அடுத்தகட்ட பரபரப்புக்கு ஆயத்தமாகிவிட்டது பாட்டாளி மக்கள் கட்சி. ‘2011ல் தனித்து ஆட்சியைப் பிடிப்போம்’ என்று அறிவித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். தைலாபுரம் தோட்டத்தில் நம்மிடம் ராமதாஸின் பேச்சில் அனல் பறந்தது. 

‘‘அ.தி.மு.க, தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளுடன் மாறிமாறிக் கூட்டணி அமைத்து இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அரசியல் செய்யப் போகிறீர்கள்? தனித்து அரசியல் பண்ணும் எண்ணமே இல்லையா?’’

Ramadoss‘‘ஒரு பொறுப்பான எதிர்க் கட்சிதான் ஆளும் கட்சியாகும் தகுதி பெற வேண்டும் என்பது என் ஆசை. ஏனென்றால், ஆளும் கட்சியின் இலக்கணத்தை அது எதிர்க் கட்சியாக இருந்தபோது எப்படிச் செயல்பட்டது என்பதை வைத்துதான் அளவிட முடியும். அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்த போதும் நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்தோம். எங்கள் அளவுக்கு வேறு யாரும் தவறுகளைச் சுட்டிக் காட்டவில்லை. எதிர்க் கட்சிக்கான இலக்கணத்தை அப்போதும் செய்திருக்கிறோம்; இப்போதும் செய்து வருகிறோம்.

இப்போது அ.தி.மு.கவுக்கு எங்களை விட அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், எதிர்க் கட்சியாகச் செயல்படுகிற பொறுமையும் தகுதியும் அங்கே இல்லை. ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் இருந்தாலும், தமிழகத்தில் இப்போதைய ஒரே எதிர்க்கட்சி நாங்கள்தான். உண்மையான தோழமையுடன் இருக்கிறோம். ஐந்து ஆண்டு காலமும் உறுதியாக தி.மு.கவை ஆதரிப்போம். ஆனால், சுட்டிக்காட்ட வேண்டிய, தட்டிக் கேட்க வேண்டிய இடங்களில் அதையும் திருத்தமாகச் செய்வோம்.

இப்போது தமிழகத்தில் பா.ம.க. ஒரு புதிய மாற்றுக் கட்சியாக உருவாகியிருக்கிறது. அரசியல் அதிகாரத்தை மக்களின் ஆதரவோடு வெல்வோம். 2011ல் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

கடந்த நாற்பதாண்டு கால தி.மு.க அ.தி.மு.க. ஆட்சியில் மாறி மாறி தமிழகத்தைச் சீரழித்துவிட்டார்கள். இந்த வீட்டில் உட்கார்ந்த காக்காய் கூட அந்த வீட்டில் போய் உட்காரக் கூடாது என்கிற அளவுக்குச் சகிப்புத் தன்மையே இல்லாமல் போய்விட்டது. சமூகம், பண்பாடு, மொழி என்று எல்லாமட்டத்திலும் சீரழிவைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டு இளைஞர்களை இரண்டு இடங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது... ஒன்று, சாராயக் கடை. இன்னொன்று, சினிமா கொட்டகை. இதையெல்லாம் மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி போராடும்!

‘‘மதுரை இடைத்தேர்தல் களத்தில் நடந்தவை பற்றி..?’’

‘‘தேர்தல் என்றாலே காசு கொடுத்து ஓட்டு வாங்கும் வியாபாரமாக வாக்காளர்களைப் பழக்கிவிட்டார்கள். நான் எல்லாக் கட்சிகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்ட சுய உதவிக் குழுக்களையும், தேர்தல் நேரத்தில் காசு கொடுத்துக் கெடுத்துவிட்டோம்.

50 ரூபாய், 100 ரூபாய் என்று ஆரம்பித்து வளர்ந்து... ஆயிரத்தைத் தொட்டு... மிக்ஸி, கிரைண்டர் என வீட்டுக்குத் தேவையான பொருட்களை அளிக்கிற அளவுக்கு வாக்காளர்களையும் மாற்றிவிட்டார்கள். இதன் உச்சகட்டம் மதுரை இடைத்தேர்தல். என்னைக் கேட்டால், இடைத்தேர்தலே தேவையில்லை. அரசியல் சட்டத்தைத் திருத்தி, பொதுத் தேர்தலில் எந்தக் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதோ அந்தக் கட்சிக்கே அந்த ஐந்து ஆண்டுகளும் அந்தத் தொகுதியில் பணியாற்றுகிற வாய்ப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்பேன்.’’

‘‘இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத பரபரப்பு ரஜினிக்கும், சிவாஜி படத்துக்கும் கொடுக்கப்படுகிறது, பார்த்தீர்களா?’’

‘‘சினிமாக்காரர்கள் தமிழகத்தை எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம்! மாநில முதல்வர், முன்னாள் முதல்வர்கள் முன்கூட்டிப் பார்த்து படத்துக்கு விளம்பரச் சான்றிதழ் வழங்குகிற கொடுமை உலகத்தில் வேறு எங்கும் நடந்திருக்காது. பாண்டிச்சேரி முதல்வரோ, ஒரு படி மேலே போய் ஒரு நடிகையோடு சேர்ந்து அந்தத் திரைப்படத்தின் முதல் சினிமா டிக்கெட் விற்பனையைத் துவக்கிவைக்கிறார்! அதேபோல், இன்னொரு நடிகருக்குப் பிறந்த நாள் விழாவாம்... அதற்காக, பாண்டிச்சேரியில் இருந்து ஒரு ரசிகன் சென்னை வரை பின்னோக்கி நடக்கிறானாம்! அந்தப் பயணத்தை புதுவை முதல்வர் துவக்கி வைக்கிறார். சீரழிவின் உச்சகட்டமல்லவா இது!

