில்லிபுட்டன்-குட்டை மனிதர்கள்” மாதிரியில் வளராமல் நின்றுவிட்டன. வயல்வெளிகளில் இந்தக் குட்டைப் பயிர்கள் வளர்ச்சியற்று, ஜப்பானிய ‘போன்சாய்’ போல நின்ற நிலையைப் பார்த்து நாங்கள் நெட்டை மரங்களாக நின்றுவிட்டோம். இந்நோய் இலைச் சிறுத்தல் நோயாம்! துங்ரோ வைரஸ் நோயாம்! இதற்கு என்ன செய்வது?

“நெல் பயிரிடுவதை நிறுத்துங்கள்! கழனியில் உள்ள நெற்பயிரின் கட்டைகளை எல்லாம் திரட்டி எரித்து விடுங்கள்; அப்பொழுதுதான் அடுத்த பயிராவது தப்பிக்கும்” என்று சொன்னார்கள். எல்லா வகையான கடன் வசதி, 25 சதவீத, 50 சதவீத மானிய விலை யில் பூச்சி மருந்து, கைத்தெளிப்பான், விசைத் தெளிப் பான், ஏரியல் ஸ்ப்ரே... இப்படி கிராமத்தையே பூச்சி மண்டலமாக மாற்றிய பின் “பயிரிடாதீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார்கள்.

எங்கள் கிராம மக்கள் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே, தூக்கு மாட்டிக் கொண்டு நான் சாகலாம். ஆனால் நான் வேதாளம் கதையில் வரும் விக்கிர மாதித்தன் போல, சற்றும் மனந்தளராமல் மீண்டும் வேளாண்மை அதிகாரிகளின் கருணைக்கே காத்து நின்றேன். அறிவியல் பூர்வமான விவசாயத்தின்பால் எனக்கிருந்த நம்பிக்கைதான் இதற்குக் காரணம். இந்த முறை அவர்கள் “பிரிஸ்கிரிப்ஷன்” வேறுவிதமாக இருந்தது.

“தழை, மணி, சாம்பல் சத்து சதவீதம் 40:20:20 என்பது மிகவும் அதிகம். இனி 30:15:15 என்று மாற்றி உரமிடுங்கள்! நாங்களும் வேறு நெல் ரகங்களை மாற்றித் தருகிறோம். இனி நாற்று விடும்போதே அக்ரசான், செரசான், திரப்டான் மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள்! நாற்றங்கால்களில் டி.ஏ.பி. (DAP) மட்டும் போதும். குருத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த நாற்றங் காலிலேயே கார்போ பியூரான் குருணை மருந்துகளை இடுங்கள். வளர்ந்த பயிரில் களைக்கொல்லியைப் பயன் படுத்துங்கள். அந்துப் பூச்சிகளை விளக்குப் பொறி வைத்துக் கட்டுப்படுத்துங்கள்.”

இந்தச் சுழற்சி முடிவதற்குள் துயரம் வேறொரு வடிவில் வந்தது. வயல் முழுவதும் பாய்ச்சிய நீர் நுரைத்துக் கொண்டு நின்றது. மண் இளகும் தன்மையே போய்விட்டது. மண் பரிசோதனை செய்தார்கள்! யீழ வேல்யூ தாறுமாறாக உள்ளதாம்! அதிகமான செயற்கை உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை அமிலத்தன்மை அதிகமாகிவிட்ட தாம்! ‘ஜிப்சம்’ இட்டுப் பாருங்கள் என்றனர். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் கேட்டார்.

“ஏன் தம்பி? நிலத்தில் இருந்த நாங்கூழ்ப் புழு வெல்லாம் எங்கே போய்விட்டன? இப்புழுக்கள்தானே மண்ணை இளக்கும்? பூச்சி மருந்துகள் அவற்றையும் அழித்துவிட்டனவா?”

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. மனோன் மணியம் சுந்தரனார், நடராசன் என்னும் கதாபாத்தி ரத்தின் மூலம் இப்புழுக்களின் பெருமையைப் பாடியது மட்டும் நினைவிற்கு வந்தது!

“ஓகோ! நாங்கூழ்ப் புழுவே உன்பாடு

ஓவாப்பாடே உணர்வேன் உணர்வேன்

உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்

உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ!”

