சென்னை உயர்நீதிமன்றம் - திருமணம் குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு, விவாத அலைகளை உருவாக்கியுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்து அவர்களுக் குள்ளே பாலியல் உறவு இருக்குமானால், அதையே திருமணமாக அங்கீகரிக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை வழங்கியவர் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கர்ணன். மதமுறைப்படி திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த இஸ்லாமிய தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, 1999இல் மன வருத்தத்தால் பிரிந்துவிடுகின்றனர். குழந்தைகளுக்கு பராமரிப்பு செலவை கணவன் வழங்க வேண்டும் என்று பெண் குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குழந்தைகள் இந்த இணையர்களுக்கு பிறந்தது உறுதியானாலும், இவர்களுக்கிடையே திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குடும்பநல நீதிமன்றம் பராமரிப்பு தொகை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்துவிட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு வந்தது. நீதிபதி தீர்ப்பில் கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைத்துள்ளார்.

“ஒரு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முழுமையடைந்து, அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே அவர்களுக்குள் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தால், அவர்களை மனைவி கணவனாகவே கருத வேண்டும்.”

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, திருமணமாகாமலே இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் (அயவiபே) இணையர்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கியுள்ளது. இப்படி இணைந்து வாழும் இணையர் பிரிந்து, ஆண் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், இணைந்து வாழ்ந்த பெண்ணின் சட்டப்பூர்வ ஒப்புதல் வேண்டும் என்று தீர்ப்பு வலியுறுத்துகிறது. சமுதாயத்தில் பெண்களை ஆண்கள் தங்களின் உடலுறவுக்குப் பயன்படுத்திக் கொண்டு பிறகு கைவிட்டு ஏமாற்று வதற்கு இத்தீர்ப்பு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது இதில் அடங்கியுள்ள ஒரு முக்கிய அம்சம். மற்றொன்று, மதச் சடங்குகளோடு திருமணம் நடத்தினால்தான், அது செல்லத்தக்கது என்ற மதவாத பழமைச் சிந்தனைக்கும், “பழக்க வழக்கங்கள்” என்ற சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் கோட்பாடுகளுக்கும் இத்தீர்ப்பு சரியான அடியைத் தந்துள்ளது.

“தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் போடுவது, அக்னி வலம் வருவது அல்லது அரசு அலுவலகத்தில் பதிவு செய்வது போன்றவையெல்லாம் மதச் சடங்குகளைப் பின்பற்றுவதற்கும், சமுதாயத்தைத் திருப்திப்படுத்துவதற்கும் தான் பயன்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளையும் பின்பற்றித் திருமணம் செய்த பிறகும், கணவன் மனைவிக்குள் பாலியல் ரீதியில் உறவு இல்லாவிட்டால் அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே திருமணத்துக்கான ஒரே சட்டப்பூர்வ அங்கீகாரம், பாலியல் ரீதியிலான உறவு மட்டுமே” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. (Formalities such as tying mangala sutra, exchange of garlands and rings and circulating around matrimonial fire are not a must for valid marriage, but, “to comply with certain religious customs” and “for the satisfaction of the society”) வேத மந்திரங்கள் முழங்க - முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக அக்னி வலம் வரும் திருமணங்களே செல்லத்தக்கது என்ற நிலை நாட்டில் ஒரு கட்டத்தில் இருந்தது. திருமண சடங்குகளில் சில விடுபட்டதைக் காரணம் காட்டி, திருமணத்தை செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிய காலமும் உண்டு. பெரியாரின் சுயமரியாதை திருமண முறை - இந்த புரோகித பார்ப்பனிய சடங்குகளுக்கு விடை கொடுத்ததோடு, புரோகித சடங்கு மறுப்புகளுக்கு சட்டப்பூர்வ ஏற்பும் பெற்றுத் தந்தது.

இப்போது உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, புரோகித திருமண சடங்குகளே ஒரு திருமணத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்று மறுதலித்துள்ளதோடு, சமூகத்தை திருப்திப் படுத்துவதற்கான நடவடிக்கைகளே தவிர உண்மையான திருமணத் துக்கான அவசியத் தேவையல்ல என்ற பெரியாரிய சிந்தனைக்கு ஏற்பு வழங்கியுள்ளதாகவே கருதுகிறோம்.

பெரியார் கூறுகிறார்:

“திருமணம் பெரிதும் சடங்காக, ஒப்பந்தமாக, பதிவாக, சட்டத்திற்குள் அடங்கியதாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கிற வார்த்தையே மறந்துபோகும். அதனால்தான், நான் இந்த முறைகூட (சுயமரியாதை திருமண முறை-ஆர்) முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன்” (‘விடுதலை’ 16.12.1944)

- என்று கூறிய பெரியார், மேலும் ஆழமாக கீழ்க்கண்ட கருத்தை முன் வைக்கிறார்.

“திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாடுதான் இருக்க வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவையில்லை. கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென்றால், முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டியிருக்கும்?” (மேற்குறிப்பிட்ட அதே ‘விடுதலை’)

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இத்தீர்ப்பு, பெண்ணுரிமைப் பார்வையிலும், சமுதாயக் கண்ணோட்டத்திலும் ஒரு நல்ல விவாதத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்றே நாம் கருதுகிறோம். ஆனாலும், கணவன் மனைவியாக வாழ வேண்டும் என்பதற்காக ‘பாலியல் உறவை’ கட்டாய முன் நிபந்தனையாக்கும் நீதிபதியின் கருத்துகூட விவாதத்துக்குரியதேயாகும்.

ஆனாலும், உள்ளடக்கத்தில் இது முற்போக்கான பெண்களுக்கு பாதுகாப்பான மத பழமைவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பதே நமது கருத்து.

Pin It