பல மாதங்களாக உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு போய் பாலும் பீரும் வாங்கி நடிகரின் கட்அவுட்டுகளுக்கு ஊற்றுகிறார்கள். 20 ரூபாய் டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாய் வரை விற்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நடிகர்களுக்குப் பின்னால் அலையும் ஒவ்வொரு ரசிகனும், ‘நான் ஒரு முட்டாளுங்க! ஏன்னா, நான் ரசிகர் மன்றத்தில் இருக்கேனுங்க’ என்று தன் நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாக அலைகிறான்.

எந்தவிதக் கொள்கையும் கோட்பாடுகளும் இல்லாத ஒருவர் அரிதாரம் பூசிக்கொண்டு சினிமாவில் நடித்துவிட்டு, வயதான பிறகு நடிக்க முடியாமல் அரசியலைத் தொழிலாகச் செய்யலாம் என்று வருகிற கொடுமையும் தொடர்ந்து நடக்கிறது. இந்த நடிகர்களுக்கு என்ன பின்னணி இருக்கிறது? என்ன வரலாறு இருக்கிறது? மக்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்? திரைப்படங்களில் இவர்கள் பேசுகிற வசனங்களுக்கும் கதைகளுக்கும் இந்தச் சமுதாயத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?’’

‘‘உங்கள் நண்பர் திருமாவளவனும் இப்போது சினிமாவில் நடிக்கிறாரே?’’

‘‘திருமாவளவனைப் பொறுத்தவரை, திரைப்படம் வெகு மக்கள் ஊடகம். அதன் மூலமாகவும் செய்திகள் சொல்ல முடியும் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அது பற்றி விமர்சிக்க நான் விரும்பவில்லை.’’

‘‘கேபிள் டி.வியை அரசு நடத்த வேண்டும் என்கிறீர்கள். ஆனால், அ.தி.மு.க. அந்த மசோதாவைக் கொண்டு வந்தபோது அதை எதிர்த்தீர்களே?’’

‘‘அ.தி.மு.கவின் நோக்கம் தி.மு.க வுக்கு ஆதரவானவர்களை நெருக்கடிக்கு ஆளாக்குவது மட்டுமே! அதனால், அன்று அதை எதிர்த்தேன். நான் சொல்வதெல்லாம்... தனியாரும் கேபிள் டி.வி. நடத்தட்டும்; அரசாங்கமும் நடத்தட்டும். மக்களுக்கு எது வேண்டுமோ, அதை எடுத்துக் கொள்ளட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க நியாய விலைக் கடைகளை அரசே நடத்துகிற மாதிரி கேபிள் டி.வி. தொழிலையும் நடத்தும்போது வேலைவாய்ப்பு பெருகும்.

‘‘துணை நகரம், சிறப்புப் பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்றவற்றில் உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?’’

‘‘மத்திய அமைச்சராக இருந்த ஒருவரை இப்போது நீக்கியிருக்கிறார்களே, அவரால் வந்த வினைகள் தான் இவை எல்லாமே! 140 கிராமங்களைக் கையகப்படுத்தி, 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தோடு என்னை வந்து பார்த்தார் அப்போதைய அமைச்சர் தயாநிதி மாறன். ஒரு மணிநேரம் அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘தம்பி, இது உங்கள் தாத்தாவுக்கும் தமிழக அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன். ஆனால், அவர் எப்படியோ கலைஞரை நிர்ப்பந்தித்து, துணை நகர திட்டத்துக்குச் சம்மதிக்க வைத்தார். நான் மக்களைத் திரட்டிப் போராடியதன் விளைவாக, அந்தத் திட்டத்தை கலைஞர் கைவிட்டார்.

இவ்வாறு அந்த முன்னாள் அமைச்சர் எந்தெந்த விவகாரமான திட்டங்களையெல்லாம் கொண்டு வந்தாரோ, அந்தத் திட்டங்கள் அனைத்தையும் நான் கடுமையாக எதிர்த்தேன். அப்போது கலைஞருக்கே அது மனவேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், கலைஞரின் குடும்பத்தைக் குழப்பி, அவரது நாற்காலியையே பறிக்கும் திட்டம் அம்பலம் ஆனதும் கலைஞர் விழித்துக் கொண்டார். அந்த வகையில் கலைஞரை நான் காப்பாற்றியிருக்கிறேன்! நிஜமாகவே தி.மு.கவும் தமிழ்நாடும் தப்பிப் பிழைத்திருக்கிறது!

மக்களின் வளர்ச்சி என்கிற பெயரால் செயல்படுத்தப்படுகிற எந்த ஒரு திட்டமும் மக்களை, குறிப்பாக விவசாயிகளை பாதிக்கக் கூடாது. இதில் நான் எப்போதுமே உறுதியாக இருக்கிறேன்.’’

‘‘அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளில் நம்பிக்கை தருகிற மாதிரி ஐந்து பேரைச் சொல்ல முடியுமா?’’

‘‘அப்படி யாரையும் எனக்குத் தெரியவில்லை. இளம் அரசியல்வாதிகளுக்கு மக்களின் பசியும் வலியும் தெரிய வேண்டும். தெரியவில்லையே! நம்பிக்கை தருகிற மாதிரி யாருமே இல்லை!’’

டி.அருள்எழிலன்
நன்றி: ஆனந்த விகடன்