மண்ணைத் தின்று, மெழுகு போலாக்கிப் பதப்படுத்தா விட்டால் பயிர்கள் எப்படி வளரும் என்று 19ஆம் நூற் றாண்டிலேயே மனோன்மணியம் வினவியது. ஆனால் இந்தக் காலத்தில் போய் பூச்சி, பூஞ்சாண மருந்து களால் மண்புழுக்களை அழித்து விட்டோமே என்ற கழிவிரக்கத்தால் மனம் தவித்தது! அதற்குத் தீர்வு என்ன?

தீர்வு இருக்கிறது என்று அதிகாரிகள் சொன்னார்கள்!

“நீலப்பச்சைப் பாசி நெல்லுக்கு நல்ல ராசி”

“அசோஸ் பைரில்லம், வேப்பம் பிண்ணாக்கு இவை நிலவளத்தை மேம்படுத்தும். செயற்கை உரம் இல்லாமல் விவசாயம் இனி இல்லை. பூச்சிக்கொல்லி பயன்படுத்தாமல் பயிர்கள் இல்லை என்றாலும் மண் வளம் காக்க இயற்கை உரட்டு நிலவளத்தை மீட்டெ டுங்கள்! மாற்றுப் பயிர்த்திட்டம் பயிர்ச்சுழற்சி முறை கட்டாயம் தேவை.”

அதாவது, விட்டஇடத்திற்கே மீண்டும் விவசாயம் வந்துவிட்டது. இதற்குள் என்னவெல்லாம் நடந்துவிட்டன.

*  பாரம்பரிய விதைகளெல்லாம் காணாமல் போய் விட்டன. பன்னாட்டு விதை நிறுவனங்களின் பிடியில் நம் விவசாயம்         சிக்கிக்கொண்டுவிட்டது.

*  மேலை நாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன.

*  காம்ப்ளக்ஸ், யூரியா, பொட்டாஷ் உரங்கள் விலை மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுவிட்டன.

*  மின்பற்றாக்குறை-கிணற்றுப் பாசனம் அடியோடு பொய்த்துப் போய்விட்டது-இருக்கும் மின்சாரத் தைக்கூட பயன்படுத்த இயலாச் சுற்றுச்சூழல் அமைப்பு! பன்னாட்டு கம்பெனிகளின் கழிவ றைகள் கூட ஏ.சி.யில் மிதக்கும் போது, ஏழை விவசாயிகளுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்ற பொதுக் கருத்தோட்டம் பரப்பப்படுகிறது.

*  விவசாய மானியத்திற்கு எதிராக மக்கள் கருத்து உருவாக்கப்படுகிறது. விவசாய மானியம் 50 விழுக்காட்டுக்குமேல் வளர்ந்த நாடுகளில் உள்ள தனைத் திட்டமிட்டே மறைத்தோ அல்லது இருட்டடிப்புச் செய்தோ செய்திகள் வெளிவரு கின்றன.

*  உணவு உற்பத்தி வியாபாரமாக்கப்பட்டுப் பாரம் பரிய நெல், தானிய உற்பத்தியைவிட பணம் ஈட்டும் பயிர் வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

மொத்தத்தில், உணவு எப்படிக் கிடைக்கின்றது, யார் இவற்றை உற்பத்தி செய்கிறார்கள் என்பவை பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், நுகர்வதற்கு மட்டுமே நுகர்வோர் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவை மிக மிக ஆபத்தான போக்குகள்! எங்கள் மக்களின் இயலாமையைப் புரிந்துகொண்ட பல நிறுவனங்கள் எங்கள் விவசாயிகளிடமிருந்து அவர் களின் மண்ணைப் பிடுங்க முயற்சிக்கின்றன. நான் என்ன செய்ய முடியும்?

“நிலம் எங்கள் தாய்!” எனினும் என் தாயைத் தவிக்கவிட்டு விட்டு நான் ஓடிவந்துவிட்டேன்! சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள்! நகர்ப்புறத்தில் நானாவித வசதிகளோடு நான் வாழ்ந்து கொண்டிருக் கிறேன். இது குற்றமில்லையா?

“உழவினார் கைம்மடங்கின்” உலகமே இயங்காது என்கிறார் வள்ளுவர்! எனக்கு என்னவோ அவர்கள் கைம்மடங்குவது முஷ்டியை உயர்த்துவதற்காக என்று தோன்றுகிறது!

அதன்பின் உலகமே அவர்கள் கைகளில்தானே!

- முனைவர் இர.நடராசன் (புதிய வெள்ளைக்காரன் என்னும் பெயரில் 14 சிறுகதைகளை எழுதி நூலாக்கி வெளியிட்டவர்)

Pin It