24.5.2015 அன்று சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

• பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்து, மாநில அளவில் 2014-15ஆம் ஆண்டில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

• 25 சதவீதம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் சேர்க்கை விதிமுறைகளை முழுமையாக பின் பற்றாத பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது.

• குழந்தை தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு சீர்திருத்தம் கொண்டு வர இருப்பது. மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை திணிக்க முயல்வதையே காட்டுகிறது. இதனை தமிழ்நாடு மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

• தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையைத் தடுக்க பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமெனவும் இதை வலியுறுத்தி விழிப்புணர்வு இயக்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

• அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்துகிறது.

• ஆரம்பக் கல்வி 1 முதல் 5 வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தமிழ் வழிக் கல்வியை வழங்க தமிழக அரசை வலியுறுத்துகிறது.

• உயர்கல்வியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வியை இலவசமாக வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணை 92(0)ஐ முழுமையாக அனைத்து கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவும், நடைமுறைப் படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறது.

• பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிகளில் சேர்க்கையின்போது கேட்கப்படும் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கானசான்று போன்ற சான்றிதழ் வழங்க ஏற்படும் காலதாமதத்தால் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. இதனை விரைந்து அளிக்க வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் மனு அளிப்பது என தீர்மானிக்கிறது.

• சாதி மறுப்பு திருமணம் புரிந்த இணையர்களின் குழந்தைகளுக்கு சாதியற்றோர்க்கான தனி இடஒதுக்கீட்டை உருவாக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானங்களை விளக்கி, ஜூன் மாதம் முழுவதும் பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகளின் முன்பு தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

Pin It